\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஐந்தாம் தூண்

 

மரபுசார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற அச்சு, காட்சி ஊடகங்களை அரசாங்கம் ஒருகட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறோம். பத்திரிகைகள் நடத்தும் சுய தணிக்கைகளை மீறி அரசாங்கம் மறு தணிக்கை செய்த ‘அவசர நிலை கால’ கட்டுப்பாடுகளைக் கண்டிருக்கிறோம். அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிள்களில் காணாமல் போய்விடும். அவதூறு வழக்கு, கிரிமினல் வழக்கு என்று தொடுத்து, பத்திரிக்கையாளர்களை அச்சத்தில் உறைய வைக்கும் யுக்தியையும் அரசாங்கம் கடைப்பிடித்ததுண்டு. வெளிப்படையாகக் கைது செய்ய முடியாத பட்சத்தில், பத்திரிக்கைகளின் வணிக சுழற்சியை முடக்கும் விதத்தில், விளம்பரங்களைத் தடுத்து, வருமானத்தைக் குறைத்து வீழ்ச்சியடையச் செய்யும் ‘ராஜதந்திர’ வேலைகளும் அரங்கேறியிருக்கின்றன. இதனால் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக, மாற்றத்தின் வித்துகளாக இருக்க வேண்டிய செய்தி ஊடகங்கள், ஏதோவொரு வகை அச்சுறுத்தல் காரணமாக, அடங்கிப் போய்விட்டன.

இணையத் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றதும். ‘ஸ்மார்ட் ஃபோன்’ எனப்படும் நுண்ணறி பேசி மலிந்து சாமான்யனுக்கும் சாத்தியப்பட்டு உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டதும், சமூக ஊடகம் என்ற ஒரு புதிய தளத்தை ஏற்படுத்தித் தந்தது. அதுவரையில் நுகர்வோராகச் செய்திகளைப் பார்த்தும் படித்தும் மட்டுமே வந்த பலர் அந்தச் செய்திகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் தங்களது கருத்துகளைப் பதிர்ந்தனர். அதுமட்டுமல்லாமல் சமூகம் பற்றிய தங்களது சொந்த எண்ணங்களை உரக்கச் சொல்ல இந்த ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இதன் மூலமாக ஒவ்வொரு தனி மனிதனும் செய்தியாளனாகி, சமூகத்தின் ஓர் அங்கமாக உருவெடுத்தான். சமூக ஊடகச் செயலிகள் பலவும் இலவசமாகக் கிடைப்பதும், தகவல்கள் உடனுக்குடன் கோடிக் கணக்கானோரைச் சென்றடைவதும் இதன் அபரிமித வளர்ச்சிக்குத் துணையாக நின்றது.

வலைப்பதிவுகள் (blogs), சமூக மன்றம் (forum), சமூக வலையமைப்பு / சமூக வலைப்பின்னல் (Social networking) போன்ற பலவகையான ஊடகப் பிரிவுகள் இருந்தாலும், துரிதப் பகிர்தல் வசதி கொண்ட சமூக வலைப்பின்னல் சேவைகள் பெரிதும் பிரசித்தி பெற்றன. குறிப்பாக முகநூல் (Facebook), புலனம் (Whatsapp), கீச்சகம் (Twitter), படவரி (Instagram), ஹை5 (Hi5), ஆர்குட்(Orkut), ஃபிளிக்கர் (Flickr) போன்ற சமூக வலைப்பின்னல் செயலிகள் மிகப் பிரசித்தி பெற்றவை. கடந்த பத்தாண்டுகளில் தோன்றிய இச்செயலிகள் மரபுசார் ஊடகங்களுக்குப் பலம் பெற்ற மாற்றாக உருவெடுத்தன. அதுவரையில், ஒரே திசையில் பயணித்து வந்த தகவல் பரிமாற்றம் பல திசைகளில், பல வகைகளில், பல வடிவங்களில் பயணிக்கத் துவங்கின. கருத்துச் சுதந்திரம் என்ற சிறகுகள் தொற்றிக் கொண்டுவிட எல்லைகள் ஏதுமின்றி தகவல்கள் பறந்தன. இந்தச் சுதந்திரம், எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்குத் துணை புரிகிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

மேலே சொல்லப்பட்ட வலைப்பின்னல்களில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை முகநூல் முன்னணியில் இருந்தது. ஆனால் இன்று கீச்சகம் (Twitter) இளைய தலைமுறையினர், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பாவிக்கும் செயலியாக உருவெடுத்துள்ளது. இந்த இரு செயலிகள் மூலம் உலகெங்கும் பல சமூக, அரசியல் புரட்சிகள் அரங்கேறியுள்ளன என்றால் அது மிகையில்லை.

சமூக ஊடகமும் அரசியலும்

முந்தைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2008 தேர்தலில், தனது கொள்கைச் செய்திகளை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்க்க முகநூலைப் பெரியளவில் பயன்படுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து பல நாடுகளின் அரசியல் இயக்கங்களுக்கு முகநூல் முக்கிய பங்காற்றியது. 2௦1௦ இல் துனிஷியாவிலும், 2௦11 இல் எகிப்திலும் ஏற்பட்ட புரட்சிகளுக்கும், ஜனாதிபதி மாற்றங்களுக்கும் சமூக ஊடகமே காரணமாக அமைந்தது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டானல்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலிலும் முகநூல் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற (Brexit) நடந்த ஓட்டெடுப்பில் கீச்சகத்தில் நடந்த தகவல் பரிமாற்றங்கள் வழிவகுத்தன.

2௦14 ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற தேர்தலில் சமூக ஊடகம் பெரும்பங்காற்றியது. ஏறத்தாழ 120 மில்லியன் முதல்முறை வாக்காளர்களைச் சென்றடைய சமூக ஊடகத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன அரசியல் கட்சிகள். பொதுவாக அரசியலில் அதிக ஆர்வமின்றி இருந்த நடுத்தட்டு, மேல்தட்டு இளைஞர் கூட்டத்தினருக்கு சமூக ஊடகம் அரசியலை அறிமுகம் செய்தது. அதிகச் செலவின்றி அரசியல்வாதிகள் நேரடியாக வாக்காளர்களை அணுக முடிந்தது. தங்களது கொள்கைகளை, எண்ணங்களைக் கச்சிதமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதே நேரம் வாக்காளர்களின் மன ஓட்டத்தையும் (Likes மூலம்) அவர்களால் கணிக்க முடிந்தது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ‘Reddit’ எனும் செயலியைப் பயன்படுத்தி, மக்கள் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் (Ask me anything).

வாக்காளர்களும் அரசியல்வாதிகளின் நிஜ முகங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிந்தது. அரசியலில் இருப்பவர்கள் எங்காவது கூட்டத்தில், எதிர்பாராத கேள்விகளுக்கு அசதியிலோ, எரிச்சலிலோ உதிர்க்கும் பதில்களும், செய்கைகளும் நொடிப்பொழுதில் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைகிறது. மிகச் சாமானிய, நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மனிதனும் தன்னுடைய கருத்தை அழுத்தமாகப் பதிவிட முடிகிறது. அந்த விதத்தில், சமூக ஊடகம் அரசாங்கத்தில் மக்கள் நேரிடையாகப் பங்கேற்கும் ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது என்பது உண்மை.

சமூக ஊடகமும் சமுதாயமும்

அமெரிக்காவில் பெண்களுக்கெதிரான பாலியல் தொல்லைகளை அச்சமின்றி வெளிக்கொணர்ந்த #MeToo, கறுப்பினச் சமூகத்தைப் பற்றிய பாரபட்சக் கண்ணோட்டத்தை நீக்க #BlackLivesMatter, துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கண்டிக்கும் #BoycottNRA, #NeverAgain போன்ற கீச்சகக் குறிகள் உருவாக்கப்பட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தின.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், சென்னையிலும் சுற்றுப்புற மாவட்டங்களிலும் ஏற்பட்ட புயல், வெள்ளத்தின் போது சமூக ஊடகத்தின் வீச்சும், பயனும் வெளிப்பட்டது. அரசாங்கம் ஸ்தம்பித்துப் போய்விட்ட சமயத்தில் மக்கள் தோளோடு தோள் கொடுத்து, தோழமை பாராட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருளுதவி, உழைப்புதவி செய்து மீட்புப் பணியில் இறங்கியதற்குச் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட செய்திகளும், படங்களும் முக்கியக் காரணமாயின. அதற்குப் பின்னர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த சமயத்தில், #SaveJallikattu என்ற கீச்சகக் குறி, முகநூல் பதிவுகள், புலனப் பகிர்வுகள் மூலம் சென்னை மெரீனா கடற்கரையில் 2 லட்சத்துக்கும் அதிகமாக இளைஞர்களைக் கூட்டி விசுவரூபமெடுத்தது சமூக ஊடகம். அவசர ரத்த தானம், பொருளுதவி. கல்விப் பணி போன்ற பல நலப் பணிகளுக்கும் சமூக ஊடகம் துணையாய் நிற்கிறது.

இரு முனை கூர் வாள்

சமூக ஊடகம் இரு முனைகளும் கூர் கொண்ட கத்தி போன்றது. அறுவைச் சிகிச்சை செய்வித்து ஒருவரைக் குணப்படுத்தவும் முடியும்; அதே கத்தியைக் கொண்டு அவரைக் குத்திக் கொல்லவும் முடியும். சமூக ஊடகத்தால் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடைவெளியைக் குறைத்து நாட்டை வளம்பெறச் செய்யவும், பிளவை அதிகரித்து வீழ்ச்சியுறச் செய்யவும் முடியும்.

தொழில்நுட்ப வளர்ச்சியைச் சரியான பாதையை நோக்கிப் பயன்படுத்தாவிடில் சமூகம் சீரழியும் என்பது நிதர்சனம். ‘செயற்கை அறிவுத்திறன்’ (Artificial Intelligence), ‘பொறி கற்றல்’ (Machine Learning), ‘பயனர் நடத்தை அலகிடுதல்’ (User Behavioral Analytics) போன்ற கணினிப் பிரிவுகள் இணையத்தில் ஒருவரின் செயல்பாடுகளைப் பின்பற்றி ஆய்வு செய்து, அவருக்குத் தேவையானவற்றை, அவர் விரும்பும் செய்திகளை மட்டுமே அவருக்கு அளிக்கக்கூடிய திறனைப் பெற்று வருகிறது. உதாரணமாக, ஒருவரின் இணையச் செயல்பாடுகளை வைத்து அவர் இடது சாரிக் கொள்கைப் பிடிப்புடையவரா அல்லது வலது சாரி ஆதரவாளரா என்பதை அறிந்து கொண்டு அதே கொள்கை கொண்ட குழுவினரை அறிமுகம் செய்தல், மற்றவர்களுக்கு இவரது சுயவிவரங்களைத் தருதல் போன்ற மறைமுகச் செயல்களில் ஈடுபடுகிறது. 2016 அமெரிக்கத் தேர்தலில் முகநூல் செயலி இவ்வகை நடவடிக்கைகளில் ஈடுபட்டது அண்மையில் தெரிய வந்து களேபரமானது.

அரசியல் கட்சிகள் பலவும் தங்களுக்கென ஒரு ‘தகவல் தொழில்நுட்பப் பிரிவை’ (IT Wing) உருவாக்கி, முன்னர் செய்தி ஊடகம் செய்து வந்த வேலையைச் செய்யத் துவங்கிவிட்டன. தனி நபர்களின் இணையத் தொடர்புகளைச் சேகரித்து, அலங்கரிக்கப்பட்ட தங்களது செய்நிரலை (agenda) அனுப்பி மக்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முனைகின்றனர். தங்களைப் பற்றிய நேர்மறைச் செய்திகள் இல்லாத பட்சத்தில், எதிர்க்கட்சிகளைப் பற்றி எதிர்மறைச் செய்திகளைப் பரப்பவும் இப்பிரிவினர் தயங்குவதில்லை. #Pappu, #Feku போன்ற கீச்சகக் குறிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கொள்கை வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டாமல், இவை ஒரு கட்டத்தில் தனி மனித துவேஷங்களாக மாறிவிடுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.

சில விஷயங்களில், பொதுமக்கள் செய்வதறியாது தங்களது இயலாமையை, மனக்குமுறலைச் சமூக ஊடகங்களில் கொட்டினால் அரசாங்கம் தனது பலத்தைக் காட்டி இணையத்தைத் துண்டிப்பது, கணக்குகளை முடக்குவது, ‘சமூகவிரோதி’ என்று முத்திரையிட்டு, கைதுகளில் ஈடுபடுவது எனும் எதேச்சாதிகாரத்தால் சமூக ஊடகத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது.

முன்பெல்லாம் அச்சு ஊடகங்களில் கிசுகிசு என்ற பெயரில், ஊர்ஜிக்கப்படாத, யூகிக்கப்பட்ட விஷயங்கள் வெளிவரும். இவை பெரும்பாலும் சினிமா, அரசியல் துறையைச் சார்ந்தவையாக இருக்கும். இன்றைய தேதியில் இது போன்ற நிருபணமாகாத தகவல்கள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அரதப் பழசான, 15 பைஸா போஸ்ட் கார்டில் ஏதோவொரு கடவுளின் பெருமைகளை எழுதி, அதைக் குறைந்தது 1௦ நபர்களுடன் பகிராவிட்டால் துன்பங்கள் விரட்டும் என்று அச்சுறுத்திய விஷயங்கள் கூட இன்று அப்படியே ‘டிஜிட்டல்’ வடிவமெடுத்துவிட்டன. அன்று கழிவறைகளில் சித்திரமெழுதி இழிவுப்படுத்திய வக்கிர உணர்வு இன்று முகநூலிலும், புலனத்திலும் ‘ஃபோட்டா ஷாப்’ செய்யப்பட்ட புகைப்படங்களாக உழன்று வருகின்றன. ஜெயலலிதா, சோ ராமஸ்வாமி, கருணாநிதி தொடங்கி, சில்வஸ்டர்ஸ்டாலோன், ஜாக்கி சான், கவுண்டமணி, ரோவான் அட்கின்சன் (மிஸ்டர். பீன்) போன்றோர் பலமுறை இறந்துள்ளனர். சமூகவெளிகளில் பகிரப்படும் சில தனிமனித, விருப்பு வெறுப்புகளும், அந்தரங்கத் தகவல்களும், புகைப்படங்களும் ‘சைபர் புல்லியிங்’ எனும் இணைய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிச் சம்பந்தப்பட்டோர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் சமூக ஊடக அவலங்களில் அடக்கம். அண்மைக் காலத்தில் ஏராளமான ‘இயற்கை மருத்துவர்கள்’ தங்களது அரிய ஆய்வு முடிவுகளைச் சமூக ஊடகங்களில் இலவசமாகப் பகிரத் துவங்கியுள்ளனர். ஏழே நாட்களில் சிகப்பழகு என்ற கார்ப்பரேட் வர்த்தகப் பொய்களுக்கு ஈடாக ஏழே நாட்களில் நீரிழிவு நோய்க்குத் தீர்வு, மூன்றே மாதங்களில் எய்ட்ஸ் நோயை விரட்டிடலாம் எனும் இலவச சிகிச்சை முறைகள், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் எழுதிய ஓலைச் சுவடிகள் போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் சூறாவளியாகச் சுழன்று வருகின்றன. முறையாகப் பயிற்சி பெறாதவர்களின் ‘இயற்கை முறையில் சுகப் பிரசவம்’ எனும் அபாயகரமான பிரச்சாரங்களும், காணொளிகளும் கர்ப்பிணிப் பெண்களின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. வட இந்தியப் பகுதிகளிலிருந்து குழந்தைகளைக் கடத்தும் கும்பல் தென்னிந்தியாவுக்குள் நுழைந்து விட்டதாக வந்த தகவலின் பேரில் அப்பாவி மக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

அரசியல், திரைப்படப் பிரபலங்களின் நடவடிக்கைகளை, பேச்சுகளைக் கிண்டலடிக்கும் ‘மீம்ஸ்’ கேலிப் பட உத்தி அதிகளவில் பிரசித்தி பெற்று வருகிறது. நையாண்டி என்பதைக் கடந்து, தனி மனிதத் தோற்றங்களை வைத்துக் கிண்டலடிக்கும் கேவலங்களும் சமூக ஊடகத்தின் ஒரு முகம்.

இன்னொரு பக்கம் ராஜ ராஜ சோழனது சிலைக்கும், காவிரி நீர் வரத்துக்குமிடையே உள்ள மர்மம், பூசணிக் காய்க்குள் இருக்கும் விதைகளை வெட்டாமலே அறியும் கணக்கு போன்றவை ‘உண்மையான தமிழனாக இருந்தால் இதைப் பகிரவும்’ என்ற எச்சரிக்கையோடு புலனத்தில் வலம் வருவதுண்டு. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது குரலெழுப்பிய ஒரு பெண்ணை ‘வீரத் தமிழச்சி’ என்று அவசர அவசரமாக உணர்ச்சி மிகுந்து பாராட்டி விட்டு, பின்னர் வேறொரு சமயத்தில் அவரையே ‘சுயநலவாதி’, ‘ஏமாற்றுக்காரி’, ‘போலி’ என்று வசைபாடிய நிகழ்வுகளும் நடந்தேறின.

சமூக ஊடகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொரு  துறை, சினிமா. முதல் நாள், முதல் காட்சியைப் பார்க்கும் ஒருவர், தியேட்டரிலிருந்து நேரடி வர்ணனை தருவது சினிமாவுலகைப் பெரிதும் பாதித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

சமுதாயத்தில் அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு தொழில்நுட்பமும் வரவேற்பையும், எதிர்ப்பையும் பெறுவதுண்டு. சமூக ஊடகமும் அதற்கு விதிவிலக்கல்ல. சமூக ஊடகம் சாமான்ய மனிதனின் வலிமையைக் காண்பிக்க வரப்பிரசாதமாக அமைந்த ஒரு ஆயுதம். ஆனால் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் வழிமுறை கைந்நூல் வழங்கப்படாதலால் பலர் அதைக் கண்டபடி சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கையாளும் வித்தையை அறிந்து கொள்ளவும் முனைவதில்லை. இந்நிலை நீடித்தால் மரபு ஊடகங்களுக்கு ஏற்பட்டதைப் போல அரசாங்கம், பெரு நிறுவனங்கள் சமூக ஊடகத்தைக் கபளீகரம் செய்துவிடும்.

சமீப காலங்களில் முரண்பட்ட பதிவுகளால் ஏற்பட்ட சலசலப்பைக் கட்டுப்படுத்த ‘ஃபார்வர்டு’ செய்யப்படும் தகவல்கள் ‘ஃபார்வர்டட்’ என்ற லேபிளுடன் வரத் துவங்கியுள்ளது. ஒரு செய்தியை இத்தனை பேருக்குத்தான் ‘ஃபார்வர்டு’ செய்ய முடியும் என்று எழுதப்படாத விதி அமைக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் 13 கோடிக்கு மேற்பட்டோர் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். முகநூலில் வெளியிடப்பட்ட தகவல்களைப் பின்னர் நீக்குவதில் இந்தியர்கள் முதலில் உள்ளனர். சில குறிப்பிட்ட கட்சிகளை, அமைப்புகளை விமரிசிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம். தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன; இணையம் துண்டிக்கப்படுகிறது; இந்தியப் பொதுத் தேர்தல் வரவுள்ள நேரத்தில் இன்னும் கூடுதலான கெடுபிடிகள் அமலுக்கு வரக்கூடும்.

சமூக ஊடகவியலாளர்கள் இதனை உணர்ந்து, அதிகப் பொறுப்புடன் செயலாற்றுவது அரசாங்கத்தின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி, ஊடகச் சுதந்திரத்தை நிலை நிறுத்தக்கூடும். கேலி, கிண்டலுக்காகவும், காலை, மாலை வணக்கம் சொல்லும் வாய்ப்புக்காகவும் மட்டுமே சமூக ஊடகத்தைப் பயன்படுத்தாமல் இந்தத் தகவல்கள் வலுவான சமுதாயத்துக்கு வழிகோலும் என்ற புரிதலோடு பயன்படுத்துவது நல்லது. சமூக ஊடகம் சமுதாய உண்மைகளைப் பதிவிடவில்லையெனில், அது மேலுமொரு பொழுதுபோக்குக் கருவியாக, விளையாட்டு நுகர்பொருளாகவே முடிந்து விடும்.

ஐந்தாம் தூணாக மாறச் சமூக ஊடகம் பெரும் மாற்றங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

– ரவிக்குமார்.

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad