\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எதிர்பாராதது…!? (பாகம் 1)

Filed in கதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments

ரு வீடு நல்லாயிருக்கணும்னா அந்தக் குடும்பத் தலைவன் சரியா இருக்கணும்….எல்லா விஷயத்துலயும், தான் சரியா இருக்கிறது மூலமா மற்றவர்களுக்கு அவன் ஒரு வழி காட்டியாகவும், தவறுகள் நடக்கக் கூடாதுங்கிறதைப் பாதுகாக்கிறதாகவும் அமையும். அப்பத்தான் குடும்பத்துல இருக்கிற மற்ற உறுப்பினர்களுக்கு அவன் மேல ஒரு மரியாதையும், மதிப்பும், அவரவர் செயல்கள் மேலே ஒரு பயமும், கருத்தும், கரிசனமும் இருக்கும்….”

சொல்லிவிட்டு கங்காவின் முகத்தை உற்று நோக்கினார் தாமோதரன். எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாயிருந்தாள் அவள். பதில் சொன்னால் மேலும் வளரும் என்று நினைத்தாளா அல்லது பதில் சொல்லாமல் இருப்பதுதான் ஒப்புதல் என்று கொண்டாளா? – புரியாமல் பார்த்தார் தாமு.

“என்ன, நான்பாட்டுக்குச் சொல்லிட்டிருக்கேன்…ஒண்ணுமே பேசாம இருக்கியே? அலட்சியமா?” என்றார்.

“பேசாம இருந்தா அதுக்குப் பேரு அலட்சியமா?” – கோபத்தோடு கேட்டாள்.

“அப்படியும் அர்த்தமாகுமில்லையா? இந்த வீட்ல, இப்போ, நீயும் நானும்தான் இருக்கோம். ரெண்டு பேரும் பேசிட்டிருக்கிற இந்த நிகழ்வுல இப்போ நான் உன்கிட்டே சொல்லிட்டிருக்கேன்….வெறுமே செவுத்தைப் பார்த்துப் பேச முடியாதில்லையா? செவுரு பதிலுக்குப் பேசும்னா, கூடப் பேசலாம்….அப்போ நீ வேண்டியதில்லை….மரம், மட்டையெல்லாம் பேசறதாச் சொல்றாங்க….அது மனுஷனோட பேசுதா, இல்ல இவன் அதோட பேசுறானா? அப்படிப் பேசினா அதுக பதில் சொல்லுதாங்கிறதெல்லாம் இன்னும் கேள்வியாத்தான் இருக்கு….எல்லாம் பாவனைகள்தான். பேசும்…பேச முடியும்ங்கிறதெல்லாம் அவனவன் கற்பனை…ரசனை சார்ந்த விஷயம்….அப்படியிருக்கைல நீயும் செவுரு மாதிரி இருந்தேன்னா…?”

“ஆரம்பிச்சிட்டீங்களா? ஒண்ணுக்கு ஒம்பது பேசறதுக்கு என்னால ஆகாது….அது உங்களுக்குக் கைவந்த கலை….இப்போ என்ன சொல்லணும்ங்கிறீங்க…?”

“சொல்றதென்னத்த…? எதைச் சொல்லி என்ன செய்யப் போறோம்…? எதையும், யாரும் யாருக்கும் சொல்லி எதுவும் ஆகப் போறதில்லை….எல்லாரும் அவரவர் இஷ்டப்படிதான் இயங்கிட்டிருக்காங்க….அவனவனுக்கு அனுபவம் ஏற்படுறபோது பட்டுத் திருந்துறான்….அவ்வளவுதான்…யாரும் யாரையும், சொல்லித் திருத்திட முடியாது….எல்லாமும் அனுபவிச்சித்தான் திருந்தியாகணும்…அதுதான் சரியான மெச்சூரிட்டியா இருக்கும். வாழ்க்கைக் கல்விங்கிறது ஏட்டுச் சுரைக்கா இல்ல…அனுபவம்….அனுபவிச்சு உணர்றபோது கிடைக்கிற பாடமும், அதனால விளையுற முதிர்ச்சியும் தனி. அவைகளோட மகிமையே வேறே….”

“இப்போ என்னத்துக்கு என்னைப்போட்டு காலங்கார்த்தால பாடாப் படுத்தறீங்க…? நான் உங்களுக்கு என்ன பண்ணினேன்?” – உண்மையிலேயே நொந்துதான் கேட்டாள் கங்கா.

“தலைவன் சரியாயிருந்தும், வீடு நல்லாயில்லையே? அதைச் சொல்ல வர்றேன்…ஏன் இப்படி ஆகிப் போச்சு? என்னவோ ஒரு கோளாறு இருக்குன்னு யோசிச்சு யோசிச்சு அதையும்தான் சரி பண்ணினேன்….அது இன்னும் சரியாப் பொருந்தலைன்னாலும், நாளாவட்டத்துல பலனளிக்கும்ங்கிற நம்பிக்கைதான். ஆனாலும் அப்பப்போ இப்படி வக்கரிச்சிதின்னா அந்தக் கோணல்களை எப்படி நிமித்திறது?”

தலையைச் சுற்றியது கங்காவுக்கு.

“நம்ம வீட்ல பிரச்னையே எல்லாத்தையும் வெளிப்படையாப் பேசாததுதான். பல வீடுகள்ல இன்னைக்கு இதுதான் பிரச்னை. ஒரே வீட்ல புருஷன், பொஞ்சாதி, பையன், பொண்ணு, இல்லாட்டி ஒரு பொண்ணு, இல்லேன்னா ஒரே ஒரு பையன் இப்டி மூணே மூணு பேர் மட்டும் இருந்தும் அந்த வீடுகள்ல அவங்க தனித் தனித் தீவு போல இயங்கிட்டிருக்காங்க….அப்பா சொல்றது அம்மாவுக்குப் பிடிக்காது…அம்மா சொல்றது அப்பாவுக்குப் பிடிக்காது…ரெண்டு பேர் சொல்றதும் பையனுக்குப் பிடிக்காது, இல்லன்னா பொண்ணுக்குப் பிடிக்காது, பையன் பேசுறது அப்பனுக்குப் பிடிக்காது, அம்மாவுக்குப் பிடிக்கும்…பொண்ணு பேசுறது அம்மாவுக்குப் பிடிக்காது…அப்பாவுக்குப் பிடிக்கும்…இப்டியா பல குடும்பங்கள் போயிட்டிருக்கு… போயிட்டிருக்கென்ன… அல்லாடிக்கிட்டிருக்கு…. அதுதான் சரி….”

“பணம் இருந்தா மட்டும் போதுமா…? அந்தப் பணத்தால உண்டான வசதி வாய்ப்புக்கள் மட்டும் போதுமா? மனசுக்கு நிம்மதி வேணுமே? அதைப் பணத்தால தர முடியுதா? சரி, இன்னைக்கு நிம்மதி இல்லை…தீர்ந்து போச்சு…கடைல போய் ஒரு கிலோ நிம்மதி வாங்கிட்டு வருவோம்னு போய் விலை பேசியா வாங்க முடியும்? கடைல நிம்மதியைக் கூவிக் கூவியா வித்திட்டிருக்காங்க….பணம்ங்கிறது வாழ்க்கையோட ஒரு காரணி மட்டும்தான்….அதுவே வாழ்க்கையில்லை…தண்ணீர், சாப்பாடு, காற்று…இது மாதிரி. ஆனா என்ன? நிறையப் பேர் நினைச்சிக்கிறாங்க…பணம் இருந்திச்சின்னா வேறே எதுவும் வேண்டாம்…அது ஒண்ணுதான் இந்த வாழ்க்கையோட ஆதாரம். வேறே ஒட்டு உறவு எதுவும் தேவையில்லை…எல்லாத்தையும், எதையும் சமாளிச்சிடலாம் அப்படீன்னு…..முடியுதா? இல்ல முடியுதான்னு கேட்கிறேன்…..”

“யாரைக் கேட்குறீங்க…?” – கங்கா தாமோதரனைப் பார்த்துக் கோபமாய்க் கேட்டாள்.

“யாரைக் கேட்குறது? நம்மளை நாமளே கேட்டுக்க வேண்டியதுதான். இப்போ நம்ம வீட்ல பணமிருக்கு…வேணுங்கிற அளவுக்கு இருக்கத்தான் செய்யுது…ஆனா நிம்மதி இருக்கா?”

“ஏன் இல்லாமே…? நிம்மதியில்லாம இப்ப என்ன அழுதுக்கிட்டா இருக்கீங்க? நல்லாத்தானே இருக்கீங்க….பணம் தந்த அந்த வசதி வாய்ப்போட இருக்கிறதுனாலதான் உங்களால் இப்படிச் சத்தமாப் புலம்ப முடியுது…அதுக்கும் போதிய தெம்பு இருக்கிறதுனாலதானே இப்டிக் கத்திட்டிருக்கீங்க? அந்தத் தெம்பைத் தந்தது எது? பணம்தானே? அது தெரியுதா உங்களுக்கு?” – அவளும் விடாமல் கேள்வியை வீசினாள்.

“பணம் புலம்பத்தானே விட்டிருக்கு…..வயித்துக்குச் சோறு கிடைச்சாப் போதுமா? எல்லாம் கிடைச்சிருச்சுன்னு அர்த்தமா?”

“இப்போ என்ன கிடைக்கலேங்கிறீங்க…?”

“நிம்மதி…மன நிம்மதி……அது இருக்கா இந்த வீட்ல…? எங்கே நிம்மதீஈஈஈ…….? ன்னு இழுத்துப் பாட வேண்டியதுதான்……”

“இவ்வளவு நேரம் பேசினது பத்தாதுன்னு, பாட வேறே போறீங்களா…? அட கர்மமே….என்ன கஷ்ட காலம்டா இது…ஆண்டவனே…!! என்னைக் காப்பாத்துப்பா….”

கங்கா மூலையில் போய் அயர்ந்து உட்கார்ந்து விட்டாள். கங்காதரன் அடுத்து என்ன செய்யப் போகிறாரோ என்பது அவள் கவலையாய் இருந்தது.

(தொடரும்)

  • உஷாதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad