Top Add
Top Ad

2017 டாப் 10 சாங்ஸ்

இந்த வருடம் நாம் அவ்வப்போது பார்த்து வந்த டாப் சாங்ஸ் வரிசைகளைப் பின்வரும் இணைப்புகளில் காணலாம்.

ஃபிப்ரவரி 2017

ஏப்ரல் 2017

ஜூலை 2017

செப்டம்பர் 2017

நவம்பர் 2017

கீழ் வருபவை அனைத்தும் இவ்வருடம் இதுவரை வெளியான படங்களில் உள்ள பாடல்கள். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘2.0’ போன்ற படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகி இருந்தாலும், படங்கள் இன்னும் வெளியாகாததால் அவற்றை இவ்வரிசையில் சேர்க்கவில்லை. பத்து பாடல்கள் தான் என்று ஒரு வரைமுறை வைத்துக்கொண்டதால், ஒரு சில நல்ல பாடல்களை உள்ளே கொண்டு வரமுடியவில்லை. உங்களுக்கு பிடித்த பாடல்களை கீழே பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

இனி இவ்வருடத்தில் வெளிவந்த சிறந்த பத்து பாடல்களைக் காண்போம்.

மீசையை முறுக்கு – வாடி புள்ள வாடி

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு முக்கியமான வருடம் இது. பாடகர், இசையமைப்பாளர்க்கு அடுத்ததாக நடிகர், இயக்குனர் என்று அடுத்த கட்டத்திற்கு சென்ற வருடம். அவர் இயக்கத்தில், நடிப்பில் வெளியான “மீசையை முறுக்கு” வெற்றி படமும் கூட. வழமையான தமிழ் திரைப்பட இசை பாணியில் இல்லாமல் இருப்பது தான், இவர் இசையின் நிறையும் குறையும். இந்தப் பாடலில் ஹீரோ, ஹீரோயின் வரும் அடுத்தடுத்த காட்சிகள், ஒரே மாதிரி ஆனால் அவரவர் வாழ்வுக்கு ஏற்றாற்போல் காட்சிகள் அமைத்திருப்பது இப்பாடலின் சிறப்பு. இந்த வருடம் தனது காதலியையும் கைப்பிடித்திருக்கிறார். வாழ்த்துகள் ஆதி!!

சரவணன் இருக்க பயமேன் – எம்பூட்டு இருக்குது ஆசை

கடந்த சில வருடங்களாகவே, வருடத்திற்குச் சராசரியாக சுமார் பத்து படங்கள் இசையமைக்கும் இசையமைப்பாளர் இமான், அவருடைய பொற்காலத்தில் இருக்கிறார். அவற்றில் எதுவும் பெரிய வெற்றி என்று இல்லாவிட்டாலும், படத்திற்கு ஒரு பாடலையாவது அசத்தலாக கொடுத்துவிடுகிறார். இமான் டாப் 10 என்றே ஒரு லிஸ்ட் போடலாம். உதயநிதிக்கு அது தெரிந்து இருப்பதால் தான், அவருடைய சமீபத்திய படங்களுக்கு எல்லாம் இமானிடம் சென்றுவிடுகிறார்.

திருட்டுப் பயலே – 2 – நீ பார்க்கும்

கிட்டதட்ட 30 வருடங்களாக திரையுலகில் இருக்கும் வித்யாசாகரின் படைப்புகள், கடந்த சில வருடங்களாக ரொம்பவும் குறைந்துவிட்டது. காலத்தால் அழியாத அருமையான மெலடிகளுக்குச் சொந்தக்காரரான வித்யாசாகரின் ரசிகர்களுக்கு இதில் வருத்தம் தான். இந்த வருடம் இவர் இசையமைப்பில் வெளிவந்தது இந்த ஒரு படம் தான். தான் இன்னமும் மெல்லிசையில் கிங் தான் என்பதை இப்பாடல் மூலம் அமைதியாக நிரூபித்துள்ளார் வித்யாசாகர்.

விக்ரம் வேதா – யாஞ்சி யாஞ்சி

இரு ஹீரோக்கள் படங்களில் இரு ஹீரோக்களுக்கு சமமான முக்கியத்துவம் இருப்பது போன்ற கதை அமைவது சாதாரணம் இல்லை. இப்படத்தில் மாதவனுக்கும், விஜய் சேதுபதிக்கும் சமமான ஹீரோயிசத்தைத் தந்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி. படத்தின் பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் கவனிக்க வைத்திருந்தார் புது வரவான சி.எஸ்.சாம். இசையமைப்பாளர் அனிருத்தைவிட பாடகர் அனிருத் ரொம்ப பிஸி. யார் கேட்டாலும் மறுக்காமல் பாடிக்கொடுத்துவிடுவார். இப்பாடலையும் சேர்த்து அதற்குள் பாடகராக அரை செஞ்சுரி போட்டுவிட்டார் அனிருத்.

சத்யா – யவ்வனா

ஒரு படத்திற்கே அடையாளமாக இருக்கும் வகையிலான பாடலை, ஒரு புது இசையமைப்பாளர் கொடுப்பது அரிது. இவ்வருடம் வெளியான சிபிராஜின் ‘சத்யா’ படத்தில் அப்படியான ஒரு பாடலை இசையமைப்பாளர் சைமன் கிங் கொடுத்திருக்கிறார். பாடலை ஒரு லெவல் மேலே உயர்த்தி சென்றது, மதன் கார்க்கியின் பாடல் வரிகளும், பாடகர் யாசினின் ஹைபிட்ச் குரலும். டிவி, ரேடியோ, யூ-ட்யூப் என இப்பாடல் நல்ல ரீச் ஆனது.

தரமணி – உன் பதில் வேண்டி

யுவன், நா.முத்துக்குமார், இயக்குனர் ராம் எல்லாம் இருந்தாலும், இப்பாடலின் சர்ப்ரைஸ் – நடிகர் சித்தார்த்தின் குரல். உருகி பாடியிருப்பார். யுவனுக்கான பாடல். யுவன் பாடியது போலவே பாடி, பாடலுக்கு சிறப்பு சேர்த்திருப்பார் சித்தார்த். யுவனின் சமீபத்திய படங்களில் நல்ல பெயர் வாங்கியது இப்படம் தான். படத்தின் கதையை இப்பாடலில் அழகாக எழுதியிருப்பார் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார். அவர் மறைந்தாலும், அவர் எழுதிய இது போன்ற பாடல்களால் எப்பொழுதும் நம் நினைவில் நிற்பார்.

காற்று வெளியிடை – நல்லை அல்லை

ஏ.ஆர்.ரஹ்மான் திரையிசையமைக்கத் துவங்கி இருபத்தியைந்து வருடங்கள் ஆகிறது. இன்னமும் தொய்வில்லாமல் சிறப்பான பாடல்களைக் கொடுத்து வருகிறார். அதற்கு இப்பாடல் ஒரு பதம். மணிரத்னத்தின் திராபையான படங்களில் ஆசுவாசமாக இருப்பது ரஹ்மானின் பாடல்கள் தான். அதையும் வெட்டி, ஒட்டி என்னன்னமோ செய்வார் மணி. இப்பாடலையும் இசையே இல்லாமல் பாதி பாட்டைப் போட்டார். அப்படியும் அது நின்றது. அதுதான் ஏ.ஆர். ரஹ்மான்.

போகன் – செந்தூரா

இமான் அருமையான இசையில் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தின் காந்தக்குரலில் வெளிவந்த இப்பாடலுக்கு தாமரையின் பாடல் வரிகள் இன்னொரு பலமாக அமைந்தது. பாடலைப் படமாக்கிய விதமும், இப்பாடலுக்கான நியாயத்தைச் செய்திருந்தது. ‘தனி ஒருவன்’ வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி, அரவிந்த்சாமி காம்பினேஷனில் வந்த இந்த படத்திற்கு இமானின் பாடல்கள் மற்றொரு சிறப்பாக அமைந்தது.

பவர் பாண்டி – வெண்பனி மலரே

தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம். ஹீரோ ராஜ்கிரண், இசை ஷான் ரோல்டன் என பல சர்ப்ரைஸ்கள். இருவருமே படத்தைத் தாங்கிப்பிடித்தார்கள். தனது தந்தையின் முதல் பட ஹீரோ என்பதால், ராஜ்கிரணிடம் சென்றதாக சொன்னார் தனுஷ். இந்தக் கதையில் வேறு யாரையும் நினைத்துப்பார்ப்பதும் கஷ்டம் தான். மெல்லிசைப் பாடல்களாக கொடுத்து “யாருடா இது அடுத்த இளையராஜா” என்ற லெவலுக்குப் பேச வைத்திருந்தார் ஷான். அதற்கடுத்த படங்களில் தான் அந்த லெவல் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

மெர்சல் – ஆளப்போறான் தமிழன்

இவ்வருடத்தின் டாப் ப்ளாக்பஸ்டரான இப்படத்தில் தனது பங்குக்கு மாஸாக இப்பாடலைக் கொடுத்தார் இசைப்புயல். சொதப்பலாக இருந்த விஜய், ரஹ்மான் காம்பினேஷன் இதில் தான் ஹிட் ரூட்டிற்கு வந்தது. பாடலாசிரியர் விவேக் தமிழின், தமிழனின் பெருமைகளைப் பாடலில் அடுக்கிப் புல்லரிக்க வைத்திருப்பார். பாடலுக்கு ஏற்ப இசையில் நாதஸ்வரம், தவில், கொம்பு, புல்லாங்குழல் என தமிழ் மணம் பரப்பியிருப்பார் ரஹ்மான்.

எங்கே தலயோட விவேகம் என்று தேடுகிறீர்களா? அது வேற லெவல் பாஸ். (அப்பாடி தப்பிச்சோம்!!) இதுதவிர, அதே கண்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, மகளிர் மட்டும், மேயாத மான், வேலைக்காரன் போன்ற படங்களிலும் சில பாடல்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இருந்தாலும், வண்டியில் இடம் இல்லாததால் ஏற்ற முடியவில்லை. சம்பந்தப்பட்ட பாடல்களின் ரசிகர்கள் மன்னிச்சூஸ் ப்ளிஸ்!!

முன்னமே குறிப்பிட்டது போல், உங்கள் மனம் கவர்ந்த பாடல்களைக் கீழே கமெண்ட்ஸ் பெட்டியில் போடவும்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்த வருடம் மேலும் சிறந்த பாடல்களுடன் சந்திப்போம்.

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad