\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்த் திரையுலகில் காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்த கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது பிறந்த தினத்தையொட்டி பனிப்பூக்கள் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்து, ரசித்த சில நண்பர்கள் கண்ணதாசன், விஸ்வநாதன்ராமமூர்த்தி கூட்டணியில் வந்த, சுவாரசியமான  பாடல்களைப் பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்கள். இக்கூட்டணியில் உருவான பெரும்பாலான பாடல்கள் தனித்துவமானவை என்றாலும் கூட சில பாடல்களில் ஒளிந்திருக்கும் நுட்பம் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு. அவற்றில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

பொதுவாக காதல் பாடல்களில், குறிப்பாக அறுபதுகளில் வெளிவந்த காதல் பாடல்களில் இயற்கை வருணிப்பு மிகுந்திருக்கும்.  அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் பாட்டு.

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்  (காலங்களில் அவள் வசந்தம்)

இயற்கையின் பல அம்சங்களைக் குறிப்பிட்டு அவற்றில் சிறந்தவையோடு தனது காதலியை ஒப்பிட்டு பாடும் கலாரசிகனின் அழகான வரிகள் அவை.

ஒருவரை ஒருவர்   எப்படி வருணிப்பது என்று புரியாமல் தவிக்கும் காதலன் காதலியைப் பாருங்கள்.

பொன் என்பேன் சிறு பூவென்பேன்

காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்

என்னென்பேன் கலை ஏடென்பேன்

கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்.

காதலியைப் பார்த்து, நீ தான் என் கண் என்கிறான் காதலன்பார்வை இல்லாத கண்ணுக்கு மதிப்பில்லை. கண்ணாகிய எனக்கு நீ தான் பார்வை. நீயின்றி எனக்கு வாழ்வில்லை என்கிறாள் காதலி.

அவ்வப்போது, கதை மற்றும் கதாபாத்திரங்களைப் பொறுத்து, வருணிப்பைக்  கடந்து உள்ளத்தைப்  போற்றும் பக்குவப்பட்ட காதல் பாடல்களும் வந்ததும் உண்டு.

இந்தப் பாடலைப் பாருங்கள். ஒரு தாய் தன் பிள்ளை மீது வைக்கும் பாசமும் அன்பும் ஸ்பெஷலானது. எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் அந்த அன்பு குறைவதுமில்லை. மாறுவதுமில்லை. பெற்றெடுக்காவிட்டாலும், மனதால், நினைவால் ஈடு இணையில்லா அந்த அலாதியான அன்பைத் தருவதாகக் காதலி பாடுகிறாள். அதே நேரம், காதலன்,  தன் வழியைத் தேடும் வளர்ந்த பிள்ளையாக மாறிவிடாமல் அம்மாவின் அன்புக்காக ஏங்கி, உலகமே அம்மா தான் எனவிருக்கும்  குழந்தையைப் போல நிலைத்திட வேண்டுகிறாள்.

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும், நானாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும், நீயாக வேண்டும்

இது போன்று ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி இருந்தாலும் ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருந்தார் கவிஞர். அவரது வரிகள் ஒவ்வொன்றும் வைரம் என்றால் அவற்றை சற்றும் சிதைக்காமல் அழகுபடுத்தி மெருகேற்றியவர்கள் எம்.எஸ்.வி. & டி.கே.ஆர்.

சரி, நமது  பாடலுக்கு வருவோம். காதல் பாடல்களில் உவமைகளை மட்டுமே அடுக்கி வந்த பாதையை மாற்றி வினாக்களாக அமைந்த பாடல் இது. வினாக்கள் ஆறு வகைப்படும் என அறிவோம். இலக்கண பாடமாக இல்லாமல் மேலோட்டமாகவே பார்ப்போம். அறிவினா, அறியாவினா, கொளல் வினா, கொடை வினா, ஐய வினா , ஏவல் வினா என்பவையே அந்த ஆறு வகைகள்.

ஐய வினா – அதுவா இதுவா என்று சந்தேகமாக, ஐயத்துடன் கேட்பது தான் ஐய வினா (doubtful question). முழுக்க முழுக்க இவ்வித கேள்விகளால் புனையப்பட்ட தமிழ்த் திரைப்படப் பாடல் சாத்தியமா?

இது மிகப் பெரும் சவால் தான். வினாக்கள் கதை மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்த வேண்டும், சூழலோடு பொருந்த வேண்டும், சந்தத்தில் அமைய வேண்டும், சொற்கட்டுக்குள் இருக்க வேண்டும் இப்படி எத்தனையோ வரையறைகள்.  இதனை அனாயசமாக உடைத்தெறிந்த பாடல் இது. வரிகளை உன்னிப்பாகக் கவனியுங்கள் – கதாபாத்திரம் என்பதையும் கடந்து நடிகர்களின் தனிப்பட்ட குணங்களையும் குறிக்கும் வலிமையான சொற்கள்; வளமான கற்பனை. எழுதப்பட்ட பின் இசையமைக்கப்பட்ட பாடல் இது. இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் சொல்லும் இசையும் முரண்பட்டு, முந்திச் செல்லாமல் ஒன்றோடொன்று இழைந்து, குழைந்து தேனாக காதில் நுழைந்து அசர வைக்கும் அந்தப் பாடல் இதோ ..

பேசுவது கிளியாஇல்லை பெண்ணரசி மொழியா

கோவில் கொண்ட சிலையா

கொத்து மலர்க் கொடியா

ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா

சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா

ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமாஇல்லை

கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா

வில்லேந்தும் காவலன்தானா

வேல்விழியாள் காதலன்தானா

சொல்லாமல் சொல்லும் மொழியில்

கோட்டை கட்டும் பாவலன்தானா

மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா

உள்ளம்வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஓய்

செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா

செந்தூரம் கொஞ்சும் முகத்தில்

செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா

கன்னடத்து பைங்கிளி என்ற செல்லப்பெயர் கொண்டவர் சரோஜாதேவி. டப்பிங் ஏதுமின்றி அவர் பேசிய தமிழ் அலாதியானது. உச்சரிப்பில் பிழை ஏதும் இல்லாவிடினும் அவரது  குரலின் ஒலியழுத்தம், அவர் கண்டிப்புடன் பேசினாலும் கொஞ்சுவது போன்ற இனிமையைத் தரும். இதைத் தான் கிளி பேசுகிறதா அல்லது பெண் தான் பேசுகிறாளா என ஐயம் கொள்கிறார் கவிஞர். கோயில் சிலை போன்ற உருவமா, மலர் போன்ற மணமும் மென்மையுமா – எது அழகூட்டுகிறது?

நாயகி பாடுவதைப் பாருங்கள். பிறருக்கு கொடுத்து மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனை, பாரி வள்ளலுக்கு மகனோ  இவர் என்று வியக்கும் அவள் அவரின் கேரள பூர்வீகத்தை சுட்டிக்காட்டும் வகையில் சேரனுக்கு உறவாயிருப்பானோ என்று சந்தேகிக்கிறாள். இருப்பினும் அவர் தமிழர்களுக்கு நிலவாய் (சந்திரன்) மாறி குளிர்ச்சி தருபவரன்றோ என மகிழ்கிறாள்.

நாயகனோ அவளின் அழகையும் குரலினிமையையும் விடுவதாயில்லை. அவளது அழகு தோரணம், அதுவும் கல்யாண மண்டபங்களில் பயன்படுத்தப்படும் தோரணம் போன்று பொலிவும் புனிதமும் கொண்டது; அவளது குரலும் கச்சேரியில் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்து, சுண்டியிழுக்கும் மோகன ராகம் போன்றது என்கிறான். இதில் எதைச் சொல்லி வியப்பது என மயங்குகிறான் அவன். அதற்கு அவள் வில்லேந்திய (ராமன்) வீரனாயிருப்பானோ, வேல் போன்ற விழி கொண்ட எனக்குத் காதலனாய்த் துனையிருப்பானோ எனப் பாடுகிறாள்.

அரசியலில் ஏற்கனவே பங்கெடுக்கத் துவங்கியிருந்த எம்.ஜி.ஆர். அண்ணா. பெரியாரை இதயத்தில் வைத்திருந்ததாகச் சொல்வார். நடிகராய் அவருக்குப் பெரும்  ரசிகையர் கூட்டமுமிருந்து வந்தது. இதைச் சுட்டிக்காட்டி மன்னாதி மன்னர் கூடும் மாளிகையா இல்லை வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா என வடித்துள்ளார் கண்ணதாசன்.

செண்டாடும் சேயிழை தானா– செழுமையான உடல்கட்டோடு விளங்கும் பணக்கார வீட்டுப் பெண்ணா இவள் அல்லது தெய்வீகம் மிக்க காதலுக்குச் சொந்தக்காரியா இவள்? செந்தூரம் – குங்குமமும் வெண்ணையும் சேர்ந்த செம்மஞ்சள்  நிறக் கலவை. மருத்துவக் குணங்கள் பல கொண்டவை என சித்தர்கள் வியப்பது. அந்த செம்மஞ்சள் நிற முகத்தில் செவ்வாய் (சிவந்த இதழ்கள் ) உதிர்க்கும் தேன் போன்ற மொழியினைக் கொண்டவளோ என வியக்கிறான்.   

நாயகன், நாயகி இருவரும் மற்றவரின் அழகையும் குணநலன்களையும் ஒரு உவமைச் சொல்லி சுருக்கி விடாமல், வியந்து போய் நிற்பது போன்ற சிறப்பான வினாக்கள்! கவிஞரின் இந்தக் கற்பனைச் சுவையைப் பாராட்டுவதா அல்லது அதில் காதல் சுவை குறையாத கந்தருவ இசையைச் வார்த்தெடுத்த மெல்லிசை இரட்டையரைப்  பாராட்டுவதா? பாங்கோஸ், தபலா, கிதார், சந்தூர், வயலின் , ஆர்கன் என பல கருவிகள் வந்த போதிலும் ஹோய், ஹோய் என்ற உச்சரிப்பில் காதல் உணர்வைக் கொட்டி, அதனையே ஹோய் ஹோய் ஹோய் என மூன்று முறை சொல்வதில் உச்சத்தைத் தொட்டிருக்கும் பாடகர்களின் நேர்த்தியைச் சொல்வதா? கேள்விகளால் மட்டுமே உருவான பாடலைச் சுவைத்தபின்னர் நம்முள் தொக்கிநிற்கும் கேள்விகள் இவை.

கவிஞர் இதுபோன்ற பல அற்புதப் பாடல்களை வடித்திருக்கிறார். சரி இப்பொழுது சொல்லுங்கள். இந்தப் பாடலைக்  கேட்டதும், இது போல வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடல் எதுவும் உங்கள் நினைவுக்கு வருகிறதா? பகிருங்கள் – பருகி மகிழ்வோம். இசை மழையில்  நனைவோம்!

–    ரவிக்குமார்

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad