Top Add
Top Ad

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (நவம்பர் 2017)

வருட இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். வருட இறுதியில் இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த பாடல்களைக் காணப் போகும் முன்பு, சென்ற இரு மாதங்களில் வந்த பாடல்களில் மனதைக் கவர்ந்த சிலவற்றைப் பார்த்து விடலாம்.

மகளிர் மட்டும் – அடி வாடி திமிரா

பெண்களை மையமாகக் கொண்டு இயக்குனர் பிரம்மா இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்த இப்படத்தின் இப்பாடல் வெகுக்காலத்திற்கு முன்பே வெளியாகி ஹிட்டாகி இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் அவ்வப்போது எங்கோ போய்விடுகிறார். வரும்போது, கவனிக்கத்தக்க பாடல்களைத் தந்துவிடுகிறார். ஜோதிகா படம் முழுக்க வந்தாலும், இப்படத்தின் கதை – ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா ஆகியோரின் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது. இயக்குனர் பிரம்மாவின் சமூக ஆர்வம், இப்படத்திலும் வெளிபட்டது.

வாதாட ஊருக்குச் சொல்லித் தந்தாளா

வேதத்த தூரத்தில் ஒத்தி வச்சாளா

காத்தோட வானத்த கட்டி விட்டாளா

வலியும் வலியும் அனலா புனலா இவளா!!

நெருப்புடா – ஆலங்கிளியே

ஷான் ரோல்டனின் பலம் மெலடி தான் என்று விஐபி 2 வெளிக்காட்டிவிட்டது. பவர் பாண்டியில் முழுவதும் மெல்லிசை பாடல்களாக இருந்ததால் கலக்கி இருந்தார். நெருப்புடா அவருக்கு இன்னொரு சராசரி படம். ‘ஆலங்கிளியே’ அதில் கவனிக்கத்தக்க பாடல். வழக்கமான விக்ரம்பிரபுவின் படம் போல் வந்ததும் போனதும் தெரியவில்லை. ஆனாலும், அவர் படங்கள் இரண்டு மாதத்திற்கு ஒன்று வந்துக்கொண்டே இருக்கிறது. ஏதோ மினிமம் கியாரண்டி அவருக்கு மார்க்கெட்டில் இருக்கிறது போலும்.

எத்தனை ஜென்மம் தாண்டி வந்ததோ இந்தக் காதல்

இல்லவே இல்லை ஏதும் சொல்ல!!

எத்தனை யுகமென்றாலும் உன்னை என் இதயம் சேர

சொர்க்கமே இதுதான் வேறு அல்ல!!

கருப்பன் – கருவா கருவா பயலே

பாண்டிய நாடு படத்தில் வரும் ‘சிலுக்கு மரமே’ போல் சாயல் கொண்ட பாடல் இது. எங்கோ கேட்ட பாடல் போல் இருப்பது இப்பாடலின் குறையும் நிறையும். விஜய் சேதுபதி இருந்தும் படம் சுமார் என்பதால் அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்டது. படத்தில் விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கேரக்டர் என்று சொன்னார்களா, தெரியவில்லை. செம ‘வெயிட்’டாக இருக்கிறார். கிராமத்து ஜோடியின் வீட்டு ரொமன்ஸ் இப்பாடலின் ஹைலைட்.

அடுக்குப் பானை முறுக்கு போல

என்னையும் நொறுக்க நேரம் பாக்காத!!

அலுப்பு தீர்க்க அணைக்கப் போறேன்

உடம்பு வலிச்சா ஊர கூட்டாத!!

மேயாத மான் – என்ன நான் செய்வேன்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு. சந்தோஷ் நாராயணனும் பிரதீப் குமாரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் பாடலை இசையமைத்திருப்பது, பாடியிருப்பது, எழுதியிருப்பது பிரதீப். இதயம் முரளி என்ற கதாபாத்திரத்தில் வைபவ் நன்றாகவே நடித்திருக்கிறார். மெர்சல் உடன் தீபாவளிக்கு வந்ததால் படம் பெரிதாகப் பேசப்படவில்லை. எது என்ன ஆனாலும் சரி, ப்ரியா பவானிசங்கர் பற்றிப் பேசியே ஆக வேண்டும். ரசிகர்கள் பேசினார்கள்!! வெல்கம் ப்ரியா!!

பால்வெளியை கடல் ஆக்கவா

வளர்பிறையைப் படகாக்கவா!!

நிலவொளியை வலை ஆக்கவா

உன் நிழலை சிறை ஆக்கவா!!

மெர்சல் – ஆளப் போறான் தமிழன்

ஏ.ஆர்.ரஹ்மான் இசை, விஜய் படம் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த ஆல்பம். எதிர்பார்ப்புப் பூர்த்திச் செய்யப்பட்டது. தமிழகப் பாஜக தலைவர்களால் படமும் பெரும் வெற்றிப் பெற்றது. தமிழன் பெருமை பேசப்படுவதால், இப்பாடல் காலத்திற்கும் பாடப்படும். தமிழன் பெருமை பாடப்பட்ட பாடல் என்றாலும் இப்பாடலைப் பாடியவர்களுள் ஒருவர் ஹிந்தி பாடகர் – கைலாஷ் கேர். பாடலில் காட்டப்பட்டது பஞ்சாப் கலாச்சாரம். நல்லவேளை, இதை யாரும் பிரச்சினை எழுப்பவில்லை.

ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்

மகுடத்தைத் தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்

தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்

உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்

உன் மொழி சாயும் என்பானே

பாரிணையத் தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே

கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே!!

இவை தவிர, இம்மாதத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யாரென்று தெரிந்திருக்கிறது, வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், 2.0 ஆகிய படங்களில் இருந்து தலா இரு பாடல்கள் வெளியாகியுள்ளன. சிம்பு இசையமைப்பாளராகி இருக்கிறார். இப்பாடல்களைப் பற்றி வரும் பகுதிகளில் காணலாம்.

  • சரவணகுமரன்.

 

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad