\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

pattinathar_620x677

பத்தும் புகுந்து பிறந்து

வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டோடி

ஆடி முடிந்த பின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே

இனிச் சாம் பிணங்கள்

கத்தும் கணக்கென்ன காண்

கயிலா புரிக் காளத்தியே!!!

பொட்டிலடித்தாற்  போன்றதொரு தத்துவ விளக்கம் நான்கு வரிகளிலே. செத்துக் கிடக்கும் இன்றைய பிணத்தருகே, நாளை சாகப் போகும் இன்னொரு பிணம் அழுகிறதாம். மனித வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை இதைவிட அழகாகவும், எளிதாகவும், சுவையுடனும் கூறிய ஒப்புயர்வற்ற தமிழ்க் கவி, சித்தர் பட்டிணத்துப் பிள்ளை என்று அழைக்கப்பட்ட பட்டிணத்தார் ஆவார்.

இல்லற வாழ்வில் முழுவதுமாய் ஈடுபட்டு, வணிகத் துறையில் பெருமளவு வெற்றி பெற்று, கணக்கிலடங்காத அளவு பெரும் பொருளீட்டி வாழ்ந்து வந்த மிகப் பெரிய செல்வந்தர் பட்டிணத்துப் பிள்ளை. வாழ்வில் எல்லா வகையான லௌகீக இன்பங்களையும் ருசித்து அனுபவித்து அதிலேயே திளைத்துப் பெருமளவு வாழ்வைக் கடத்திய ஒருவர், விரக்த கதியில் ஞானமெய்தி அதன்பிறகு மனிதச் சமுதாயத்திற்கு பல அரிய தத்துவங்களைத் தனது பாடல்களின் மூலம் விளக்கிய தமிழ்ப் பெருந்தகை பட்டிணத்தார்.

பொதுவாக ஆன்மிகம் பேசும் தமிழ் அறிஞர்களை, அவர்கள் கருத்துக்கினிய ஆழமான தத்துவங்களைச் சொன்னவர்களாக இருப்பினும், செவிக்கினிய தமிழமுதத்தைப் பொழிந்தவர்களாக இருப்பினும், ஆன்மிகம் பேசுபவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவ்வளவாக பெருமைப்படுத்தாத வழக்கம் கடந்த பல வருடங்களாகத் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவுவது நாமறிந்ததே. அந்தக் காரணத்திற்காகவே பலரும் பேசத் துணியாத இந்தத் தமிழ்ப் பெரியவரைப் பற்றி ஒரு சிறு கட்டுரையை இந்தத் தொடரில் எழுதலாமென்று தொடங்கியுள்ளோம்.

திருமணம் முடிந்த கையுடன், தம்பதி ஒன்று பட்டிணத்தாரைச் சந்தித்து வாழ்த்துப் பெற அவரை அணுகுகிறது. அனைத்தையும் துறந்து பற்றற்ற வாழ்வைப் போதித்துக் கொண்டிருக்கும் துறவியான அவர், புதுமணத் தம்பதிகளை எவ்வாறு வாழ்த்துகிறார் என்று படியுங்கள் கீழே!!

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவ நிதியந்தேடி

நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போல

புலப்புலக் கலக்கலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போலே

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!!!

விறகு வெட்டி ஒருவன், பாதி மரம் வெட்டிக் கொண்டிருக்கையில் உணவு இடைவேளைக்காகச் செல்ல இருக்கிறான். பிளக்கப் பட்ட மரம் மீண்டும் ஒன்று நேர்ந்து விடாமல் இருப்பதற்காக நடுவில் ஆப்பு ஒன்றை வைத்து விட்டுச் செல்வானாம். அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த குரங்கு ஒன்று அந்த ஆப்பை எடுக்க முயல்கிறது. அதனை எடுப்பது அவ்வளவு எளிதாக இல்லையென உணர்ந்தபின், பிளவின் மத்தியில் காலை வைத்துக் கொண்டு மரத்தைப் பிடித்துக் கொண்டு ஆப்பை இழுத்து. அசைத்து எடுக்க முயல்கிறதாம். அதனைப் போன்ற செயலே அந்தத் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டது என்று கூறுகிறார் பட்டிணத்தார். வாழ்த்துக் கேட்டு வந்தவர்களுக்கு என்ன விளக்கம் கூறுகிறார் பாருங்கள். இதன் பிறகு எந்தத் திருமணத் தம்பதியராவது இவரிடம் வாழ்த்துப் பெற வருவார்களா? எண்ணிப் பாருங்கள்.

வாழ்வின் குறிக்கோளை முழுமையாக உணர்ந்து அதனை எடுத்துரைக்கும் செயலை சிரமேற் கொண்டவராக வாழ்ந்ததால், புற வாழ்வின் இன்ப துன்பங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத தன்மையுடையவராய் இருந்தார். அதனையே மனித குலத்திற்கு அறிவுரையாக வழங்கிய அவரின் நடைக்கு மேற்கூறிய  சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு தத்துவங்கள் பல எழுதிய பட்டிணத்தாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

சோழ நாட்டு தலைநகரமான காவிரிப்பூம்பட்டிணத்தில் வசித்து வந்த சிவபக்த தம்பதியான சிவநேசர், ஞானகமலாம்பிகை இவர்களுக்கு மகனாகப் பிறந்து, திருவெண்காடர் என்று இயற்பெயர் கொண்டார். கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்த இவர், தனது 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கவில்லை. திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார். இதனிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்குக் குழந்தையாகப் பிறந்தவர் மருதவாணர். வறுமையில் வாடிய இத்தம்பதியரால், ஒருகட்டத்தில் குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை என்பதையறிந்த திருவெண்காடர், மருதவாணரைத் தத்து எடுத்துக் கொண்டு, பதிலாக பெரும்பொருள் கொடுத்தார்.

மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். ஊர் திரும்பிய மருதவாணர் பல மூட்டைகளைக் கப்பலில் கொண்டு வந்து இறக்கினார். மூட்டை முழுவதும் விலையுயர்ந்த பொருள்கள் இருக்கும் என எதிர்பார்த்துத் திறந்த திருவெண்காடருக்கு அதிலிருக்கும் காய்ந்த விராட்டிகளைப் பார்ப்பதற்குப் பெரும் ஏமாற்றம் ஏற்படுகிறது. பிள்ளையை மனம்போனபடி ஏசுகிறார். அந்த ஏச்சுக்களில் பின்னர், மருதவாணர் தன் தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்துவிட்டு ஒன்றும் செல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.  அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்க, அதில் ஒரு காதறுந்த ஊசியும் அதனுடன் கூடி ஒரு சிறு குறிப்பும் விடப்பட்டிருந்தது. குறிப்பில்

“”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”

என்று எழுதப்பட்டிருக்க, திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது. உடனே சென்று, அந்த மூட்டைகளிலிருந்த விராட்டித் துண்டுகளை உடைத்துப் பார்க்கிறார் திருவெண்காடர். ஒவ்வொரு விராட்டியிலும், பொன்னும், முத்தும், பவளமும் பதித்து வைக்கப் பட்டிருந்தது தெரிய வருகிறது. மகன் மருதவாணரும் பெரும் பொருளீட்டி இருப்பதையும், அவற்றைப் பத்திரமாகக் கொண்டுவர வேண்டி விராட்டியில் மறைத்துக் கொண்டு வந்துள்ளார் என்பதையும் உணர்கிறார் திருவெண்காடர். அந்தப் பொருட்களுடன் கூடி, காதறுந்த ஊசியையும் உற்றுப் பார்க்கிறார்.

மனிதன் எவ்வளவுதான் பொருளீட்டினாலும் கடைசியில் எதற்கும் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற தத்துவத்தை அந்தக் கணத்தில் உணர்கிறார். உணர்ந்த மாத்திரத்தில் விரக்த கதியில் ஞானம் பெறுகிறார் திருவெண்காடர். தனது இந்த உயர்வான அனுபவத்தை எவ்வளவு அழகான தமிழில், தத்துவம் பொங்கக் கூறுகிறார் கேளுங்கள்;

பட்டைக் கிழித்துப் பருவூசி தன்னைப் பரிந்தெடுத்து

முட்டச் சுருட்டியென் மொய்குழலாள் கையின் முன்கொடுத்துக்

கட்டியிருந்த கனமாயக்காரி தன் காமமெல்லாம்

விட்டுப் பிரியவென்றோ இங்கனே சிவன் மீண்டதுவே!!!

தனது காம்ய வாழ்க்கையின் முக்கிய காரணியான மனைவியின் கையாலேயே அந்தக் காதறுந்த ஊசி தரப்பட்டதற்குக் காரணம் இருப்பதாக அவருக்கு விளங்குகிறது. ஆசை வயப்படும் மேம்போக்கான வாழ்க்கை விடுத்து, பார்ப்பது எது என்பதைப் பார்க்கத் தூண்டும் ஞான மார்க்கச் சிந்தனையில் ஆள்படுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்று முழுவதுமாக உணர்கிறார் திருவெண்காடர். உணர்ந்த மாத்திரத்தில் ஞானமெய்துகிறார். அதுவரை செல்வச் செழிப்பில் கொழித்து சுக போகங்களை அனுபவித்து மகிழ்ந்த திருவெண்காடர், அவை அனைத்தையும் துறந்து இடுப்பில் கட்டிய ஒரு காவித் துண்டுடன் துறவறம் மேற்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் ஞான மார்க்கச் சிந்தனைகளைத் தனது அழகானத் தமிழ்க் கவிதைகளின் மூலம் உலகிற்கு வழங்கினார்.

அதன் பிறகு பற்றற்று வாழ்ந்து மனித சமுதாயத்திற்குப் பல விதங்களிலும் மெஞ்ஞானத்தை கவிதை வடிவில் பல காலம் வழங்கியவர் பட்டிணத்தார் எனும் திருவெண்காடர். முதல்முறை படிக்கையில் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், தொடர்ந்து படிப்பின் வற்றாத இன்ப ஊற்று என்பதை உணரலாம். பட்டிணத்தார் எனும் தத்துவ ஞானி தோன்றி மனித குலத்தை ரட்சித்த மொழியான தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நமக்கு தமிழனென்று சொல்லத் தலை நிமிர வேண்டுமல்லவா!!!

வெ. மதுசூதனன்.

Comments (6)

Trackback URL | Comments RSS Feed

  1. லெட்சுமணன் says:

    கட்டுரை நன்று.

    பட்டினத்தார் என்றுதானே இருக்கவேண்டும்?!

    ”முன்னை இட்ட தீ முப்புறத்திலே
    பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
    யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

    வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
    ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
    குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
    கருதி வளர்த்தெடுத்த கை”

    பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். Wiki

    தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும் – பிரபலம்.

    ”ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போலே
    அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!!!”

    குரங்கு ஆப்பில் மாட்டிக்கொண்டது போல குடும்ப வாழ்வில் மாட்டிக்கொண்டாய் என்றுதானே விளக்கம் கொள்ளவேண்டும்?!.

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி, லக்‌ஷ்மணன். மேற்கோளில் காட்டப்பட்டிருக்கும் அனைத்துக் கவிதை வரிகளும் சுவையானவையே.

      பட்டினத்தார் என்று சிலர் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்,ஆனால் பட்டிணத்தார் என்பதே சரி என நினைக்கிறேன். பட்டிணத்தில் வாழ்ந்த செல்வந்தர் என்ற ஆகு பெயரே அது என்பதால் ’ண’ என்பதே சரியான எழுத்துப் பிரயோகம் என நினைக்கிறேன்.

      மேலும் கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல ”ஆப்பதனை அசைத்திட்ட குரங்கு” என்பதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட வரிகள் “கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே” என்பதே. காலைப் பிளவில் வைத்துக் கொண்டு, நடுவிலிருந்த ஆப்பை அசைத்து எடுத்து விட்டால் கால் மாட்டிக் கொள்ளுமல்லவா, அதனையே உவமையாகக் குறிப்பிடுகிறார் பட்டிணத்தார். ஆப்பை அசைத்து எடுத்து விட்டு கால் மாட்டிக் கொண்டால் வெளியில் வர இயலாதது போல, குடும்ப வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு கிடந்து உழல அகப்பட்டீரே என்கிறார்.

    • வடிவேலன் says:

      இதற்கு என்ன அர்த்தம்… நான் இதை ஒரு படத்தில் கேட்டு இருக்கிறேன்.

      ”முன்னை இட்ட தீ முப்புறத்திலே
      பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
      அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
      யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

      வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
      ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
      குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
      கருதி வளர்த்தெடுத்த கை”

      நன்றி.

      • மதுசூதனன் வெங்கடராஜன் says:

        இந்தப் பாடல், பட்டிணத்தார் தனது தாயின் சிதைக்குத் தீவைக்கும் நிலையில் கூறிய ஒன்று. துறவு நிலையை முழுவதுமாக ஏற்று, குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறிய நிலையில், தனது தாயின் ஈமக்கிரியை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தாய் வாழ்ந்த ஊரைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தாராம். தாய் இறந்த காலத்தில், ஊர் மக்களின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில், சிதையை வாழை மரப் பட்டை வைத்து எரித்ததாக கதையாகக் (anecdotal) கூறப்படுவதுண்டு.

        பொருள்:

        முன்னை இட்ட தீ முப்புறத்திலே = சிவபெருமான் எரித்த திரிபுறம்
        பின்னை இட்ட தீ தென்னிலங்கியிலே = அனுமன் வால் தீயால் எரிக்கப்பட்ட தென்னிலங்கை
        அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே = குண்டலினி யோகத்தில் குறிப்பிடப்படும் யோகத்தீ (for a casual, non-philosophical meaning, this could be taken as “fire in the belly”)
        இவை போல யான் என் அன்னையின் சிதைக்கிட்ட தீ பரவி எரியக் கடவுவதாக.. எனக் கூறுகிறார்.

        இரண்டாம் பத்தியில் உள்ள ”குருவி பறவாமல்” என்பது சித்தர் மொழி. இதில் ”குருவி” என்பது குறிப்பிடுவது ”உயிர்” என்ற பொருளை. “கூட்டை விட்டு உயிர் பறந்து விடாமல் என்னைக் கருணையோடு வளர்த்த என் அன்னையின் உடல் வேகுதே தீயதனில்” என்பதே மேலோட்டமான பொருளாகும்.

        இந்த வரிகள் இடம்பெரும் முழுக் கவிதையும் கீழே தந்துள்ளேன். படித்துப் பாருங்கள், கல் நெஞ்சையும் கசக்கிப் பிழியும் வரிகள்.

        ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
        பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
        கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
        எப்பிறப்பில் காண்பேன் இனி

        முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
        அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத்
        தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
        எரியத் தழல் மூட்டுவேன்

        வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
        கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து
        முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
        விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

        நொந்து சுமந்து பெற்று நோவாமல்
        ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே
        அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
        மெய்யிலே தீமூட்டு வேன்

        அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
        வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
        தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
        மானே எனஅழைத்த வாய்க்கு

        அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
        கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்
        மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
        மகனே எனஅழைத்த வாய்க்கு

        முன்னை இட்ட தீ முப்புறத்திலே
        பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
        அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
        யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

        வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
        ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
        குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
        கருதி வளர்த்தெடுத்த கை

        வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
        வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
        உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
        தன்னையே ஈன்றெடுத்த தாய்

        வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
        நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
        எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
        எல்லாம் சிவமயமே யாம்

        நன்றி.

  2. புஷ்பா says:

    இது பெண்களுக்கும் பொதுதானே ???

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      வணக்கம் திருமதி. புஷ்பா அவர்களே. நீங்கள் எதைக் குறித்து இந்தக் கேள்வி எழுப்பினீர்கள் என உறுதியாக விளங்கவில்லை. தலைப்பு “சொல்லடா” என ஆண்பாலில் உள்ளது என்பதற்காக இருக்கலாம் எனக் கணித்து அதற்கு பதிலளிக்கிறேன். வேறு காரணமிருப்பின் தெரிவிக்கவும்.

      தலைப்பு நாமக்கல் கவிஞரின் புகழ்பெற்ற பாடலின் முதல் வரி. மிகவும் அருமையான பாடல், நீண்ட பாடல், அழகான கவிநயம், எளிய சொற்கள். அமிழ்தென ஒலிக்கும் நடை.. ஒரு சில வரிகளைக் கீழே குறிப்பிட்டுள்ளேன், நினைக்கையிலே இன்பமூறுவதால்.. அதைத் தவிர அதற்கு வேறு எதையும் உணர்த்தும் நோக்கம் இந்தத் தலைப்புக்கு இல்லை.

      தமிழர்களாகிய நாம் அனைவருமே – ஆண், பெண்ணென்ற பேதமற்று – தலை நிமிர்ந்து நடப்பதற்கு எண்ணற்ற, இணையற்ற வளங்கள் இந்த மொழியிலுண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் நமக்கில்லை. கேள்வி கேட்டு விளக்கம் அளிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி.

      நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகள்:

      ”அமுதமூறும் அன்பு கொண்டிங்கு அரசு செய்த நாட்டிலே
      அடிமையென்று பிறர்நகைக்க முடிவணங்கி நிற்பதோ!
      இமயம் தொட்டுக் குமரி மட்டும் இசைபரந்த மக்கள்நாம்
      இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்றயாவும் செய்குவோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad