\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ

சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர்.

1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஸ்ரீதேவி நான்கு வயதிலேயே சினிமாத்துறைக்கு வந்துவிட்டார். அவர் நடித்த முதல் படமான துணைவன் 1969இல் திரைக்கு வந்தது. ஏ.வி.எம்.ராஜனும், சௌகார் ஜானகியும் நடித்த அந்தப் படத்தில் அவர் முருகன் வேடத்தில் நடித்திருந்தார். சிறுவயதிலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி என்று பெரும் நட்சத்திரங்களுடன் நடித்தவர், திரையில் தனது திறமையைக் காட்டி, தனக்கான பிரபல்யத்தை வென்றெடுக்கத் தொடங்கினார்.

அவர் கதாநாயகியாக அறிமுகமாகியது, பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில். அப்படத்தில் அவரைக் கமல், ரஜினி இருவருமே விரும்புவார்கள். ரஜினி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, கமல் கெஸ்ட் ரோலில் நடிக்க, ஸ்ரீதேவி தான் அந்தக் கதையில் ஹீரோ. அடுத்து வந்த படங்களில் கமல், ரஜினி இருவருக்கும் ஜோடியாகப் பல படங்களில் நடித்தார். அவர் இருக்கும் படங்களின் மதிப்புக் கூடியது. 16 வயதினிலே, ப்ரியா, சிவப்பு ரோஜாக்கள், ஜானி, குரு, மூன்றாம் பிறை என்று சூப்பர் ஹிட் திரைப்படங்களின் நாயகியாக இருந்தார். தமிழின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அவரைக் குறிப்பிடலாம். அவரின் ஆதர்சமான சாவித்திரியைப் போல் அவரும் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

தமிழில் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று அனைத்து மொழி படங்களிலும் அப்போது நடித்துக்கொண்டிருந்தார். 1982 இல் மட்டும் ஒரு வருடத்தில் அவர் நடித்து 20 திரைப்படங்கள் வெளியாகியது. 1983இல் அவர் கதாநாயகியாக நடித்த முதல் ஹிந்தி படமான சத்மா வெளியானது. இது தமிழ் மூன்றாம் பிறையின் ஹிந்தி ரீ-மேக். தமிழக அரசின் சிறந்த நடிகை விருதினைப் பெற்றுத்தந்த இப்படம் ஸ்ரீதேவிக்கு ஹிந்தி சினிமாவின் கதவைத் திறந்து வைத்தது. அதே ஆண்டு ஜிதேந்திராவுடன் நடித்த ஹிம்மத்வாலா அங்கு பெரும் ஹிட்டடித்தது. அதன் பிறகு, தமிழ் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டவர், 15 ஆண்டுகளுக்கு முடி சூடா ராணியாக ஹீரோக்களின் ஆதிக்கத்தில் இருந்த பாலிவுட் திரையுலகில் வலம் வந்தார்.

அங்குள்ள உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து வந்தாலும், தனக்கான தனித்துவமான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறமையால் மிளிர்ந்தார். எந்த கதாபாத்திரம் ஏற்றாலும், அதில் தனது குழந்தைத்தன்மையுடன் கூடிய கண்ணியத்தைக் காட்டினார்.

1997 இல் சொந்த வாழ்வில் குடும்பத்தைக் கவனிக்கத் திரையுலகை விட்டு விலகினார். தனிப்பட்ட வாழ்வில், அவர் மிதுன் சக்கரவர்த்தியுடன் ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார் என்று ஒரு வதந்தி இருந்தது. அவர் யாரைத் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்பது ரசிகர்களிடம் மில்லியன் டாலர் கேள்வியாக அச்சமயம் இருந்தது. அவருடைய தாயின் இறப்பிற்குப் பிறகு, ஹிந்தி நடிகர் அனில் கபூரின் அண்ணனும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். அம்முடிவிற்கு அச்சமயம் பாதுகாப்பு, நிதி நிர்வாகம் எனப் பல காரணங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. அவர்களுக்கு ஜான்வி, குஷி என இரு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

எப்படி ராணி போல் சினிமாவை விட்டு விலகினாரோ, அதற்கு எந்தக் குறைவும் இல்லாமல், ஒரு ராணி போல் 2012 திரும்பவும் இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் திரைத்துறைக்கு வந்தார். சுமார் 20 கோடிக்கு உருவாகிய அப்படம் 78 கோடி வசூலித்தது.  இறுதியாக தமிழில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்தார். மொத்தம் 248 திரைப்படங்கள் இதுவரை அவர் நடித்து வெளியாகியுள்ளன. 2013இல் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.

ஐம்பது வயது தாண்டியும் அதே இளமையும், அழகுடன் இருந்தார். சரியான உணவு, உடற்பயிற்சி எனத் தனது அழகில் அதிகக் கவனம் எடுத்துக்கொண்டார். அவர் தனது அழகை மெருகேற்ற பல ப்ளாஸ்டிக் சர்ஜரிகளும் செய்துக்கொண்டார். இதுவே தற்போது அவரது மரணத்திற்குக் காரணமாக இருக்குமோ என்று கேள்விகள் எழுப்புகின்றன.

அவருடைய முதல் பெண்ணான ஜான்வியின் முதல் படமான தடக் இவ்வாண்டு ஜுலை ஏழாம் தேதியன்று வெளியாக இருந்த நிலையில், அதன் வெளியீட்டைக் காணாமல் ஸ்ரீதேவி அவசரமாக மறைந்துவிட்டார். போனி கபூரின் முதல் மனைவியான மோனா கபூரும் இது போல் தான், அவருடைய பையன் அர்ஜூன் கபூரின் முதல் படம் வெளியாவதற்குச் சில மாதங்கள் முன்பு மரணமடைந்தார்.

சிவகாசி மத்தாப்பூ போல் இந்தியாவெங்கும் பிரகாசித்து ஜொலித்த ஸ்ரீதேவி இப்போது மரணித்தாலும், அவருடைய திரைப்படங்கள் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் ஒளிரும். எண்பதுகளில் தங்கள் இளமைக்காலத்தைக் கழித்தவர்களின் நினைவுகளில் ஸ்ரீதேவிக்கு என்றும் ஒரு அழியாத இடம் இருக்கும்.

  • சரவணகுமரன்.

Image Credit: By https://www.bollywoodhungama.comhttps://www.bollywoodhungama.com/more/photos/view/stills/parties-and-events/id/1781128, CC BY 3.0, Link

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad