\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அனுபவம் புதுமை

Filed in கதை, வார வெளியீடு by on October 22, 2017 0 Comments

ஜூன் மாதத்தில் ஒரு நாள், என் மகள் அம்மு கேட்டாள், “அப்பா, என் பிறந்த நாளுக்கு எனக்குப் பரிசுபொருள் எதுவும் வேண்டாம். எனக்குப் பிடித்த இசைக்குழுக் கச்சேரிக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்”. நானும் இது அக்டோபரில் தானே என்று நினைத்துச் சரி என்று சொல்லிவிட்டேன்.

அன்று ஆரம்பித்தது என் அனுபவப் பயணம். தினமும் “டிக்கெட் வாங்கியாச்சா” என்று கேட்டவண்ணம் தான்  பேச்சைத் துவங்குவாள். அவள் சொன்ன படியே ஆளுக்கு நூறு டாலர் செலவழித்து “இமேஜின் டிராகன்ஸ்” ( Imagine Dragons) இசைக்குழுவின் கச்சேரிக்கு டிக்கெட் வாங்கினேன். என் மகள் பியானோ வாசிப்பவள். அந்த இசைக்குழு வாசித்த பாடல்கள் ஒவ்வொன்றாகப் பியானோவில் வாசிக்கத் துவங்கினாள். வாசித்து விட்டு “அப்பா, இது எந்தப் பாட்டு, தெரியுமா?” என்பாள். நானும் தெரியாது என்பதை முகபாவத்திலே காண்பிப்பேன்.

“என்னப்பா, இது கூடத் தெரியவில்லை. இது பிலிவர் (Believer) பாட்டுப்பா” என்பாள். சிறிது நாட்கள் கழித்து “இது கூடத் தெரியலையா, இது ரேடியோ ஆக்டிவ் பாட்டுப்பா”. இப்படிச் சொல்லிச் சொல்லி, அந்தக் குழுவின் பாட்டுக்கள் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பரிச்சயமாகத் துவங்கின.

சில நாட்களில் அந்தப் பாட்டுக்களை NFL விளையாட்டுக்கள் இடைவெளியில் வரும் விளம்பரங்களில் கேட்கத் துவங்கினேன். அந்தப் பாட்டுகளை எங்கு கேட்டாலும் இது அந்தப் பாட்டுத்தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு ஞானம் பிறந்து விட்து. இளையராஜாவின் பாட்டையும், கர்நாடக இசையையும் கேட்டு வளர்ந்த எனக்கு இதுப் புது அனுபவமே.

அக்டோபர் 16ம் வந்தது. எக்ஸ்செல் எனெர்ஜி சென்ட்டர் அரங்கத்தின் பெரிய ஹாலில் தான் இந்தக் கச்சேரி. ஒருவழியாக இடம் கண்டுபிடித்து, காரை  நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். ஒரே கூட்டம். உள்ளே சிற்றுண்டி மற்றும் “இமேஜின் டிராகன்ஸ்” படம் போட்ட சட்டைகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்தவுடன் என் மகள் “அப்பா எனக்கு ஒரு டீ-ஷர்ட் வாங்கித் தருவீர்களா?” எனக் கேட்டாள். அவளின் பிறந்தநாள் ஆயிற்றே என நினைத்துச் சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் எல்லாவற்றிற்கும்  மைல் கனக்கில் கூட்டம்.. கச்சேரி துவங்கியவுடன்,  இங்கு கூட்டம் குறைந்திருக்கும், அப்பொழுது வெளியில் வந்து வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தேன். எப்படியும் எனக்கு இந்தப் பாட்டுக்கள் புரியப்போவதில்லை. அதனால் வெளியில் வருவது பெரிய சிக்கலாக இருக்காது என்று தோன்றியது. ஏழரைக்கு மணிக்குத் துவங்கும் என அறிவித்தனர். நானும் உள்ளே சென்று அமர்ந்து காத்திருந்தேன். வசதியான நாற்காலிகள். மேடையும் நன்றாகத் தெரிந்தது.

விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. சரி, கச்சேரி துவங்கப் போகிறது என நினைத்து, டீ-ஷர்ட் வாங்கலாம் என வெளியே சென்றேன்.  என் எதிர்பார்ப்பிற்கு மாறாக, கடைகளில் கூட்டம் சிறிதும் குறையவில்லை. நான் வரிசையில் பக்கத்தில் இருந்த  பெண்மணியிடம் “பாட்டுக் கேட்க போகலியா” என்று கேட்டேன்.  ”குழுவின் முக்கியப் பாடகர் டேன் ரெனால்ட்ஸ் வரும் வரையில், மற்ற குழுவைச் சேர்ந்தவர்கள் பாடிக் கொண்டிருப்பர். டேன் வருவதற்கு முன் உள்ளே சென்று விடுவேன்” என்றாள்.

இது என்ன புதுக் கதையா இருக்கு. சௌம்யா கச்சேரிக்குப் போனா அதுக்கு முன்னாடி நெய்வேலி சந்தானம் பாட வந்த கதையா இல்ல இருக்கு என்று நினைத்துக் கொண்டே,.  ஒரு வழியாக டி-ஷர்ட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன். பின் வரிசையில் அமர்ந்திருந்த நான்கு பேர் வரிக்கு நான்கு கெட்ட வார்த்தைகள் எனக் கணக்கிட்டு கன்னாப்பின்னா வென்று பேசிக் கொண்டிருந்தனர். என் மகள் இந்த வார்த்தைகள் எல்லாம் கேட்கக்கூடாதே என்ற பதைபதைப்பு.. அவள் படிக்கும் பள்ளியில் மாணவர்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் என் முன் நடப்பதில்லை. சற்று நெளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன். இசைக் குழுவின் பாட்டில் பின் வரிசையின் பேச்சு மூழ்கிக் காணாமல்  போனது.

முன் வரிசையில் எண்ணெய் பூசித் தலை சீவிக் கொண்ட ஒரு இளைஞன் ஒருவனும், பக்கத்தில் சிறு வயதான பெண்ணும் அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் நெருக்கமாக அமர்ந்து, ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டு, முத்தங்களைப் பரிமாறுவதன் மூலம் தங்கள் காதலை உலகிற்கு அறிவித்த வண்ணம் இருந்தனர். சென்னையில் மியூசிக் அகாடமியில் நடக்கிற கச்சேரிக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்  என்று நம் உள்மனக் குரல். கூடவே, என்ன தான் கான்க்ரீட் தரையாக இருந்தாலும் இவ்வளவு பேரை இது தாங்குமா என்ற பயம் சேர்ந்து கொண்து.

ஒரு வழியாக, குரூப் லவ் என்ற அந்தக் குழு பாடி முடித்தது. பாடல்கள் ஒன்றும் புரியவில்லை, இசையும் பெரிதாகத் தோன்றவில்லை. மணி ஒன்பதரை அடிக்க, ஒரு வழியாக இமேஜின் டிராகன்ஸ் பாடகர்கள் மேடை ஏறினர். அவர்கள் வந்தவுடன் எல்லோரும் நாற்காலியை விட்டு எழுந்து நின்று, கரவொலி எழுப்பினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞன் எழுந்து நின்று, எதேச்சையாகத் திரும்பினான். அப்பொழுதுதான் புரிந்தது; அது அவன் அல்ல, அவள் என்று. இவ்வளவு நேரம் இரண்டு பெண்கள் அருகில்  அமர்ந்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனரா?

மறுபடியும் விளக்குகள் அணைக்கப்பட்டன. பாடல் துவங்கியது. என் மகள் உட்பட எல்லோரும் நின்று கொண்டே அந்தப் பாட்டைக் கேட்டனர்.  அநேகமாக, அவ்வளவு பெரிய அரங்கத்தில், நான்  ஒருவன்தான்  உட்கார்ந்து கொண்டு பாட்டைக் கேட்டவனாக இருக்கும். லேசர் விளக்குகள், புகை மண்டலம் என அந்த அரங்கமே பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. டேன் பாடிய பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஆடியும், கூடவே பாடியும் மகிழ்ந்தனர். மூன்று வரிசைகளுக்கு  முன்னால் அமர்ந்திருந்த ஒரு சிறுவனும் அவன் தாத்தாவும் பாடலை கூடச் சேர்ந்து பாடி ஆடிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு க்யூட்டாக இருந்தது. உயிர்கள் அனைத்தையும் தொட்டு வருடும் ஒரே மொழி இசை தான் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது. வேகமான இசையின் ஒலி அளவு மிக அதிகம். ட்ரம்ஸ் ஒலி அந்தத் தரையை அதிர வைத்தது. இந்தக் கூட்டம் மற்றும் இசை தரும் ஒலியின் அளவு, கான்க்ரீட் தரையை ஒன்றும் செய்துவிடக் கூடாது என்ற பயம் நம்மைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது..

இரண்டு பாடல்கள் பிறகு டேன்  ரெனால்ட்ஸ் தான் வளர்ந்த ஊரான லாஸ் வேகஸ் நகரில் சமீபத்தில் நிகழ்ந்த தீவிரவாதக் கொலைச் சம்பவத்தைப் பற்றி உருக்கமாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, அடுத்த பாடலைத் துவங்கினார். அது எல்லோர் மனதையும் நெகிழ வைத்தது. ஆறு ஏழு பாட்டுக்கள் தொடருந்தது கொண்டிருந்தன. ஒருவரும் இருக்கைகளில் அமருவதாகத் தெரியவில்லை.  இவ்வளவு வசதியான நாற்காலிகள் இருக்கையில் ஏன் மணிக் கணக்காக இப்படி நிற்க வேண்டும் என்று நமக்கு விளங்கவில்லை. பாடல்கள் மிகவும் அருமையாகப் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் உற்சாகத்தினால் நின்ற இட த்திலே நடனமாடத் துவங்கியிருந்தனர்.   தரை என்னவாகப்  போகிறதோ என்ற பயம் நமக்கு இன்னமும் அதிகரித்து.   ஒரே இட த்தில் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக, நிசப்தமாக அமர்ந்து, பாட்டில் லயித்து, தொடையில் கையால் தாளம் போட்டுக்கொண்டு ரசித்தவனுக்கு இது புதுமையே.

பத்தாவது பாட்டு முடிந்த பின், டேன் தான் சிறுவயதில் மன அழுத்த்தால் பாதிக்கப் பட்டிருந்தாகவும், அது போன்று இருப்பவர்கள் உழைப்பால் அதை வெல்ல முடியும் என்பதற்குத் தானே உதாரணம் என்றும் மக்களை ஊக்குவித்தார். பிறகு செல்லோ என்ற இசைக்கருவி மட்டுமே துணையுடன் “ட்ரீம்” (Dream), ப்ளீடிங் அவுட் (Bleeding out) மெல்லிசைப் பாடல்களைப் பாடினார். நானும் இருக்கையை  விட்டு எழுந்து நின்று ரசித்தேன். இந்த இசை நிகழ்ச்சி என்னையும் பெருமளவு மாற்றியது.

கடைசியாகத் தண்டர் (Thunder), பிலிவர் (Believer) போன்ற மிகப் பிரசித்தி பெற்ற பாடல்களைப் பாடினார். என்  மகள் எனக்குக் கொடுத்த நான்கு மாதப் பயிற்சி வீண் போகவில்லை. நானும் எழுந்து நின்று கூடப் பாடினேன். கச்சேரி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் என் மகள் என்னை அணைத்து,  “இந்த நாளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.. இது தான் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு” என்றாள். . உண்மையைச் சொல்லப் போனால், இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட பரிசாகவே தோன்றுகிறது. இது போன்ற ஒரு புதிய அனுபவத்தை நான் பெறுவதற்குக் காரணமாக இருந்த என் மகளுக்கு உளமாற நன்றி சொல்லிக் கொண்டேன்.

-பிரபு

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad