\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஜெய்ஹிந்த்

னா..”

“ம்ம்.. சொல்லு ..”

“அப்பா போய்ட்டாரு..” சின்னதாக விசும்பினாள் பூனம்.

“.. எப்போ…”..

“இப்போதான் மூணு நிமிஷம் இருக்கும் ..”

“அம்மா எப்படியிருக்காங்க..”

“அழுதுட்டே இருக்காங்க… ஒரு நிமிஷம் .. டாக்டர் கூப்பிடறாராம்… முரளி கிட்ட தரேன் .. பேசு..”

“ஹலோ.. ஜனா? ஏ சாரிடா ..எவ்ளோ ட்ரை பண்ணோம்.. ஒன்னும் முடியாதுன்னுட்டாங்க.. சிவியர் நிமோனியா..”

“சந்தோஷ் எங்க இருக்காரு இப்போ.. “

“அவருக்கு இன்னும் உதாம்பூர் டிப்ளாய்மென்ட் முடியல.. காலைல கூடப் பூனம் பேசிக்கிட்டிருந்தா .. வராரான்னுத் தெரியல .. நீ வருவேல்ல .. ”

“யா .. வரேன்.. எமெர்ஜென்சி லீவ் கேக்கணும்..”

“டிக்கெட் கிடைக்குமா..”

“அது பாத்துக்கலாம்.. சென்னை வந்ததும் ஃபோன் பண்றேன்..”

**

டார்பாவில் கேட்டு, அவர்கள் இந்திய ராணுவத்தின் ஒப்புதலுடன் எமெர்ஜென்சி லீவுக்கு அப்ருவல் வாங்குவதற்குள் நான்கைந்து மணி நேரம் ஓடிவிட்டது. ட்ரெயினிங் பேஸில் இருந்து ரிச்மன்ட் வர மேலும் சில மணி நேரங்கள். ஒரு வழியாக ஃப்ளைட் கிளம்பச் சில நொடிகள் இருந்தபோது கடைசி ஆளாக ஓடிச் சென்று ஏறினான் ஜனா. சீட்டைத் தேடி அமர்ந்தவுடனே ஃபிளைட் நகரத் தொடங்கியது. நீண்ட பெருமூச்சு விட்டான்.

“ஐ நோ .. பெரிய ரிலீஃபா இருக்கும்ல ..நானும் நெறையத் தடவ அப்படித்தான் .. லாஸ்ட் செகண்ட்ல ஏறியிருக்கேன்.. பை த வே .. நான் அமர் ..” கையைநீட்டிச் சிரித்தான் பக்கத்திலிருந்தவன்.

“ஹலோ … நான் ஜனார்தன் யாதவ்”

“ஓ.. யாதவ்ங்கிறீங்க நல்லா தமிழ் பேசறீங்க?”

“மிலிடரி ஃபேமிலி.. தமிழ்நாட்ல வளர்ந்தேன்..”

“அப்படியா .. வெர்ஜினியால தான் இருக்கீங்களா இப்ப..”

“இல்ல .. இங்க ஒரு ட்ரெயினிங்காக வந்தேன்”

“ஐ.டி. ல இருக்கீங்களா..”

“இல்ல .. இண்டியன் ஆர்மில இருக்கேன்.. “

“ஓ.. வெரி குட்… காம்பாட் ட்ரெயினிங்கா.. “

“நான்-காம்பாட் .. டிஃபன்ஸ் அட்வான்ட்ஸ்ட் ரிசர்ச் ப்ராஜக்ட் ஏஜென்சில.. டார்பான்னு சொல்லுவாங்க.. நானோடெக் ட்ரைனிங்காக வந்திருந்தேன்..”

“கேள்விப்பட்டதில்ல .. நியுக்ளியர் மாதிரி சமாச்சாரமா?.”

“இல்ல இது ப்யூச்சர் டெக்னாலஜி … டிபன்ஸ் பாடி ஆர்மர், ரோபாடிக் சோல்ஜர்ஸ் .. அந்த மாதிரி..”

“வாவ்… பெரிசா ஏதேதோ சொல்றீங்க.. நான் மிலிடரின்னா துப்பாக்கிச் சுடறதுன்னு தான் நெனச்சுகிட்டிருந்தேன்.. நீங்க சாப்ட் சைட்ல இருக்கீங்கபோல ..”

“அப்படியெல்லாம் இல்ல .. நானும் துப்பாக்கி பிடிச்சுக்கிட்டு பார்டர்ல இருந்தவன் தான் .. ஒரு காம்பாட்ல எதிரியோட புல்லட் கண்ல பாஞ்சுடுச்சு.. ஐ பிகேம் ப்ளைண்ட் ஆன் மை லெஃப்ட் ஐ.. ஒத்தக் கண்ணை வெச்சுகிட்டு காம்பாட்ல இருக்க முடியாது…ஃபிசிக்ஸ் படிச்சிருந்ததால  நான்-காம்பாட் ஏ.இ.சி.க்கு மாத்தி விட்டுட்டாங்க”

“ச்சச்சோ .. வெரி சாரி .. இப்பவும் லெப்ட் சைட் பார்வையில்லையா உங்களுக்கு”

“ஆமாம் .. இப்பவும் ஒரு கண்ணுல தான் பாக்க முடியும்”

“சர்ஜரி கிர்ஜரி ட்ரை பண்ணலாமே..”

“மிலிடரி ஹாஸ்பிடல்ல அவ்வளவு தான் பண்ண முடியும்.. ரெண்டாவது கண்ணுலேயும் புல்லட் பார்டிக்ல்ஸ் இருந்தது… ஆனா எப்படியோ பெரியடேமேஜ் இல்லாம ரிமூவ் பண்ணிட்டாங்க”

“ஓ மேன்.. ஒரு கண்ணுல மட்டும் பாக்கணும்னா கஷ்டந்தான் .. இப்ப ட்ரெயினிங் முடிஞ்சுதா .. இல்ல வெகேஷன்ல போறீங்களா?”

“ஒரு ஃபேமிலி எமெர்ஜென்சி .. லீவுல போயிட்டிருக்கேன்…”

“வெரி சாரி அகெயின்.. நான் வேற உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேயிருக்கேன்.. யு ரிலாக்ஸ் ஃபார் சம்டைம். ஹோப் எவ்ரிதிங் கெட்ஸ் வெல்..”

“தேங்க் யூ..”

சீட் பெல்ட்டை தளர்த்திக்கொண்டு பின்னுக்குச் சாய்ந்து கண்களை மூடினான் ஜனா. என்ன நல்லது நடந்து விட முடியும்? எல்லாம் சரியாகி விடுமென்ற நம்பிக்கையில் 19 வருடங்கள் ஓடியது தான் மிச்சம்.

**

கிரிதாரி யாதவ்.. ஜனாவின் அப்பா பெயர் அதுதான். சமஸ்கிருதத்தில் மலையைத் தூக்கிப் பிடித்துக் காப்பவர் என்று பொருளாம். பெயர்க்காரணம் புரிந்து தான் அந்தப் பெயர் வைத்தார்களா என்று தெரியாது, ஆனால் முயன்றிருக்கிறார். ஒரு சிப்பாயாக இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர். படிப்படியாக லான்ஸ் டஃபேதார் பதவிக்கு உயர்ந்தவர். மனைவி நவ்ரீத்; ஜனா, பூனம் என்று பிள்ளைகள். ரூர்கியில் இருந்தது குடும்பம்.  அப்பாவும் அம்மாவும் பெரிதாகப் படித்தவர்கள் இல்லை. ஆனால் ராணுவ ஒழுக்கத்துக்குப் பழகியவர்கள்; கடுமையான உழைப்பாளிகள்.

ஜனாவின் அப்பா வழித் தாத்தா, வீர்பால் யாதவ் – இரண்டாம் உலகப் போருக்கு, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திலிருந்து அனுப்பப்பட்டவர். கொரில்லா ரெஜிமெண்டில் சுபேதார். காவல்ரி பிரிவு என்பதால் பல போர்க் களங்களைப் பார்த்திருந்திருக்கிறார்; இர்ராவாடி டிப்ளாய்மெண்டுக்காக நடந்தே பர்மிய எல்லைக்குச் சென்றவர், ஜப்பானியர்களின் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகிக் கால்களை இழந்து, வண்டியில் திரும்ப வந்தார். கட்டைக் கால்களில் ஜனாவையும், பூனமையும் போட்டுக்கொண்டு அவர் சொன்ன கதைகளைக் கேட்பதில் ஜனாவுக்குத் தனிச் சுகம்.

அம்மா வழித் தாத்தா தேவேந்திர சிங் ஏர்ஃபோர்ஸ்காரர். 1960களில் சீனப் போர்களில் ஸ்குவாட்ரன் லீடராக இருந்தவர். போர் விமானங்கள் அப்படி அத்துப்படி அவருக்கு.. எம்.ஐ.ஜி.களின் ஸ்குரு. போல்ட் அளவுகளைக் கூட விரல் நுனியில் வைத்திருப்பார். அவர் தான் ஜனாவை ஃபிஸிக்ஸ் படிக்க ஊக்குவித்தவர். அந்தக் குடும்பத்தில் போர்க்களம் சென்று உருப்படியாகத் திரும்பி வந்த ஒரே நபர் அவர்தான் எனலாம். ஆனால் சதா விமான இரைச்சலில் இருந்த  காரணமாகக் கேட்புத்திறன் தான் போய்விட்டிருந்தது.

இப்படி, ஜனாவின் குடும்பம் முழுதும் ராணுவ ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. கல்யாணம், சீமந்தம் என்று குடும்ப விழாக்கள் வந்தால் போதும். ‘என் வீட்டுக்காரர் அங்கே டிப்ளாய் ஆகியிருக்கிறார்’, ‘அப்பாவுக்கு அவார்ட் அனௌன்ஸ் பண்ணியிருக்காங்க’, ‘அண்ணா லீவில் வருகிறார்.. பெண் பார்க்க வேண்டும்’,‘தம்பி நேவியில் செலக்ட் ஆகியிருக்கிறான்’ என்று அனைத்துப் பக்கமும் ராணுவ பேச்சாயிருக்கும். ஜனாவுக்கு இதெல்லாம்  பிடித்திருந்தது தான்…1999 வரை.

**

1999ல்,  ஏற்கனவே இன்ஃபன்ட்ரி பயிற்சியில் தேர்ந்திருந்த கிரிதாரி, ‘கிரேனேடியர்ஸ்’ பிரிவுக்கு மாற்றப்பட்டு டைகர் ஹில்ஸ் தளவமைப்புக்காக, கார்கிலுக்கு அனுப்பப்பட்டார். போர்ச்சூழல் எதுவும் அப்போது உருவாகியிருக்கவில்லை. டைகர் ஹில்ஸ் இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உயர்ந்தமலைப்பகுதி. அந்த மலையுச்சிக்குச் சென்று விட்டால் மற்ற நாட்டின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்க்க முடியும். குறிப்பாக, லடாக்கில்அமைந்திருந்த 56ஆம் பிரிகேட் ராணுவத் தளவாடத்தைத் தெள்ளத் தெளிவாகக் கண்காணிக்கலாம். புலனாய்வில், எதிரிகளின் நடமாட்டம்அதிகரித்திருப்பதாகத் தகவல் வந்ததால் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட அனுப்பப்பட்ட குழுவில் கிரிதாரியும் ஒருவர். அரசு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சடாரென அதிரடியில் இறங்கியது எதிரி நாட்டு ராணுவம். இந்திய ராணுவம் சுதாரிப்பதற்குள், மலை ஏறத்தாழ அவர்களின் பிடியில். அந்த நேரத்தில், பாதுகாப்புத் தாக்குதலில் ஈடுபட அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது தான்‘ஆபரேஷன் விஜய்’.

‘கிரேனேடியர்ஸ் பட்டாலியன்’ நான்கைந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கிரிதாரியும், அவரது நண்பரான பிரிகேடியர் மொகமது உஸ்மானும் ‘சார்லி’ எனும் குழுப்பெயரில் இயங்கினார்கள். மலையில், 16,000 அடி உயரமான செங்குத்துப் பாறையில், எதிரிகள் அமைத்திருந்த வியூகப் பதுங்குக் குழிகளை அழிப்பது அவர்களுக்கு தான்  அளிக்கப்பட்ட பணி. ஜூலை மாதம் என்றாலும் பனி மிகுந்திருந்த காலம். இரவு நேரங்களில்,உச்சியிலிருந்து தொங்கவிடப்பட்ட கயிறுகளைப் பிடித்துத் தான் அவர்கள் ஏறவேண்டும். இவர்கள் ஏறி வருவதை எப்படியோ உணர்ந்த எதிரிகள் ‘ராக்கெட் லான்ச்சரை’ பிரயோகிக்க, பாறைகள் வெடித்து அப்பாவின் தோளிலும், உஸ்மானின் முதுகிலும் பலத்த காயம். அதனைப் பொருட்படுத்தாது குன்றில் ஏறி முதலில் தென்பட்ட பதுங்குக் குழியை நோக்கி கிரனேட் வெடிகுண்டை வீசினார் கிரிதாரி. அது ஏற்படுத்திய சத்தத்தாலும் ஒளி வெள்ளத்தாலும் எதிரி முகாம் இருக்குமிடத்தை அறிந்த இந்திய ராணுவம் துணைக்கு விரைந்தது. அதற்குள் உஸ்மான் இரண்டாவது பதுங்குக் குழியிலும் கிரேனேட் வீச, அவர்கள் இருவர் மீதும் மிக மூர்க்கமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர் எதிரிகள். ஏற்கனவே காயப்பட்டிருந்த  இருவரையும் நெருங்கி நேருக்கு நேர் சுட்டுத் தள்ளினர்.

**

ம்முவில் இருந்த சத்வாரி ஹாஸ்பிடலில் தான் கிரிதாரியையும், உஸ்மானையும் சேர்த்திருந்தனர். அங்குதான் வீரம் என்பதைத் தாண்டியராணுவ யதார்த்தத்தைப் பார்த்தான் ஜனா. உடல் சிதைந்து, கைகால் உடைந்து தொங்கியபடி, ரத்தம் தோய்ந்த கட்டுகளுடன் எத்தனை எத்தனை வீரர்கள்? அழுது தீர்த்து, எதிர்காலம் புரியாது, பிஞ்சுக் குழந்தைகளைத் தோளில் போட்டுக் கொண்டு வெளிறிய கண்களோடு எத்தனை பெண்கள்? தன் பிள்ளை எதிரிகளை அழித்த வீரன் என்ற பெருமிதம், அவர் படும் துன்பங்களைக் காணப் பொறுக்காது உள்ளுக்குள் அழுகை என  முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு நடமாடிய பெற்றோர்கள் எத்தனை பேர்? ஜனாவின் அம்மா முகமும் அப்படி இறுக்கமாகத்தான்இருந்தது.

ஜனாவின் அப்பாவுக்கு முகம் முழுதும் கட்டுப் போட்டிருந்தார்கள்; தோளின் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு பெரும் கட்டுகள். மிக அருகிலிருந்து சுட்டதால துப்பாக்கிக் குண்டு கீழ்த் தாடை வழியே சென்று, மூளையைப் பாதித்திருப்பதாகச் சொன்னார்கள். தோளிலிருந்த பாறைச் சில்லுகளையும், குண்டுத்துகள்களையும் அகற்றியிருந்தார்கள்.

மார்பு, இடுப்பு, விதைப்பை எனப் பல இடங்களிலும் குண்டடிப்பட்ட உஸ்மான் மூன்று நாட்களில் இறந்து போனார்.

கிரிதாரியின்  உயிருக்கு ஆபத்தில்லை என்ற கட்டம் வந்தது. அவருக்கு  ‘யுத் சேவா’ அவார்ட் கொடுத்தார்கள். நான்கைந்து மாதங்களில் ரூர்கிக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நாட்கள் இடைவெளி விட்டு விட்டு, கட்டுகளைப் பிரித்தனர். ஆனால் அவர் நகரவேயில்லை. மூளையில் பாய்ந்த குண்டு,உடலியக்க நரம்புகளைப் பாதித்து விட்டதாகச் சொன்னார்கள். முக்கியமாக ‘ஸ்பைனல் கார்டு’ முற்றிலும் செயலிழந்து விட்டது. கீழ் தாடை உருச்சிதைந்து போய்விட்டது. கை, கால், உடல் அசைவு எதுவும் கிடையாது. பேச முடியாது. கண்கள் மட்டும் திறக்கும். எப்போதாவது லேசாகக்கண்ணீர் வடியும். விழி அசைவு இருக்கும்.

பூனமிற்கு அப்போது ஆறு வயதிருக்கும். ‘மம்மி .. பப்பா எப்போ பேசுவாங்க? நாம கார் வாங்குவோமா’ என்று சம்பந்தமில்லாமல் கேட்பாள். வகுப்பில்வரைந்த பூனைக்குட்டியை அப்பாவின் முகத்தருகே காண்பித்து ‘நல்லாருக்கா .. இந்தப் பூனைக்கு டாமின்னு பேரு வைக்கலாமா?’ என்று கேட்பாள்.

நவ்ரீத் பெரிதாக அழுது யாரும் பார்த்ததில்லை. இனி ஒன்றும் முடியாது என்றான பின்பு கிரிதாரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். சூரிய வெளிச்சம்பட்டால் நல்லது, சுற்றுப்புற சத்தம் கேட்டால் நல்லது என்று அவரவர் சொன்ன அறிவுரைகளை விலக்காமல், அவரின் கட்டிலை வெராந்தாவுக்கும்,பெட்ரூமுக்கும் சலிக்காமல் தள்ளித் தள்ளி வைப்பாள் நவ்ரீத். மிலிடரி பென்ஷன் போதாமல் போனபோது, ட்யூஷன் எடுக்கத் துவங்கினாள்; கைவினைப்பொருட்கள் செய்தாள்.

நவ்ரீத்தின் தம்பி ஒருவர், தமிழ்நாட்டில் ஊட்டியில். வெலிங்டன் மிலிடரி ஸ்கூலில் அவளுக்கு  வேலை ஏற்பாடு செய்து தந்தார். மலைப்பகுதி, இயற்கைச் சூழல் ஏதாவது மாற்றம் தரும் என்பதாலும், குடும்பத்தை ஓட்ட டீச்சர் வேலை உதவும் என்பதாலும் ஜனாவின் குடும்பம் தமிழ்நாட்டுக்கு வந்தது.

ப்ளஸ்-டூ தேர்வில் ஜனாவுக்கு நல்ல மதிப்பெண் கிடைத்தது. ‘ராணுவம் எல்லாம் போதும், ஜனாவை ஐ.டி. படிக்க வை’ என்று பலர் சொன்ன போதும் அவள்  கேட்கவில்லை. ‘மிலிடரி வாழ்க்கை ஈசியில்லை.. மிக மிகக் கடுமையானது தான்.. துன்பமானது தான்.. அதையெல்லாம் தாண்டி மிகஉன்னதமானதுப்பா இந்த வாழ்க்கை .. உங்கப்பாவுக்கு ஒவ்வொரு நாளும் யூனிபார்ம் எடுத்து வைக்கும் போது ஒரு பெருமையிருக்கும்.. தினமும்அதைப் போட்டுக்கிறதில தனிக் கர்வம் இருக்குன்னு சொல்லுவாரு உங்கப்பா.. நாட்டோட பாதுகாப்புக்கு தன்னோட உழைப்பு எதாவது ஒருவகையில உதவி செய்யணும்னு , செய்யும்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.. வேலைல இருந்தப்ப தன்னைச் சைலண்ட் சோல்ஜர்னு சொல்லிக்குவாரு..இப்ப சைலண்ட் மேனா ஆயிட்டாலும், அவர் செஞ்ச காரியம் பலரால பேசப்படும்; அதனோட பலனை தான் நாமளும், நம்மைப்போலப் பலரும்அனுபவிச்சிகிட்டு இருக்கோம்..’ என்று ஜனாவிடம் சொல்வாள்.

மிலிடரியில் சேர்ந்து; தொலைதூரக் கல்வி முறையில் பி.எஸ்.ஸி. ஃபிசிக்ஸ் படித்தான் ஜனா. 2015ல் பூனத்துக்குக் கல்யாணம் ஏற்பாடானது. அவளதுகணவர் சந்தோஷ் கூட மிலிடரி லெஃப்டினண்ட். நவ்ரீத் தான் பார்த்து வைத்தாள். அவர் பல ஊர்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்ததால் பூனம்  பெரும்பாலான நாட்கள் தன் அம்மாவுடன் தான் இருந்தாள்.

எம்.எஸ்.ஸி.யும் முடித்த பிறகு, மூன்றாண்டுகளுக்கு முன்பு, கோர்க்கா ரைஃபிள்ஸ் பிரிவில், ஸ்ரீநகர் டெலிகாம் பாதுகாப்பில் அமர்த்தப்பட்டான் ஜனா. ஒரு சமயம், ஈஸ்ட் விங் பிரிவில், போராளிகள் சிலர் நுழைந்து அங்கிருந்த பணியாளர்களைப் பணயக் கைதிகளாக்கி ராணுவத் தகவல்களைக் கைப்பற்ற முனைந்தனர். அங்கு ஏற்பட்ட தாக்குதலில், முகத்தை உரசிச் சென்ற குண்டின் துகள்கள் இடது கண்ணில் பாய்ந்து விழித்திரையைக் கிழித்துவிட்டது. அதனால் நேரடி போர்முனை செயல்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, ராணுவத் தளவாட ஆராய்ச்சிப் பணியில்சேர்க்கப்பட்டான். அதன் ஒரு பகுதி தான் டார்பா பயிற்சி.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா கிளம்புகையில் வெலிங்டன் சென்று வந்தான் ஜனா. கிரிதாரியின்  நிலையை ‘வெஜிடடிவ் ஸ்டேடஸ்’ என்றார்கள். ஒரு சிலர் ‘கோமா’ என்றார்கள். நவ்ரீத் மட்டும் ‘எப்போதும் போல அவர் ‘சைலண்டாக’ இருக்கிறார்’ என்றார். அவரின் முடிவு தெரிந்தது தான்,ஆனால் இந்தச் சமயத்தில்.. பூனம் பிரக்னண்டாக இருக்கிறாள். குடும்பத்தின் புது வரவை எதிர்நோக்கி சின்னதாகச் சந்தோஷப்பட்ட நவ்ரீத்தை , இந்தப் பிரிவின் வலி பெரிதாகத் தாக்கியிருந்தது.

**

சென்னை வந்துவிட்டிருந்தான் ஜனா. முரளியின் தம்பி புக் செய்து வைத்திருந்த டிக்கெட்டைப் வாங்கிக்கொண்டு நீலகிரி எக்ஸ்பிரசைப் பிடிக்கஓடினான். கையில் இழுத்துக்கொண்டு வந்த பெட்டி இடறி விட அதை நிமிர்த்திக்கொண்டு ஓட முற்பட்டபோது எதிரே வந்த சிலர் மீது இடித்துவிட்டான்.

“சாரி பாஸ் .. கவனிக்கல..”

தோளைக் குலுக்கிச் சட்டையைச் சரி செய்துகொண்ட ஒருவன் “சாரியா .. நாலு பேரு வந்துகிட்டு இருக்கோம் மாடு மாதிரி டமார்னு வந்து மோதிட்டு

..சாரின்றே.. உங்கப்பா கட்டின ஸ்டேஷன் இல்ல சகோ இது … பாத்துப் போ… ஆமா நில்லு .. இங்க வா.. இன்னிக்கு என்னா நாளு தெரிமா?’

“தெரில பாஸ்.. நான் ஊர்லேருந்து கிளம்பி ஒன்னரை நாளாச்சு.. ட்ரெயின் புடிக்கணும்”

“தோ பார்றா.. ஹலோ மிஸ்டர், இன்னிக்கு ஆகஸ்ட் 15.. இண்டியன் இண்டிபெண்டன்ஸ் டே.. இன்னிக்குக் கூட அமெரிக்கன் ஃப்ளாக் போட்ட டீ-ஷர்ட்தான் போட்ணுமா.. பாட்ரியாடிசமே இல்லையா உங்களுக்கு ..”

“ஐ.டி. பையனா இருப்பான்.. அதான் அமேரிக்கா கொடி புடிக்கிறான்..” சம்பந்தமேயில்லாமல் பக்கத்தில் நின்று வேடிக்கைப் பார்த்தவர் சொன்னார்

.. “சூப்பரா வளத்துகிறாங்கோ .. குடும்பத்துக்கு ஒண்ணு இப்பிடி திரிது”

“நாங்களும் ஐ.டி. தான் .. பொதுவா அப்படிச் சொல்லிடாதீங்க..” என்று வக்காலத்து வாங்கியவன் .. “டேய் ரவி உன்கிட்ட எதுனா ஸ்பேர் சர்ட் இருக்கா ..”

“ட்ரெயின் புடிக்கணும் … நேரமாச்சு …”.

“எல்லாம் புடிக்கலாம் புடிக்கலாம்.. போட்டுக்கிட்டு இருக்கிறத கழட்டிட்டு இந்தா இதைப் போட்டுக்கோ.. சகாரா இந்தியா கிரிக்கெட் ஜெர்சி ..”

அணிந்திருந்த டீ ஷர்டைக் கழற்றினான் ஜனா..

“ஒடம்பக் கட்டுமஸ்தா, ஃபிட்டா தான் வெச்சிகினு இருக்க .. அட .. ஹிந்திகாரனா நீ.. மார்ல ஹிந்தில டாட்டூ போட்டுருக்கிறே .. என்னது அது..”

“அவங்காளு பேரா இருக்கும் .. அதெல்லாம் எதுக்கு நமக்குக் கொடியைக் குத்தி விடு .. பாவம் போயி ட்ரெயினைப் புடிக்கட்டும்” கூட வந்தவன்சொன்னான்/

“கரெக்ட் தான் .. சகோ இந்தா கொடி.. ஷர்ட்ல குத்திக்கோ.. செவப்பு கலர் மேல இருக்கற மாதிரி குத்து .. தலைகீழ குத்திட போற.. ஓகேவா.. ஓடு.. ஓடிப்போய் ட்ரெயினைப் புடி.. கொஞ்சம் பாட்ரியாட்டிக்கா இரு சகோ .. ஓகேவா… ஜெய்ஹிந்த்”

மார்பைத் தடவி கொண்டான் ஜனா. ஏழு வயதிருக்கும் போது டெல்லிக்குச் சுற்றுலா போயிருந்த போது இந்தியன் வார் மெமோரியல் பூங்காவில்,அப்பாவின் கட்டாயத்தால், அவன் கதறக் கதற, ஹிந்தியில் பச்சைக் குத்தப்பட்ட அந்த எழுத்துகள் – “ஜெய்ஹிந்த்”.

– மர்மயோகி

 

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad