\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தமிழனென்று சொல்லடா!! தலை நிமிர்ந்து நில்லடா!!!

thamizhan_enru_sollada_520x371”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே

முன் தோன்றிய மூத்த மொழி..” – தமிழ் மொழி

”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே

முன் தோன்றிய மூத்த குடி..” – தமிழ்க் குடி..

காலங்கலாமாய் பலரும் மேடையேறி முழங்கும் வசனம் இது. கல் மற்றும் மண் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய மொழி தமிழ் மொழியாம். உருவகமாய்க் கூறப்பட்ட இதன் அர்த்தம், தமிழ் மொழியும், தமிழ் இனமும் மிகவும் பழமையானது என்பதே. உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை விட உலகத்திலேயே மிகவும் தொன்மையான மொழி இது என்று கூறுவதுதான் சாலச் சிறந்தது என்பது நமது தனிப்பட்ட கருத்து.

அது சரி, அது உண்மையாக இருக்கட்டும், இல்லாமல் போகட்டும். அப்படிப்பட்ட தமிழ் மொழியைத் தமிழர்களாகிய நம்மில் பலரே பெருமையாய் நினைத்துப் போற்றுகின்றனரா என்றால் இல்லை என்ற கசப்பான உண்மையைத் தான் கூற வேண்டியிருக்கும். நம்மில் பலர்  ஷேக்ஸ்பியரையும், ஷெல்லியையும் மேற்கோளாகக் காட்டிப் பெருமைப் படுவர் ஆனால் பட்டிணத்தாரையும், பாரதியாரையும் பேசுபவர்களைப் பழைமை வாதி என்று ஏசுவர். நம் வீட்டின் புழக்கடையிலே எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து மனிதக் குலத்துக்கு அருந்தொண்டாற்றிய ரமண மகரிஷி பற்றிப் பேசுவது இவர்களுக்கு அறிவீலித் தனம் ஆனால் கார்ல் மார்க்ஸ் மற்றும் சே குவேரா (Che Guevara) இவர்களுக்கு அழியாத புகழுடைய அற்புத மேதைகள்.

இந்தக் கட்டுரையில், ஷேக்ஸ்பியரையோ, ஷெல்லியையோ குறைவாகப் பேசுவது நம் நோக்கமன்று. அதற்கு இணையாக, அல்லது அதையும் விட ஆழமாகச் சிந்தித்த, செயல்பட்ட மகான்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் நம் சகோதரர்களிடம் அந்த அள்ள அள்ளக் குறையாத அருஞ்செல்வங்களைக் கொண்டு சேர்ப்பது மட்டுமே நம் நோக்கம். நம் தமிழுக்கு என்றுமே துரோணாச்சாரியராய் விளங்கும் பாரதியின் கூற்றை நினைவு படுத்தி இதனைத் தொடங்குவோம், சற்றுப் பெரிய கவிதை, ஆனால் நம் தமிழ்ச் சமுதாயத்தை மிகவும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதால் இந்தக் கட்டுரைக்கு மிகவும் நேரடித் தொடர்புடையது;

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதை புனைந்ததும்

உம்பர் வானத்துக் கோளை மீனையும்

ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்

நம்பரும் திறலோடொரு பாணினி

ஞாலம் மீது இலக்கணம் கண்டதும்

இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்

இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை தந்ததும்

பாரினில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்ததும் தருமம் வளர்த்ததும்

பேரருட் சுடர்வாள் கொண்டு அசோகனார்

பிழைபடாது புவித்தலம் காத்ததும்

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்

வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்

அன்ன யாவையும் அறிந்திலர் ஆங்கோர்

பாரதத்து ஆங்கிலம் பயிற் பள்ளியுள் போகுனர்

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இன்னாளின் இகழ்ச்சியும்

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்

பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்

என்ன சொல்லி மற்றெங்கண் உணர்த்துவேன்

இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எரிந்த நம் பாரதியின் உள்ளம், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நம்மைப் போல் தமிழ் நேசர்களின் நெஞ்சினில் பல மடங்கு அதிகமாய்க் கொழுந்து விட்டெறிகிறது என்றால் அது மிகையாகாது.

சமீபத்திய தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி “கவிமணி என்பது யார்?” என்பது, போட்டியாளர் அளித்த விடை “வைரமுத்து” என்பதே. இதே போட்டியாளர் ஹாலிவுட் நடிகர்கள் டாம் க்ரூஸ் மற்றும் லியனார்டோ டிகாப்ரியோ போன்றவர்களைப் பற்றி அக்கு வேர், ஆணி வேராய் விளக்குமளவுக்குத் தெரிந்து வைத்திருந்தார். இன்னொரு போட்டியாளரிடம், “தமிழ்த் தாத்தா யார்?” என்ற கேள்வி வைக்கப் பட்டது, அதற்கு அவரளித்த விடை “சாலமன் பாப்பையா”. இது என்னவோ விவேக் படத்தில் வரும் சிரிப்புக் காட்சி என எண்ண வேண்டாம், கல்லூரிப் படிப்பு முடித்த நடுத்தர வயது ஆண், பெண்களிடமிருந்து வரும் உண்மையான பதில்கள் இவை.

இது போன்ற ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பள்ளிப் பாடங்களைத் தவறாகச் சொல்கிறோமே என்ற வெட்கம் சிறிதும் இல்லாமல், ஏதோ இவை பழம்பஞ்சாங்கங்களுக்குக் கேட்கப் படும் கேள்விகள், இவை குறித்துப் பதில் தெரியாமல் இருந்தால் மட்டுமே நாம் “மாடர்ன்” என்று கருதப் படுவோம் என்ற எண்ண ஓட்டமே நமது குருதி கொதிப்பதற்குக் காரணமாகிறது.

இதே கருத்தை சற்று ஆழமாக நோக்க எத்தனித்தோம். தமிழை மிகவும் நேசிக்கும், தமிழில் பெருமளவு அறிவும் ஆற்றலும் உடைய பலரே தமிழின் ஆழத்தை எவ்வளவாய் உணர்ந்துள்ளனர் என்பதும், தமிழறிஞர்களை எவ்வளவு ஊன்றிக் கவனித்துள்ளனர் என்பது குறித்தும் நமக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் வெளிப்பாடே இந்தத் தொடர்.

சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களை விட்டு விடலாம். பெரும்பாலானவர்கள் திருவள்ளுவன், கம்பன், இளங்கோவடிகள், ஒட்டக் கூத்தர், ஔவையார் எனப் புகழ் பெற்றவர்களை அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அந்தப் பழங்கவிகளை விட்டு, கடந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொள்கைப் பிடிப்பு மிக்க தமிழ்க் கவிஞர்களில் எவ்வளவு பேரை நாடு அறியும் எனக் கேட்கத் தொடங்கினால் அதிர்ச்சியே பதிலாய் மிஞ்சும் என்பது நமது கணிப்பு. பெரும்பாலானவர்களுக்கு மகாகவி பாரதியையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் தவிர வேறெவரையும் தெரியுமா என்பது சந்தேகமே.

தமிழில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வண்ணம் கோலோச்சி விளங்கிய தமிழறிஞர்கள் எண்ணற்றவர்கள். தமிழினால் வயிறு வளர்த்து, தமிழினாலேயே பெருமையுடன் வாழ்ந்து கொண்டு ஆனால் தமிழ் மொழியைக் காப்பதாய் வேடமணிந்து திரிபவர்களின் எண்ணிக்கை இன்று மிக அதிகம். தமிழை வாழ வைத்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்து, சந்ததி சந்ததியாய் வளமையான எண்ணங்களைக் கருத்துக்களைத் தங்களின் ஆக்கங்கள் மூலம் கொடுத்துச் சென்ற எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியிது. அந்த அறிஞர்களில் நாமறிந்த சிலரை ஒரு தொடர்க் கட்டுரையாக எழுதவுள்ளோம்.

சாலமன் பாப்பையாவைத் தமிழ்த் தாத்தாவாகக் கருதுபவர்களை நம்மால் திருத்த முடியாது, ஆனால் உண்மையாக தமிழார்வம் உள்ளவர்கள் ஆனால் அதிக அளவில் நேரம் செலவழித்து ஆழமான புரிதலைப் பெற இயலாதவர்களுக்காக இதனை எழுதலாம் என நினைத்தோம்.

பனிப்பூக்களின் பழைய இதழ்களில், மகாகவி பாரதியைப் பற்றிய குறிப்புக்களும், மேற்கோள்கள் பலவும் பல இடங்களில் குறிப்பிடப் பட்டிருப்பதைப் படித்திருப்பீர்கள். தவிர, மாதத்தின் மாமனிதர் பகுதியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறித்து விரிவான கட்டுரைகள் வெளியாகிவுள்ளன. இவர்கள் தவிர்த்து, நம் மனக்கண் முன் வந்து நிற்கும் பலரில் சிலர் இதோ;  பட்டிணத்தார், அருணகிரி நாதர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதி, தேவநேயப் பாவணர், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, பட்டியலின் நீளம் மிக அதிகம்…

இந்த வரிசையின் தொடக்கமாகப் பட்டிணத்தார் குறித்த கட்டுரை அடுத்த இதழில் வெளியாகும். சமுத்திரம் இறங்கி முத்துக் குளிக்க ஆசையுற்றோம். அந்தச் சமுத்திரத்தின் முன் பாதம் மட்டும் நனையும் வண்ணம் நின்று அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மலைப்புறும் அறியாச் சிறுவனின் மன நிலையில் இந்தக் கட்டுரையைத் தொடங்கி விட்டோம். அந்த நாயகர்களின் பெருமை குலையாத அளவுக்கு இதனை உருவாக்குவதற்குத் தேவையான சொல்லாட்சியையும், நிகழ்வுகளின் புரிதல்களையும், புள்ளி விவரங்களையும் தந்து தமிழ்த் தாய் அருள் புரிவாள் என்ற நம்பிக்கை மட்டுமே வைத்து இதில் இறங்குகிறோம். தமிழ்த் தாய் நம்மைக் கை விட மாட்டாள்!!

(தொடரும்)

–    வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad