\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நாட்டின் நெறிமுறைகள் (Ethics) கேள்விக்குறியிலா?

    நாட்டின் நெறிமுறைகள் கேள்விக்குறிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

அன்றாடம் தொலைக்காட்சியைப் பார்த்தால், வானொலி கேட்டால், பத்திரிகை இணையதள எழுத்துக்களை வாசித்தால் அமெரிக்க அரசியல் ஏதோ சர்க்கஸ் கும்மாளம் என்பது போல நமக்குத் தோன்றலாம். ஆயினும் சனநாயக கோட்பாட்டையே கேள்விக்குறியாக்க கூடிய நிலைமைகளை நாம் புறக்கணிக்கலாகாது.

நாட்டின் 230 ஆண்டுச் சரித்திரத்தில் அரசு நெறிமுறைகள் (Government Ethics) பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன என்கிறார் அண்மையில் பதவி விலகிய, அமெரிக்க அரசு நெறிமுறை (U.S. Office of Government Ethics) அலுவலக அதிகாரி திரு வால்டர் ஷாப் (Walter Shaub).

அமெரிக்க அரச நெறிமுறை அலுவலகம் சுயேட்சையாகத் தொழிற்படும் அரச ஒன்றியம். இதை எந்தக் கட்சியும், அதிகார அரசியல்வாதிகளும் நேரடியாக விமரிசிக்க முடியாது. நெறிமுறை அலுவலகம் அரச சாசனப்படி அரசு ஊழியர் யாரையும், அவர்கள் நடவடிக்கைகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கும் உரிமை உள்ள தாபனம்.

அண்மையில் திரு ஷாப் அவர்கள் தேசிய ஊடக ஒன்றியத்தின் (National Press Club) ஒன்றுகூடலில் உரையாற்றிய போது, எம் நாட்டு நெறிமுறைகள் பாரதூரமான கெள்விக்குறிக்குத் தள்ளப்பட்டுள்ளன, இது பற்றி அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் உடன் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

திரு ஷாப், அமெரிக்க அரசு நெறிமுறை அலுவலத் தலைமைப் பதவியில் இருந்து சென்ற ஜூன் 2017 இராஜினாமா செய்துவிட்டார். இது, அவர் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, இறுதியில் அமெரிக்க மக்களுக்கும், சட்டசபைக்கும் விழிப்புணர்வை வரவழைக்கவே செய்துள்ளார் என்று கருதப்படுகிறது.

அவர் பதவியிலிருந்து அகலும் போது பல புதிய நெறிமுறைப் பரிபாலனத் திருத்தங்களையும் முன்வைத்து, இவற்றை மத்திய அரசு சட்டசபைகள் அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென ஆலோசனை தந்து விலகியுள்ளார்.

அமெரிக்கத் தலைநகரில், அரசியல்வாதிகள் என்ன திருகு தாளம், அரசியல் சூசகங்களை செய்யினும், எளிதில் மக்கள் கண்களில் மணல் எறிந்து போய்விட முடியாது. அரச ஊழியர்களின் தேசப்பற்று மகத்தானதொன்று. அமெரிக்க மக்களுக்கான பணிக்குத் தம்மைத் தியாகம் செய்வதன் ஒரு எடுத்துக் காட்டு என்றும் குறிப்பிடலாம்.

அரச நெறிமுறை அலுவலகத் தலைமை அதிகாரி பதவி விலகியதற்குப் பிரதான காரணம் தற்போதைய வெள்ளை மாளிகை வதிவிடத்தோரும் அவர்கள் வெளியிலிருந்து கொண்டு வரும் பல அராஜக அச்சுறுத்தல்கள், வலுத் திணிப்புக்கள் தான் என்று கருதப்படுகிறது. இதை திரு ஷாப் அவர்கள் பல்வேறு அறிக்கைகள், மற்றும் உரைகளில் அமெரிக்கப் பிரசைகளாகிய எமக்குத் தந்துள்ளார்.

மேலும் அவர் தமது ஊடக ஒன்றிய உரையில் வெள்ளை மாளிகைக் குழுவினர், மற்ற இரு பாரிய அரச தாபனங்களாகிய உயர் நீதிமன்றம், அமெரிக்கக் காங்கிரஸ் போன்றன்று – சட்டங்கள் | அரச நெறிமுறைகள் தமக்குச் சரிவராது என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் பதவியேறிய முதல் 6 மாதங்களிலேயே தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் பலரும் இதுவரை அமெரிக்க வரலாற்றிலே இல்லாதவாறு பகிரங்கமாகப் பதவியில் இருக்கும் போதே பக்கத்தில் பணம் உழைக்க உந்துகிறார்கள் என்பதும் வெளிப்படை எனறு
திரு ஷாப் கூறியுள்ளார்

அரசாட்சியில் பரீட்சார்த்தம் அற்ற பலரும், இன்று வெள்ளை மாளிகை அழைப்பில் வந்து புகுந்துள்ளனர். இவர்கள் தனியார் தன வரவை மாத்திரம் சிந்திக்கும் சுயநல வர்த்தகங்களைப் போன்றும், அமெரிக்க அரசு நிதி முறை ஏதோ கால்பந்தாட்ட விளையாட்டு போன்றும் சிந்திக்கிறார்கள்.

வெள்ளைமாளிகை வதிவிடர்களுக்கு, சுயேட்சை வேதாந்தம் என்று பேசியவாறு, நாட்டின் 230 ஆண்டு சனநாயகத்தைக் கட்டிக் காக்கும் அற முறை நெறிமுறைகளில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் அரச நெறிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ள கேள்விச்சரணைகளை அனுமதிக்கவில்லை. இவர்கள் ஒட்டு மொத்தமாக இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று பகிரங்கமாகவே பல தடவை வாதாடிப் புறக்கணித்தவாறே உள்ளனராம்.

இப்பேர்பட்ட செயல்கள் அமெரிக்க சனநாயக மரபுகளுக்கு விரோதமானது என்பதே திரு வால்டர் ஷாப் அவர்களதும், பல அமெரிக்க சட்டத்துறை, நீதிபதிகள், நெறிமுறைக் கல்விமான்கள் மற்றும் அன்றாடம் நடைமுறையில் கை கொள்ளும் அலுவலர்கள் அபிப்பிராயமும் ஆகும். இந்தக் கருத்து அமெரிக்க அரசியல் கட்சிகளை யாவற்றையும் ஆதரிக்கும் மக்களிடம் இருந்து வந்தது.

நாட்டின் சாசனத்தின் படி அமெரிக்க அரச பதவிகள் வகிக்கும் யாராக இருப்பினும் அரச நெறிமுறைகள் பிரகடனம் (Ethics in Goverment Act ) , அரச ஊழியர்கள் யாவரும் இதற்குள் கட்டுப்பட வேண்டும் என்றே தெளிவாகக் கூறியுள்ளது. எனவே எவராய் இருந்தாலும் அரசப் பதவியில் இருப்பின் அவர்களோ, அவர்கள் குடும்பத்தாரோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியார் சன்மானம் பெற்றுக் கொள்வது தடைபண்ண வேண்டும். முக்கியமாக தமது பெயரையும், பெயர் கொண்ட வர்த்தகங்களையும் அரச பணிபுரியும் போது விற்று, வாடகைக்குக் கொடுத்து ஆதாயம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிடின் இது அமெரிக்க ஆளுமைக்குப் பாதகங்களைத் தெளிவாக உண்டு பண்ணலாம்.

அமெரிக்கத் தேசியம் ராஜா, ராணி மன்னர் போன்ற ஆளுமையை வெளியேற்ற போராடிப் பெற்ற விடுதலை சுதந்திரம். இங்கு குடிமக்கள் தமது பிரதிநிதிகளைக் கொண்டு, குடிமக்களால் உருவாக்கிப் பிரகடனம் செய்த அமெரிக்கக் சாசனத்தின் படி தாமே தம்மை ஆட்சி செய்வர்.

மேலும் மக்களாட்சியை மலரச் செய்து, அமெரிக்கத் தேசியத்தை, அதன் சமுதாய நீதிகளை ஒன்று சேர்த்து வைப்பது தேசிய அரச நீதி நெறிமுறைகள் தாம். இதற்கு மேற்பட்டவர் அமெரிக்க மண்ணில் ஒருவரும் கிடையாது. எனவே நெறிமுறைகளிலிருந்து வெளியே தொழிற்படுவது அமெரிக்க மக்களுக்கும் அவர்கள் உரிமைக்கும்,அவர்கள் தேசிய நம்பிக்கைக்கும் துரோகமான செயலே ஆகும்.

– ஊர்க்குருவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad