\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பயணக் கட்டுரை

Filed in இலக்கியம், கட்டுரை by on September 10, 2014 6 Comments

payanak_kaddutai_620x513சிறு வயதில் ‘கற்கண்டு’ பத்திரிகையில் லேனா தமிழ் வாணனின் பயணக் கட்டுரையைப் படித்து ரசித்ததுண்டு. பல சமயங்களில் அவரின் பயணக் குறிப்பைப் படிக்கையில் இதுபோன்ற அனுபவங்கள் நமக்கும் வருவது எந்நாள் என்று நினைத்ததுண்டு. அவரைப் போன்ற அனுபவமோ, பேரோ, புகழோ வந்திராவிடினும் ஒரு சில பயணங்கள் தந்த அனுபங்களைப் பகிரலாமென்ற எண்ண உந்துதலே இந்தக் கட்டுரையின் காரணம்.

நம் இந்திய நாட்டின் பலங்களில் ஒன்றான அதே சமயத்தில் பலவீனங்களிலும் ஒன்றானது உறவுகளுக்கு இடையேயான நெருக்கம். இந்த விதத்தில் பெரும் அளவு புண்ணியம் செய்திருந்த நமக்குப் பல உறவுகள். அதிலும் தாய் வழி உறவுகளின் நெருக்கம் மிக அதிகம். சொந்தமாய்த் தாமாய் அமைந்தது தவிர, நம்முடைய முயற்சியில் நண்பர்கள் என நாமாய்த் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது.

கல்லூரிப் படிப்பு முடித்து, உள்ளூரில் சில வருடங்கள் வேலை செய்து முடித்துப் பிறகு அயல் நாட்டில் வேலை கிடைத்தது. அதற்கான பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்வது என்பது ஓரிரு மாதங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. நாம் போகும் ஊரில் குளிர் அதிகம் என நமக்கு முன்னரே அங்கு சென்று காலடி பதித்த ஆம்ஸ்ட்ராங்குகள் நமக்குத் தொலை பேசியில் தெரிவித்திருந்தனர்.

“இங்க மைனஸ் முப்பது டிகிரி ஃபாரன்ஹைட் வரைக்கும் போகுண்டா குளிரு..”

நமக்கு ஃபாரன்ஹைட்டிலிருந்து செல்ஷியஸுக்கு மாற்றம் செய்வது ஒரு கம்ப சூத்திரமாய் அமைந்த காலமது. கணக்குச் செய்து முடித்து குளிரின் அளவை எண்களாய் அறிந்த பின்னரும் அந்தக் குளிரின் தன்மை என்ன என்பது தெளிவாக விளங்கவில்லை. எதையும் நகைச்சுவையென நினைத்துக் குத்தலாய்ப் பேசும் நம் நண்பன், “தரையைப் பாத்து எச்சி துப்பினா, அது தரையில விழறதுக்குள்ள ஐஸ் கட்டி ஆயிடும்டா” என்றது அந்தக் குளிர் குறித்து அவன் தந்த உணர்வுப் பூர்வமான உதாரணம்.

இப்பேர்ப்பட்ட, எலும்பை உறைய வைக்கும் குளிருக்கு நம்மூரில் ஜாக்கெட் தேடுவது எவ்வாறு? மெட்ராஸில் தேடாத கடையில்லை, எதையெடுத்துப் பார்த்தாலும் “அந்தக் குளிருக்கு இது போதாது” என்றே தோன்றியது. கடைசியாக ஒரு வழியாகத் தேடிப்பிடித்து, பெங்களூரிலிருந்து ஒரு லெதர் ஜாக்கெட் வாங்கியாகி விட்டது. அந்த ஜாக்கெட்டை, கோடைக் காலம் என உள்ளூர் மக்கள் குறிப்பிடும் ஜூன் மாதத்தில் அந்த ஊரில் போட்டுக் கொண்டு வலம் வர, “நைஸ் கோட், வெர் டிட் யூ கெட் இட்?” என்ற வெள்ளைக் காரனின் கிண்டலான கேள்வியை மிகவும் வெள்ளையாக நினைத்துப் பொறுப்பாய் “பெங்களூர்” என்று விடையளித்தது இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.

நம் முன்னோடிகளாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளிலும் சென்று குடியேறிய நண்பர்கள் பலர் என்னவெல்லாம் வாங்கிக் கொண்டு வந்தால் உதவி கரமாக இருக்கும் என அவரவர்களின் பரிந்துரைகளைத் தெரிவிக்க, நாமும் அசராமல் அவையெல்லாவற்றையும் வாங்கிக் குவித்தோம். நம்மீது அக்கரையுள்ள புத்தகப் புழு நண்பனொருவன், “டேய், மறந்துராம ஆரக்கிள் 7 மேனுவல்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுடா, ரொம்ப உபயோகமா இருக்கும்” எனச் சொல்ல, அதனை வேதவாக்காக ஏற்று, ஏழெட்டு பவுண்ட் வால்யூம்களான (bound volume) புத்தகங்களை, ஐ.ஐ.டி வளாகத்தினுள்ளே மலிவு விலையில் ஸெராக்ஸ் செய்து கொடுக்கும் கடையில் பிரதி எடுத்துக் கொண்டாகி விட்டது. ஒவ்வொரு புத்தகமும் ஒரு இரண்டு கிலோவிற்கு மேல் எடையிருக்கும்.

முதன் முறையாக நம்மை விட்டுப் பிரிந்து செல்லவிருக்கிறான் மகன் என்ற நினைவில், என் அன்னையின் துயர் பல தினங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. வெளியில் பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் வேண்டிய அனைத்தையும் செய்யத் தொடங்கியிருந்தார்கள். முறுக்கு, சீடை, வத்தல், வடகம், மோர் மிளகாய் எனத் தினம் ஒரு பண்டம் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட கல்யாண வீடு போலக் காட்சியளிக்கத் தொடங்கியிருந்தது. அதுவரை சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவி எழுந்து சென்ற பொறுப்பில்லாத வகையைச் சேர்ந்த ஆண்பிள்ளையாக வளர்ந்து விட்டிருந்தவனாகையால், அம்மா, அக்கா மற்றும் அண்ணி மூவரும் மாறி மாறி சாம்பார் செய்வது எவ்வாறு, ரசம் பொறியல் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் எனத் தினம் தினம் பாடம் எடுக்கத் துவங்கியிருந்தனர்.

அண்ணன் அவனது பிரிவுத் துயரத்தை அவன் பாணியில் வெளியிட்டுக் கொண்டிருந்தான். மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் பக்கத்திலுள்ள ஹோட்டல் பிக்னிக் அழைத்துச் சென்று டின்னர் வாங்கிக் கொடுத்தான். அந்த ஹோட்டல் எங்களிருவரது அந்தக் காலத்து ஃபேவரிட். அங்கு என்ன மெனு ஆர்டர் செய்வது என்பது மனப்பாடமான விஷயம். சர்வர் வந்தவுடன் எனக்கும் சேர்த்து ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப் என ஆர்டர் செய்வான் என் அண்ணன். அவ்வாறு செய்யும் பொழுது, என்னிடம் கேட்காமல் எனக்காக உரிமை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஒரு பெருமிதத்தை அவன் முகத்தில் பார்த்திருக்கிறேன். நகரத்தின் ராட்சத வளர்ச்சியில் காணாமற்போன இன்னொரு விஷயம் இந்த பிக்னிக் ஹோட்டல். ஆனால் நான் செய்த அதிர்ஷ்டம், என் அண்ணன் என்மீது எடுக்கும் உரிமை காணாமற்போனதில்லை, அதைப் பார்த்துப் பெருமையாய் மனதிற்குள் மட்டும் சந்தோஷம் பட்டுக்கொள்ள இருவரும் தவறுவதில்லை.

அனைவரும் ஒவ்வொரு விதத்தில் நான் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க, நம் நண்பர்களும் அவர்களின் பங்கிற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். அவற்றில் முக்கியமான ஒன்று, அதுவரை டீ டோட்டலராக இருந்த நம்மை மதுபான வகைகளைச் சுவைக்கச் செய்யும் வகையில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்வதே. சென்னை தியாகராயா நகரில், வாணி மஹாலுக்கு அருகிலுள்ள பார் ஒன்றில் முதன்முதலாக மதுபானத்தின் வாசனையையும், சுவையையும் சகிக்க இயலாமல், “இதையெல்லாம் எப்படித்தான் குடிக்கிறீங்களோ” என்று நாம் கேட்டது இன்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

பயணம் நெருங்க நெருங்க, நமக்குப் பயமும் அதிகரித்தது. அமெரிக்காவிலிருக்கும் நண்பர்களனைவரும் நமக்கு இன்னும் நெருக்கமாகி விட்டிருந்தனர். ஒவ்வொரு கடிதங்களில் வரும் திகதிகளையும் அவற்றின் ஃபார்மேட்டில் குழப்பமடைந்து நண்பனுக்குத் தொலைபேசியிலழைத்து விளக்கம் கேட்க வேண்டியிருந்தது. “என்னடா, எட்டு மாசந்தான் வீசா குடுத்திருக்காய்ங்க?” என நாம் வினவ, “அட முண்டம், 08/01 இன்னு போட்டா அது ஜனவரி எட்டு இல்ல, ஆகஸ்ட் ஒண்ணாந்தேதிடா மடச் சாம்பிராணி” என அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது நமக்கு நன்றாகவே நினைவில் இருக்கிறது. நாளை ஊருக்குப் புறப்படவேண்டும் இன்று நமக்கு நூற்றி மூன்று டிகிரி காய்ச்சல்… அந்தக் காய்ச்சலிலும் நமக்கு ஒரு அதிசய கண்டுபிடிப்பு தோன்றியது, “அது எப்படி, எல்லாத்துக்கும் செண்டிகிரேட் யூஸ் பண்ணிட்டு, ஒடம்பு டெம்பரேச்சர் மத்தும் எதுக்கு அமெரிக்கன் மாதிரி ஃபாரன்ஹைட்டுல சொல்ரோம்?” பிறந்ததிலிருந்தே பழகியிருந்தாலும், இப்பொழுது அமெரிக்காப் போகப்போகிறோம் என்றவுடன் ஏதோ நாமே கண்டுபிடித்ததை இந்தப் போக்கற்ற இந்தியர்கள் உபயோகப் படுத்துகின்றனரே என்பது போன்ற உணர்வு தோன்ற ஆரம்பித்திருந்தது.

“நாளைக்கு ஏர்போர்ட்ல யாரும் அழக்கூடாது” ஸ்டிரிக்டாக இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான் அண்ணன். சொல்லி முடிப்பதற்குள் அம்மாவின் அழுகை தொடங்கியிருந்தது. “அம்மா, இப்படியே அழுதுகிட்டே இருந்த, ஏர்போர்ட்டுக்கு கூட்டிட்டுப் போகமாட்டேன், என்ன? அவனென்ன போகக்கூடாத இடத்துக்கா போறான், எவ்வளவு நல்ல விஷயம், கேரியர், ஆப்பர்ச்சூனிடிஸ்.. இந்த வயசுல இல்லாம எப்பப் போவாங்க?” எனத் தனக்கே உரிய இன்ஸ்பிரேஷனல் ஸ்பீச்சில் இறங்கியிருந்தான். நாம் காலையிலெழுந்து லுங்கியுடன் தெருமுனை சென்று பால் வாங்கி வரும் ஆவின் பூத்தில் தொடங்கி, வீட்டிற்கு நேரெதிராய் இருக்கும் கல்யாண மண்டபக் காவல்காரர் முத்து அண்ணன் வரை அனைவரையும் மிஸ் செய்யத் தொடங்கியிருந்தோம். ”என்னத்துக்கு அவ்வளவு தூரம் போகணும்?, இங்க நமக்கு நல்ல வேலை கிடைக்காதா என்ன?” எனத் தோன்ற, உடனே இன்னொரு குரல் நம்மிடம் “கிடைக்கும், ஆனா அதைப்போல சம்பளம், வசதியெல்லாம் இருக்குமா?” எனக் கேட்க, நாமெடுத்த முடிவு சரிதானென்று சமாதானப் படுத்திக் கொண்டோம்.

“டேய், ஆஃபிஸ்லருந்து பிக்கப் பண்ணிக்க யாராவது வருவாங்க, அவுங்க முன்னால டீஸண்ட்டா இருக்கணும், அந்த பிளேஸரைக் கைல கொண்டு போ” அண்ணனின் அறிவுரை. இந்தப் பயணம் வருவதை அறிந்து, அதற்குச் சற்று முன்னர் வந்திருந்த அண்ணனின் கல்யாண ரிசப்ஷனில் மாப்பிள்ளைத் தோழனாய் நிற்பதற்காக வாங்கப்பட்ட பச்சை நிற பிளேசர் இன்னமும் எனது கிளாஸட்டில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஹேண்ட் லக்கேஜ் வெய்ட் இல்லாமல் இருக்க வேண்டும் என்று இன்று இருக்கும் ஞானம் அன்று இருந்ததில்லை, அத்தனை ஆரக்கிள் மேனுவல்களும் ஒரு ஷோல்டர் பேக்கில். அதனை நம் தோளில் சுமந்து கொண்டு தொடங்கினோம் நம் பயணத்தை – இருபது மணி நேரத்துக்கு மேல ஃப்ளைட் ஜர்னி இருக்கே, அதுல படிக்க யூஸ் ஆகுமே!”

மெட்ராஸில் விமான தளத்திற்குள் நுழைகிறோம். அப்பொழுதெல்லாம் மிகவும் பந்தா இல்லாமல், கூட்டமதிகமில்லாமல் இயல்பாய்க் காட்சியளித்த விமான நிலையமது. நம்மை வழியனுப்பி வைக்க ஒரு பெரிய கல்யாணக் கூட்டமே வந்திருந்தது. அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்கா, அவர்கள் குடும்பத்தினர், மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா எனத் தொடங்கி, நெருங்கிய நண்பர்கள் எனத் தொடர்ந்து, நாமிருந்த தெருவில் குடியிருந்த அக்கம் பக்கத்து வீட்டினர் எனப் பலரும் இரண்டு மூன்று வேன்களில் வந்து சேர்ந்திருந்தனர். அனைவருக்கும் உள்ளே நடந்து செல்லும் வழியெல்லாம் பார்வையை விட்டு மறையும் வரை கையசைத்துக் கொண்டே சென்றேன். என் பிரிவைத் தாங்க இயலாமல், அண்ணனின் சொல்லிற்குக் கட்டுப்பட்டு அழவும் இயலாமல், ஆனால் சோகத்தைக் கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு எனக்குப் பிரியாவிடை அளித்த என் அம்மாவின் முகம் இன்னும் என் மனக் கண்களில் தெளிவாய் நிழலாடுகிறது.

முதல் முறையாக விமானப் பயணம். அதற்கு முன்னர் நாம் பார்த்திருந்த சினிமாக்களிலெல்லாம் வருவது போல், யாரேனும் ஒரு அழகான ஏர் ஹோஸ்டஸ் நம்மிடம் வந்து நமது கோட்டை வாங்கிச் செல்வாள் எனக் காத்திருந்த நமக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது. நாமிருந்த எகானமி கிளாஸில் நம்மைக் கவனிக்க யாருமில்லை. போட்டுக் கொண்டு வந்த பிளேஸரை எவ்வாறு காப்பது என்பதிலேயே நமது பாதி நேரப் பயணம் சென்று விட்டது. ஒரு வழியாக விமானம் பாம்பே சென்றடைந்தது.

அப்போதெல்லாம் பாம்பே சர்வதேச விமான நிலையத்திலிருந்து, உள்நாட்டு விமான நிலையம் செல்ல ஷட்டில் சர்வீஸ் எல்லாம் கிடையாது. வெளியே வந்து, டாக்ஸி பிடித்து ஊருக்குள் பயணம் செய்துதான் செல்ல வேண்டும். இறங்கி வெளியே வந்த நாம், ஹிந்தி பேசத்தெரியாததால் பட்ட அவஸ்தை தனியாக இன்னொரு கட்டுரை எழுதும் அளவு சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு. ஒரு வழியாக ஒரு டாக்ஸி பிடித்து, அவரிடம் சைகை பாஷையில் பேரம் பேசிப் புறப்படத் தயாரானதும், டாக்ஸி டிரைவர் அவரின் மொழியில் நம்மையே நமது பெட்டிகளை எடுத்து டாக்ஸியின் மேலுள்ள கேரியரில் வைக்குமாறு பணித்தார். அப்பொழுதெல்லாம் செக்கின் பேக்கேஜிற்கு எழுபது பவுண்ட் எடைவரை அனுமதித்த காலம். இரண்டு பெட்டிகளையும், ஆரக்கிள் மேனுவல் நிரப்பப்பட்ட கேபின் லக்கேஜையும் எடுத்துக் கேரியரின் மேல் வைப்பதற்குள் நான் பட்டபாட்டை நினைத்தால் இன்றும் தோள் வலி உண்டாகும். இதற்கு நடுவில், இடைவிடாத மழை வேறு – குடும்பத்தினர் கஷ்டப்பட்டு நமக்காகச் செய்த முறுக்கு, சீடை தண்ணீர் பட்டால் பதத்துப் போய்விடுமே என்ற கவலை வேறு.

அடுத்து நாம் அடைந்தது நெதர்லாண்ட்ஸ் நாட்டிலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரத்தைச் சேர்ந்த ஷிஃபால் விமான நிலையம், அப்பா…. எவ்வளவு பிரம்மாண்டமான விமான நிலையம். முதல் முறையாகப் பார்த்த நாம் மலைப்பின் உச்சத்தை அடைந்தோம். விமான நிலையத்திற்கு உள்ளேயே அடுத்த விமானத்தைப் பிடிப்பதற்காக இரண்டு மூன்று மைல்களுக்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. ஆரக்கிள் மேனுவல் வைத்த ஷோல்டர் பேக்கை அவ்வளவு தூரம் தூக்கி வருவதை நினைத்துப் பாருங்கள் !! அந்த மேனுவல்கள் கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் ரிஸைக்கிளில் தூக்கி எறியப்பட்டன – அதுவும் நானில்லாத வேளையில் என் சகதர்மிணி செய்த சதிச் செயலது.

தூக்க முடியாமலந்தப் பளுவான ஹேண்ட் லக்கேஜைத் தரையில் போட்டு இழுத்துக் கொண்டு சென்ற என்னை, அந்த ஊரின் போலீஸ்காரர் ஒருவர் இடை மறித்துக் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். தொண்டையில் கூழாங்கற்கள் போட்டுக் கொண்டு பேசியது போலிருந்தது அவரின் குரல். அவர் பேசிய ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட எனக்கு விளங்கவில்லை. அது ஆங்கிலமா என்று கூடச் சரியாகத் தெரியவில்லை. “எக்ஸ்க்யூஸ் ,மீ”….. “பார்டன் மீ..”….. “சே இட் அகெய்ன் ப்ளீஸ்…” என நான் திரும்பத் திரும்பச் சொன்னதைக் கேட்ட அவர் “தலையால தண்ணி குடிச்சாலும் இந்த ஞானசூன்யத்துக்கு இங்கிலீஷ் வராது” என்று திட்டிக் கொண்டிருக்க வேண்டும். அன்றே அவர் வேலையை ராஜினாமா செய்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அவ்வளவு கெடுபிடி இல்லாத காலமென்பதால், என்னால் அவரின் கேள்விக்கு விடையளிக்க இயலா விடினும், அவர் என்னைப் போக அனுமதித்து அவர் போக்கில் சென்று விட்டார்.

ஆம்ஸ்டெர்டாமிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணிக்கையில், வயிற்றைக் கிள்ளுமளவுக்கு நல்ல பசி. “வெஜிடேரியன்” ஆக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை முதன்முறையாக உணர்ந்த நாள். எப்படியோ அபிநயங்கள் பிடித்து வெஜிடேரியன் என்ற செய்தியை ஏர் ஹோஸ்டஸிற்கு உணர வைத்த பிறகு, அவள் “செவன் லேயர் பொரீட்டோ” எனக் கூறி எதையோ கொடுத்தாள். அதன் நிறம் மற்றும் பதம் எந்த ஆங்கிளிலிருந்து பார்த்தாலும், அது வெஜிடேரியனாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை எனப் பட்டது. (அன்று தோன்றிய அந்த எண்ணம் இன்று வரை தொடர்வதால், வெஜிடேரியன் என நன்றாகத் தெரிந்தாலும், பொரீட்டோ மட்டும் இன்றும் நம்மால் உண்ண இயலுவதில்லை). அடுத்த எட்டு மணி நேரத்திற்குக் கொலைப் பட்டினியுடன் பிரயாணம் தொடர்ந்தது.

நாம் சென்றடைய வேண்டிய நகரம் சேர்ந்தாகி விட்டது. இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் என எல்லாவற்றையும் ஒன்றுமே புரியாமல் முடித்துக் கொண்டு வெளியில் வந்தாகிவிட்டது. அப்பொழுது அண்ணனின் அறிவுரை நினைவுக்கு வர, பாத்ரூம் சென்று, சீவி முடித்து, சிங்காரித்து, அதற்குள் முழுவதுமாய்ச் சுருங்கியிருந்த பச்சைக் கோட்டை அணிந்து கொண்டு நம்மை வரவேற்க வருபவருக்குத் தயாராகியிருந்தேன். நம்மை வரவேற்க நம் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டவர் ஒரு ஐம்பது வயதைத் தாண்டிய பெண்மணி. அவரும் நம் பெயர் வைத்த பலகையை எடுத்துக் கொண்டு வருவார் என்று எதிர் பார்த்த நமக்கு ஏமாற்றமே. ஆனால் எப்படியோ (!) அவர் நம்மைக் கண்டுபிடித்து, நம் பெயர் சொல்லி நீதானே என்று வினவ, அது நமக்கு விளங்குவதற்குள் அவரும் கிட்டத்தட்ட அந்த வேலையை விட்டுப் போகலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டிருப்பார்.

அவரின் காரில் பயணித்து, நமக்காக புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டலறைக்குச் சென்றாகி விட்டது. காலிங் கார்ட் வாங்குவது எப்படி என்று ஆரம்பித்து, சர்வதேசத் தொலைபேசிக்கு என்ன நம்பர் டயல் செய்வது என்று தொடர்ந்து, எவ்வளவு செலவாகுமோ என்ற பயம் வயிற்றில் புளியைக் கரைக்கப் பல பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, தொலைபேசியின் மறு முனையில் அம்மாவின் குரல் கேட்டது.

“அம்மா, நான் திரும்ப ஊருக்கே வந்துடறேம்மா…”. என என்னையுமறியாமல் கூறி முடித்துக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் முடிவடைந்து விட்டன. வாழ்க்கை இன்னும் இங்கேயே ஓடிக் கொண்டிருக்கிறது !!!

– வெ. மதுசூதனன்.

Comments (6)

Trackback URL | Comments RSS Feed

  1. malaramutthan says:

    கட்டுரையின் உள்ளடக்கம் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் அமைந்துள்ளது. நகைச்சுவை உணர்வு இயல்பாக வருகிறது. வார்த்தைகளில் நெகிழ்வுத்தன்மை இருக்கிறது. கட்டுரையை முழுமையாக்கினால், செம்மைப்படுத்தி, புத்தகமாக பதிப்பிக்கலாம்.
    அமுதன், சென்னை

  2. Senthil kumaran says:

    Madu, nicely written. My story is very similar. 20 years. Erode to IA to MN. Had a Thambu instead of Annan. Athey Amsterdam. Athey Mumbai. No Hindi. Innum Eluthunga.

  3. Karthick says:

    Looks very similar to my story too .

    Nicely written. Congrats.

    Karthick

  4. Rajesh says:

    Nicely Written Madhu well explained journey.

  5. Anonymous says:

    migavum arumaiyaga ezhuthiyurrukirai. unnudiya nagaichuvai unarachi ezhuthil prathibalikkiradhu. valthukkal.Sathyanarayanan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad