Top Add
Top Ad

அழகிய ஐரோப்பா – 12

(அழகிய ஐரோப்பா – 11/நடுச் சாமம்)

அறை எண் 316

பல வழிகளில் முயன்று பார்த்து விட்டோம் ஆனால் என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

“இனி என்ன செய்யலாம்… விடியும் வரை வேனுக்குள்ளேயே படுப்போம்”

என்றபடி களைப்பு ஒரு பக்கம் நித்திரை ஒருபக்கம் என விரட்ட… சித்தப்பா அப்படியே சீட்டில் சாய்ந்தார்…

“அப்ப இண்டைக்கு நாங்கள் ஹோட்டலுக்கு போக முடியாது…” என்றான் மகன்

இடியுடன் மின்னல் வெட்டியது. சிறிது நேரத்தில் மழை சற்று தணிந்தது போல் இருந்தது.

எனக்குக் களைப்பில் தாகமெடுக்கவே… “தம்பி அப்பாக்குத் தண்ணீர் பாட்டில் தாடா… “ என்றேன்.

அவன் தனது சீட்டின் கீழே குனிந்து தேடிய பின் “தண்ணீ பாட்டிலை காணேல்லை அப்பா” என்றான்

“ஏன் எங்கே வைத்தாய்”

“கீழே தான்”

போனில் லைட் அடித்துத் தேடினேன் கிடைக்கவில்லை. டிரைவர் சீட்டுக்கு நேரே  பின்னால் அவனது சீட் இருந்தது. சித்தப்பாவின் காலை எடுக்கும் படி கூறி விட்டு டிரைவர் சீட் கீழே தேடினேன்.


கிளட்ச் பெடலுக்கு கீழே சிக்கியபடி தண்ணீர் பாட்டில் கிடந்தது. எனக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

“இதை பாருங்கோ” என்றபடி சித்தப்பாவிடம் காட்டினேன். அவரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.

“இந்த தண்ணி பாட்டில் செய்த வேலையைப் பார்”  என்றபடி குனிந்து எடுத்தேன்.

மணிக்கூட்டில் நேரம் அதிகாலை ஒரு மணியைக் காட்டியது.

இன்னும் 35 நிமிட தூரத்தில் நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் இருப்பதாக நவிகேஷன் காட்டியது. இம்முறை வேனை ஸ்டார்ட் செய்தபோது முரண்டு பிடிக்காமல் சட்டென ஸ்டார்ட் ஆனது.


நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி ஒரு 15 நிமிட ஓட்டத்தின் பின்னர், அதிகாலை 1:45 அளவில் நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலை வந்தடைந்த போது மழை ஓய்ந்து வானம் சற்று வெளுக்கத் தொடங்கியிருந்தது.

எவ்வளவுதான் அண்ணாந்து பார்த்தாலும் ஹோட்டலின் கடைசி மாடி மட்டும் தெரியவில்லை.

“ஐயோ இந்தளவு உயரமா கட்டியிருக்கிறான்கள்… எந்த மாடியில் எங்களுக்கு ரூம்” என்றாள் என் மனைவி.

“தெரியலை ரிசெப்ஷன் போகலாம் வாம்மா…” என்றபடி நான் நடக்கலானேன்.

அந்த நேரத்திலும் ரிசெப்ஷன் ஓபன் ஆக இருந்தது.

அங்கிருந்த பெண்ணிடம் நாங்கள் ஏற்கனவே ரிசர்வ் பண்ணிய ஆதாரத்தைக் காட்டியதும் அவள் மறு பேச்சின்றி விசா கார்டு போன்ற ரெண்டு கார்டை நீட்டினாள்.

நான் “தேங்க்ஸ்” என்று சொன்ன போது மனைவி என்னிடம் நெருங்கி பாஸ்வேர்ட்  என்னெண்டு கேட்டு வாங்களேன் அவசரத்துக்கு காசு எடுக்கலாம் என்றாள்.


“ஐயோ… உன் காமடி ரசிக்கும் படியாய் இல்லை” என்றபடி வேனை நோக்கி நடக்க அவளும் என்னைப் பின் தொடர்ந்தாள்.

ஹோட்டலின் கீழே வேனை பார்க்கிங் செய்தபின்னர். லிஃப்ட்டில் மேலே சென்றோம். இரண்டாம் மாடியில் ஒன்றும் மூன்றாம் மாடியில் ஒன்றும் என இரண்டு ரூம்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  

இரண்டாம் மாடியில் இருந்த ரூமுக்கான கார்டை எடுத்து சித்தப்பாவிடம் நீட்டி.

“குட்நைட் காலையில் சந்திப்போம்…” எனக் கூறி மூன்றாம் மாடிநோக்கி விரைந்தோம்.

ஏ டி எம் கார்டை சொருகியதும் 316 ஆம் இலக்க கதவு தானாகத் திறந்து கொண்டது.

“பாத்திங்களோ ஹோட்டல் ரூம் கூட முதலாம் நம்பரில் தான் வந்துள்ளது”

என எண் சாத்திரம் பார்த்தாள் என் மனைவி. அவளுக்கு முதலாம் நம்பரில் அப்படி ஒரு பிடிப்பு.


“ஐயோ… உன்ர அலப்பறை தங்க முடியல… விடிய டிஸ்னி வேர்ல்ட் போக வேணும் சத்தம் போடாமல் படும்மா…” என்றபடி படுக்கத் தயாரானேன்.

இதற்கிடையில் எனது இரு குட்டிஸ் இருவரும் அங்கிருந்த நைட்கவுனை எடுத்து மாட்டிய பின் டிவி ரிமோட் ஐ எடுத்து தங்களுக்குத் தேவையான சானல்களை தேடிக்கொண்டிருந்தனர்.

“உங்களுக்கென்ன தனியா சொல்ல வேணுமோ… ரெண்டு பேரும் படுங்கோ… விடிய டிஸ்னி லேண்ட் போக வேணும்” என்றபடி லைட்டை அணைத்து விட்டு படுத்தேன்.


சிறிது நேரத்தில் தண்ணீர் வேண்டுமென்று மகன் எழுப்பியபோது மணி காலை எட்டாகியிருந்தது. ஃபிரிஜ்ஜில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டியபடி

“எல்லாரும் எழும்பி வெளிக்கிடுங்கோ நேரம் எட்டு மணியாச்சு என்றேன்.”

“எட்டு மணியோ…” கண்ணைக் கசக்கியபடி என் மனைவி எழுந்தாள்.

“ஹய்யா… டிஸ்னி லேண்ட் போகலாம்…” என்றபடி மகளும் துள்ளி எழுந்தாள்.

பிள்ளைகள் இருவரும் பயணக் களைப்பின்றி டிஸ்னி லேண்ட் பார்க்கும் ஆவலில் அவசர அவசரமாகக் குளிச்சு வெளிக்கிட்டனர்.

மீண்டும் ஹோட்டலுக்கு வரவேண்டிய தேவை இல்லையாதலால் ஒன்றுக்கு இரண்டு முறை பெட்டிகளைச் சரிபார்த்து ரூமை விட்டு வெளியேறினோம்.

கீழே வந்தபோது சுடச் சுட காலை உணவு தயாராக இருந்தது.

குட்டிஸ் டிஸ்னி லேண்ட் பார்க்கும் ஆவலில் சாப்பாட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

“எல்லாரும் வடியாய் சாப்பிடுங்கோ, இனி அடுத்த சாப்பாடு மத்தியானமோ இரவோ தெரியாது…” என்றேன்.

“ஏன் டிஸ்னி லேண்டில் ஹோட்டல் இல்லையோ” என்றான் என் மகன்

“ஹோட்டல் இருக்கு ஆனால் சோறு கிடைக்காது” என்றேன்.

எல்லோரும் அவரச அவசரமாக எல்லோரும் காலை உணவினை முடித்துக் கொண்டு வேனில் ஏறி டிஸ்னி லேண்ட் நோக்கிப் புறப்பட்டோம்.

பயணம் தொடரும்…

-தியா-

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. சொ.ஞானசம்பந்தம் says:

    சுவையான கட்டுரை . பாராட்டுகிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad