Top Add
Top Ad
banner ad

தேர்தல் 2019

சுதந்திரமடைந்து எழுபத்தியிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில்,  இந்தியா 17ஆவது மக்களவைக்கான தேர்தலை எதிர்கொண்டு, நடத்தி வருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி  மே 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களில் இத்தேர்தல் நடைபெறும். இருபத்தியொன்பது மாநிலங்கள், ஏழு ஒன்றியப் பகுதிகளிலிருந்து, பதினெட்டு வயதை அடைந்து விட்ட ஏறத்தாழ 90 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.  இதில் சற்றேறக்குறைய 1.50 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ள இள வயதினர். தகுந்த ஆதாரங்களோடு, தங்களை வாக்காளராகப் பதிவு செய்து கொண்டு வாக்களிக்க வேண்டிய கடமை இவர்கள் அனைவருக்குமுள்ளது.

பெரிய, சிறிய கட்சிகள், சுயேட்சையாக களம் காணும் வேட்பாளர்கள் எனப் பல திசைகளிலிருந்து வாக்குத்தேடி பறந்து வரும் அன்பான வேண்டுகோளும், வாக்குறுதிகளும் வாக்காளர்களை, குறிப்பாக முதன்முறை வாக்காளர்களைக் குழப்பக்கூடும். போதாக் குறைக்கு தினந்தோறும், ஏதோவொரு ஊடகம் வெளியிடும் கருத்துக் கணிப்புகள் வாக்காளரின் மனதைச் சலனப்படுத்தி வருகின்றன. தாங்கள் வாக்களிக்கும் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு புறமிருக்க, வெற்றி பெறப் போகும் கட்சிக்கு வாக்களித்து விடுவோம் என்று நினைப்பவர்களும் உண்டு. நடுநிலை ஊடகம் என்பது அரிதாகிப் போய்விட்ட நிலையில், அண்மைக் கால கருத்துக் கணிப்புகள் நம்பகத்தன்மையிழந்துவிட்டன. கருத்துக் கணிப்புகள் வேட்பாளருக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளைத் தெரிவித்து அதற்குத் தகுந்தாற்போல் அவர்கள் பணியாற்றத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள உருவானது மட்டுமே. ஆனால் அண்மைக்காலச் செய்திகள், கருத்துக் கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் தங்கள் பேரத் தொகையை – வெளிப்படையாகச் சொல்வதென்றால் கையூட்டை – லஞ்சத்தை அதிகரிப்பதாகச் சொல்கின்றன. வாக்களிக்கப் பணம் பெறும் எவரும் பின்னாளில் அரசாங்கத்தைக் குறை சொல்லும் தகுதியை இழந்துவிடுகின்றனர். இதுவரையில் பல கட்சிப் பிரமுகர்களிடமிருந்து 1700 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. பல  இடங்களில் சோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை. வேட்பு மனுக்களில் இவர்களின் சொத்து மதிப்பு சில லட்சங்களைத் தாண்டவில்லை என்பது நகைப்புக்குரியது. பணமதிப்பீட்டிழப்புக்குப் பின்னரும் நாட்டில் இவ்வளவு கறுப்புப்பணம் உழல்வது ஆச்சரியமே.

தொலைக்காட்சி விவாதங்களில், பெருங்கட்சியினர் தங்கள் பேச்சுத்திறனால் நிதர்சனங்களைத் திரித்தும், மறைத்தும், மற்ற கட்சிகளின் முந்தைய தவறுகளைச் சுட்டிக் காட்டி தங்களது தவறுகளை நியாயப்படுத்தி மக்களை குழப்பும் நடவடிக்கைகளைத்தான் காணமுடிகிறது. தங்களது வருங்காலத் திட்டங்கள் குறித்து இப்பெருங்  கட்சியினர் பேசுவதில்லை. திட்டங்களை மட்டுமே முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள விரும்பும் சிறு கட்சிகளை ஊடகங்கள் மதிப்பதில்லை.

சமூக ஊடகங்கள் இன்னொரு படி மேலே போய் மீம்ஸ்களால் கிண்டலடித்து வேட்பாளர்களின் மெய்நோக்கைத் திசை திருப்பிவிடுகின்றனர். பெருங்கட்சிகளின் ‘ஐ.டி. விங்’ எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள், இவ்வித திசை மாற்றலுக்காகவே கை தேர்ந்த ‘மீம்ஸ்’ கிரியேட்டர்களை உருவாக்கி வைத்துள்ளன. சிறிய கட்சிகளை மேலும் சிறுமைப்படுத்துவதே இவர்களின் முதன்மைக் கொள்கை. கூடவே, உண்மையற்ற தகவல்களை, புகைப்படங்களை வெட்டி, ஒட்டி, ‘ஃபோட்டோஷாப்’ செய்து ‘வாட்ஸ்அப்’ போன்ற செயலிகள் வழியே தகவல்களைப் பரப்பி பொய்யை உண்மையாக்குவதும், உண்மையைப் பொய்யாக்குவதும் இவர்களின் கைங்கர்யமே.  

இந்தக் குழப்பங்களைக் கடந்துவரும் ஒரு வாக்காளரின் ஆழ்மன உணர்வை ஆட்டிவைக்கும் இன்னொரு ஆயுதம், மொழி, மதம், இனம், சாதி போன்ற பாகுபாடுகள். ‘தம் மொழி, தம் இனம்’ எனும் மனப்பான்மை எவ்வளவு ஆபத்தானதோ அதற்கு நிகரானது ‘ஒரு மொழி, ஒரு இனம்’ எனும் கோட்பாடும். வெளித் தொடர்புக்கான வசதிகள் இல்லாத போது, சிறு குழுக்களாக வாழ்ந்த மனிதர் தங்கள் இருப்பிடத்தைக் கொண்டு உருவாக்கிக் கொண்ட இன, மொழி, சாதியக் கட்டமைப்புகள் ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ள உதவின. ஆனால் இன்று இந்தக் கட்டமைப்புகளே ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும் குலைக்குமளவு வளர்ந்துவிட்டன. இந்தியாவின் அரசியல் கட்சிகள் இதற்கு வித்திட்டு வளர்த்து வருகின்றன என்றால் அது மிகையில்லை. இன்றும் கூட சில தொகுதிகளை,  குறிப்பிட்ட சமூகத்தினரின் ‘பெல்ட்’ என்று அடையாளப்படுத்தி, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, அவர் அந்தத் தொகுதிக்குத் துளியும் சம்பந்தப்படாதவராயினும். வேட்பாளராக நிறுத்தும் ‘ராஜதந்திர’ யுக்திகளைக் கட்சிகள் பின்பற்றி வருவது அவலம். தேசியக் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கல்வி, தொழில் காரணங்களால் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு மனிதர் உலகெங்கும் படர்ந்து வாழும் நிலையில், மொழி, சாதி, மதப் பிரிவுகளின் அடிப்படையில் மக்களவைத் தேர்தலை அணுகுவது மிகப் பெரிய அவலம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடியவர்கள் நாங்கள் என்று மேடையில் மட்டும் பெருமையடிப்பவர்கள் உண்மையான தலைவர்களாக இருக்க முடியாது.

ஒரு சாமான்ய வாக்காளனின் மனதில், ‘இத்தனை குழப்பங்களிடையே, பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வேண்டுமா? தனி ஒருவனான எனது வாக்கு எதையும் மாற்றிவிடப் போவதில்லையே’ என்ற எண்ணம் எழக்கூடும். உங்களது வாக்குரிமை, உங்களிடமிருக்கும் வலிமை கொண்ட, அகிம்சை பாராட்டும் ஆயுதம். நேர்மையுடனும், நல்ல திட்டங்களுடனும் நிற்கும் உங்கள் தொகுதி வேட்பாளருக்கு வாக்களியுங்கள். உங்களது வேட்பாளர் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் புள்ளிவிபரக் கணக்குகள் நேர்மையான வேட்பாளர்களுக்குக் கிடைத்திருக்கும் ஓட்டு எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டி, வருங்காலத் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்கக்கூடும். அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆற்றல் உங்கள் வாக்குக்கு உண்டு.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad