\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஹார்வி பாதிப்புகளுக்கு உதவுங்கள்

x-default

ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ், லூசியானா உள்ளிட்ட மாகாணங்களைத் தாக்கிய ஹார்வி சூறாவளியின் பாதிப்புகளை அறிந்திருப்பீர்கள். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 13 மில்லியன் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 40000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்புக் கூடாரங்களில் தங்கும் நிலை.

ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்பிரிக்கக் கரையில் உருவாகிய வெப்ப மண்டலம், சூறாவளிப் புயலாக உருமாறி ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள அரன்சாஸ் துறைமுகத்தைத் தாக்கிய போது, அதன் வேகம் மணிக்கு 130 மைல்களாக இருந்தது. அடுத்த நாள், அமெரிக்காவின் நான்காவது பெரிய மாநகரமான ஹூஸ்டனுக்கு நகர்ந்து, நான்கு நாட்கள் நீடித்து , மிக மோசமான பாதிப்புக்களை  உண்டாக்கியது. தொடர் பேய் மழையால். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அணைகள் நிரம்பின. சாலைகள் எங்கும் வெள்ளக்காடு. அதிகபட்சமாக ஐம்பது அங்குலங்களுக்கு  மேல் மழை பொழிந்துள்ளது. வீடுகள், வாகனங்கள் என மக்களின் சொத்துகளுக்குப் பெரும் நாசம். பெரும் பாதிப்புகளை  உண்டாக்கிய ஹார்வி,  அமெரிக்க இயற்கைப் பேரிடர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, மறக்க இயலாத வரலாற்றுப் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது. இனி எந்தப் புயலுக்கும் இந்தப் பெயர் வைப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுவிட்டது.

ஹார்வி புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்களும் உதவலாம். இதோ, உங்கள் ஆதரவுக் கரங்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய சில இணைப்புகள்.

கிரெட்டர் ஹூஸ்டன் கம்யூனிட்டி ஃபவுண்டேஷன்

 

ஹூஸ்டன் மாநகர மேயர் சில்வஸ்டர் டர்னரால் அமைக்கப்பட்ட நிவாரண நிதி சேர்ப்பு மையம் இது. ஹூஸ்டன் நகரைச் சுற்றி அமைந்துள்ள பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி தேவைக்கும் நீண்டகாலத் தேவைக்கும் உதவுதற்கு இந்த நிவாரண நிதி திட்டமிடப்பட்டுள்ளது.

யுனைடெட் வே ஃஆப் க்ரெட்டர் ஹூஸ்டன்

 

ஹூஸ்டன் கால்பந்து அணி வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து அமைத்துள்ள நிவாரண நிதி. எரிசக்தி நிறுவனமான கொனோகோ பிலிப்ஸ் 2.5 மில்லியன் டாலர்களும், மேசிஸ் நிறுவனம் 1 மில்லியன் டாலர்களும் இந்த நிவாரண நிதிக்குப் பங்களித்துள்ளனர்.

க்ளோபல் கிவிங்

 

உலகளவில் மக்களின் தேவைகளுக்குக் குழுவாக நிதி சேர்க்கும் தளமான கிளோபல் கிவிங்கில், ஹார்வி நிவாரணத்திற்கு 5 மில்லியன் என்னும் இலக்குடன் பயணித்து வருகிறார்கள்.

சென்டர் ஃபார் டிசாஸ்டர் ஃபிலாந்தரபி

 

பேரிடர் நிவாரணப் பணிகளில் தேர்ந்து விளங்கும் சிடிபி நிறுவனம், ஹார்வி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் உதவியைச் சேர்ப்பிக்கும் வண்ணம் நன்கொடை பெற்று வருகிறது. இதில் கொடையளிக்கப்படும் ஒவ்வொரு டாலருக்கும் ஈடாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது பங்களிப்பை ஒரு மில்லியன் டாலர் வரை அளிக்கும் என்று அறிவித்து இருந்தது. மொத்தத்தில் ஃபேஸ்புக் மூலம் பத்து மில்லியன் டாலர்களுக்கு மேல் இதுவரை நிவாரண நிதி பெற்றுள்ளது.

எஸ்பிபி (SBP)

 

பத்தாண்டுகளுக்கு முன்பு 3 தன்னார்வர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று ஒரு தேசிய நிறுவனமாக மாறியுள்ளது. விரைவான நிவாரணம் எனும் குறிக்கோளுடன் பயணிக்கும் இந்த அணியினருக்கு, ஹார்வி நிவாரணத்திற்கு நிதியளித்திட மேலுள்ள இணைப்பிற்குச் செல்லவும்.

ஹூஸ்டன் ஹுமன் சொசைட்டி

 

இந்த இயற்கைச் சீற்றத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மேல் நலன் கொண்டு ஹூஸ்டன் ஹூமன் சொசைட்டி அமைப்பினர், ஹூஸ்டன் நகரில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புயல் தாக்கும் என்று தெரிந்த இடங்களுக்கு முன்பே சென்று பல விலங்குகளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்தனர். விலங்குகளின் தேவைகளுக்குப் பணமாகவோ, அல்லது பொருட்களாக நன்கொடை அளிக்கலாம். விலங்குகளுக்கு என்ன தேவை என்று இவர்களது தளத்திற்குச் சென்று அறிந்துக்கொள்ளலாம்.

ஹூஸ்டன் ஃபுட் பேங்க்

 

ஹூஸ்டனில் இருக்கும் உணவு சேகரிப்பு மையமான இதில் உணவுக்கான பணமோ, அல்லது உணவு தயாரிப்பு மற்றும் விநியோகிப்பு வேலைகளில் தன்னார்வலர் சேவையோ அளிக்கலாம். ஹூஸ்டன் அருகே இருப்பவர்கள், இவர்கள் தளத்தில் எங்கெங்கு வேலைக்குத் தன்னார்வலர்கள் தேவை என்று சென்று பார்க்கலாம்.

 

அமெரிகேர்ஸ்

 

பேரிடர் காலத்தில் அவசரமாக, அவசியமாகத் தேவைப்படும் மருத்துவ உதவிகளைக் களத்தில் சென்று அளித்திடும் அமைப்பான அமெரிகேர்ஸ், ஹார்வி பாதிப்புகளுக்குப் பிறகு, மக்களுக்குத் தேவையான மாத்திரை, மருந்து, டயாலிஸிஸ் சேவைகளை நேரடியாகச் சென்று அளித்து வருகிறார்கள். மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இவர்களுக்குக் கொடையளிக்க நினைத்தால், மேலுள்ள இணைப்பிற்குச் சென்று உதவலாம்.

ஷெல்டர்பாக்ஸ்

 

வீட்டை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு உறைவிடம் எவ்வளவு அத்தியாவசியம் என்பதை அறிவோம். இவர்கள் அளிக்கும் ஷெல்டர்பாக்ஸில் உடனடியாக ஒரு கூடாரம் அமைப்பதற்கான அனைத்து பொருட்களும் இருக்கும். ஹார்வி புயலில் வீடிழந்த பலருக்கு இவர்கள் ஷெல்டர் பெட்டிகள் அளித்துள்ளனர். நாம் அளிக்கும் நிதி கொண்டு, இவர்கள் இந்த ஷெல்டர் பாக்ஸுகளை உருவாக்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பார்கள்.

சவுத் டெக்ஸாஸ் ப்ளட் செண்டர்

 

இந்தப் புயலில் பலருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டு, ரத்தத் தானத் தேவை உருவாகி உள்ளது. டெக்ஸாஸில் இவர்கள் தளத்தைப் பார்த்து, அருகே இருக்கும் ரத்தத் தான மையத்திற்குச் சென்று ரத்தம் அளிக்கலாம். தேவைப்படுபவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

பல்வேறு வகைகளில் எவ்வாறு நாமும் உதவலாம் என்பதற்கான ஒரு சிறு பட்டியலே இது. மேலும், பல வழிகள் உள்ளன. இதில் எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்தையும் பனிப்பூக்கள் தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கவில்லை. தங்கள் ஆர்வத்தின் பேரில் தகுந்த பரிசீலனைக்குப் பிறகு, உங்கள் உதவிகரத்தை நீட்டவும்.

மனிதநேயம் காப்போம்!! மனிதர்களைக் காப்போம்!!

 

  • சரவணகுமரன்

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad