\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பகுத்தறிவு – பகுதி 5

(பகுதி – 4)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். சென்ற பகுதிகளுக்கு வந்த விமரிசனங்களும், கருத்துக்களும், கேள்விகளுக்கும் மனதுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. என் கருத்தோடு உடன்படாதவர்களின் கேள்விகளும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்தன. நிச்சயமாக, மாற்றுக் கருத்துள்ளவர்களின் மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே எனது ஆசையும்கூட.

பின்னூட்டங்கள் உற்சாகமாக அமையும் அதே சமயத்தில், நேரடியாக அனுப்பப்பட்ட சில கேள்விகளும், சந்தேகங்களும், மேலும் பொறுப்புணர்ச்சியோடு எழுத வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுவதாக அமைகிறது. ஏற்கனவே பலமுறை கூறியதுபோல், இது மிகவும் ஆழமானத் துறை, கேள்வி கேட்பவர்களுக்கு, வழிகாட்டியாகச் செயல்படுமளவுக்கு அனுபவமோ, முதிர்ச்சியோ நமக்கு வந்துவிட்டதாக நாம் நினைக்கவில்லை. படித்தறிவது என்பது பயனுள்ளதேயெனினும், ஆன்மீகத் துறையில், அதிலும் குறிப்பாக ஞான மார்க்கத்தைப் பற்றிப் பேசுகையில், படித்தறிவதைத் தாண்டிச் சென்று, நேரடி அனுபவமாய் உணர வேண்டுமென்ற அவசியம் இருக்கிறது. அந்த நேரடி அனுபவமும், அதனால் அமையும் பக்குவமும், தூரப்பார்வையும் மட்டுமே ஒருவரை மற்றவருக்கு வழிகாட்டியாக மாற்றும் என்ற காரணத்தால், வரும் கேள்விகளுக்குப் பொறுப்புணர்வோடு பதிலளிப்பதும், இந்தத் தொடரை நகர்த்திச் செல்வதிலும் மேலதிகப் பொறுப்புணர்வு காட்டுவது என்பதும் அவசியமாகிறது.

தமிழ்ப் பற்றுள்ள அனைவரும், நாத்திகர் ஆத்திகர் என்ற வேறுபாடின்றி உணர்ந்து ரசிக்கும், சிலாகிக்கும் தமிழ்க் கவிகளுள் முக்கியமானவர் மகாகவி சுப்பிரமண்ய பாரதி என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் பாடல்களில் பிரபலமாக மேற்கோள் காட்டப்படும் பாடல்களன்றி, வேறு பல பாடல்கள் ஆழ்ந்த ஞானக் கருத்தை விளக்குவதாக அமையும். இவை “ஞானப் பாடல்கள்” என்ற தொகுப்பில் வெளியாகி உள்ளன. அவற்றின் முக்கியமான, சுவையான ஒன்று “குள்ளச்சாமி புகழ்”.

இந்த ஞானமார்க்க விளக்கங்களை, அறிவுபூர்வமாக அறிந்து கொள்வதனால் மட்டும் பயனில்லை, அனுபவமாய் உணர வேண்டுமென்பதைச் சுவைபட, “குள்ளச்சாமி புகழ்” கவிதையில் விளக்கியுள்ளார். அதிலிருந்து ஒரு பகுதியைக் கீழே காணலாம்;

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த

பாழ்மனை ஒன்றிருந்தது அங்கே – பரமயோகி,

ஒக்கத்தன் அருள் விழியால் எனைநோக்கி

ஒரு குட்டிச்சுவர் காட்டிப் பரிதிகாட்டி

அக்கணமே கிணற்றுள் அதன் விம்பங்காட்டி

அரிதிகொலோ? எனக்கேட்டான் அறிந்தேன் என்றேன்…

மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான் யானும்

வேதாந்த மரத்தினொரு வேரைக் கண்டேன் !!

தேசிகன் தன்கைகாட்டி எனக்குரைத்த செய்தி

செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன்

வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி

மண்போலே சுவர்போலே காத்தல் வேண்டும் !

தேசுடைய பரிதியொரு கிணற்றினுள்ளே

தெரிவதுபோல் உனக்குளந்த சிவனைக் காண்பாய்

பேசுவதால் பயனில்லை, அனுபவத்தால்

பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் !!

எவ்வளவு புத்தகங்களைப் படித்தாலும், அறிஞர்கள் பேசுவதைக் கேட்டு அறிவை வளர்த்திருந்தாலும், அவற்றைப்பற்றிக் கோர்வையாகப் பேசினாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. இதனை அனுபவமாய் உணர்வதே ஞானமாகும் என்றும் அதுவே பேரின்பமும் ஆகும் என்றும் தெள்ளத் தெளிவாய் விளக்குகிறார். இந்தக் கவிதையின் முழுவதுமான பொருளை அறிந்து கொள்வது இந்தத் தொடரில் சொல்லப் போகும் சில கருத்துக்களுக்குத் தொடர்புடையதாக இருக்கும் என்பதால் இதனைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

குள்ளச்சாமி என்பவர் பாரதியின் சமகாலத்தவர். பாரதியால் தனது ஞானகுரு என்று மானசீகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரின் தோற்றத்தையும் செயல்பாட்டையும் பார்ப்பவர்கள் அவரை மனநிலை சரியில்லாதவர் என்றே முடிவெடுப்பர். அவரை முதல் முறை பார்த்தவுடனேயே பாரதிக்கு, அவர் பெரிய ஞானஸ்தர் என்ற எண்ணம் தோன்றியது. அதே எண்ணம் தொடர்ந்து, பெரிதாக வளர்ந்து, பலப்பல நிகழ்வுகளால் பாரதியிடம் உறுதிப்பட்டுப் போய்விட்டது. அவரிடம் ஞானதீட்சை பெறுவதே குறிக்கோள் என்று முடிவு செய்துவிட்டார். அதற்காகப் பல முறை, பல விதமாக முயன்றான் பாரதி. ஒருமுறை வீட்டின் முற்றத்தில், இருவர் மட்டும் இருக்கும் நிலை வர, அவரின் அருகே சென்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான் பாரதி. பேச்சில் பிடிப்புக் காட்டாமல், அவனிடமிருந்து தப்பிச்செல்ல நினைத்த குள்ளச்சாமியை, அருகில் ஓடிச்சென்று வளைத்துப் பிடிக்க, அவர் அவனிடமிருந்து தப்பி வெளியே ஓடத் தொடங்குகிறார். ஓடிய குள்ளச்சாமியைத் துரத்தி வெளியிலோடி வந்தார் பாரதி, சற்று தூரம் ஓடிச்சென்ற குள்ளச்சாமி, நின்று, திரும்பி, துரத்தி வந்த பாரதியைப் பார்க்கிறார். இரையைக் குறி வைக்கும் புலிக்கான கூரிய பார்வை அது என்று பின்னர் விளக்குகிறார் பாரதி.

ஞானத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவ நிலையைப் பாரதி எய்தியிருப்பதை உணர்ந்த குள்ளச்சாமி, அவருக்கு விளக்கலாம் என்று முடிவெடுக்கிறார். அருகிலிருக்கும் வீடு இடிந்து, மாறியிருந்த குட்டிச் சுவரைக் காட்டுகிறார், ஒளிர்ந்து நிற்கும் சூரியனைக் காட்டுகிறார், அருகிலிருந்த கிணற்றில் அந்தச் சூரியனின் பிம்பத்தைக் காட்டுகிறார். “புரிந்து கொண்டாயா?” என்று கேட்கிறார், பாரதியும் அதைப் புரிந்து கொண்டதாகத் தலையசைக்க, புன்னகைத்துக் கொண்டே அந்த இடம் விட்டு அகன்றார் மகாஞானியான குள்ளச்சாமி. இங்கு நடந்ததாக பாரதியால் விளக்கப்படும் இந்தச் சம்பாஷணையை சமஸ்கிருதத்தில் சட்சு தீட்சை என்றழைப்பர்.

“வாசி” என்ற சொல்லுக்கு நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்று என்று பொருள். அதனை உள்ளே இழுத்தவுடன் வெளியே விட்டு விடாமல் தேவைப்பட்ட வினாடிகள் வரை உள்ளே இருத்துவதைக் கும்பகம் என்பர். அதாவது, பிராணயாமம் என்று இன்று பிரபலமாகப் பேசப்படும் மூச்சுப் பயிற்சியையே “வாசியை கும்பகத்தால் வலியக் கட்டுவது” என்று பாரதி குறிப்பிடுகிறார் இங்கே. நீண்ட நேரம், நீண்ட காலம் இதைப் பயில்வதால் மனம் ஒடுங்கத் தொடங்குகிறது. அதாவது, மனம் நுண்மையாகத் தொடங்குகிறது. கவனச் சிதறல் குறைந்து, காலப் போக்கில் இல்லாமலேயே போகிறது. நுண்மையான ஒன்று திடமான ஒன்றை விட வலிமையானது. ”நீர் கல்லைவிட வலிமையானது”, ”காற்று நீரைவிட வலிமையானது” இந்த எடுத்துக்காட்டுகள் நுண்மையானவை திடமானவற்றைவிட வலிமையானது என்பதை நிரூபிப்பதாக அமைகிறதல்லவா? அதுபோல, மனத்தை நுண்மையாக்குவதன் மூலம் ஒரு சமான நிலையை அடைய முடிகிறது. இந்த நிலையில், மழை விழுந்து கரைவது பற்றியும், வெயில் அடித்துக் காய்வது பற்றியும் கவலைப் படாமல் நிற்கும் குட்டிச் சுவர் போன்ற ஸ்திதப் பிரக்ஞ மனோநிலை உண்டாகும். குளிர், வெயில், சுகம், துக்கம், மானம், அவமானம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக நோக்கும் சமநோக்கு மனோபாவம் ஏற்படும். அந்த நிலை வந்தவுடன், வானத்தில் இருக்கும் சூரியனின் பிம்பம் பூமியில் இருக்கும் கிணற்றுத் தண்ணீரில் தெரிவது போல, எங்கோ இருக்கும் பரமசிவம் தன் உள்ளத்தின் உள்ளே ஒளிர்வதைக் காணமுடியும். பாரதியின் கவிதையின் முழு விளக்கம் இதுவே.

சரி, இதற்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். இதுபோலச் சொல்லப்படும் பல அரிய கருத்துக்களில், உண்மை இருக்கிறதா? அறிவியல் இருக்கிறதா? பாரதி சொன்னார் என்பதற்காக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டுமா? என்னாலும் இதனை உணர்ந்து நிரூபிக்க முடியுமா? இதுபோன்ற அத்தனை கேள்விகளுக்கும் விடையறிந்து கொள்ள முயற்சி செய்வதே உண்மையான பகுத்து அறியும் முயற்சி. காதில் கேட்கும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு மூட நம்பிக்கை என்று விலக்குவதல்ல !!

தொடர்ந்து பேசுவோம்.

   வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad