\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மன்னிப்பாயா ..

Filed in இலக்கியம், கதை by on August 28, 2017 0 Comments

நிரஞ்சனுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூங்க முடியவில்லை. படுக்கையை ஒட்டிய மேஜை மீதிருந்த செல்ஃபோனை எடுத்தான். பளீரென ஒளிர்ந்து கண்ணைக் கூசியது. கண்களை இடுக்கிப் பார்த்ததில் மணி 3.17 am என்று காட்டியது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தான். கால்களில் துணி விலகியதைக் கூட உணராமல், குழந்தை போல் குப்புறப் படுத்து, நித்சலனமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஷர்மி. தூக்கத்திலும் முகத்தில் மெலிய புன்னகை. விலகிக் கிடந்த நைட்டியை இழுத்துவிட்டு, பக்கத்திலிருந்த போர்வையைக் கழுத்து வரையில் போர்த்தி விட்டான். அந்தச் சலனத்தில் கண் விழித்தவள்

‘தூங்கலையாங்க? பதினோரு மணிக்குத் தானே ஏர்ப்போர்ட் போகணும் .. மணி என்னாகுது?’

‘மூணே கால் ஆகுது..’

‘படுங்க கொஞ்ச நேரம் ..’

‘இல்லைம்மா, தூக்கம் வரலை ..’

‘படுங்கப்பா .. படுத்தீங்கன்னா தூக்கம் வரும் .. ‘ சொல்லிக் கொண்டே திரும்பப் படுத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தாள் ஷர்மி.

எப்படி வரும்? படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குச் சென்று கண்ணாடியில் பார்த்தான் நிரஞ்சன். முகம் கறுத்து, கண்கள் சிவந்து .. அடிமனதில் உளைச்சல்; கடந்த கால உறுத்தல், எதிர்காலக் குழப்பம். எல்லாம் ஒரு ஃபோன் காலில் தொடங்கியது.

மூன்று நாட்களுக்கு முன்னர் ஜிம்மில் இருக்கும் போதுதான் அந்த ஃபோன் வந்தது. புதிய நம்பர். யாராக இருக்குமென நினைத்துவாறு டிரெட்மில்லின் வேகத்தைக் குறைத்துப் பேசினான்.

‘ஹலோ ..’

‘இஸ் திஸ் மிஸ்டர் நிரஞ்சன்?’

‘எஸ்’. மிஸ்டர் எல்லாம் போடுகிறார்களே, யாராக இருக்கும்?

‘ஹலோ .. நான் .. வந்து .. ஐ அம்.. நான் மிதுன்.. கௌரியோட பையன்..’

காது வழியே ஆயிரம் வாட் மின்சாரம் பாய்ந்து, மூளையில் தாக்கி உடலெல்லாம் பரவியதாய் உணர்ந்தான். இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் துண்டித்து, மெதுவே மறந்து போன உறவு, மகனின் குரல் வடிவில் இடியாக விழுந்து நெஞ்சைப் பிளந்தபின் எப்படித் தூக்கம் வரும்?

*

கௌரி.. நிரஞ்சன் ஒன்றரை வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவள். பெற்றோரை எதிர்த்து நடந்த திருமணம். முதல் இரண்டு வாரங்கள் ஹோட்டல், லாட்ஜ் என்று ஓடியது.  அதற்குப் பிறகு தான் வாழ்க்கையின் நிதர்சனம் பளாரென்று என்று அறைந்தது. எங்கு சென்றாலும்  நிரஞ்சன் வீட்டினர் தேடித் துரத்தி வந்தார்கள். வீடு, சாப்பாடு என அனைத்தும் போராட்டமாகிப்போனது. காதலித்த போது கண்ட கனவுகள் எதுவும் நிஜமாகாதோ என்று பயந்தார்கள் இருவரும். காதலுக்குத் தைரியம் சொல்லிய நண்பர்கள் காணாமல் போனார்கள். அந்தச் சமயத்தில் கை கொடுத்தவன் தான் ஷாஜி. பல ஆண்டுகளுக்கு முன்னர் நிரஞ்சனின் பக்கத்து வீட்டிலிருந்தவன். புனேவில், நிரஞ்சனுக்கு சஞ்ஜெட்டி ஹாஸ்பிட்டலில் வேலை வாங்கிக் கொடுத்து, வீடு பார்த்துக் கொடுத்து.. பல உதவிகள் செய்தான்.

புனேவில், அவர்களின் வாழ்க்கை வெகு மகிழ்ச்சியாகத் தான் தொடங்கியது. டியூட்டி டாக்டர் வேலை என்பதால் பெரும்பாலும் நைட் ஷிஃப்ட் தான்.  தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் கெளரியுடனே செலவிட்டான். சமையலில் உதவி செய்து, காப்பி போட்டுக் கொடுத்து, துணி துவைத்து.. என ஒவ்வொரு நொடியும் அவளுடன் தான். பெற்றோரைப் பிரிந்து வந்த சோகம் அவள் மீது படியாமல் பார்த்துக்கொண்டான். நிரஞ்சனின் குடும்பத்தினர், கோபம் தீராமல் இருவரையும் தேடி வருகிறார்கள் என்கிற தகவல் கிடைத்த போதெல்லாம் அவளுக்குத் தெரியாமல் மறைத்தான்.

நான்கு மாதங்களில் கௌரி கர்ப்பமானாள். தந்தையாகப் போகிற மகிழ்ச்சியில், கௌரி மீதான அவனது அக்கறை இரட்டிப்பானது. மாடி ஏறி இறங்கி கஷ்டப்படாமலிருக்க, ஷாஜி இருந்த ஃபிளாட்டில், கிரவுண்ட் ஃப்ளோருக்கு மாறினார்கள். கெளரியை எந்த வேலையும் செய்ய விடாமல், வீட்டு வேலைகள் முழுவதையும் நிரஞ்சன் செய்து விடுவான். கர்ப்ப கால உணவுகளை ஷாஜியின் தாயிடம் கேட்டு அவனே தன் கைப்பட சமைத்து ஊட்டினான்.

மிதுன் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, தொட்டில், ரப்பர் ஷீட், படுக்கை, ட்ரெஸ், ஜான்சன்ஸ் பவுடர் எல்லாம் வாங்கியாகிவிட்டது. கெளரியின் கட்டளைப்படி ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது என்னென்ன தேவையோ அதையெல்லாம் எடுத்துக் கூடையில் அடுக்கி வைத்தான். மிதுன் கொழுக் மொழுக்கென இருந்ததால் சிசேரியன் செய்ய வேண்டியதானது.  அவள் தேறி வரும் வரை இருவரையும் அவன் தான் பார்த்துக் கொண்டான். குழந்தை தான் உலகமென ஆகிப் போனது நிரஞ்சனுக்கு. இரவெல்லாம் தூங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருப்பான். அசந்து  தூங்கும் போது, கனவு கண்டு, கண்ணைத் திறக்காமல், ரோஜாக் கன்னத்தில் குழி விழ மிதுன் சிரிப்பதைப் பார்த்துச் சொக்கிப் போவான். மடியில் கிடத்தி கை கால் அமுக்கி விட்டு, தோளில் கிடத்தி, நடந்து ஏப்பம் விடச் செய்து .. இரு வீட்டுப் பெற்றோரும் உடன் இல்லாத குறை தெரியாது எப்படியோ சமாளித்துவிட்டான்.

கௌரி மட்டுமே உலகம் என்றிருந்தவனுக்கு,  புதிய உறவு வந்த பின்பு பொறுப்புகள் இரட்டிப்பானது. தேவைகள் கூடக் கூட, செலவுகளும் கூடின. எப்படியாவது அவர்கள் இருவரையுமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டுமென்ற வைராக்கியம் மேலோங்கியது. நல்லவேளையாக டூயூட்டி டாக்டர் பயிற்சி முடிந்து நிரஞ்சனுக்கு ஜெனரல் டாக்டர் பதவியும் கிடைத்தது. இரவு பகல் பாராமல் உழைக்கத் துவங்கினான்.

*

விமானம் நெவார்க் ஏர்போர்ட்டில் இறங்கியது. அவசர அவசரமாக, மற்றவர்களுக்கு முன்பாக வெளியே வந்தான் நிரஞ்சன் . ஏர்ப்போர்ட் ஹால்வேயில் நடக்கும்பொழுது எந்தத் தெளிவுமில்லை.   மிதுன் எப்படி இருப்பான்? மார்ச் மாதத்தோடு 24 முடிந்திருக்கும். எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? மிதுனிடம் செல்ஃபோன் வேறு இல்லை. குழப்பத்துடன் எரிச்சலும் வந்தது. ச்சே .. எந்த அப்பனுக்காவது இப்படி ஒரு சிக்கல் வருமா?

திரும்பிய இடமெல்லாம் நிறைய இந்திய இளைஞர்கள்..வெளுத்த ஜீன்ஸ், கசங்கிய சட்டையணிந்து, புஜமெல்லாம்  பச்சைக் குத்தி, காதில் பெரிய ஹெட்ஃபோன் பொருத்தி..

‘ஹலோ .. நீங்க தான் நிரஞ்சன்னு நினைக்கிறேன்..’ பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

ஆறடியைத் தாண்டும் உயரம்.. அகன்ற தோள்கள்; மாநிறம்; பாம்படார் ஃபேட் பாணியில் ஓரமெல்லாம் ஓட்ட வெட்டி, கொத்தாகப் பக்கவாட்டில்  வாரிய முடி; அளவெடுத்து, நேர்த்தியாகச் செதுக்கிய கிருதா; ஒரு காதில் வளையம்; வழ வழ சவரம்; இடது புருவத்தில் சிறிய வெட்டு; கழுத்தோடு ஒட்டிய டிஷர்ட்;

‘மிதுன்?’

‘யா.. மிதுன்’

கையில் இழுத்து வந்த பெட்டியை விட்டுவிட்டு அப்படியே இறுகக் கட்டியணைத்தான் நிரஞ்சன். லேசாக நிரஞ்சனின் தோளைத் தட்டிக் கொடுத்த மிதுன், ‘போலாமா?’ என்றான்.

*

வாடகைக் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் நிரஞ்சன். வண்டியுள், இறுக மூடியிருந்த கண்ணாடி வழியே கசிந்த இஞ்சின் சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. கண்களில் பெருகிய நீர் வெளியே விழுந்து விடாமல் கட்டுப்படுத்தியதில் நாசி வழியே வெளியேறியது நிரஞ்சனுக்கு .. அழுந்த உறிஞ்சிக் கொண்டான். ஏதாவது பேச வேண்டும். என்ன பேசுவது?

‘நினைக்கவேயில்லை .. உன்னைப் பார்ப்பேன்னு.. எப்போ ஜெர்ஸி வந்த?’

‘நாலு நாளாகுது .. ஒண்ணரை மாசம் டிரெயினிங்’

‘டயர்டா தெரியறே ..ஜெட் லாக் இருக்கா இன்னும்?’

‘அதெல்லாம் இல்ல..’

‘இதுக்கு முன்னாடி வந்திருக்கியாப்பா யு.எஸ்.க்கு?’

‘இல்ல.. இதான் ஃபர்ஸ்ட் டைம்.’

அவனைத் திரும்பிப் பார்த்தான் நிரஞ்சன்.

‘பெருசா வளர்ந்திருக்கே. ஹாண்ட்ஸமா இருக்கப்பா..’

‘தேங்க்ஸ்’

கண்கள் வெறிக்க முன் கண்ணாடி வழியே ரோட்டைப் பார்த்துக்கொண்டு வந்தான் மிதுன்.

‘பாட்டுக் கேக்கறியா? தமிழ்ப் பாட்டு .. ‘ அவன் பதிலேதும் சொல்லும் முன்பே ஃபோனிலிருந்து பாடலை ஒலிக்கவிட்டான்.

“ஊர்வசி ஊர்வசி டேக்  இட் ஈஸி ஊர்வசி..”

‘சின்ன வயசிலே இந்தப் பாட்டைக் கேட்டா எங்க இருந்தாலும் ஓடி வந்து டி. வி. முன்னாடி நிப்பியே ஞாபகம் இருக்கா?’

சிரித்தான்.

‘அப்புறம் .. உனக்குக் கார் ரொம்பப் பிடிக்கும்.. பக்கத்து வீட்டுக்காரங்க வைச்சிருந்த கார்ல தான் உக்காந்து சாப்பிடணும்னு அடம் பண்ணுவே ..’

ரோட்டிலிருந்து கண்ணை எடுக்காமல் செயற்கையாகச் சிரித்தான் மிதுன்.

‘நீ பெரியவனா வளர்றதுக்குள்ள கார் வாங்கிடணும்னு நெனச்சுக்குவேன் ..’ குரல் தழுதழுத்தது ‘இப்பத்தான் உன்னை கார்ல கூட கூட்டிக்கிட்டுப் போக சான்ஸ் கிடைச்சிருக்கு..’ மூக்கை அழுந்த உறிஞ்சிக்கொண்டான்.

ஹோட்டல் வந்துவிட்டது.

‘பெட்டியை வைச்சிட்டு வந்துடறேன்.. சாப்பிடப் போலாமா?’.

அமைதியாகத் தலையாட்டினான் மிதுன்.

*

ன்னல் ஓரமாகயிருந்த மேஜையில் அமர்ந்தார்கள்.

‘மிதுன்.. திடீர்னு வந்துட்டதால உனக்கு என்ன வாங்கறதுன்னு தெரியல.. நாளைக்கு ஷாப்பிங் போலாம் ..  இப்போதைக்கு உனக்கு ஒரு ஃபோன் மட்டும் வாங்கிட்டு வந்தேன்..இந்தா ‘

‘இதெல்லாம் எதுக்கு .. எனக்கு ரூம்ல ஃபோன் இருக்கு’

‘பரவால்லப்பா .. சிம் போட்டுருக்கேன். உன் கூட அடிக்கடி பேச முடியும் .. எப்ப எது வேணாலும் என்னைக் கூப்பிடு.. சரி  என்ன சாப்பிடறே?’

‘எதா இருந்தாலும் ஓகே..’

‘சோளா பூரி சாப்பிடறயா? சின்ன வயசில பூரி தான் உன்னோட ஃபேவரிட்.’

‘ஓகே’

வெயிட்டரிடம் ஆர்டர் செய்துவிட்டுத் தொடர்ந்தான் நிரஞ்சன்.

‘யூ லுக் வெரி டயர்ட் மிதுன். சாப்டுட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு’

‘நோ ஐ அம் ஃபைன்’

மிதுன் மேஜை மீது இரண்டு கைகளின் விரல்களைக் கோர்த்து வைத்துக் கட்டை விரல்களை ஆட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தான் நிரஞ்சன்.

‘உன்னோட அன்ஈஸினெஸ் எனக்குப் புரியுது மிதுன். இன்ஃபேக்ட் எனக்கும் என்ன பேசறது , எப்படிப் பேசறதுன்னு தயக்கம், பதட்டம் எல்லாமே இருந்தது..உன்னைப் பார்த்தப்புறம் எல்லாமே பறந்துடுச்சி..’

‘ம்ம்..’

‘ஐ டோன்ட் நோ வாட் யூ ஃபீல்.. எனக்கு இப்போ சந்தோஷம் மட்டுமே இருக்கு.. நெறய வருஷங்களுக்கு அப்புறம்.’

‘ஐ அம் கன்ஃப்யூஸ்ட் .. நான் என்ன பேசணும்னு முடிவு பண்ணிட்டுத் தான் வந்தேன்.. ஆனா இப்போ எல்லாமே  குழப்பமா இருக்கு.. என்ன பேசறதுன்னு தெரியல.’

அவனது இரண்டு கரங்களின் மீதும் தன் கரத்தை வைத்து அழுத்திய நிரஞ்சன்  ‘நெர்வஸா இருக்கன்னு நினைக்கிறேன் .. டேக் இட் ஈஸி.’

நாற்காலியின் பின்னால் சாய்ந்து உட்காரும் சாக்கில் கைகளை நாசூக்காக விலக்கிக் கொண்ட மிதுன்.. ‘லைஃபே அப்படித்தான் ஓடிக்கிட்டிருக்கு .. சின்ன வயசிலேயே இது தெரிஞ்சிதானோ என்னமோ நீங்க சொன்ன ‘ஊர்வசி ஊர்வசி’ பாட்டை ரசிச்சுப் பார்த்திருக்கேன்.’

‘ச்சே..ச்சே.. ஏன் அப்படி எல்லாம் நினைக்கிற?’

‘நாம மீட் பண்ணி ரெண்டரை மணி நேரம் ஆகுது.. என்னென்னமோ கேட்டீங்க .. ஆனா அம்மா எப்படி இருக்காங்க, இருக்காங்களா இல்லையான்னு கூட கேக்கல நீங்க’

‘மிதுன்..’

‘இல்லை தோணுச்சு.. ஏர்ப்போர்ட்லயே கேப்பீங்கன்னு நெனைச்சேன்..’

‘ ..’

‘நீங்க என்ன காரணத்தால அம்மாவை விட்டுட்டு வந்தீங்கன்னு எனக்குத் தெரியாது.. தெரிஞ்சுக்கவும் நினைக்கல.. ‘

‘இல்ல மிதுன்…’

‘நோ.. நோ .. எதுக்குப் பிரிஞ்சு வந்தீங்கன்னு கேட்டு உங்கள எம்பராஸ் பண்ண வரல.. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, அப்பான்னு கேட்டபோது எல்லாம், உங்க அப்பா எங்கேயோ இருக்காங்க மிதுன்.. ரொம்ப நல்லவங்கன்னு சொல்லுவாங்களே தவிர வேற எதுவும் சொன்னதில்ல. உங்க பேரைத் தவிர எனக்கு ஒண்ணுமே தெரியாது..’

‘அப்படின்னா ..’

‘நானும் கேட்டுக்கல.. ஆனா நெறய ஃபேஸ் பண்ணேன்..ஸ்கூல்ல, வயலின் கிளாஸ்ல, சாக்கர் பிராக்டிஸ்ல, காலேஜ்ல.. எல்லா எடத்திலேயும், அப்பா இல்லையேங்கிறதை ஃபீல் பண்ணியிருக்கேன்  .. சின்ன வயசில்லையா.. எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியாம அழுதிருக்கேன்.. அந்தச் சமயத்தில எல்லாம் அம்மா தான் கூட இருந்தாங்க.. ஷி மேட் மி ஸ்ட்ராங்.. இருவத்திரெண்டு வருஷம் ஓடிப் போச்சு .. எனக்கு அவங்களத் தவிர உறவு கிடையாது.. அவங்களுக்கு என்னைத் தவிர யாரும் கிடையாது.. ‘

கண்கள் கலங்கியது நிரஞ்சனுக்கு.

‘எப்பவோ யாரோ சொன்னாங்க நீங்க அமெரிக்கால இருக்கீங்கன்னு.. அவங்களுக்கும் உங்களைப் பத்தி பெருசா  ஏதும் தெரியல.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி  ஆஃபீஸ்ல ட்ரெயினிங் பத்தி பேசினப்போ தோணுச்சு .. உங்களைப் பாக்கணும்னு … ‘பெர்சன் ஃபைண்டர்ல’ சப்ஸ்க்ரைப் பண்ணி உங்களைக் கண்டுபிடிச்சேன்.. இதுவரைக்கும் அம்மாக்குக் கூடச் சொல்லலை. என்னைப் பாக்க வந்ததுக்கு தேங்க்ஸ்.. ‘

‘தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதே மிதுன்…இன்ஃபாக்ட் நான்..’

‘அகெய்ன் .. உங்களைக் கேள்வி கேக்கணும், கில்டியா ஃபீல் பண்ண வைக்கணும்னு எல்லாம் எனக்கு  எண்ணம் கிடையாது. ஒரே ஒரு ரிக்வஸ்ட் தான் … உங்களுக்கு அது கஷ்டமா கூட இருக்கலாம் .. ஆனா எனக்காக அதைப் பண்ணித் தான் ஆகணும்.’

பேப்பர் நாப்கினால் மறைத்து மூக்கை நன்றாக உறிந்துக் கொண்ட நிரஞ்சன்.. ‘ சொல்லுப்பா .. ஐ வில் பி ஹாப்பி டு டூ வாட்டெவர் யூ வாண்ட்’ என்றான்.

‘இத்தனை வருஷமா தனியா கஷ்டப்பட்ட ஜீவன் எங்கம்மா .. உங்க மனைவி .. எக்ஸ்-வைஃப்.. அவங்க கிட்ட ஒரே ஒரு தடவை மன்னிப்பு கேக்கறீங்களா .. பெரிய ஆறுதலா இருக்கும்ணு நினைக்கிறேன் அவங்களுக்கு… தட் வில் கீப் ஹெர் கோயிங் ஃபார் த ரெஸ்ட் ஆஃப் ஹெர் லைஃப்.’

‘ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளு மிதுன்…’

‘ப்ளீஸ் .. எதுவும் தடை சொல்லாதீங்க .. ஒரு தடவை மட்டுந்தான் … நான் வேற எதுவும் கேக்கலை உங்ககிட்ட .. நீங்க இருக்க திசைப் பக்கம் கூட திரும்ப மாட்டேன்.. ஐ ப்ராமிஸ்..  இந்த ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் ப்ளீஸ்.. நீங்க சாரின்னு மட்டும் சொன்னீங்கன்னா கூட போதும்…’ குரல்  உடைய தழுதழுத்தான்.

‘எ..ஸ் .. எஸ்.. கண்டிப்பா பண்றேம்பா.. அழாதே.. சியர் அப்..’ கண்களில் நீர் வழிந்தது ..’ஜஸ்ட் எக்ஸ்கியூஸ் மி..  ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வந்துடறேன்..’

திரும்ப வந்தபோது கௌரியுடன் பேசிக்கொண்டிருந்தான் மிதுன்..

‘.. சாப்பிட்டாச்சு.. உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் மம்மி .. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் பேசறதால உனக்கு யாருன்னு கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியுமான்னு தெரியல.. மிஸ்டர் நிரஞ்சன் குப்புசாமி.. உன்னோட எக்ஸ் .. என் கூடத்தான் இருக்காங்க  ..’ சொல்லிவிட்டு ஃபோனை நிரஞ்சனிடம் நீட்டினான் மிதுன்.. ‘பேசுங்க’.

என்ன பேசுவது என்று புரியாமல் ஃபோனை வாங்கிக் கொண்டான் நிரஞ்சன் ..

‘ஹ..லோ .. நான் நிரஞ்சன் பேசறேன்.. என்னை .. என்னை மன்னிச்சிடு கௌரி.. மிதுன் என் முன்னாடி தான் இருக்கான்… ‘

நீங்க பேசுங்க என்பது போல் சைகை காண்பித்த மிதுன் மெதுவே அங்கிருந்து நகர்ந்தான்.

‘ஐயோ .. நீங்க ஏங்க வருத்தப்படணும்…’ உரக்க அழுதாள் கௌரி. தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது.  ‘பாவி நான் தான் உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கணும் .. எல்லா பாவத்தையும் பண்ணது நான் தானே … நம்ப குடும்பத்துக்காக நீங்க ராத்திரி பகல்னு பாக்காம உழைச்சதை, என்னை நீங்க வெறுக்கறீங்கன்னு கதை கட்டி நம்ப வெச்சான் ஷாஜி.. புத்தி கெட்டுப் போய் உங்களை விட்டுட்டு அவனோட போனேன்.. மிதுனையும் என்னையும் தேடி அலஞ்சு நீங்க ஊரை விட்டுப் போயிட்டதா கேள்விப்பட்டேன்..  நாலு மாசத்திலே எங்களைத்  தவிக்க விட்டுட்டு போயிட்டான் ஷாஜி … அப்பத்தான் என்னோட மடத்தனம் எனக்குப் புரிஞ்சுது.. தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட நெனச்சேன்.. என் குழந்தை .. நம்ப குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு .. அவனைத் தண்டிக்கக் கூடாதுன்னு தோணுச்சு .. நான் பண்ண பாவத்துக்கப்புறம் உங்களத் தேடிக் கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிக்க எனக்குத் தைரியமில்லை.. ஆனா என்னையே நம்பி இருந்த மிதுனும் என்னை வெறுத்துடக்கூடாதுன்ற சுயநலத்தில எல்லாத்தையுமே மறைச்சிட்டேன்..  இதுவரைக்கும் அவனுக்கு எதுவுமே தெரியாது .. ‘

கதறினாள் கௌரி..

‘இதையெல்லாம் ஏதோ சால்ஜாப்புக்காக  சொல்லலங்க .. உங்ககிட்ட பேசமுடியும்னு நான் நெனச்சுக் கூட பாக்கல .. எதிர்பாக்காம இப்போ அந்த சான்ஸ்  கிடைச்சிருக்கு .. நீங்க என்னை மன்னிக்க வேண்டாம் .. மன்னிக்கவும் கூடாது.. என்னை யாருமே மன்னிக்க மாட்டாங்க .. இருந்தாலும் மன்னிச்சிடுங்கன்னு  கேட்டுட்டேன்னா நிம்மதியா செத்துப்போவேன்.. என்னை மன்னிச்சிடுங்க..’

தொடர்பில்லாமல் பேசிக்கொண்டேயிருந்தாள் கௌரி.

வாஷ் ரூமிலிருந்து வந்த மிதுன் , நிரஞ்சனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். ‘தேங்க் யூ .. தேங்க் யூ அண்ட் சாரி அப்பா ..’ என்றான். அவன் காதில் பொருத்தியிருந்த ரிமோட் செல்ஃபோன் லிஸ்னரில் இன்னமும் கௌரி அழுதவாறே மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்.

– மர்மயோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad