\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ப்ளாக் பேந்தர் (Black Panther)

 

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. சூப்பர் ஹீரோ படங்களில் ரசிகர்கள் சலிப்புறாமல் இருக்க இவற்றை வெவ்வேறு   வகையிலும், புதுப் புதுப் பரிமாணத்திலும் காட்டப் பிரயத்தனப்படுகிறார்கள். சூப்பர் ஹீரோ எல்லையில்லா சக்தி கொண்டவன் என்பதில் இருந்து இறங்கி, அவனும் அல்லது அவளும் நம்மைப் போல ஆசாபாசம் கொண்டவர்கள் தான் என்றும், அவ்வப்போது அடியும் வாங்குவார்கள் என்றும் கடந்த சில வருடங்களாக இவர்களின் கதாபாத்திரங்கள் இந்திய செண்டிமெண்ட் படங்களுக்குக் குறைவில்லாமல் படைக்கப்படுகின்றன. ஏன் சூப்பர் ஹீரோ ஆணாகத் தான் இருக்க வேண்டுமா? பெண் சூப்பர் ஹீரோயினாக இருக்கக் கூடாதா? என்று சென்ற வருடம் வொன்டர் வுமன் எடுத்தார்கள். இதோ இப்போது “ஏன் சூப்பர் ஹீரோ வெள்ளையாகத் தான் இருக்க வேண்டுமா?” என்ற கேள்விக்குப் பதிலாக ப்ளாக் பேந்தரை இறக்கியிருக்கிறார்கள்.

மார்வல் காமிக்ஸில் ப்ளாக் பேந்தர் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது, 1966 இல். அச்சமயம் இக்கதாபாத்திரத்தின் அறிமுகப் பின்புலத்திற்குப் பெரிதாக ஏதும் புரட்சி இருக்கவில்லை. ஓவியர் கிர்பி (Kirby) , தன்னைச் சுற்றிலும் கருப்பினத்தவர் பலர் இருந்தாலும், தனது காமிக்ஸ்களுக்குக் கருப்பினத்தவர் பல வாசகர்களாக இருந்தாலும், தனது எந்தச் சூப்பர் ஹீரோவும் கருப்பாக இல்லையே என்று யோசித்ததில் பிறந்தவன் தான் ப்ளாக் பேந்தர்.

அந்த ஆண்டு தான் ப்ளாக் பேந்தர் பார்ட்டி என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டுப் பல்வேறு சர்ச்சைகளில் பேசப்பட்டது. ஆனால், அதற்கும் தனது கதாபாத்திரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இதன் படைப்பாளி ஸ்டென் லீ (Stan Lee) மறுத்தாலும், ப்ளாக் பேந்தரை கறுப்பினத்தவர் அரசியலின் குறியீடாகவே பலர் பார்த்தனர். தமிழர்களுக்கு ஒடுக்கப்பட்ட தமிழர் நலன் பேசும் பல அமைப்புகளை இதனுடன் ஒப்பிட்டு நினைப்பதை இந்த இடத்தில் தவிர்க்க முடியாது.

ஸ்பைடர் மேன், எக்ஸ்-மேன், ஹல்க் என்று பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் மார்வல் ஸ்டுடியோஸ், ப்ளாக் பேந்தரை வைத்துப் படமெடுக்கத் தொண்ணூறுகளிலேயே திட்டமிட்டனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போடப்பட்டு, 2014 இல் முடிவாகப் படம் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 16 ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்படத்திற்குப் பெரும் எதிர்ப்பார்ப்புத் தொற்றிக்கொண்டது. படம் வெளியான பிறகும், படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு.

அமெரிக்காவில் ப்ளாக் பேந்தராக அவதாரமெடுக்கும் டி’சால்லா (T’Challa), வகாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டின் அரசன். வகாண்டா, வெளியுலகத்திற்குத் தான் ஏழை நாடு. ஆனால், உண்மையில் அது காடுகளின் உள்ளே மறைந்திருக்கும் ஒரு வளமிக்க, தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடு. அந்த நாட்டின் நலனுக்காக உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்று, டி-சல்லா எப்படிப் போராடுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை. பிற உலகத்தினருடனும், தனது இனத்தினருடனும் அவன் போராடுவதை, கருப்பினத்தவரின் போராட்டத்துடன் இணைத்துப்பார்க்கும் வகையில் இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ரையன் கூக்லர் (Ryan Coogler). பெரிய பட்ஜெட் படத்தில் தனது இனக் கருத்தை புகுத்திய வகையில் இவர் தான் தற்போது ஹாலிவுட்டின் ரஞ்சித்.

கருப்பினத்தவர் பெரும்பான்மையாக நடித்திருக்கும் இப்படத்தில் பொதுவாக மற்றவர்கள் எப்படிக் கருப்பினத்தவரையும், வகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளையும் பார்க்கிறார்கள் என்பதை ஆங்காங்கே காட்சிகள், வசனங்கள் மூலம் இடித்துரைத்திருக்கிறார்கள். படத்தின் வில்லன் கதாபாத்திரம் கில்மாங்கர் (Killmonger) மூலம் எதிர்மறை சிந்தனை கொண்டவர்களின் பக்கத்தையும் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆக்ஷன், கிராபிக்ஸ், இசை என்று சூப்பர் ஹீரோ படத்திற்கே உரிய வகையில் காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் வகாண்டா என்று காட்டும் பிரமாண்ட நாட்டைக் காணும் போது வாய்ப் பிளப்பது நிச்சயம். இவர்கள் காட்டும் வகாண்டாவை ஒரு டெக்னாலஜிக்கல் மகிழ்மதி எனலாம். மற்றபடி, விறுவிறுப்பு குறைவே. பேச்சைக் குறைத்துக்கொண்டு, செயலில் அதிகம் காட்டியிருக்கலாம். மெட்டாலிக் இசையினூடே ஆப்பிரிக்கக் கூறுகளை இணைத்திருப்பது சிறப்பு.

இப்படம் வெளிவந்த ஒரு வாரத்திலேயே வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் அதிகம் வசூலித்த படம் இதுவரை இது தான். உலகின் முதல் கருப்பின சூப்பர் ஹீரோவை குழந்தைகள் காண, கோ ஃபண்ட் மீ (GoFundMe) போன்ற பல்வேறு நிதி சேகரிப்புகள் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக இலக்கினை மீறி நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் டிஸ்னியின் கல்லா பெட்டி நிறைக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் இந்த நிதி சேகரிப்புகள் ஒடுக்கப்பட்ட குழந்தை நல அமைப்புகளிடமும் கொண்டு சேர்க்கப்பட்டன. அந்த வகையில் இந்த சூப்பர் ஹீரோவால் உலகில் நன்மை ஏற்பட்டுள்ளது.

  • சரவணகுமரன்

 

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad