Top Add
Top Ad
banner ad

பகுத்தறிவு – பகுதி 6

பகுதி – 5

சென்ற பகுதியில், பாரதிக்கும் குள்ளச்சாமிக்குமான ஒருசில சம்பாஷணைகள் குறித்துப் பார்த்தோம். விரிவாக இல்லாவிட்டாலும், ஒரு சிறு அறிமுகமாகப் பார்த்தோம். ஆனால் அங்கு என்ன நடந்தது, அதில் எந்த அளவு பகுத்தறிவைப் புகுத்த முடியும் என்பதெல்லாம் போகப்போக விரிவாகப் பார்த்துக் கொள்ள வேண்டியவை. பாரதி குறித்துப் பேசியதற்கு முக்கியக் காரணம், இலக்கிய ஆர்வமுள்ள பலரும் பனிப்பூக்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான். இலக்கியத்தை விட்டு விலகும், அதுவும் தமிழிலக்கியத்தை விட்டுவிலகி, பகுத்தறிவு என்ற நோக்கில் பார்க்கத் தொடங்கினால் இன்னும் பல உதாரணங்களும், அந்த அற்புத உதாரணங்களை நடத்திக் காட்டிய பல பெரியவர்களும் நமது பார்வைக்குத் தென்படத் தொடங்குவர். அவர்களில் பலரைப் பற்றியும், அவர்கள் அறிந்து கொண்ட, நமக்கு வழிகாட்டிய போதனைகள் குறித்தும், அந்தப் போதனைகளில் ஆழ்ந்து பொதிந்துள்ள பகுத்தறிவும் ஆன்மிகம் குறித்தும் தொடர்ந்து பார்க்கலாம்.

பாரதியின் சமகாலத்தவராய் வாழ்ந்த தமிழ் முனிவர் ரமண மகரிஷி ஆவார். தனது பதினாறாவது வயதில் சொந்த ஊரான மதுரையை விட்டு வெளியேறி, ஆண்டிமடம் என்றழைக்கப்பட்ட திருவண்ணாமலையில் வந்து குடியேறிய அவர், தனது எழுபதாம் வயதில் தான் இறக்கும் தருவாய் வரை அவ்வூரைவிட்டு அகன்றதில்லை. அங்கு அவர் நடத்திய பல பாடங்களும், வாழ்ந்து காட்டிய முறைகளும் மண்ணில் மனிதன் நல்வழிப்பட, பகுத்தறிவு பெற சொல்லப்பட்ட பொக்கிஷமான அறிவுரைகள்.

இது போன்ற சாமியார்களை நினைத்தவுடன் பொதுவாகவே நம் மனதில் எழுவது ஒரு சந்தேகமே. மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்கள் என்று ஒரு அழிக்க முடியாத பிம்பம் நம் மனதில் விழுந்து விட்டது. இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் போலிச் சாமியார்களினால் ஏற்படுத்தப்பட்ட அந்த பிம்பம் அனைவரையும் சந்தேகிக்க வைக்கிறது. இது போன்ற கண்ணோட்டத்துடனே நாம் ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், இராமதீர்த்தர் என அனைவரையும் பார்க்கத் தொடங்கிவிட்டோம். அதிலும் குறிப்பாக நாத்திகர்களாக வாழ்பவர்களுக்கு, இதுபோன்ற பாணியில் இந்தப் பெரியவர்களை விமரிசிப்பது மிகவும் எளிதான செயலாக மாறிவிட்டது. இதற்கு அந்த நாத்திகர்களைக் குறை சொல்வதைக் காட்டிலும், அவர்களை இதுபோல நினைக்க வைத்த இந்தப் போலிச் சாமியார்களைக் குறை சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

கோடிக் கணக்கில் சொத்துக்களையும், பங்களாக்களையும், கார்களையும், திரும்பிய பக்கமெல்லாம் சேவகம் செய்ய ஆட்களையும், அரசியலில் நெருக்கத்தையும் கொண்டு, பல வழிகளில் சாதாரண மனிதர்களைவிடப் பலமடங்கு ஆசாபாசாங்களுக்கு உள்ளாகி, ஆனால் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்று மைக்ரோஃபோன் முன்னால் அறிவுரை வழங்கும் போலிச் சாமியார்களைச் சற்று ஒதுக்கி வைப்போம். தனக்கென எந்தப் பொருளையும் வைத்துக் கொள்ளாது, கட்டிய கோவணத்துடன், சொந்த பந்தங்கள் அனைத்தையும் விட்டு வந்து, இயற்கையின் பிடியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து, இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து பல அற்புதங்கள் புரிந்து, அந்த அற்புதம் அனைத்தும் மனிதச் சமுதாயத்தை முன்னேற்றுவதில் மட்டுமே அமைய வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையுடன் செயல்பட்ட ரமண மகரிஷி போன்றவர்களின் வாழ்க்கையையும், அவரின் போதனைகளையும், அவரின் அன்றாட வாழ்வு முறைகளையும் புரிந்து கொள்வதால் நம் போல் சாதாரணர்களுக்கு அரிய பயன் கிடைப்பதைத்தவிர்த்து வேறென்ன ஏற்படும்?

ரமணர் கிட்டத்தட்ட ஐம்பத்து மூன்று ஆண்டுகள் திருவண்ணாமலை நகரில் வசித்தார். ஸ்கந்தாஸ்ரமம் என்று இன்று அழைக்கப்படும் மலையுச்சியிலிருந்த அந்தக் குகை போன்ற அமைப்பிலேயே தன் காலத்தை முழுவதுமாய்க் கழித்தார். பதினேழு வயதுச் சிறுவனாக அங்கு வந்து சேர்ந்த ரமணர், விதேக முக்தி நிலையில் தேகத்தின் பிரக்ஞை முழுவதுமின்றிப் பல நாட்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பாராம். அவரைச் சுற்றி கரையான் புற்றிட்டு விட, அவரின் கடுந்தபஸ் நிலை கண்ட கிராமத்து மக்கள், பயபக்தியுடன் அந்தக் கரையான் புற்றை அவர் உடல்விட்டு விலக்குகின்றனர். அந்த முயற்சியில், உடலிலிருந்து ஒழுகும் இரத்தத்தையும், அதனால் உண்டாகும் வலியையும் கூட உணரும் நிலையில் அவர் இல்லை. இதையெல்லாம் பல புத்தகங்களில் படித்திருக்கலாம். இது போலப் படிக்கையில், மனதில் முதலில் தோன்றும் கேள்வி; “இது உண்மைதானா?” ”ஒரு மனிதன் அந்த நிலையை அடைய இயலுமா?” என்பதே. இவையெல்லாம் சாமியாரின் அருளை நாடும் எவரோ ஒருவரின் அதீதக் கற்பனையாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வந்து விடுவோம். இவற்றை உண்மையென ஏற்றுக் கொள்வதற்கு ஏதேனும் விளக்கங்கள் உள்ளனவா என்று கேட்கப்படும் கேள்வி மிகவும் சரியானதே…

விதேக முக்தி என்றால் என்ன என்பதை அறிவாய், விளக்கமாக அறிந்திருந்தாலும், உணர்வாய், அனுபவமாய்ப் புரிந்தவனல்ல நான் என்பதை இந்த இடத்தில் மீண்டும் நினைவு கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், உடல் முழுதும் கரையான் புற்றுக் கட்டுமளவுக்கு உடல் பிரக்ஞை இல்லாமல் ஒரு மனிதனால் இருக்க முடியுமா என்றொரு கேள்வி எழுந்தால், “முடியும், ரமணர் இருந்திருக்கிறார்” என்று மட்டுமே சொல்ல முடியும். “நான் இருந்திருக்கிறேன், இதோ இப்படி” என்று காட்ட முடியாத நிலை. இந்த நிலையில் இருப்பதால் அந்த விளக்கத்தை முன்கூட்டியே நினைவு கூர்ந்து, தொடர்கிறேன்.

ரமணரின் மிக முக்கியமான அறிவுரைகளில் ஒன்று “நான் யார்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதுதான். நான் என்பது இந்த உடலா, உயிரா, மனமா இல்லை வேறு என்னதான் அது என்ற கேள்விக்கு விடை புரிந்து கொள்ள வேண்டுமென்பதே அவரின் தலையாய அறிவுரையாக இருந்திருக்கிறது. உடலென்றால், உயிர் பிரிந்த பின் எரித்தோ, புதைத்தோ விடுகின்றனரே… உயிரென்றால் கண்ணால் பார்க்க முடியவில்லையே, நாம் தான் கண்ணால் பார்க்காத எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோமே, உயிர் என்பதை எப்படி ஏற்பது?……. மனம் என்றாலும் அதே கேள்வி குறுக்கே வருகிறதே… சரி, எப்படித்தான் இதனை விளக்குவது?

உயிர்கள், மனிதனுடையதோ அல்லது வேறு உயிரினங்களுடையதோ அவையெல்லாம் ஒரு ஆற்றல் களம் என்று பொதுவான புரிதலிலிருந்து தொடங்கலாமா? ஆற்றல் குறித்த இன்றைய அறிவியலின் கருத்து உண்மையென்று, ஒரு பேச்சுக்காக, எடுத்துக் கொள்ளலாம். “ஆற்றல் என்பது ஆக்கப்படவோ அழிக்கப்படவோ முடியாத ஒன்று, ஒரு வடிவிலிருந்து இன்னொரு வடிவுக்கு மாற்றப்பட மட்டுமே இயலும்; மின்னாற்றல் விளக்குகளின் மூலம் ஒளியாற்றலாக மாறலாம்” என்பது போன்ற விளக்கங்களையெல்லாம் படித்திருக்கிறோம், கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதே போல, ஒரு கூட்டிலிருந்த உயிரென்ற ஆற்றலான இறந்த பிறகு இன்னொரு கூட்டிற்குள் பாய்ந்து மறு பிறவியாக வருகிறது என்றால் மட்டும் மூடத்தனம், அறிவிலித்தனம் என்று ஏசுகிறோமே, ஏன்? இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்க்கையில், அந்தக் கூடானது விழுந்து விடுவதற்கு முன்னால் (அதாவது, அந்த மனிதன் இறந்து படுவதற்கு முன்னால்), தனது முயற்சியால் அந்தக் கூட்டைவிட்டுப் பிரிந்து, இன்னொரு கூட்டுக்குள் புக முடியும் என்று கூடத் தோன்றுகிறது, இல்லையா? சரி, இதனைச் செய்தவர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை என்ற காரணத்தால் அது போன்ற ஒரு வித்தை புரிய யாராலும் முடியாது என்றே கொள்வோம் [நாம் சந்திர மண்டலத்திற்குச் சென்றதில்லை, ஆனால், அதற்குச் சென்று வந்தனர் என்று ஏதோவொரு படத்தைக் காட்டினால், “நீ அங்கிருந்துதான் எடுத்தாய் என்பதற்கு என்ன ஆதாரம்” என்ற புத்திசாலித் தனமான கேள்விகளை அவர்களிடம் கேட்டுவிட மாட்டோம் என்பது வேறு விஷயம்]

எது எப்படியோ, உயிரென்பது வேறென்றும், உணர்வென்பது வேறென்றும், உடலென்பது வேறென்றும் ஒரு நிலையில் ஏற்கத் தொடங்கும் விளக்கமாகிறது. இந்த நிலையை அடைந்தாலும், உடலே நாம் என்று கருதும் எண்ணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை அடிப்படை அஞ்ஞானம் என்றுகூட வரையறுக்கலாம். அஞ்ஞானம் என்றால் தற்போது அறிவீலித்தனம் என்று பொருள்படும்படி ஆகிவிட்டது. ஆனால், அண்மையான பொருட்களைப் பற்றிய ஞானம் என்பதே அஞ்ஞானம் (அண்மை + ஞானம்) என்பதாகும். தனது வீடு, கார், புத்தகம், கண்ணெதிரில் பார்ப்பவை என்பது குறித்த அறிவு அஞ்ஞானம் எனப்படும். விண்ணில் இருக்கும் பொருட்களான வானம், ஆகாயம், நட்சத்திரம், கோள்கள் மற்றும் அவை எவ்வாறு தோன்றின, எங்கு இருக்கின்றன எப்படி நகர்கின்றன போன்ற விஷயங்களை அறிந்திருப்பதே விஞ்ஞானம் ஆகும். இதே ரீதியில் சற்று அதிகமாகப் பயணித்து, மெய் குறித்து, அதாவது மெய்ப்பொருள் எனப்படும் உண்மைப் பொருட்களைக் குறித்து உணர்வதே மெய்ஞ்ஞானம் எனப்படுகிறது. மெய்க்கு உடம்பு என்று இன்னொரு பொருளிருப்பதால், உடல், உயிர் குறித்து ஆராயும் துறை என்றும் கொள்ளலாம்.

அதெல்லாம் சரி, ரமணர் உடலில் கரையான் தோன்றியது எவ்வாறு என்று கேட்கிறீர்களா? அதற்கு நேரடியான விடையென்பது உயிர் பிரிந்த உடலின் நிலை என்பதே. அதாவது, முழுமையாகத் தானியங்கியாகத் திரிந்து, போஷாக்காகப் பாதுகாக்கப்பட்ட உடலில், கூட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் காற்று நின்றவுடன், ஈ மொய்க்கத் துவங்குவது ஏன்? ஒரு வேளை, நம் முயற்சியால் உடலிலிருந்த உயிரை வேறெங்கோ எடுத்துச் சென்று விட்டால், இந்த உடலம் சடலமாகி விடுமோ? சடலமாகிய உடலத்தைக் கரையான் சூழ்வதில் ஆச்சரியமிருக்க முடியுமோ?

இதனை விளக்குவதைவிட, அவரவரின் வாழ்நாளில் நற்கதி பெறுவதற்கான வழிவகைகள் யாவை என்பதை விளக்குவது பொருத்தமாக இருக்கக் கூடும் என்ற காரணத்தால், அதனைப் பலவழிகளிலும் விளக்கியுள்ளார் ரமணர். அவை குறித்தும், அவற்றில் பொதிந்துள்ள பகுத்தறிவு குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad