\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பிரபஞ்சன்

Prabanjan

ஏறத்தாழ 57 வருடங்களாக தன் எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களின் மனதில் தனித்தன்மையான இடம் பிடித்திருக்கும் பிரபஞ்சன் கடந்த டிசம்பர் 21ஆம் நாள் காலமானார்.

“மனிதன் சக மனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும். அதற்கு அவன் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி எனில் அவன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கலையும், இலக்கியமும் ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கு ஒரு நல்ல சிநேகிதனாய் அமையும்” என்று சொல்லி வந்தவர் பிரபஞ்சன். சொன்னதோடு நிற்காமல், தனது ஒவ்வொரு படைப்பிலும் இந்தக் கருத்தை அழுந்தப் பதிவு செய்தவர்.

எல்லைகள் கடந்து மனிதர்கள் மீதான நேசம் வளர்த்துக் கொள்ள, வைத்தியலிங்கம் என்ற தனது இயற்பெயரை, பிரபஞ்சன் என்று மாற்றிக் கொண்டவர். மனிதர் எல்லோரும் நல்லவரே; சூழல்கள் அவர்களது பல பரிமாணங்களை வெளிக் கொணர்கிறது. அவற்றைக் கொண்டு ஒருவரை நல்லவர், தீயவர் என்று முடிவு செய்ய நாம் யார்?  எல்லோரும் தமக்குள்ள எத்தனையோ ரகசியங்களை, தவிப்புகளை ஒளித்து வைத்துள்ளனர். மன்னிப்புக் கேட்க ஏங்கித் தவிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் நேசத்தையும், அன்பையும் அவர்களுக்கு மனிதாபிமானத்தோடு  வழங்குவதே அறம் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து வாழ்ந்த பிரபஞ்சன் தனது படைப்புகள் வழியே இதனை அழகாக வெளிப்படுத்தி வந்தார்.

புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் பள்ளிப் பருவத்தில் கவிதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தார். கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ இதழின் கவிதைப் போட்டியில் வென்ற அனுபவமும் அவருக்குண்டு. பின்னர் மெதுவே புதுமைப்பித்தனின் படைப்புகளால் உரைநடைப் பக்கம் கவரப்பட்டு மரபுக் கவிதை, உரைநடை என இரண்டு துறைகளிலும் பரிமளித்தார். பின்னர் வந்த ‘புதுக்கவிதை’ படைப்பாளிகளுடன் போட்டியிட முடியாமல் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டதாக வேடிக்கையாகக் கூறுவார் பிரபஞ்சன். கல்லூரிப் படிப்புக்குப் பின்னர் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர், அவ்வப்போது குமுதம், கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்தார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகராகும் எண்ணத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் அவர். அவரை வைத்து தொடங்கப்பட்ட படமொன்று முடங்கிப் போகவே முழு நேர எழுத்தாளராக மாற்றிக் கொண்டார். பிரபல பத்திரிகை நிறுவனங்களில்  வேலை கிடைத்தாலும், பத்திரிகை உலக அரசியல்கள், கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவற்றை உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்துவிட்டார்.    

“எல்லாவற்றையும் பெற்றுவிடத் துடித்து, மகத்தான வாழ்க்கையை இழந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் இலக்கியத் துறையில் படைப்பாளிகள் பலர்  வெறுப்பும் கசப்பும் கலந்த மனப்பான்மையோடுதான் வாழ்கிறார்கள். இரண்டு வேளை சாப்பாட்டுக்கு உத்திரவாதம் கிடைத்திருந்தால் இன்னும் சற்று அதிகமாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தவிர வாழ்க்கையில் எனக்கு வேறெந்தப் பிராதும் கிடையாது” எனும் பிரபஞ்சன் “இருந்தாலும் நான் பாரதியை விடவும், பாரதிதாசனை விடவும் அதிகத் துன்பத்தை அனுபவித்துவிடவில்லை” என்றும்  சொல்வார்.

மிக எளிமையான சொற்களில், இயல்பான வாழ்க்கைச் சூழலை வடித்தெடுத்து அதற்குள் ஒரு அருமையான செய்தியை, சூசகமாகச் சொல்லுவதைத் தனது முத்திரையாக வைத்திருந்தார் பிரபஞ்சன். ஜனரஞ்சகமாகவும், ஹாஸ்யம் ததும்பும் விதமாகவும் அவர் படைத்த படைப்புகளில்  ஒரு மெல்லிய சோகம் இழையோடுவதைக் காணமுடியும். சிறு வயது முதலே ரஷ்ய இலக்கியங்கள், குறிப்பாக ஆண்டன் செகாவின் படைப்புகளின் மீது கொண்ட ஈர்ப்பின் தாக்கமாக அது அமைந்திருக்கலாம் என்பது அவரது எண்ணம். மனிதரின் ஆழ்மன உணர்வுகளை  அவர் வருணிக்கும் விதங்கள் அலாதியானவை.  

‘பிம்பம்’ என்ற சிறுகதையில், தன்னைப் பற்றி அகத்தாய்வு செய்யும் பாத்திரமொன்று, நண்பனுக்கான முகம், குடும்பத்துக்கான முகம் என்று ஒவ்வொரு முகமூடியாகக் கழற்றி வீசுகிறது. தனது உண்மையான முகத்தைக் காண முற்படும் அவன் இறுதியில், தனக்கென ஒரு முகமே இல்லை என்பதை உணர்வதாகக் கதை முடியும்.

வீட்டில் வளர்த்த முருங்கை மரமொன்று புயலால் சாய்ந்து விடுகிறது. இந்த இயல்பான, ஒற்றை வரி நிகழ்வை, ‘பிரும்மம்’ எனும் கதையாக பிரபஞ்சன் வடித்திருக்கும் அழகு வாசகர் மனங்களை வருடும் கவிதைக்கு நிகரானது. புது வீட்டில், வாசலில் வெறுமையாக இருக்குமிடத்தை என்ன செய்யலாம் என்ற கேள்வியில் கதை தொடங்கும். ‘நாலு முழ வேஷ்டியை விரித்துப் போட்டது போலிருக்கும்’ இடத்தில் முருங்கை மரம் வைக்கலாம் என்று குடும்பத்தினர் முடிவு செய்வார்கள். அவ்வாறு அவர்கள் வைத்த முருங்கை மரம் வளர்வதை ஒவ்வொருவரும் தங்களது பார்வையில், அவரவர் வாழ்க்கை நிகழ்வுகளோடு அனுபவித்து வரும் வேளையில், அந்த மரம் புயலால் சாய்ந்து விட, அக்குடும்பம் மனமொடிந்து போவதாகக் கதை வளரும். இக்கதையில் ஒரு சாதாரண முருங்கை மரத்தை, குடும்பமே தங்களுள் ஒருவராக நினைத்துச் சுகிப்பதை மிக அழகான ஓவியமாக வடித்திருப்பார் பிரபஞ்சன். வீழ்ந்து விட்ட முருங்கை மரத்திலிருந்து அக்கம் பக்கத்தினர், பூ, கீரை என்று பறித்துச் சென்றுவிட வெறுமனே மொட்டைக் கிளையாகச் சாய்ந்து கிடக்கும் அந்த மரம் யாருமே கவனிப்பாரற்றுப் போய்விடும். பல வாரங்கள் கழித்து,  ஒரு நாள் காலை வீழ்ந்து கிடக்கும் மரத்திலிருந்து இரண்டு துளிர்கள் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி மகிழ்வதாகக் கதை முடியும்.

போலி மனிதர்களையும், சமூகத்தையும் விட்டுத் தள்ளியே நின்று பழகியவர் பிரபஞ்சன். அவருக்காக ஏற்பாடு செய்யப்படும் பாராட்டு விழாக்களுக்குக் கூட அவர் போகாமல் தவிர்த்ததுண்டு. ஆனால் முகந்தெரியாத வாசகர்களை அவர்களது ஊருக்குச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். குடும்பத்தினர் புதுச்சேரியில் இருக்க, நாற்பது வருடங்களாகச் சென்னையில், சிறு அறைகளில் வசித்து வந்தார் அவர்.  வாரத்தில் பல தினங்கள் பட்டினி கிடந்தாலும்,  அவ்வப்போது கிடைக்கும் தொகையை மற்றவர்க்கு, குறிப்பாக புதிய எழுத்தாளர்களுக்குச் செலவிட்டுவிடுவார்.  அவரது இந்த மனப்பான்மை அவரது எழுத்துக்களிலும் வெளிப்பட்டு வந்தது.

அலட்டிக் கொள்ளாத எழுத்து நடை, தீ போலப் பரவும் காட்சி அமைப்புகள், எல்லாவற்றையும் நேர்மறை எண்ணத்துடன் அணுகும் முறை போன்றவை இவருடைய எழுத்தின் தனித்த குணங்கள். இவரது படைப்புகள் நடுத்தட்டு மனிதர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தன. என்றபோதிலும், வரலாறு, அமானுஷ்யம், நாடகம், ஹாஸ்யம் போன்ற பகுப்புகளும் உண்டு.  

’ஆண்களும் பெண்களும்’, ’வானம் வசப்படும்’, ’மகாநதி’, ’மானுடம் வெல்லும்’, ’சுக போகத் தீவுகள்’, ’கனவு மெய்ப்பட வேண்டும்’ போன்ற இவரது  நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘வானம் வசப்படும்’ நூலுக்காக சாஹித்ய அகடெமி விருதை வென்றார். ’ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’, ‘மரி எனும் ஆட்டுக்குட்டி’, ‘அம்மா’, ‘அமானுடன்’, ‘பாதுகை. ‘’ஒரு மனுஷி’, ’நேற்று மனிதர்கள்’, ‘நீரதன் புதல்வர்’, ‘மீன்’ என 270 சிறுகதைகள் எழுதியவர். இவற்றில் சில வாழ்க்கைச் சம்பவங்கள், சமகால அரசியல் அடிப்படையில் புனைவு சேர்க்கப்பட்டு அமைந்தவை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழங்கப்படும் அத்தனை இலக்கிய விருதுகளையும் ஒரு முறையேனும் பெற்றிருக்கிறார். இவர் படைத்த பல சிறுகதைகள் குங்குமம், குமுதம், தினமலர், கல்கி, நக்கீரன், இந்தியா டுடே, அலைகள், தினமணிக் கதிர், காலச்சுவடு, ஆனந்த விகடன், தமிழரசு போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளன.

“நான் தமிழர்களுக்காக மட்டுமல்ல; மனிதர்களுக்காக எழுதுகிறேன். எனது கதைகளைப் படிக்கும் நபர் மனதளவில் ஓர் அங்குலமாவது

வளர்ச்சியடைந்தால் மகிழ்வேன். எனது எழுத்துக்கள் எவருடைய தற்கொலை எண்ணத்தை, விவாகரத்து முடிவை மாற்றியிருந்தால் அது என் எழுத்துக்குப் பெருமை” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் பிரபஞ்சன்.

அவரது படைப்புகளை வாசித்தால் நமக்குள்ளும் அறம் துளிர் விடும் என்பது திண்ணம்! வாசகர் சார்பில் பனிப்பூக்கள் அவருக்கு  நன்றி செலுத்துகிறது.

   ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad