\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மனதில் உறுதி வேண்டும்

Filed in இலக்கியம், கதை by on September 10, 2014 0 Comments

manathil_uruthi_620x619மணி என்ன தான் இருக்கும் என்று பக்கத்தில் இருக்கும் டீக் கடையின் சுவர்க் கடிகாரத்தில் பார்த்தாள் கனகா .

11.30 மணி ஆகியிருந்தது . கிட்டத் தட்ட 2 மணி நேரமாய் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து கால் கடுத்துப்போய் இருந்தது. டீக் கடையில் நல்ல கூட்டம்.

நிறைய ஆண்கள், அரட்டை அடித்த படியும், பேப்பர் படித்த படியும் நின்று இருந்தார்கள். சிகரெட் புகை வேறு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது.

என்னடா , இதோ வரேன்னு போன மனுஷனை இன்னும் காணோம் , நெஞ்சு பக் , பக்கென்றது.

கொடுத்து அனுப்பும் போதே ரொம்ப பயத்தோடு தான் அனுப்பினாள் கனகா . இந்தக் குடிகார மனுஷனை நம்பி இருக்கக் கூடாது தான்.

படு பாவி நேத்து ராத்திரி தூங்கிட்டு இருந்த பிள்ள மேல சத்தியம் செஞ்சானே . “இனி ஒரு வாட்டி கூட குடிக்க மாட்டேன் டீ . இது நான் பெத்த என் புள்ள மேல சத்தியம் ” னு சொன்னான் . கேட்டதும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனா குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சுனு சொல்றது சரியாதான் போச்சு.

சொல்லவும் முடியாமல் , மெல்லவும் முடியாமல் துடித்துக் கொண்டு நின்றாள் . கண்களில் நீர் வழியத் தொடங்கியது.

பிள்ளைக்கு 6 வயசு முடிந்து விட்டுஇருந்தது. இன்னும் ஸ்கூல்ல சேர்க்க வில்லை . தினந்தோறும் குடித்து விட்டு வரும் கணவனைச் சமாளிப்பதும், அன்றாட சாப்பாட்டிற்கு வழி செய்வதுமே பெரும் சவாலாகிப் போய் இருந்தது. இந்த வருஷம் கண்டிப்பாச் சேர்க்கணும். இல்லாட்டிப் பிள்ளையின் வாழ்க்கை பாழாய்ப் போய்விடும் . அவளுக்குத் தன் மகனைப் பக்கத்தில் இருக்கிற தனியார் ஸ்கூல்ல சேர்க்க ஆசை. பிள்ளைங்க எல்லாரும் டவுசரும் ,ஷூவும் போட்டுகிட்டுப் போறதப் பார்த்த உடனே முடிவு பண்ணிட்டா ,எப்படியாவது இந்த ஸ்கூல்ல என் புள்ளையச் சேர்க்கணும். ஸ்கூல்ல படிக்கற பசங்க ,தொரையாட்டம் என்னமா இங்கிலீஷ் பேசுதுங்க .. நமக்கு தான் வக்கு இல்லாமப் போச்சு .நம்ம புள்ளையவாது நல்லாப் படிக்க வைக்கணும். முடிவு செய்துவிட்டிருந்தாள் கனகா . போய் விசாரித்ததில் காசு நிறையக் கட்டச் சொன்னார்கள் . கைக்கும் ,வாய்க்குமே தான் சம்பாதிக்கும் காசு பத்தாத போது ,ஸ்கூல் பீஸிற்கு எங்க போவது.தலை கிறுகிறுத்துப் போனது.ஆனாலும் எப்படியோ சேர்த்து விட வேண்டும் என்பதில் மட்டும் மனசு துடியாய்த் துடித்தது. தான் வாடகைக்கு குடி இருக்கும் வீட்டுக்காரரிடம் கேட்டுப் பார்க்கலாம். நல்ல மனுஷன் , ஸ்கூல் பீஸ்னா கண்டிப்பாக் குடுப்பார். மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் . கொஞ்சக் காச எப்படியோ புரட்டிடலாம் . ஆனா அதுவும் பத்தாது . நகை நட்டும் எதுவும் இல்லை விற்பதற்கு என்று பெருமூச்சு விட்டாள் . சட்டென்று மின்னல் அடித்தாற்போல , கழுத்தில் இருக்கும் தாலி நினைவிற்கு வந்தது. நம்ம கல்யாண வாழ்க்கைல தாலி ஒண்ணுதான் கேடு. பேசாம ,மீதிக் காசிற்கு , தாலியை அடகு வைக்க வேண்டியது தான். தனக்குள்ளே கணக்குப் போட்டாள் .

புதன் கிழமை பார்த்து, பிள்ளையை ஸ்கூல் சேர்ப்பதற்காகக் கிளப்பிக் கொண்டிருந்தாள் . என் ராசா , நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும் என்று புத்தி சொல்லிய படியே தலை சீவினாள் .கிளம்பும் நேரத்தில், நானும் வரேன் டீ என்று சொன்னான். இவனை நம்புவதா , வேண்டாமா என்று ஒரே குழப்பம்.

அவள் கண்களின் குழப்பத்தைத் தெரிந்து கொண்டு , ” நான் சத்தியம் பண்ணியும் நம்ப மாட்ர பத்தியா ? , என் புள்ளைய ஸ்கூல் சேர்க்க எனக்கு ஆசை இருக்காதா?” என்று குழைந்தான். சரி ,நல்ல புத்தி வந்து விட்டது என்று நினைத்து, கருமாரியம்மன் படத்தின் முன்பு விழுந்து கும்பிட்டாள் . பிள்ளைக்குத் திருநீர் பூசி , மூவரும் கிளம்பினார்கள்.

பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் , எனக்கு தெரிந்த சேட்டு , கொஞ்சம் காசு கூடத் தருவார். நீ பிள்ளையோட இங்கேயே நில்லு ,நான் போய் நகைய வச்சுப் பணத்த வாங்கியாந்துர்ரேன் . சொல்லிவிட்டு , தாலியை வாங்கிக் கொண்டு ரோட்டைக் கிராஸ் செய்தான் .

நேரம் ஆக ஆக , நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. இனி அவன் வருவான் என்ற நம்பிக்கை முழுவதும் போய் விட்டுஇருந்தது. புள்ளைய இனி எங்க சேர்ப்பேன் . கண்களில் தாரை தாரையாய் நீர் வழிந்தது. வாழ்க்கை இன்னும் அடர்ந்த இருட்டுப் பாதையில் போவதைப் போலத் தோன்றியது .

அம்மா, ரொம்பப் பசிக்குது என்று சேலையைப் பிடித்து இழுத்தான் பாபு. இனி அழுது பிரயோஜனம் இல்லை என்று அறிவு சொல்லியது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டாள் .சட்டென எழுந்து டீக்கடையில் ஒரு டீ வாங்கி குடித்தாள் . பிள்ளைக்கும் ரெண்டு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தாள் . அண்ணாந்து பார்த்தாள் ,வானம் கறுத்துக் கொண்டு மிதந்து வந்தது. டீ கிளாஸை வைத்து விட்டு ,பாபுவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, விறு விறுவென ரோட்டில் இறங்கி நடந்தாள் . “

“மஞ்சள் என்றென்றும் நிலையானது , மழை வந்தாலுமே கலையாதது “ என்று எஸ்.ஜானகியின் குரல் டீக்கடையின் ஸ்பீக்கர் வழியே காற்றில் மிதந்து வந்தது.

வானமும் கசியத் தொடங்கியது. மழை,அவள் நெற்றியில் இருந்த மஞ்சளை மெதுவாய்க் கரைத்த படி ,நீர்த் திவலைகளாய் முகத்தில் வழிந்து கொண்டிருந்தது.

அவள் அரசு பள்ளிக் கூடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் ..

– மீனாட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad