Top Add
Top Ad

மணியோசை

Filed in கதை, வார வெளியீடு by on January 7, 2018 1 Comment

றையில் ஏர் கண்டிஷனர்  ‘ஹுஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. சவிதாவின் நீள விரல்கள் லேப்டாப்பில் சடசடவென்று தட்டிக் கொண்டிருந்த சத்தமும் கூடவே சேர்ந்து  கேட்டது. அவ்வளவு ஏன், அடுத்து என்ன எழுதுவது என்று சவிதா தன் கட்டைவிரல் நகத்தால் தனது லிப்ஸ்டிக் உதட்டை வருடியது கூட தெளிவாகக் கேட்டது.

‘ட்ரிங்… ட்ரிங்…’ …காலிங்பெல்.

யாராக இருக்கும்? ரூம் சர்விஸ் கூட எதுவும் சொல்லவில்லையே. ஒரு வேளை விஸ்வா ஏதாவது சொல்லியிருப்பானோ?

‘ட்ரிங்…. ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்…’ மடியிலிருந்த லேப்டாப்பை மெத்தையில் வைத்துவிட்டு எழுந்திருப்பதற்குள் பத்துப் பதினைந்து தடவை காலிங்பெல் ஒலித்துவிட்டது.  சத்தியமாக விஸ்வா தான். கேசினோ போவதாகச் சொல்லிவிட்டுப் போனானே? அதற்குள் வந்துவிட்டானா? அல்லது நாம் தான் நேரம் போனது தெரியாமல் வேலை செய்து கொண்டிருந்தோமா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள இடது மணிக்கட்டைப் பார்த்தாள்.

‘ட்ரிங் … ட்ரிங்…’ …

‘ஐயோ… வரேண்டா …’ எரிச்சலுடன் கத்திக்கொண்டே எழுந்து சென்று கதவைத் திறக்கத் தாழ்ப்பாளில் கை வைத்தாள்.

அதே சமயம் தன்னிடமிருந்த ஹோட்டல் கீ கார்டை வைத்து கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் விஸ்வா.

‘ஹை… பேபி …’

பொங்கிக் கொண்டு வந்தது சவிதாவுக்கு.

‘லூசாப்பா நீ? சாவி வெச்சிருக்கயில்ல… தொறந்துகிட்டு உள்ள வர்றதுதானே.. எதுக்கு பெல் அடிச்சிகிட்டு நின்ன?”

“நோ .. நோ… என்ன தான் என்னோட  ஸ்வீட்  பேபியா இருந்தாலும், உன்னோட ப்ரைவஸியை மதிப்பவன் இந்த விஸ்வா” பன்ச் டயலாக் சொல்லிய எஃபக்டோடு சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான்.

“அப்படியே ஒண்ணு போட்டேன்னா தெரியுமா  .. எத்தன தடவ சொல்றது காலிங்பெல்லை கோயில் மணி மாதிரி அடிக்காதன்னு .. வந்து தெறக்க வேணாம்? அதுக்குக் கூட அவகாசம் தராம … வீட்லதான் இந்தத் தொல்லைன்னா வந்த எடத்திலுமா?”

“கரெக்ட் .. என்னைக்கும், எப்பவும் மாறாம இருப்பான் ..அது தான் விஸ்வா .” மீண்டும் பன்ச் முயற்சி.

“டேய் … உனக்கு எல்லாமே கிண்டல் தானா ?.”

அப்படியே மெலோடிராமா முகபாவத்துக்கு மாறிய விஸ்வா “கிண்டல் இல்லைம்மா செல்லம்  . எனக்கு அப்போ ஆறு வயசிருக்கும்…”

டப்பென்று இரு கையையும் கூப்பினாள் சவிதா .. “அய்யா .. சாமி … ஆள விடு … ஊர்ல எல்லார் வீட்லயும் காலிங்பெல் இருந்தது.. எங்கப்பா மட்டும் காலிங்பெல் வாங்க வசதியில்லாம தன்னோட ஃபியட் கார் ஹார்னை தான் அடிப்பாரு … அந்த ஏக்கம் அப்படியே வடுவா என் மனசில பதிஞ்சிடுச்சின்னு புருடா ஃபீலிங்ஸ கொட்டாத …. ஆத்திரமா வருது …”

‘கூல் …கூல் பேப் .. இன்னும் பிரசெண்டேஷன் முடிக்கலையா?’

‘எங்கேருந்து முடிக்கிறது.. விட்டுட்டு போய் 32 நிமிஷந்தான் ஆவுது.. என்னோட லேப்டாப் ஸ்டார்ட் ஆகி நான் இன்டர்நெட் கனக்ட் பண்ணவே ஏழு நிமிஷமாச்சு. அதுக்குள்ள வந்து நின்னா?”

“சாயந்திர நேரமில்லையா .. ஹோட்டல் ரூம்ல இருக்கவங்க எல்லாம் இன்டர்நெட் யூஸ் பண்ணுவாங்க போல .. ஒண்ணு பண்ணலாமா … நாம இப்போ படுத்துடலாம் .. நைட் பதினோரு மணிக்கு மேல நீ வொர்க் பண்ணிக்கோ ..”

“செருப்பு பிஞ்சிடும்… நேத்து வந்ததிலேந்து நீ பண்ண அட்டூழியமெல்லாம் பத்தாதா? என்னோட ஒரிஜினல் ப்ளான் படி நேத்து நைட்டே இந்த பிரசெண்டேஷன் ரெடியாகியிருக்க வேண்டியது…  உன்னோட லைவ் பிரெசென்டேஷனால என் ப்ளான் எல்லாம் கெட்டு, குட்டிச்சுவரா நிக்குது..”

“கடலன்ன காமம் உன்னை உழந்தக் கூடாதுன்னு தான் ..”

“பார்றா .. திருக்குறளு!!! … ம்ம்?”

“ஆமாம்டி  .. எல்லாம் ஒரு நல்லெண்ணந்தான் ..”

“வெங்காயம் …என்னை இப்போ உழந்தறது எல்லாம்,   நாளைக்கு திங்கட்கிழம … என்னோட ப்ரசெண்டேஷனைப் பார்த்து அவனவன் கிழிகிழின்னு கிழிக்கப் போறானேன்றது தான் … அதுவும் நல்லது தான்ல உனக்கு?”

“ஒரு விதத்தில நல்லது தான் … முதல் ப்ரேசெண்டேஷனே புட்டுகிச்சின்னா சீக்கிரம் ரூமுக்கு வந்துடுவியே …”

“மனுஷனாய்யா நீ?”

“அட லூசு ..சும்மா சொன்னேம்பா .. என் செல்லம் தோத்துப் போக நான் ஆசைப்படுவனா? ஒகே .. ஒண்ணு பண்ணலாம் .. நீ இப்போ டல்லா இருக்க மாதிரி தெரியுது.. நான் போய் உனக்கு ஒரு ஸ்டார்பக்ஸ் எஸ்பிரசோ வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு, கொஞ்ச நேரம்  அப்ஸ்காண்ட் ஆயிடறேன்..  ஒரு பத்தரை மணிக்கு வரேன் … அதுக்குள்ள உன் வேலையெல்லாம் முடிச்சுடுவே இல்ல?”

“ஐ வில் ட்ரை … ஒரு மூணு மணி நேரம் இருந்தா கூடப் போதும்.. காஃபி கூட வேண்டாம்…”

“இல்லல்ல … இட் வில் ஹெல்ப் யூ… எதித்த மாதிரி ஒரு ஸ்டார்பக்ஸ் இருக்கு பத்து நிமிஷத்தில வந்திடறேன் .. ரிலாக்ஸ் பண்ணு “ சொல்லிவிட்டுச் சென்றான் விஸ்வா.

***

விதா விஸ்வா திருமணம் முடிந்து கிட்டத்தட்ட  ஒண்ணரை வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் முதல் தடவை பார்த்த அதே கலகலப்புடன் இருப்பவன் விஸ்வா. ஒரு வாரம் சேர்ந்திருந்தால் கூட அலுப்புத் தட்டிவிடக் கூடிய இன்றைய யுகத்தில், அத்தகைய எந்த அலுப்பும் நெருங்கி விடாமலிருக்க வலுக்கட்டாயமாக எதையாவது செய்து கொண்டேயிருப்பவன். ஒருபுறம் கிண்டலும் கேலியுமிருந்தாலும், சவிதா மீது மட்டற்ற காதல் கொண்டவன்.  அந்தக் காதலை அவன் வெளிப்படுத்தும் விதம் சிலசமயம் எல்லை மீறினாலும், சவிதாவைப் பொறுத்தவரை அவை சுகமானவை.

அப்படி ஒரு சுகமான தொல்லை தான் இப்போது அரங்கேறிய வண்ணமுள்ளது.

சவிதாவின் ஆஃபிஸ் சேல்ஸ் மீட்டிங் ஒன்று  லாஸ் வேகஸில் ஏற்பாடான நாளிலிருந்தே இந்தத் தொல்லைகள் தொடங்கிவிட்டன. “ஹனிமூன் ஸ்வீட் புக் பண்ணிடறேன்..”, “ஒரு வாரம் லீவ் சொல்லிட்டேன் ..” எனப் பல முஸ்தீபுகள்.

“ஹலோ!!  மீட்டிங் எனக்கு .. டெக்னிகல் பிரசண்டேஷனுக்கு கூப்பிட்டிருக்காங்க … நீங்க எங்க கிளம்பியாவுது ஊருக்கு முன்னாடி ..”

“என்ன நீ… பொசுக்குன்னு நீ நான்னு பிரிச்சுப் பேச ஆரம்பிச்சிட்டே .. சரி விடு … அதெல்லாம் நான் மனசில வெச்சுக்கல.. ஆஃபிஸ்ல ஃபிளைட் டிக்கட்  நானே போட்டுக்கிறேன்னு சொல்லிடு…அப்புறம் ரீ-எம்பர்ஸ்மென்ட் வாங்கிக்கலாம்…”

தடால்புடாலென ஏற்பாடுகள் செய்து கூடவே வந்து  இந்த நொடி வரை சவிதாவை மறுநாள்  கூட்டத்திற்குத் தயாராகவிடாது அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருக்கிறான்..

***

ட்ரிங் .. ட்ரிங்… ட்ரிங்..  ட்ரிங் ‘

“வர்றேன் ..” கதவைத் திறக்க எழுந்தாள் சவிதா.

‘ட்ரிங் … ட்ரிங்… ‘

“மவனே நீயே தொறந்துட்டு வா …” இரண்டு கைகளாலும் காதுகளை அழுந்தப் பொத்திக்கொண்டு குத்துக் காலிட்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டாள் சவிதா. எதிர்பார்த்ததைப் போலவே இன்னும் நாலைந்து தடவை ட்ரிங் ட்ரிங் என அழுத்திவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்

“யுவர் சாக்கலேட் மோக்கா மேடம்..”

காப்பியைக் கையில் வாங்கிக்கொண்டே எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள்..

“மனுஷ ஜென்மம் தானே நீ .. ஏற்கனவே டென்ஷன்ல இருக்கன்… சொல்லச் சொல்ல கேட்காம இந்த காலிங்பெல்லை இப்படி அமுக்கற… சாவு மணி மாதிரி இருக்கு அது .. “

“பாயிண்ட் வெல்  டேக்கன் மேடம். எனி காண்டிமேண்ட்ஸ் மேடம்.”

முறைத்தாள். “ஒண்ணும் வேணாம்”

“சரி சரி … டென்ஷனாவாத … உன் பேக்ல இருந்து முன்னூறு டாலர் எடுத்துட்டுப் போறேன்.. அப்படியே இந்த ஸ்ட்ரிப்ல  நடந்து போய் நல்ல நல்ல உண்டியலா  பார்த்துக் காசைப் போட்டுட்டு வரேன் … “

“ஸ்ட்ரிப்ல  போனாலும் சரி … ஸ்ட்ரிப் க்ளப்புக்குப் போனாலும் சரி … ஆளை விட்டின்னா சரிதான்..”

“தெய்வமே .. உன் கோயிலுக்கு நடந்தே வரேன் தெய்வமே “ அண்ணாந்து பார்த்துக் கும்பிட்டான் விஸ்வா. “போனை இங்கேயே வெச்சுட்டுப் போறேன்.. ஓகே?”

“நெஜமாவே ஸ்ட்ரிப் கிளப் போறியா?”

“இல்லையா பின்ன ?” என்றவன் அவளைத் தீர்க்கமாகத் திரும்பப் பார்த்து  “இல்லடா செல்லம் ..… பேட்டரி சாகப் போகுது .. சுத்தமா சார்ஜ் இல்ல” என்றான்.

***

விதா ஏறத்தாழ தனது வேலையை முடித்து விட்டிருந்தாள். இன்னும் இரண்டே இரண்டு ஸ்லைடுகள் தான்.. மணி பத்தைத் தாண்டிவிட்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவான். அதற்குள் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் தொல்லை தான்.. கடவுளே அவன் வந்துவிடக் கூடாதே …

கடைசி ஸ்லைட் நச்சென்று தலையில் அடித்து பச்சென்று மனதில் பதிய வேண்டும்…எப்படி ? என்ன செய்யலாம்?

தலைமுடியை அழுந்த கோதிக் கொண்டாள். மேஜையிலிருந்த கப்பில் தண்ணீர் ஊற்றிக் குடித்தாள். குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.. அறையில் ஏர்கண்டிஷனர்  ‘ஹுஸ்ஸ்ஸ்’ ஒலி..

திடிரென்று  ‘ப்ர்க்.. ப்ர்க் ..’ என்ற பீடிகையுடன் ஒலிப்பெருக்கி அலறியது  ‘யுவர் கைண்ட் அட்டென்ஷன் ப்ளீஸ் .. த ஹோட்டல் மேனேஜ்மென்ட் ரிக்வஸ்ட்ஸ் ஆல் ஆஃப் த கஸ்ட்ஸ் டு  ஸ்டே இன்சைட் தெர்  ரூம்.. தேர் ஆர் சம் கன் ஷாட்ஸ் ஹேப்பனிங் இன் த ஸ்ட்ரிப் … யூ மே ட்யூன் டு த டிவி டு கெட் மோர் அப்டேட்ஸ்..”

வாட்.. என்ன சொல்கிறாள் அவள்… ரிமோட்டைத் தேடிக் கண்டுபிடித்து டி.வி.யைப் போட்டாள்..  நான்கைந்து கட்டிடங்கள் தள்ளியிருந்த மைதானத்தில் நடந்த இசைக் கச்சேரியில் துப்பாக்கிச் சூடு நடப்பதாகச் சொன்னார்கள் .. நேற்றிரவு வரும்பொழுது கூட விஸ்வா போகலாமென்று சொன்னானே .. ஒரு வேளை அவன் மட்டும் அங்கே போயிருப்பானோ ? அவரசமாகப் படுக்கையில் கிடந்த செல்ஃபோனை எடுத்து அவனை அழைத்தாள்.. அவனது விவால்டி சிம்பனி ரிங்டோன் நாராசமாக ஒலித்தது.. முட்டாளே … முட்டாளே ராத்திரியெல்லாம் சார்ஜ் பண்ணாமல் விட்டுவிட்டு இப்போது ஃபோனில்லாமல்  வெளியே போயிருக்கிறாயே …

இங்கிருந்து பார்த்தால் கூட அந்த மைதானம் தெரியுமென்றானே ..ஓடிச் சென்று திரையை இழுத்து விலக்கினாள்.. தெருவே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.. வெளியில் இவ்வளவு களேபரம் நடந்தும் எனக்கு மட்டும் ஒன்றும் தெரியாமல் …  ச்சே … முதலில் விஸ்வா பத்திரமாக வந்து சேரவேண்டுமே …  ஜன்னல் வழியே பலர் இங்குமங்கும் ஓடுவது தெரிந்தது.. கடவுளே  என் விஸ்வாவைக் கொண்டு வந்து சேர்த்துவிடு…  இருபது நொடிகள் தலையைத் திருப்பித் திருப்பி ஜன்னல் வழியே பார்த்தாள்… என்ன செய்வதென்றே புரியவில்லை … கீழே இறங்கிச் சென்று பார்ப்போமா ? கடகடவென ஓடி வந்து கதவைத் திறந்து வெளியே வந்தாள்…

“ஹோல்ட் ஆன் மேடம் .. கெட் இன் யுவர் ரூம்..”

“எஸ் ஆபிசர் .. பட் மை ஹஸ்பெண்ட்..”

“ஐ ரிபீட் … கெட் இன் யுவர் ரூம்…” துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு அவளை நோக்கி வந்தான் அந்தக் காவலன்.

சடாரென்று உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

இது என்ன சோதனை … கண்களில் நீர் முட்டியது … பாவி என்னைச் சொல்லணும் … தொரத்தி தொரத்தி அனுப்பி வெச்சேனே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்  கூட அவன் வந்து விடக் கூடாதென வேண்டினேனே.. கடவுளே .. ப்ளீஸ் .. என்னோட எத்தனையோ வேண்டுதலை நீ நிறைவேற்றியதில்லை தானே … அதே போல எனது அந்தக் கடைசி வேண்டுதலையும் நிறைவேற்றாது விட்டுவிடு… தன் நிலையைப் பார்க்க அவளுக்கே பரிதாபமாக இருந்தது..

இப்போது பரிதாபப்பட நேரமில்லை … என்ன செய்வது .. என்ன செய்வது.. ஓவென்று  கத்தத் தோன்றியது ..  கத்தினாள்.. சடாரென்று ஒரு எண்ணம் .. ஜன்னலைத் திறந்து கத்தினால் அவன் பதிலுக்குக் கத்துவானோ? கஷ்டப்பட்டு முயன்று ஒரு ஜன்னலைத் திறந்தாள்.. அப்போதுதான் வெளியுலகின் அவலம் முகத்தில் அடித்தது .. மக்கள் ஓலம்… போலிஸ் கார்கள், ஃபயர் எஞ்சின் சைரன் என காதைப் பிளந்தது

“விஸ்வா …” அடிவயிற்றிலிருந்து பலங்கொண்ட மட்டும்  அழுத்தங்கொடுத்து கத்தினாள்.. காற்றில்  எங்கோ சென்று கரைந்தது அவளது விளி..

விஸ்வா .. விஸ்வா .. வந்துடு விஸ்வா பிளீஸ் .. இன்னமும் விட்டு விட்டு துப்பாக்கி வெடிப்பது  கேட்டது …கூர்ந்து கவனித்ததில் துப்பாக்கிச் சத்தம் தனக்கு நேர் கீழறையிலிருந்து வந்ததை உணர்ந்தாள் சவிதா .. வயிற்றில் என்னமோ புரட்டிக் கொண்டு வந்தது.. கண்கள் இருண்டன .. அப்படியே தரையில்  சரிந்தாள் …

ட்ரிங்… ட்ரிங்..  சடாரென்று திரும்பிக் கதவைப் பார்த்தாள்..  ஏழெட்டு வினாடிகள் அமைதிக்குப் பிறகு மீண்டும் காலிங்பெல் ஒலித்தது.

ட்ரிங்.. ட்ரிங்…ட்ரிங்….ட்ரிங் ….

  • மர்மயோகி

 

Tags: , , ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. senthil says:

    Nice story and narration.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad