\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

கிராமியச் சூழலை, மண்மணம் மாறாது வெளிக் கொணர்பவை நாட்டுப் புறப்பாடல்கள். மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை, ஆசாபாசங்களை எளிமையான சொற்களால் விளக்கிடும் பாடல் வரிகள் இவை. எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான நாட்டுப்புற வகைப் பாடல்கள் எதுகை, மோனை, இயைபு கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம்.

தெம்மாங்கு நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்றாகும். தென்னகத்தின் பாங்கு , தென் + பாங்கு, தெம்மாங்கு ஆகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  இப்பாடல்கள் வேலைப் பளு தெரியாமலிருக்க வயல்களிலும், வண்டிப் பயணங்களிலும் மற்ற பிற சூழல்களிலும் பாடப்படுவதுண்டு. ஒருவர் கேள்விக்கு மற்றொருவர் பதில் சொல்வது போலவும்,  ஒருமித்துப் பாடுவது போலவும் பல மரபுகளும் கொண்டது.

அத்தகையதொரு தெம்மாங்குப் பாட்டுதான் இது.

தாழையாம் பூ முடிச்சு

தடம் பார்த்து நடை நடந்து

வாழையிலை போல வந்த பொன்னம்மா – என்

வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?

பாளை போல் சிரிப்பிருக்கு

பக்குவமாய் குணமிருக்கு

ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணையா – இந்த

ஏழைகளுக்கு என்ன வேணும் சொல்லையா!

தாயாரின் சீதனமும்

தம்பிமார் பெரும்பொருளும்

மாமியார் வீடு வந்தால் போதுமா?

மானாபிமானங்களைக் காக்குமா?

மானமே ஆடைகளாம்

மரியாதை பொன் நகையாம்

நாணமாம் துணையிருந்தால் போதுமே! – எங்கள்

நாட்டுமக்கள் குலப்பெருமை தோன்றுமே!

\அங்கம் குறைந்தவனை

அழகில்லா ஆண்மகனை

மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா? – வீட்டில்

மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா

மண் பார்த்து விளைவதில்லை

மரம் பார்த்து படர்வதில்லை

கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா

கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா

சென்ற பகுதியில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைக் கோணங்களைச் சித்தரிக்கும் பாடல்கள் சிலதைப் பார்த்தோம். அந்த வரிசையில் இடம்பெறும் மகத்துவமான பாடல் இது. 1959 ஆம் ஆண்டு, ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் பாகப்பிரிவினை . கூட்டுக் குடும்பச் சிக்கல்களை யதார்த்தமான முறையில் வெளிப்படுத்திய மிகச் சிறந்த இயக்குனர் பீம்சிங். கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் இவருக்கு ஒருவரும் நிகரில்லை. சுப்பையா, பாலையா, ரங்கா ராவ், எம். ஆர். ராதா போன்றவர்கள் இவரது படங்களில் தவறாது இடம்பெறுவார்கள். அவர்களது இயல்பான நடிப்பு பீம்சிங்கின் படங்களுக்கு வலு சேர்த்தன.

ஒரு கையும், காலும் செயலிழந்து போன வெள்ளந்தியான நாயகன். அவனது குறைகளைப் பொருட்படுத்தாது அவனிடம் நேசம் கொண்டு, கணவனாக ஏற்கும் நாயகி. கிராமத்தில் நிறைவான எளிமையோடு வாழும் இவர்கள் குடும்பத்தில் நிகழும் சூறாவளிச் சம்பவங்களைப் பற்றிய படம் பாகப்பிரிவினை.

வயல்காட்டில் வேலை செய்து, மாடு கன்றுகளை மேய்க்கும் சூழலில் அலுப்புத் தெரியாதிருக்க நாயகனும், நாயகியும் பாடும் பாடல்தான் மேலே சொன்ன தெம்மாங்குப் பாடல்.

தாழம்பூ சூடி, நிலம் பார்த்து (தடம் = வழி) நடந்து வரும் வாழையிலை போன்ற நாயகிடம் நீ எனக்கு என்ன கொண்டுவந்தாய் என்று கேட்கிறான். இங்கு தாழைக்கு எதுகையாக வாழையைப் போடவில்லை கவிஞர்.  நெகிழ்ந்து கொடுக்கும் மென்மைத் தன்மையுடைய வாழையிலை, சூட்டினைக் குறைக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது. பலர் கூடும் விழாக்களில் வாழைமரம் கட்டுவதன் காரணமும் இதுதான். அது போல் குடும்பத்தில் சிக்கல்களைத் தவிர்த்து, அனைவரையும் அனுசரித்து, நன்மை புரியும் பொறுப்பு மருமகளுக்கு உண்டு. மனைவியாக, கணவனின் வேட்கைச் சூட்டினைத் தணிக்கும் பொறுப்பும் அவளுக்குண்டு.  

வரிசையாகப் பூத்திருக்கும் தென்னைப் பூக்களைப் (தென்னம்பாளை)   போன்ற பல்வரிசை தெரியும் சிரிப்பு, பக்குவப்பட்ட மனம், அம்மனம் தரும் அழகு இதைத் தவிர ஏழைகள் எதையும் எதிர்பார்ப்பதில்லையே, என்கிறாள் நாயகி. அதாவது நான் உன் மனதைப் பார்த்து மட்டுமே வந்தேன், வேறெதுவும் எதிர்பார்த்து வரவில்லை என்கிறாள்.  

தாய்வீட்டுச் சீதனமும், சகோதரர் தரும் பொருட்களும் மான, அபிமானங்களைக் காக்குமா, வேறென்ன கொண்டு வந்தாய் என அவன் கேட்க, மானமெனும் ஆடை, மரியாதை எனும் நகைகள் தான் தமிழ்ப் பெண்களின் குலப்பெருமை அதைக் கொண்டுவந்தேன் என்கிறாள்.

அடுத்து வரும் சரணத்தில் அங்கக் குறைபாடுள்ள, அறிவு அழகற்ற ஆணைப் பெண்கள் விரும்ப மாட்டார்களே, அவர்கள் வீட்டினரும் அதற்கு உடன்பட மாட்டார்களே என அவன் கேட்க, மென்மையான  பூங்கொடி குறிப்பிட்ட மரம் தேடிப் பிடித்து படர்வதில்லை. அது இயல்பாக நடக்கிறது. அது போலவே களங்கமற்ற என் கண்களுக்கு உங்களது நல்ல மனம் தான் தெரிகிறது; உங்களது ஊனமோ அறிவோ தெரிவதில்லை என்கிறாள்.

24 வரிகள்; வரிக்கு அதிகப்பட்சமாக 4 சீர்கள்; முன்னிசை, இடையிசை, பல்லவி, சரண மீதுரைகள் எல்லாம் சேர்த்து ஆறு நிமிடங்கள் – அதற்குள் பண்பாடு, வஞ்சகமற்ற உள்ளம், எளிமையான வாழ்வின் மனநிறைவு, குறை காணா குணவதி என அத்தனை பரிமாணங்களைக் கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே, இத்தனை நேர்த்தியான அழகுடன் வெளிப்படுத்த சாத்தியமானது. உடற்குறை என்பது இயல்பானது, அதனை ஏற்றுக் கொள்வதும் இயல்பானது இதில் தியாக மனப்பான்மை என்று ஒன்றுமில்லை என்பதனை முத்தாய்ப்பாய் நான்கு வரிகளில் சொல்லிவிட்டிருக்கிறார்.

மண் பார்த்து விளைவதில்லை

மரம் பார்த்து படர்வதில்லை

கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா

கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா

கவிஞர் பின்னொரு நாளில், இந்தப் பாடலைத் தனது மனைவி பொன்னம்மாவை மனதில் வைத்து எழுதியதாகச்  சொல்லியிருந்தது இன்னொரு சிறப்பம்சம்.

குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகே தமிழ்த் திரையில் கிராமிய இசை தோன்றியது எனும் கருத்தை உடைத்தெறியும் பாடல்களில் இதுவும் ஒன்று. அதிலும் பாடலின் துவக்கத்தில் ‘தந்தானே …

தானே தந்திந்தன்ன்னோ ..’ என வரும் தத்தகார வாய்பாட்டில், நாட்டுப்புற இசையின் அடிநாதத்தைக் குழைத்தெடுத்துப் பூசியிருப்பார் மெல்லிசை மன்னர். இந்த வாய்பாட்டின் சாயலை அதே காலகட்டத்தில், எஸ்.டி. பர்மன் இசையமைத்த ‘சுஜாதா’ திரைப்படத்தில் ‘சுன் மேரே பந்து ரே’ பாடலின்  துவக்க இசையிலும் காணலாம். இதைப் பற்றி ஒரு பேட்டியில் எம்.எஸ்.வி. ‘மலபார் பக்கம், ‘மாப்ளாஸ்’ எனும் நாட்டுப்புறப் பாடல்கள் மிகப் பிரசித்தம். அதில் உந்தப்பட்டு இந்தத் தத்தகாரத்தை வைத்தேன். ஆனால் அதே சாயலில் பர்மனும் பயன்படுத்தியிருப்பது இந்தியளவில் நாட்டுப்புற இசைகளில் அடிப்படையான பொதுத்தன்மை இருப்பதைக் காட்டுகிறது’ என்றார்.  

நான்கே நான்கு  இசைக் கருவிகள்;  கலப்பில்லாத, கிராமிய மெட்டு; பிரத்யேக தாளநடை   ஆரவாரமற்ற மகிழ்ச்சியூடே மெலிதாய் இழையோடும் சோகம் – அறுபது  வருடங்களுக்கு முன்பிருந்த சமூகத்தின் பெருமையை, ஏற்றத் தாழ்வற்ற கலாச்சாரத்தை இப்பாடல் உணர்த்துகிறதென்றால் அது மிகையில்லை.

சிவாஜி கணேசன் – என்ன சொல்வது? கையை முடக்கி, விந்தி விந்தி நடந்து, தாளகதி ஏதுமின்றி அங்குமிங்கும் குதித்தாடி, எருமைச் சவாரி செய்த இந்த மனிதனா வீரபாண்டிய கட்டபொம்மனாக, கர்ணனாக , எஸ்.பி.சௌத்திரியாக, சிக்கல் சண்முக சுந்தரமாக, பாரிஸ்டர் ரஜினிகாந்தாக,   பெரிய தேவராக உருமாறியது? இப்பாடலில் இவரது உடல்மொழியை மட்டுமே திரைக்கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம். உடலை அசைக்காது தலையை மட்டும் இடவலமாக அசைக்கும் முத்திரையை எப்போதோ செய்து விட்டிருக்கிறார். இமாலயச் சாதனைகள் பல புரிந்த இந்த மகா கலைஞனுக்கு நம் தலைமுறையினர் வேறு எந்தப் பெருமை சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. மிமிக்கிரி, மீம்ஸ் என்ற பெயரில் கேவலப்படுத்தாதிருந்தால் போதும்.  

தலையில் கூடையைச் சுமந்து கொண்டு, கேள்விகளுக்கு பதில் சொல்லியவாறு நடந்து வரும் பாத்திரம் சரோஜாதேவிக்கு. மனதிலோடும் சிறு குறையை மறைத்து, இயல்பாகக் காட்டிக்கொள்ளும்  அமைதியான முகபாவம். குறிப்பாக ‘அங்கம் குறைந்தவனை’ என்று அவன் பாடும்பொழுது அவரது முகத்தில் கவலையின் ரேகை ஓடுவதைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.

கதாபாத்திரத்துக்காகவே படைக்கப்பட்டதாகத் தோன்றும் டி.எம்.சௌந்திரராஜனின் குரலும், பாவமும் மற்றொரு அற்புதம். ‘அடித்து, உதைத்தாலும் கூட டி.எம்.எஸ்ஸால், ஸ்ருதி பிசகிப் பாட முடியாது’ என்று பல இசையமைப்பாளர்கள் சொல்லியதுண்டு. கிராமியப் பாடலின் சுகத்தை ‘தாயாரின் சீதனமும் …ஓ..’ என்ற ஒற்றை வரியில் அழுந்தப் பதியவைப்பதைக் கேளுங்கள்.

இப்பாடலில் வரும் பெண் குரல் பி.லீலாவினுடையது. சாஸ்திரிய சங்கீதம் பயின்றவர் என்றாலும் ஏற்ற இறக்கங்களோடு இப்பாடலுக்கு அவர் சேர்த்திருக்கும் பாவம் அலாதியானது.  

முகப்பிலும், இடையிலும் வரும் தத்தகார வாய்பாட்டு குரலுக்குச் சொந்தக்காரர்  எம்.எஸ். விஸ்வநாதன். ‘மாடு மேய்ப்பவன் குரல் தானே .. நீயே பாடிவிடு என்றார்கள். சரியென்று நானே பாடிவிட்டேன் ..’ என்றார் இந்த இசைச் சக்கரவர்த்தி வெகுளியாக.

அந்தக் காலம் போல் இனி வருமா என ஏங்க வைக்கும் பாடல். விகற்பமற்ற மனித உணர்வுகளை, உறவுகளை, மனமகிழ்ச்சியை, பண்பாட்டைப் பதிவு செய்திருக்கும் பாடல்! எங்கு தொலைத்தோம்   அந்த வாழ்க்கையை?

ரவிக்குமார்

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad