\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ரோக்கியோவில் கோடைக்காலம்

கோடைக்காலச் சராசரி உஷ்ணமான 35 °C, பச்சைப் பசேல் என்ற பைன், சாலையோர வரிசையான கிங்கோ மரங்கள் மத்தியில் நடந்து செல்கிறார்கள் ரோக்கியோ நகரவாசிகள். ரோக்கியோ நகரத்தின் மையத்தில் உள்ளது பச்சை மைதானம், சக்கரவர்த்தியின் அரண்மனை, அழகிய தொங்குபாலங்கள், பச்சைப் பாசி படர்ந்து, தற்போதும் பயன்படும் கோட்டைகள், மற்றும் அழகிய செர்ரிப் பூ மரங்கள். சக்கரவர்த்தி குடும்பம் இப்போதெல்லாம் பண்டிகைகளுக்கு மாத்திரம் அரண்மனையைப் பயன்படுத்துகிறார்களாம்.

ரோக்கியோ நகரவாசிகளை விட, மற்ற யப்பானிய மாகாணங்களில் இருந்து வரும்  உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறேயுள்ளது. சென்ற பல தசாப்தங்களாக மேல்நாட்டு அமெரிக்க ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகளே பெரும்பாலும் வந்து சென்றனர். இன்று சீன, கொரிய மக்கள் பலர் இலகுவாக யப்பான் வந்து செல்லுகின்றனர். சென்ற வருடம் யப்பான் 29 மில்லியன் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை உபசரித்ததாம் .

எங்கு, என்ன பார்க்கலாம்?

ரோக்கியோ நகருக்கு வருகை தருபவர்களிற்கு, பல்வித கண்கொள்ளாக் காட்சிகள், உல்லாச நகர்ப் பகுதிகள் உண்டு. உலகில் விருந்தோம்பலில் யாப்பானியர் முதலிடம் வகிப்பர் என்று சொல்லலாம். எந்தக் கடைக்குப் போனாலும் “இராஸிமஸே” என பணிவாக யாப்பனிய மொழி வரவேற்பு கிடைக்கும். மேலும் கடையை விட்டு வெளியேறும் போது, பண்டம் வாங்கினாலும், இல்லையென்றாலும் நன்றி கூறி விடைதருவர் கடை மக்கள்.

சிஞ்சுக்கு (Shinjiku), அக்கிபா (Akiba), சுக்குஜி (Tsukiji) மீன் சந்தை, ஒமெட்டோ சாண்டோ (Ometosando), ஹாராஜுக்கு (HaraJukku), ரப்பொங்கி (Rapongi), கின்ஸா (Ginza) என பற்பல பகுதிகள் உள்ளன. இவை உல்லாச விருந்தாளிகள் விருப்புக்கள் பலவற்றையும் களிப்புடன் தீர்த்துக் கொள்ள வழி வகை செய்கின்றன.  சென் (Zen) பௌத்தம், யப்பானிய இயற்கை வழிபாட்டு சின்ரோ (Shinto) ஆத்மீக வழிபாட்டுத்தலங்கள் வேண்டுமானால் அதுவும் சந்திக்குச் சந்தி உண்டு. அல்லது நவநாகரீக கடைகளுக்கு ஷாப்பிங் போகவேண்டும் என்றாலும் அதற்கும் பலவிடங்கள் ரோக்கியோ முழுவதும் இருக்கின்றன. துரித பயணிப்பு புல்லட் ரயிலில் போகவேண்டும் என்றாலும் ரோக்கியோ ரயில் நிலயம் உண்டு, அவ்விடம் சுடச் சுட சிற்றுண்டி, அல்லது பழைமை வாய்ந்த பாரம்பரிய சமையல் கூட உருசி பார்க்கலாம், இலத்திரனியல் உல்லாசம் வேண்டுமானாலும், ஏந்திரர் வாங்கும் கடைகளும், எந்திரர் மனித வரவேற்பாளருடன் உள் நின்று தகவல் தருமிடங்களையும் பார்க்கலாம், மேலும் மங்கா வரைவுச் சித்திரக் கேளிக்கை பல்வேறு வகையிலும் சென்று பார்த்துக் குதூகலிக்க வழிவகையுண்டு

உருசிக்க உணவுகள் பல

யப்பானியரின் பிரதான பொழுதுபோக்குகளில் ஒன்று விதம் விதமாக உண்பது. பிரதானமாக நகரவாசிகள் விரும்புவது வெளியில் உண்டு களித்தலே. இதனால் யப்பான் நாட்டின் பிரபல பகுதிகள் வடக்கில் ஹொக்கைடோ (Hokkaido) மாநிலத்தில் இருந்து, தெற்கில் கியூசூ (Kyushu) வரை விதம் விதமான கடல், தாவர, வேய்கோ (Waygu) இறைச்சி உணவுகளையும், சாக்கி பானங்களையும் சுவைக்கலாம்.

ரோக்கியோவில் இந்திய மக்கள் அசோக்கா எனும் உணவகத்தில் 1960களில் இருந்து குழுமிப்பர். தற்போது பல இந்திய உணவகங்களும் வந்துவிட்டன. இலங்கையர் சிஞ்சுக்குப் பகுதியில் கோட் லோட்ஜ், மற்றும் பல உணவகங்களுக்கும் போகிறார்கள்.

2020 கோடை ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகுதல்

இந்த மாபெரும் நகரின் அருகேயுள்ளது யொயோகி தேசிய உடற்பயிற்சி அரங்கு. இது ரோக்கியோ 1964ஆம் ஆண்டு நடைபெற்ற கோடை ஒலிம்பிக் போட்டிகளிற்காக காலம் சென்ற கென்சோ ரங்கே எனும் கட்டடக்கலைஞரால் உருவாக்கப்பட்டது. அது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் 20 வருடங்களில் யப்பான் எவ்வளவு அபிவிருத்தியை அடைந்துள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஆயினும் 2020 யப்பான் உலகிலே நவீனத்தில் முதன்மை வகிக்கும் தலையாய நாடுகள் ஒன்றாகும். யப்பான் 2020 இல் ஏறத்தாழ 40 மில்லியன் வெளிநாட்டவரை எதிர் பார்க்கிறதாம்.

பழைய  ஒலிம்பிக் அரங்குத்தரை தற்போது தரைமட்டமாக்கப்பட்டு அதன் மேல் புதிய ஒலிம்பிக் அரங்கு கட்டப்படுகிறது. யப்பானிய ஒலிம்பிக் அமைப்பாளர்கள் பல சென்ற காலக்கட்டடங்களை அவற்றின் விசாலமான அமைப்புக்காரணமாக நவீனப்படுத்தி  மீண்டும் உபயோகிக்கவுள்ளனராம்.

நிப்போன் புடுக்கொன் (Nippon Budokan) யப்பானிய ஜுடோ கலைப் பீடம் மீண்டும் உபயோகிக்கப்படுமாம். நிப்போன் புடுக்கொன் பீடமானது பல்வகை தற்பாதுகாப்புப் போர்க் கலைகளையும் கற்பிக்கும் முக்கியமான ஆத்மீக இடமாகும்.

யப்பானிய மக்கள் மீண்டும் இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் பாரிய இயற்கைக் கடற்கோள் Tsunami, மற்றும் செயற்கை ஃபுக்க சீமா அணு உலை கசிவுத் தாக்கங்களிற்கும், 2018 இல் அகோர மழை, வெள்ளம், பாரிய மண்சரிவுகளிற்கும் உள்ளாயினர். ஆயினும் 1964 போன்று மீண்டும் யப்பான் எவ்வாறு தனது அபிவிருத்தி வேலைகளில் உலகிலேயே முதன்மையானது என்பதை உலகிற்கு 2020 கோடை ஒலிம்பிக் போட்டிகள் நடத்திக் காட்டவுள்ளதாம்.

ஹோட்டல்கள் பலவிதம்

ரோக்கியோ நகருக்குள்  நீண்ட தூரத்தில் இருந்து வரும் பயணிகள், பணியாளர்கள் தங்கும்  தேவைக்கேற்ப தங்கு சாவடிகள் பலஉருவாக்கப்பட்டுள்ளது.. சிறு பெட்டி (Cube Hotel) போன்ற சிறு படுக்கையறை, பொதுவான குளியல் அறை கொண்ட தங்கு சாவடி துவங்கி, யப்பானிய முறை தங்குமிடங்கள், மேல்நாட்டு பயணிகளுக்காக அடையாள ஹில்டன், மரியாட் மேலும் முற்று முழுதாக எந்திரர்களால் நடத்தப்படும் ஹோட்டல்  (Fully automated Robotic hotel) போன்ற சகல வசதிகள் கொண்ட இடங்களையும் தருகின்றது.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்காக சிறப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது ரோக்கியோ. அரசும், தனியார் ஸ்தாபனங்களும் மிகவும் மும்முரமாக இவ்வசதிகளை அமைத்து தர முனைந்துள்ளனர். புதிய தொழில்நுட்பமும், பாரம்பரிய கட்டடக் கலையம்சமும் கலந்து சீரமைப்புகள் செய்வதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனலாம்.

அதி நவீன எந்திரங்கள் மேலும் இயற்கை கல், பாறை, கூழாங்கல், தாவரம், மரம், மரப்பட்டை என இயற்கைப் பொருட்களையும் கொண்ட கட்டமைப்புக்களைக் அங்கு  விஜயம் செய்வோர் அவதானிக்கக் கூடிய ஒன்றாகும்.

நகர போக்குவரத்துச் சேவைகள்

ஒரு காலத்தில் யப்பானிய மொழியை மாத்திரமே பேசிய டாக்ஸிகள் தற்பொழுது தொழிநுட்ப துணையால்   பன்மொழியில் சிறு சம்பாசணைகள் செய்கிறார்கள். இது சென்ற கால் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்  என்றே சொல்லலாம்.

அதைவிட ரோக்கியோ நகரில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் துரித சுரங்க ரயில் சேவைகளும் உண்டு. பயணிகளுக்கு மிகவும் சுலபமான போக்குவரத்துச் சாதனம் இது. நமது அமெரிக்க, கனேடிய பஸ், ரயில் சேவைகளுடன் ஒப்பிடும் போது யப்பானியர் சேவை பன்மடங்கு எளிதானது. சாதாரணமாக ரோக்கியோவில் ரயில்கள் ஐந்து வினாடிகளிக்கு மேல் தாமதிப்பதில்லை. அந்தளவுக்கு துல்லியம்.

விமானப் போக்குவரத்து

மேலும் ரோக்கியோ விமானப் பயணங்களை விஸ்தரிக்க தற்போது பயணிகளை சீபா (Chiba) நகர நாரீட்டா விமான நிலயம் மாத்திரம் அல்லது, உள்ளுர் சேவைக்காக மாத்திரம் இருந்த ஹனேடா (Haneda) விமான நிலையத்தையும் சர்வதேச விமானச் சேவைத் தலமாகவும் மாற்றியுள்ளது. இது நிச்சயமாக 2020 இல் வரவிருக்கும் வெளிநாட்டு விருந்தாளிகளுக்கு வசதியாக அமையும்.

பருவகால மாற்றங்களில் ரோக்கியோ பல்வகை உருவகங்களையும் வழமையாக, பழமைதொற்றியும் எடுத்துக் கொள்ளும். பழமையையும் நவீனத்தையும்  கலந்து தரும் தத்துவத்தில் யப்பானியர் முன்னணியில் உள்ளனர். அவர்களின் ஆக்கப்பூர்வமான அமைப்பே ரோக்கியோ மாநகர்.

கோடை வெய்யில் உஷ்ணமாகினும் அதை இதமாக அணுக பல வகையிலும் வரவேற்று வழி செய்கிறது யப்பானிய ரோக்கியோ மாநகரம். உலக நகர்களில் உபசரிப்புக்கு உன்னதமான இடம் ரோக்கியோ மாநகர் என்பதில் ஐயமே கிடையாது.

ஒலிம்பிக் 2020 ரிக்கெட் விலைகள்

இதுவரை 2018 யூலை கடைசி வரை 50,000 ரசிகர்கள் ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட முன்னேற்பாடாக ரிக்கெட் வாங்கியுள்ளனராம்.

2020 வரவேற்பு நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கு பெற்ற ரிக்கெட் விலை 300 ஆயிரம் யென்களேயாகும்.இது ஏறத்தாழ 3000 அமெரிக்க டொலர்கள் என எடுத்துக் கொள்ளலாம்

தனித்தனி ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட 2,500 யென்களேயாகும் (25 டொலர்கள்)

பொதுவாக அனேகமான போட்டிகளுக்கு 4,000 யென் வரை தான் (40 டொலர்கள்) ரிக்கெட் விலை போகலாம்.

–    யோகி

 

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad