\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தந்தையர் தினம்

fathers-day_620x497ஜேசன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். பள்ளிப் பேருந்து தெரு முனையில் நின்றது. “பேருந்தை விட்டு இறங்க மனமில்லையா?” எனக் கிண்டலாகக் கேட்டார் பேருந்து ஓட்டுனர் மைக். “சாரி .. மிஸ்டர். மைக்..” சொல்லிக் கொண்டே இறங்கினான் ஜேசன். பேருந்தின் முன் பக்கமாகத் தெருவைக் கடந்து வீடு நோக்கி நடக்க துவங்கினான்.

ஜேசனுக்கு மிசஸ். வீலர் மீது கோபமாக வந்தது. பிராண்டன் மெமோரியல் எலிமெண்டரி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிப்பவன் ஜேசன். மிசஸ். வீலர் அவனது வகுப்பாசிரியை. தந்தையர் தினத்தை வகுப்பில் கொண்டாட முடிவு செய்து அறிவித்திருந்தார். மற்ற வகுப்புகளை போல இல்லாமல், மாணவர்கள் அனைவரும் தங்கள் தந்தையை அழைத்து வர வேண்டும் என்றும் சொல்லி விட்டார். மேலும் அவர்களைப் பாராட்டி ஒவ்வொருவரும் பேச வேண்டும் என்று ஒரு கட்டளை வேறு!

அன்றைய மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் அனைவரும் தங்களது தந்தையரை அழைத்து வருவதைப் பற்றிப் பேசினார்கள்.

“என் அப்பா ஒரு வக்கீல் .. நிறைய பேருக்காக வாதாடி அவர்களுக்குப் பணம் வாங்கித் தருவார்” என்றான் அலெக்ஸ்.

“என் அப்பா மருத்துவர் .. மக்களை ஆரோக்கியமாக இருக்கச் செய்பவர்.. அவரைப் பற்றி நிறையப் பேசுவேன் ..” என்றாள் சாரா.

“உங்கள் வீடுகளுக்கு தபால்களைக் கொண்டு வந்து சேர்ப்பவர் என் தந்தை …விடுமுறை நாட்களில் உங்கள் உறவினர்கள் அனுப்பும் பரிசுப் பொருட்களையும் கொண்டு வந்து சேர்ப்பார் … கிட்டத் தட்ட சாண்டா க்ளாஸ் மாதிரி ..” என்றான் மேக்ஸ்.

“என் அப்பா பகலில் பீட்சாக் கடையில் வேலை செய்வார்… இரவில் அவர் தான் ஸ்பைடர்மேன் ..” வாயில் எதையோ மென்று கொண்டே அசராமல் சொன்னான் ரயன்.

ஒவ்வொருவரும் தங்கள் தந்தையரைப் பற்றி பெருமையாக விளக்கிக் கொண்டிருந்தனர்.

ஜேசனின் முறை வந்தது .. அமைதியாக இருந்தான் ஜேசன் .. “நீ என்ன சொல்லப் போகிறாய் ஜேசன் ?” என்றாள் பக்கத்தில் இருந்த டீனா.

“அவன் என்ன சொல்வான்? என் அப்பா எல்லாரையும் கொல்வாருன்னு சொல்வான் ..” சத்தமாகச் சிரித்தான் ஜான்.

“அவனால அவங்கப்பாவை அழைத்து வர முடியாதே … அதனால் எதுவும் சொல்ல மாட்டான் ..” என்றான் கெவின்.

ஜேசனுக்கு அவர்கள் முகத்தில் குத்த வேண்டும் போலக் கோபம் வந்தது .. டீனா அவனை அமைதி படுத்தினாள். அதற்குள் உணவு இடைவேளை முடிந்து மணியடிக்க மிசஸ். வீலர் வந்து அவர்களை வகுப்புக்குப் போகச் சொன்னார்.

மறுநாள் பள்ளிக்குச் செல்லப் பிடிக்கவில்லை ஜேசனுக்கு. ஏதாவது காரணம் சொல்லி விடுப்பு எடுக்கப் பார்த்தான். ஆனால் அவன் அம்மா அவனைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட்டார். அம்மாவின் மீதும் கோபம வந்தது ஜேசனுக்கு. ஜான், கெவின் இவர்களைப் பார்த்தால் கண்டிப்பாக முகத்தில் குத்த வேண்டும் எனத் கருவிக் கொண்டான். அவர்களது நல்ல நேரம், தனியாக ஜேசன் கண்ணில் படவில்லை அவர்கள்.

இரண்டு நாள் கழித்து ஜேசனின் அம்மா அவனிடம் ஒரு வாழ்த்து அட்டையில் கையெழுத்துப் போடுமாறு கொடுத்தார்.

“யாருக்கு இந்த வாழ்த்து ?” என்று கேட்டான் ஜேசன்.

“வேறு யாருக்கு? உன் அப்பாவுக்கு தான்.” என்றாள் ஜேசனின் தாய். “

“நான் போட மாட்டேன் ..”

“ஏன் .. உன் அப்பா மேல் கோபமா?”

“தெரியாது … ஆனால் நான் கையெழுத்துப் போட மாட்டேன் ..” அழுத்தமாகச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டான் ஜேசன்.

மிசஸ். வீலர் சொல்லிய வாரமும் வந்தது. மறுநாள் தங்கள் தந்தையரை அழைத்து வந்து காட்ட தங்களது மேசையில் நிறைய அலங்காரம் செய்து வைத்தார்கள் மாணவர்கள். “வெல்கம் டாடி”, “ஹாப்பி ஃபாதர்ஸ் டே”, “யூ ஆர் தி பெஸ்ட் டாடி இன் தி வேர்ல்ட்” என பல்வேறு வாசகங்கள்.

ஜேசன் மட்டும் எதுவும் செய்யவில்லை.

மிசஸ். வீலர், “ஜேசன் … உன் தந்தைக்கு உனது மேசையை காட்டப் போவதில்லையா ?” எனக் கேட்டார்.

இறுக்கமான முகத்துடன் அமைதி காத்தான் ஜேசன்.

மறுநாள், பள்ளிக்குப் போகக் கூடாது என முடிவெடுத்து வயிறு வலிப்பதாக அம்மாவிடம் பொய் சொன்னான் ஜேசன். ஆனால் அம்மாவுக்கு ஜேசன் பள்ளிக்குப் போவதை தவிர்க்க தான் இப்படியெல்லாம் செய்கிறான் எனப் புரிந்தது.

“அப்படியானால், நான் இன்றைக்கே உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நான்கு ஊசிகளைப் போடச் சொல்கிறேன்… ஊரில் பலருக்கு வயிற்று வலி வந்திருக்கிறதாம் .. முதலிலேயே ஊசி போட்டுக் கொண்டால் சரியாகி விடும் ..” என்றாள்.

ஜேசனுக்கு ஊசி என்றால் பயம். ஆதலால் ஊசியை விட அவன் பள்ளிக்கு போவதையே தேர்ந்தெடுப்பான் என நினைத்தாள் அவன் தாய்.

நினைத்தது போலவே மறுநாள் பள்ளிக்குக் கிளம்பினான் ஜேசன். முகம் மட்டும் வாட்டமாகவே இருந்தது.

மதியம் இரண்டு மணிக்கு அப்பாக்களை வரச் சொல்லியிருந்தார் மிசஸ். வீலர். ஒன்றரை மணிக்கே வகுப்பறை பரபரப்பானது. முதலில் வந்தவர் சாராவின் தந்தை. அவரைப் பார்த்தவுடன் சாராவுக்கு முகமெல்லாம் சிரிப்பானது. அவரை அழைத்து வந்து தனது மேசையைக் காட்டினாள். மிகவும் மகிழ்ந்து அவளை அணைத்து முத்தமிட்டார் அவர்.

மெதுவாகப் பலரும் வந்து சேர்ந்தனர். தங்கள் பிள்ளைகளின் படைப்புகளைப் பார்த்து பாராட்டி மகிழ்ந்தனர். ஜேசனுக்கு அழுகையாக வந்தது

“இப்போது அப்பாக்களை ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறேன்” என்றார் மிசஸ். வீலர்.

முதலில் வந்து பேசிய டேவிட்டின் தந்தை, தான் ஒரு கட்டிடப் பொறியாளர் என்றும், இந்த மாநிலத்திலும் பிற மாநிலங்களிலும் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டி வருவதாகவும் கூறினார். நிறையச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , இதற்கெல்லாம் ஒருவர் பெரிய அளவில் உதவி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்தடுத்து வந்து பேசிய தந்தையர் அனைவரும் தங்களது சாதனைகளைப் பற்றி பெரிதாகப் பேசினர். அவ்வாறு பேசும் போதெல்லாம் அவர்களது பிள்ளைகள் முகத்தில் பெரும் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது, ஜேசன் யாரும் அறியாதவாறு கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். பேசியவர்கள் அனைவருமே தங்களுக்கு ஒருவர் பெரிதும் உதவி வருவதாகக் கூறினார்கள்.

இறுதியாக மிசஸ். வீலர் எழுந்துப் பேசினார். “இங்கே வந்து பேசிய அனைத்து தந்தையருக்கும் நன்றி. உங்கள் வருகையின் மூலம் பிள்ளைகளை நீங்கள் பெருமைப் படுத்தி இருக்கிறீர்கள். உங்களுக்கு அவர்கள் தங்கள் கைப்பட பரிசுகளையும் வாழ்த்துகளையும் கொடுத்தார்கள். இன்று இங்கே ஒரே ஒரு மாணவனின் தந்தை மட்டும் வரவில்லை.. “ சொல்லி விட்டு ஜேசனைப் பார்த்தார் மிசஸ். வீலர்.

“ஸ்டாப் இட் ..” எனக் கத்தத் தோன்றியது ஜேசனுக்கு.

“நீங்கள் எல்லோரும் பேசும் போது ஒரு மனிதர் உங்கள் வாழ்வில் பெரிதும் உதவி செய்து வருகிறார் என்று சொன்னீர்கள் … அந்த மனிதர் இன்று இங்கு வரமுடியாது.. அவரைத் தொலைக்காட்சியில் காணலாம். உங்களில் பலர் அவரை நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள். அவருடன் ஸ்கைப் வழியாகத் தொடர்பு கொண்டு விட்டு தொலைக்காட்சியை இயக்குகிறேன் “ எனச் சொல்லி தனது கணினியில் இணைப்பை ஏற்படுத்த முயன்றார்.

சிறிது நேர முயற்சிக்குப் பின் தொடர்பு கிடைத்தது.

“அவர் இப்போது தொலைக்காட்சியில் தெரிவார் .. “ என்றதும் அனைத்து தந்தையரும் எழுந்து நின்றனர். பிள்ளைகள் தங்களின் தந்தைக்கே உதவி வரும் அந்தப் பெரிய மனிதர் யார் என்று அறிய ஆர்வத்துடன் தொலைக்காட்சித் திரையைப் பார்த்தவாறு இருந்தனர்.

ஜேசனுக்கு எதையும் பார்க்கத் தோன்றவில்லை. குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கீங்…ஜிஸ் ..” என பலவித சத்தங்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் முகம் தெரிந்தது. “வணக்கம் நண்பர்களே …” எனும் அவரின் குரல் தெளிவில்லாமல் கேட்டது. நின்றிருந்த அனைவரும் வலது கையை நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவித்தனர்.

“உங்கள் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் ..” என்று தொலைக்காட்சி நபர் பேசினார்.

“நீங்களும் உங்கள் சக நண்பர்களும் இல்லையென்றால் நாங்கள் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது … நாங்கள் இங்கே விழாக்களைக் கொண்டாடுவதற்கு நீங்கள் தான் காரணம்.. மேலும் உங்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினரும் காரணம் … உங்களுக்கு நன்றி சொல்லும் போது உங்கள் குடும்பத்தாருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம் ..” என்றதும் அங்கிருந்த பெற்றோர்கள் அனைவரும் “நன்றி ஜாக் .. நன்றி ஜேசன் ..” என்றார்கள்.

ஜேசன் மெதுவாக நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. அனைவரும் அவனுக்கு சல்யூட் செய்தார்கள். எழுந்து நின்று பதில் வணக்கம் செய்த ஜேசன், திரும்பி தொலைக்காட்சியைப் பார்த்தான். “ஹாய் மை சன் … “ எனக் கையசைத்தார் ராணுவச் சீருடையில் இருந்த ஜேசனின் தந்தை ஜாக். “டாடி …” என ஓடிச் சென்று தொலைக்காட்சியை அணைத்துக் கொண்டான் ஜேசன்.

“பார்த்து ஜேசன் .. அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் என் தொலைகாட்சிப் பெட்டியை உடைத்து விடாதே .. “ என்றார் மிசஸ். வீலர்.

தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு விட்டு மிசஸ் வீலரின் கையைப் பிடித்துக் கொண்டான் ஜேசன்.

“உங்களுக்குள் நடந்த விவாதத்தை டீனா சொன்னாள் .. அன்றில் இருந்து முயற்சி செய்து உன் தந்தை தற்போது இருக்கும் இடத்தைத் தொடர்பு கொண்டு இதற்கு ஏற்பாடு செய்தோம் …” என்றவர் வகுப்பிலிருந்த மற்ற பிள்ளைகளைப் பார்த்து ..

“பிள்ளைகளே ராணுவத்தில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் நம் நாட்டுக்காகவும், நம் ஓவ்வொருவருக்காகவும், தங்கள் உற்றார் உறவினர் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து சென்று பாடுபடுகின்றனர். அவர்கள் யாரும் தங்கள் சுயநலத்துக்காக மற்றவரைக் கொல்வதில்லை. உலக மக்களுக்குத் தீமை செய்ய நினைக்கும் தீயவர்களை மட்டுமே தடுக்கிறார்கள். இவரைப் போன்ற ராணுவ வீரர்கள் இல்லை என்றால் நாம் மருத்துவராகவோ, வக்கீலாகவோ, ஆசிரியையாகவோ பணியாற்ற முடியாது. இவர்களின் தன்னலம் இல்லாத உழைப்பும் தியாகமும் தான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. ஆகையால் அவர்களைப் பற்றி ஒரு போதும் தப்பாகப் பேசாதீர்கள்.

அவர் மட்டும் அல்ல. ஒவ்வொரு மனிதரும், தன் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப ஏதாவது ஒரு தொழில் செய்கிறார். எந்தத் தொழிலும் இழிவுத் தொழில் கிடையாது. எவரையும் அவர் செய்யும் தொழிலை வைத்து ஏளனப் படுத்தக் கூடாது. தயவு செய்து உங்கள் வாழ்க்கையில் இதைப் பின் பற்றுங்கள்.” என்றார்.

மாணவர்கள் ஜேசனிடம் மன்னிப்பு கேட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு வாழ்த்து அட்டையில் கையெழுத்திட, இறுதியாகக் கையெழுத்திட்ட ஜேசன் அதைத் கணினியின் ஒளிப்படக் கருவி முன் காட்டி .. “தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ..” என்றான்.

– மர்மயோகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad