\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மகரந்த மலர் வண்டுகளுக்கு உதவுவோம்

இளவேனிற் காலம் இதமாக சூடேற்றுகிறது புல்தரைகளும், தூங்கிய மரங்களும் விழித்தெழும்புகின்றன. நாம் கடித்துச் சுவைக்கும் ஆப்பிள் பழம், ஜஸ்கிரீம் மேல் வைக்கும் செரிப் பழம், காய்கறிகள் யாவும் பூத்துக் குலுங்க அவற்றின் மகரந்தங்களைக் காவிச் செல்லும் வண்டுகள், பூச்சிகள், தேன் குருவிகள் அவசியம்.

எனவே இளவேனிற் காலம் தொட்டு இலையுதிர் காலம் வரை புன்சிரிக்கும் பூக்களிலுள்ள தேனை அருந்தவரும் வண்டுகள் மகரந்தத் தூவல்களை (Pollen) எடுத்துச் செல்லும். இப்படிப் பரிமாறப்படும் மகரந்தத் தூவல்களே அடுத்து கொத்துக் கொத்தாய்க் காய்கனிகள் உருவாகிட வழிவகுக்கும்.

ஆதிகாலம் தொட்டு இன்று வரை நாம் உண்ணும் அனைத்து தாவர உணவுகளுக்கும் அடிப்படை இதுதான். எனினும் மனித இனத்தின் தொடர் ஆதிக்கமும், பூச்சிக்கொல்லி மருந்துகளும், பூகோள சூழலியல் மாற்றங்களும் மகரந்தம் பரப்பும் வண்டுகளுக்கு பாதகமாக மாறி வருகிறது.

மலர்கள் கூடிய சுற்றாடலை உருவாக்குதல்

தேன் மதுரம் தேடி வரும் பூச்சிகளுக்குப் பாரிய மதில்களும், பாங்கான சிறு பூங்காவில் உள்ள செயற்கை வேலிகளும் தடைகளே. பூக்களை நாடி வரும் பூச்சிகள் தேன் ததும்பும் ஒரே வகைப் பூக்களும் ஒன்றாக இருப்பின், பூச்சிகள்  அதிக பறப்பு உந்து சக்தியைப் பிரயோகிக்காது இலகு இதழ்களுக்கு, இதழாகத்தாவி தேன் அருந்தலாம்..

பொருள்மயமாக்கும் எண்ணங்களினால் நாம் தேன் தேடும் வண்டுகளின் பூப்பூக்கும் தரைகளைத் தாறுமாறாகத் துண்டாடிவிட்டோம். கட்டிடங்கள், மதில் சுவர்கள் கட்டிய இடம்போக, மீதியுள்ள இடங்களில் தேன் சொட்டாத பூக்கள் பூக்காத செயற்கைப் புற்தரைகள், சிறு தாவரங்கள் என அலங்காரமாக நாட்டிப் பேணியவாறுள்ளோம்.

இது ஆயிரமாண்டுகளாகப் பூக்களைத் தேடி வரும் பூச்சிகளின் வாழ்விற்குப் பாதகமான விடயம். உதாரணமாக மினசோட்டா மாநிலத்தின் இருபெரும் நகரங்களாகிய மினியாப்பொலிஸ், செயிண் பால், மற்றும் அதன் அண்டை நகரங்களிலுள்ள வீடுகளின்  கொல்லைப்புறத்தில்  மகரந்தம், தேனோடு பூத்துக்குலுங்கும் பூக்கள் பல இல்லை என்கிறார்கள் மினசோட்டாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

பிரேயரி எனப்படும் பூக்கள் மிகுந்த பரந்த புற்றரை நிலங்கள் இன்று மக்கள் வாழ்விடமாகவும், பெரிதாகப் பூத்துக் குலுங்காத பயிரினங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனலாம். இது பழங்கள், காய்கறிகள் தேன் வண்டுகளைத் துண்டிக்கும் செயல் எனப் படிப்படியாக தற்போது உணர்கிறோம்.

ஒரு தடவை நீங்கள் உங்களைச் சிறு தேன் வண்டாக எண்ணிப்பாருங்கள். தினமும் பல தடவை உணவுக்காக நீண்ட தூரம் சிறு இறகுகளை அடித்துப் பறப்பது களைப்பான விடயம். இல்லை சிறிய மசுக்குட்டிப் பழு நிதமும் உணவு தேடித்திரியும் சந்தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளுவோம்.  இந்த சிறிய உயிரினங்கள் உரியகாலத்தில் பூக்கள் தளிர் இலைகள் போன்ற உணவில்லாவிட்டால் மரித்துவிடும். இது அவற்றின் சந்ததிகளையும் படிப்படியாக அழித்துவிடும்.

சுற்றாடல் பற்றிய கவனயீனங்கள்

வட அமெரிக்காவில் நவீனமயம் என்ற பெயரில் சென்ற 50-60 ஆண்டுகளாக நாட்டுப்புறத்தில் இருந்து நகர்வந்த மக்களிடம் இருந்த நோக்கு, நமக்கு புதிதாக வீடு இருந்தால் வெள்ளை வரிவேலி (White Picket Fence), பச்சைப் பசேல் புற்தரை (Green Grass Turf) வேண்டும் என்பதே.

மினசோட்டா மாநிலத்தில் அண்டை வீட்டினர் எப்படியிருந்தாலும், அவர்கள் தங்கள் புற்தரையைச் சரியாகப் பேணி பாதுகாக்காவிட்டால் அனாவசியச் சச்சரவுகள் வரும் எனும் நையாண்டிக் கருத்து நிலவுவதுண்டு.

ஆயினும் சுற்றுச்சூழல், மனிதர்க்கு உதவும் தேனீக்கள், தேன்வண்டுகள் பேணுவதை  அலட்சியப்படுத்தி புற்தரை வளர்ப்பதில் நாம் அதிக நாட்டம் காட்டியுள்ளோம் என்பது உண்மை.

நீண்டதூர சாலைவழிப் பயணங்களில் நாம் எப்படி எரிபொருள் நிலையங்களை நாடிச் செல்கிறோமோ அது போல்  வண்டுகளுக்கு தேன் சொட்டும் பூக்கள் அவசியம். பெரிதாகவோ  சிறிதோகவோ, வீட்டுத் தோட்டங்களிலோ அல்லது அடுக்கு  மாடி வீ்ட்டுத் தாழ்வாரங்களிலோ மலர்ச் செடிகள் வளர்த்திட வேண்டும்.  

எமது பூந்தோட்டங்களில் செய்ய வேண்டியவை

  • ஒரே வகையான பூச்செடிகளை அருகருகே நாட்டிக்கொள்ளலாம். உதாரணமாக பெரிதாக இதழ் விரித்து தேன், மகரந்தம் ஒப்புவிக்கும் cone flower மற்றும் Asters போன்ற பூக்களை ஒட்டி நட்டுக் கொள்ளலாம், இந்தப் பூக்களின் பாரிய நிறங்கள் தேன்வண்டுகளைக் கவர வல்லவை.
  • தேன் வண்டுகள், பூச்சிகள் சிறு பருவ மசுக் குட்டிப் புழுக்கள் வாழக்கூடிய கொத்துக் கொத்தாகப் பூக்கும் செடிகளை  வைத்துக் கொள்வதும் நல்லது
  • முடிந்த அளவு புற்றரைகளைக் குறைத்து பூச்செடிப் பாத்திகளை அதிகரிக்கலாம்.
  • பெரும் விசாலமான மொட்டைப் பச்சை செயற்கைப் புற்தரையை இரசாயனப் பொருட்களைப் பாவித்துப் பேணுவதை விட Clover போன்ற நிலத்தோடு பரவிப் பூக்கும் தரை பரவிச் செடிகள் உபயோகித்தல் தேன்வண்டுகளுக்கு உதவும்.
  • வீட்டுப் பூச்சாடிகள், தொங்கும் அலங்காரச் சாடிகளிலும், மண்ணில் போடும் மரப்பாத்திகள் கொத்துக் கொத்தாகவும், இதழ் விரித்துச் சிரிக்கும் வர்ண ஜாலப் பூக்களை வளர்க்கலாம்,
  • குளிர்பிராந்தியங்கள் வாழும் நாங்கள் வருடாந்தம் பனியில் உறங்கி வெய்யில் வெகுந்து எழும்பிப் பூக்கும் தாவரங்கள் பலவற்றையும் தேர்ந்தெடுத்து நட்டுக் கொள்ளலாம்.
  • முடிந்தால் அயலவர்களும் பூச்செடி வளர்க்க உதவுவது தேன்வண்டுகளுக்கு நாம் செய்யும் உபகாரமே.
  • தேன் வண்டுகளைக் காப்பாற்ற மினசோட்டாப் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூடம் கீழேயுள்ள பூஞ்செடி வகைகளை வளர்ந்து நாம் உதவலாம் என்று அறிவுரை தந்துள்ளனர்.
    • – Anise hyssop (Agastache foeniculum)
    • – Autumn Joy sedum (Hylotelephium telephium)
    • – Bugleweed (Ajuga reptans)
    • – Catmint (Nepeta x fassenii)
    • – Cup plant (Silphium perfoliaturn)
    • – Culver’s root (Veronicastrurn virginicurn)
    • – Globe thistle (Echinops)
    • – Ironweed (Vernonia fasiculata)
    • – Partridge pea (Chamaecrista fasciculatal
    • – Primroses (Prirnula vulgaris)
    • – Sea holly (Eryngium maritimum)
சென்ற டிசம்பர் 2016 மினசோட்டா தேன்வண்டு (Bumblebees) இனங்கள் சில இன அழிவுக்கு உள்ளாகி அவை இனப்பாதுகாப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

குறிப்பாக Bombus affinis எனப்படும் தேன்வண்டு இனத்தொகை மிகுவாகக் குன்றி அபயமான அழிந்து போகும் சூழலிற்க்குள்ளாகியுள்ளதாம்.  வட அமெரிக்காவில் 48 தேன் வண்டு இனங்கள் உள்ளன, ஆயினும் அவையாவும் வெவ்வெறு வெட்பதட்ப சூழல்களில் வாழுகின்றன. இவற்றில் பல சூழல் மாற்றங்கள், பயிர்ச்செய்கையில் அதி இரசாயன உபயோகங்கள், வாழுமிடங்கள் அழிக்கப்படல், புதிய நோய்கள் போன்றவற்றினால் அழிந்து வருகின்றன.

 

எனவே நாம் சுவைக்கும் ஆப்பிள் பழம், செரிப் பழம், காய்கறிகள் யாவும் பூத்துக் குலுங்க அவற்றின் மகரந்தங்களைக் காவிச் செல்லும் வண்டுகள், பூச்சிகள், தேன் குருவிகளை பேணிட நமது வீ்ட்டில்,பூங்காவில் வர்ணப்பூக்களை மலரவைத்து வீட்டையும் அலங்கரிப்போம்.

தொகுப்பு – யோகி

 

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad