\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

துணுக்குத் தொகுப்பு

ஜப்பான்

உலகின் பல நாடுகள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் புதிய தினத்தினை அறிவிக்கும் வகையில் புலர்ந்திடும் கதிரவனை முதலில் கண்டு எதிர்கொள்ளும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அதன் காரணமாகவே மேற்கத்தியர்களால் இந்நாடு ‘உதய சூரியன் நாடு’ (Land of Rising Sun) என்று அழைக்கப்படுகிறது.

மற்ற நாடுகளால் ஜப்பான் என்று அறியப்பட்டாலும், ஜப்பானியர்கள் தங்கள் நாட்டை ‘நிப்பான்’ அல்லது ‘நிஹோன்’   என்றே குறிப்பிடுகிறார்கள். சீனர்கள், சூரியன் (‘நிச்சி’ ) பிறக்குமிடம் (‘ஹோன்’ ) என்பதைக் குறிக்க ‘நிஹோன்’ என்று அழைத்ததாகவும் அது பின்னர் நிப்பான் என்றானதாகக் கருதப்படுகிறது.

அபாயகரமான  எரிமலைகளையும். அழிந்துவிடாத பாரம்பரியங்களையும் கொண்டுள்ள ஜப்பான் உலகின் வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படினும், ஏறத்தாழ 6800க்கும் அதிகமான தீவுகள் ஒருங்கிணைந்த குட்டியான நாடு தான் அது. ஹொக்கைடோ, ஹோன்ஷு, சி(ஷி)கோகு, கியூஷு என்ற நான்கு தீவுகளே இவைகளில் பிரதானம். தலைநகரமான டோக்கியோ, நவீனமடைந்த  ஹோன்ஷு தீவிலுள்ளது. அமெரிக்க நில பரப்பளவுடன் ஒப்பிட்டால் இருபத்தியைந்தில் ஒரு பகுதி தான் ஜப்பான். இதில் ஏறத்தாழ எண்பது விழுக்காடு மலைகளும், காடுகளும் படர்ந்துள்ளன. ஆனால் நாடுகளின் பொருளாதார அளவீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி (GDP) அமெரிக்கா, சீனாவை அடுத்து மூன்றாம் இடத்திலுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து பல மைல்கள் உயர்ந்திருக்கும் மலைகள், இவற்றிடையே ஓடும் அருவிகள் மற்றும் நதிகள், நாலாபுறமும் சூழ்ந்துள்ள கடல் ஆகியவை ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை குமுறல்கள், கடற் கொந்தளிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை லேசான அதிர்வுகளையும், சராசரியாக ஒரு நாளைக்கு 5 நிலநடுக்கங்களையும் (வருடத்திற்கு 2000) சந்திக்கிறது ஜப்பான்.

அதே போல் இந்நாட்டில் நூற்றுக்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன. உலகின் எரிமலைகளில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் இது. இவற்றில் நாற்பதுக்கும் மேற்பட்டவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாமென்ற நிலையில், தீவிரத் தொடர் கண்காணிப்பில் உள்ளவை. ஹோன்ஷு தீவில் மட்டுமே நாற்பத்தியேழு எரிமலைகள் உள்ளன.

கடலுக்கடியில் நடைபெறும் நிலநடுக்கங்கள் சுனாமி எனும் ஆழிப்பேரலைகளை உருவாக்கி நிலப்பகுதிகளை அழிப்பதும் ஜப்பானில் அதிகம் நிகழ்கிறது. 90 மீட்டர் உயர எழும்பிய அலைகளில் 1741 ஆம் ஆண்டு 1600 பேர் உயிரிழந்தனர்.. 2011 இல் 55 மீட்டர் எழும்பிய சுனாமியால் ஏறத்தாழ 16,000 பேரை பறிகொடுத்தது ஜப்பான்.

புல்லட் ரயில்கள், தானியங்கி கார்கள், ரோபோக்கள்,  புத்தாக்க மின்னணு பொருட்கள் என ஜப்பானியர்கள் நவீன யுகத்தை நோக்கி நடைபோட்டாலும் தங்களது பாரம்பரியத்தை மறந்திடாது போற்றி வருகின்றனர். இளவேனிற் காலத்தில் ‘சகுரா’ எனும் செர்ரி மலர்கள் பூக்கும் காலங்களில், அதனைக் கண்டு ரசிக்கும் வகையில் ஹனாமி (ஹனா = பூக்கள், மி = பார்த்தல்) திருவிழா கொண்டாடி வருகின்றனர். ஒபோன் எனப்படும் கோடை காலத்தின் குறிப்பிட்ட தினங்களில் மூதாதையர்க்கு மரியாதை செலுத்தும் வகையில் அழகழகான லாந்தர் விளக்குகளை ஏற்றி ‘டோரோ நாகாஷி’ விழாவைக் கொண்டாடுகின்றனர். ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் மாண்டோரின் ஞாபகார்த்தமாகவும் இவ்விழா நடைபெறுகிறது. ஃபிப்ரவரி மாதங்களில் ‘சபோரோ’ என்றழைக்கப்படும் பனிக்கால விழாவும் உண்டு. ஐஸ் கட்டிகளால்  உருவாக்கப்பட்டு ஒளியூட்டப்பட்ட சிற்பங்கள் இவ்விழாவின் சிறப்பம்சம். ஜப்பானியர்கள் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தாண்டையே கடைபிடிக்கின்றனர். இது ‘ஷோகாட்ஷு’ என்று அழைக்கப்படுகிறது. இவ்விழாக்களில் ‘ஹைக்கூ’ வாசித்தல் , பாரம்பரிய முறையில் அரிசியைக் குத்தி, கூழாக்கி, நெருப்பில் சுட்டு செய்யப்படும் ‘மோச்சி’ உணவை உண்பது போன்றவை தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. பெண்கள் பாரம்பரிய உடையாக ‘யுகாதா கிமோனோ’ அணிகின்றனர்.. விழாக் காலங்களில் ஆண்கள் ‘ஃபுந்தோசி’ எனப்படும் லங்கோடு (கோமணம்) அணிவது மரபாகவுள்ளது. ஜப்பானியர்கள் நட்பாகவும், வணங்குதலாகவும் தலையைத் தாழ்த்தி குனிந்து வணங்குவது மிகத் தனித்தன்மை வாய்ந்தது. வருந்தி மன்னிப்புக் கேட்பதும் இதே முறையில் தானென்றாலும் அவர்கள் குனிவதன் அளவைப் பொறுத்தும், தினுசைப் பொறுத்தும் பொருள் வேறுபடுகின்றன.

‘கிமிகாயோ’ எனப்படும் ஜப்பானிய தேசிய கீதம் நான்கு வரிகள் மட்டுமே கொண்ட  உலகின் மிகச் சிறிய தேசியகீதமாகும். காகிதங்களால் செய்யப்படும் உருவங்களான ‘ஓரிகாமி’ (ஓரி – காகிதம் ; காமி – மடித்தல்) அதிசயக்கத்தக்க ஜப்பானிய கலை வடிவமாகும். வெட்டுதல், ஒட்டுதலின்றி மடிப்புகள் மூலம் மட்டுமே செய்யப்படும் ஒரிகாமி கலையின் மூலம் ஓராயிரம் மன்சூரியன் கொக்குகளை (ஜப்பானிய கொக்குகள்) செய்தால் நினைப்பது நிறைவேறும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை நிலவுகிறது. அதிர்ஷ்டம் தரும் மீன்கள், மூங்கில் கிளைகள், பூனை பொம்மைகள் என பலவித நம்பிக்கைகளும் கடைபிடிக்கப்படுகின்றன.

ஜப்பானிய எழுத்துமுறையும், வடிவங்களும் குறிப்பிடத்தக்கவை. ‘ஹிரகனா’, ‘கதகனா’, ‘காஞ்சி’ ஆகிய முறைகள் மிகவும் பிரபலமானவை. ஜப்பானிய மூலச் சொற்கள் ‘ஹிரகனா’ மொழியில் எழுதப்படுகின்றன. வேற்றுமொழிச் சொற்கள் (வெளிநாட்டு பெயர்கள், இடங்கள்) போன்றவற்றை எழுத ‘கதகனா’  முறை பயன்படுத்தப்படுகிறது. சீனத்து ஓவிய முறையில், ஒவ்வொரு சொல்லும் ஒரு எழுத்தாகக் குறிக்கப்படும் ‘காஞ்சி’யும் வழக்கத்தில் உள்ளது. மேலும் ஆங்கிலத்தில் எழுதுவதை ஜப்பானியர்கள் ‘ரோமாஜி’ என்று குறிப்பிடுகின்றனர். காஞ்சி முறையில் 6000 க்கும் அதிகமான எழுத்துக்கள் (குறியீடுகள்) இருந்தாலும் 2000க்கும் குறைவானவையே இன்று புழக்கத்தில் உள்ளன. ஹிரகனாவில் 46 எழுத்துக்களும், கதகனாவில் 46 எழுத்துக்களுமுள்ளன.

ஒரு காலத்தில் சீன, அமெரிக்க, ஐரோப்பிய  நாடுகளுடன் போர்த்தொடுத்து சீண்டிக்கொண்டிருந்த ஜப்பான், ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்குப் பின்னர் பேரழிவிலிருந்து மீண்டு, அமைதி வழியில் நேர்மை, தியாகத்தன்மை, கடுமையான உழைப்பு, சிறந்த தரம் ஆகியவற்றோடு வீறுநடைபோட்டுக் கொண்டுள்ளது.

பேரழிவுகளை. பெரும்வளர்ச்சியாக மாற்றிக் காட்டிய நாடுகளுள் குறிப்பிடத்தக்க நாடு ஜப்பான்.

–          சாந்தா சம்பத்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad