\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கொல்லத் துடித்தான்…..!  திருவிவிலிய கதைகள்.

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on January 29, 2017 0 Comments

மாசில்லாத மழலை உள்ள வீடு மகிழ்வு நிறைந்த சொர்க்கம் போன்றது. ஒரு இல்லத்திற்கு  அர்த்தமுள்ள நிறைவு… குழந்தை.

“குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்பார்கள். காரணம் குழந்தை ஒரு வரம்.

அந்தக் குழந்தையாக தெய்வமே புவியில் தோன்றும்போது…..ஆகா..

அப்படித்தாங்க இந்த உலகத்தில அன்பின் அடையாளமாக இயேசு பாலன் பிறந்தார். இது நம்ப எல்லாருக்குமே தெரிந்த விடயம்.

அந்தக் குழந்தையைக் காண வெவ்வேறு திசையிலிருந்த முன்று ஞானிகள்  வந்தார்கள். குழந்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இயற்கை  அவர்களுக்கு வால் நட்சத்திர வடிவில வழிகாட்டியது.

நீண்ட பயணம்…… இஸ்ரேயல் நாட்டுக்கு அருகில் வந்தபோது ஓய்வெடுக்க எண்ணினர்.

இஸ்ரேயல் நாட்டுப் பேரரசன் ஏரோதுவிடம் சென்று, “நாங்கள் வேற்று திசையிலிருந்து நீண்ட பயணம் வந்துள்ளோம்.  இன்று இரவு மட்டும் தங்கிவிட்டுச்  செல்ல அனுமதி வேண்டும்” என்றார்கள்.

ஏரோது பேரரசனும் அவர்களை வரவேற்று, தங்க அனுமதி அளித்தான்.

அன்று இரவு அனைவரும் அரச விருந்து உண்டார்கள். ஏரோது மன்னன் விருந்தினர்களாக வந்திருந்த ஞானிகளிடம், “நீங்கள் முவரும் இந்த நெடும் பயணத்தில் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டான்.

அவர்களோ “சாத்திரங்களின் படி உலகத்தை மீட்க ஒரு தெய்வக் குழந்தை  பிறந்திருக்கிறார்,  அவர் யூதர்களுக்கு எல்லாம்  ராஜாவாகப் போகிறார்.  கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைத் தேடி விலையுயர்ந்த பரிசுகளை எடுத்துச் செல்கிறோம்” என்றார்கள்.

ஒரு பேரரசனிடம்  சென்று வேறொரு மன்னன் நம்மை ஆள வரப் போகிறார் என்று சொன்னால் எப்படி இருக்கும்.  

அவர்கள் சொல்லக்கேட்ட ஏரோது மன்னனின் சப்தநாடிகள் ஒரு நொடி நின்றன.

மனதிற்குள் “சாத்திரப்படி  என்னைவிட ஒரு பெரிய மன்னன் பிறந்திருக்கிறாரா?”  என்று அவனுடைய மனது படபடத்தது……

அருகில் இருந்த ஏரோதுவின் ஆட்களுக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

இதுவும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள சுயநலவாதிகள் மாதிரிதாங்க.  அதிகாரம், பதவி, செல்வாக்கு அதுதரும் சுகம், இது எல்லாம் போகப் போகிறது என்று தெரிந்தால்  அந்த  ஒரு நிமிடம்……. அவர்கள் படும்பாடு… அதன் காரணமாக, அவர்களின் பேச்சு,  செயல் ….

இது நம் வாழ்விலும் நடந்திருக்கும்.  அதிகாரம், பதவி, செல்வாக்கு இருக்கும்போது நம் பொறுப்பை எல்லாம்  மறந்து  “ஆடம்பரம் எனது உரிமை” என்ற வியாக்கியானம் பேசி  இருப்போம்.  

இந்தச் செல்வாக்கு நம்மை விட்டு அகலும் என்று தெரியவரும் அந்த நிமிடம் …… நம் மனம் ஏற்க மறுக்கும்……  அந்த  ஒரு நிமிடம்…… நம்மிலும்….. பயம்…. கோபம் …… வெறுப்பு …… விரோதம்……  தோன்றியிருக்கும்.

அதே போலத்தான் அன்று இரவும், ஏரோதிடம் வந்த முன்று ஞானிகளும்  நிம்மதியாகத் தூங்கினார்கள்.

ஆனால்,  ஏரோது பேரரசன்…….தூக்கம் இழந்து…. உருண்டுபுரண்டான்……. தனக்குமேல் ஒரு அரசன் பிறந்திருக்கிறாரா?…. அவன் மனம் ஏற்க மறுத்தது.

உடனே, ஏரோது தன் அரண்மனையில் உள்ள சாத்திரம் படித்தவர்கள், வேதபாரகர்கள் எல்லாரையும் அழைத்தான்…….

அவர்களிடம், “இயேசு எங்கே பிறப்பார்” என்று விசாரித்தான்.

அவர்களும் சத்திர நூல்களைப் புரட்டினார்கள். வான சாத்திரக் கணிதத்தைக் கணித்தார்கள். பின்பு ஏரோதிடம் “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்”

ஏனென்றால் “ யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல. என் இஸ்ரயேல் மக்களை ஆளப்போகும்  அரசர் உன்னிடத்தில் இருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள்.  

உண்மையில் இயேசு உலகத்தை ஆள அல்ல மக்களின் உள்ளத்தை ஆளப்பிறந்தார்.

சாத்திரம் படித்தவர்கள் கூறக்கேட்ட  ஏரோது இரவு முழுவதும் தூங்கவில்லை.

அடுத்த நாள் காலை,  முன்று ஞானிகளையும் ரகசியமாய் அழைத்து “நட்சத்திரம் எப்போது வந்தது,  எந்தத் திசையிலிருந்து வந்தது” என்று விசாரித்தான்.

மேலும் போலியான புன்னகையோடு  “நீங்கள் போய், அந்த தெய்வக் குழந்தையைப்  பார்த்து நலம் விசாரித்துவிட்டு என்னிடம் வந்து சொல்லுங்கள், நானும் போய் அந்தக் குழந்தையைப் பார்க்கிறேன்”  என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.

அந்த முன்று ஞானிகளும் ஏரோது  ராஜா சொன்னதைக் கேட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

வால் நட்சத்திரம் அவர்களுக்கு வழிகாட்டியது…..

பாலகன் இயேசு இருந்த இடத்திற்குமேல்  வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது.

மாட்டுத் தொழுவத்தில் இயேசு பாலகனையும் தாய் மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொண்டு, தங்கள் பெட்டகத்தைத்  திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாகப் பாலகன் இயேசுவிற்கு வைத்தார்கள்.

வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய மகிழ்வோடு அவர்கள் திரும்பி ஏரோதின் நாட்டை நோக்கிப் போகும்போது, களைப்பு…..இடையில் சிறிய ஒய்வெடுத்தார்கள்.  

அப்போது அவர்கள் கனவில் தேவ தூதுவன் தோன்றி  “ஏரோதினிடம் திரும்பிப் போக வேண்டாம், வேறு வழியாய் உங்களுடைய நாட்டிற்குப் போங்கள்” என்றார்.  

அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, இருந்தாலும் தேவ தூதுவன் சொன்ன படியே தம் தம் நாட்டிற்கு வேறுவழியாகச் சென்றார்கள்.

தேவ தூதுவன்  சோசப்பின் கனவில் தோன்றி  “ஏரோது இந்தக் குழந்தையை க் கொலை செய்யத் தேடுகிறான். எனவே நீ எழுந்து, குழந்தையையும் அதன்  தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு”  என்றார்.

சோசப்பும் எழுந்து, இரவோடு இரவாக குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார்.

நாட்கள் நகர்ந்தன  ……. தனக்கு எதிராக அந்தக் குழந்தை அரசனாக வருமுன் அதைக் கொல்லத்  துடித்த  ஏரோது தான் ஏமாற்றப்பட்டதை  அறிந்து ஆத்திரம் அடைத்தான்.

தனது படைவீரர்களை அனுப்பி பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தான்.

எங்கும்  புலம்பலும், அழுகையும், மிகுந்த கூக்குரலும்  கேட்டது.

அதிகாரம், பதவி, செல்வாக்கு அதுதரும் சுகம், இது எல்லாம் போகப் போகிறது என்று தெரிந்த ஏரோது அன்பின் உருவமான இயேசு பாலனைக் கொல்லத் துடித்தான்.

-ம.பெஞ்சமின் ஹனிபால்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad