\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இரும்புத்திரை

ஒரே மாதிரி கதைக்களம் இல்லாமல் படம் எடுப்பது சிறப்பு, அதையும் பார்க்கும்படி எடுப்பது மேலும் சிறப்பு, அதில் ஒரு கருத்தைச் சொல்லி, பார்ப்பவர்களை அது குறித்து யோசிக்கச் செய்வது பெரும் சிறப்பு. இந்தச் சிறப்பினைச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மித்ரன் அவர்கள். இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் உலகின் பாதகங்களைச் சீரியஸாக அலசியிருக்கிறார் மித்ரன். முதலில் அவருக்கு நம் பாராட்டுகள்.

ராணுவப் பயிற்சி அளிக்கும் அதிகாரியாக வரும் விஷால், அடிக்கடி அதிகம் கோபம் அடைவதால், பணி நீக்கம் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு மருத்துவராக இருக்கும் சமந்தா மன அமைதிக்காக, விஷாலை அவரது வீட்டாருடன் இணையச் செய்யக் கிராமத்துக்கு அனுப்புகிறார். கிராமத்தில் இருக்கும் தங்கையின் திருமணத்தை நடத்த விஷாலுக்குப் பெரும் பணம் தேவைப்பட, ஒரு போர்ஜரியின் பேச்சைக் கேட்டு, வங்கியில் கடன் வாங்கி, பிறகு அப்பணத்தை அந்தக் கும்பலிடம் இழக்கிறார். இதனால் குடும்பத்தில் மன உளைச்சல் ஏற்பட, அந்தக் கும்பலின் வேர் தேடிச் செல்ல, அந்தத் தேடலில் அவர் அறியும் விஷயங்கள் விஷாலை மட்டுமில்லாமல் படம் பார்ப்போரையும் கலவரப்படுத்துவது இப்படத்தின் வெற்றி.

மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே டிஜிட்டல் உலகில் பயணம் செய்ய, இந்தியா போன்ற வளரும் நாடுகளும் சமீப ஆண்டுகளில் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளன. டிஜிட்டல் பயன்பாட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் வளர்ந்த நாடுகளிலேயே இருக்கும்போது, அதிக அறியாமையுடனும், எதையும் அலட்சிய மனபான்மையுடனும் அணுகும் மக்கள் அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளில் டிஜிட்டல் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. அதைத் தான் ஆய்வுகளுடன், உண்மை சம்பவங்களை ஆங்காங்கே இடையில் காட்டி, அதே சமயம் டாகுமெண்டரி போல் இல்லாமல், ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படமாகக் கொண்டு வந்துள்ளனர் விஷால் – மித்ரன் கூட்டணி.

விஷாலை அடிக்கடிச் செய்திகளில் பார்த்துக்கொண்டே இருப்பதால், படத்தில் பார்க்கும் போது, ரொம்பப் பழக்கமானவர் போல் தெரிகிறார். நடிப்பில் மனிதர் பின்னியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். தந்தை டெல்லி கணேஷிடம் வெடித்துப் பேசும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சமந்தா திருமணத்திற்குப் பிறகு நடித்து வெளிவந்திருக்கும் படம். பாந்தமாக வந்து செல்கிறார். ஆடியோவில் இருந்த ஒரு டூயட் பாடல் படத்தில் வரவில்லை. வில்லனாக அர்ஜூன் ஒயிட் காலர் கிரிமினலாக மிரட்டியிருக்கிறார். இப்படத்திற்கு வில்லனாக தேவைப்படும் வெயிட்டை அர்ஜூன் அளித்திருக்கிறார். அவரைப் பார்த்து விஷால் ‘குருநாதா குருநாதா’ என்று சொல்வதெல்லாம், நடிக்க வருவதற்கு முன்பு, அர்ஜூனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியதால், விஷால் வைத்த சொந்த சரக்காக இருக்கும்.

ரோபோ ஷங்கர் சில காட்சிகளில் கலகலக்க வைத்திருக்கிறார். டெல்லி கணேஷ் வழக்கம் போல் தனது நடிப்பாற்றலால் அசர வைக்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு காண்பதால், மேலும் வயதாகி இருப்பது தெரிகிறது. விஷாலின் தங்கையாக வருகிறவர், பெரிய நடிப்பாளியாக இருப்பாராக இருக்கும். அவர் பேசியிருக்கும் பேச்சு வழக்கு மட்டும் கதைக்களனுடன் சேரவில்லை.

பாடல்கள் ஆஹா ஓஹோவென்று இல்லையென்றாலும், பின்னணி இசையில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. முக்கியமாகச் சப் வேயில் நடக்கும் சண்டைக்காட்சிக்கான பின்னணி இசையைச் சொல்ல வேண்டும். அட்டகாசம் செய்திருப்பார். ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கின்றன. படத்தின் ஆதார பலம் வசனத்தில் உள்ளது.

பேஸ்புக் பயன்பாடு, ட்ரூ காலர், ஆதார் கார்டு, தனி நபர் தகவல் விற்பனை, இண்டர்நெட் பேங்கிங் என இவற்றில் இருக்கும் பாதிப்புகளைச் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அதே நேரத்தில், டிஜிட்டல் பரிமாற்றங்கள் என்பது அவ்வளவு சுலபமாகத் திருடக்கூடியதும் அல்ல என்ற புரிதலும் அவசியம். மாறாக, டிஜிட்டல் பயன்பாட்டில் கட்டுப்பாடும், கவனமும் முக்கியம் என்று மக்கள் இதன் மூலம் அறிய வேண்டும். அது தவிர்க்கப்படக்கூடியது என்ற பயமுறுத்தல் மட்டுமே நின்றால் அது தவறானது. மற்றபடி, சமகால உலகளாவிய பிரச்சினை ஒன்றைப் பேசியிருக்கும் படமென்பதால், இரும்புத்திரை குறிப்பிட்டுப் பேசக்கூடிய முக்கியமான படம் தான்.

 

  • சரவணகுமரன்.

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad