\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சர்ப்ரைஸ் கிஃட்

ன்னா.. வேலண்டைன்ஸ் டே வர்ரதே, என்ன கிஃப்ட் தரப் போறேள்”, ஞாயிற்றுக் கிழமை மாலை வேறேதும் வேலையில்லையென ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக் கொண்டிருந்த கணேஷின் அருகில் வந்தமர்ந்து கேட்டாள் லக்‌ஷ்மி. நாற்பதுகளில் இருப்பினும், இளமையும் காதல் உணர்வும் சற்றும் குறையாத தம்பதி.

“என்னடி பெரிய வேலண்டைன்ஸ் டே, அது கிதுன்னு…” அவள் அளவு அதிகமாக வெளிப்படுத்தாத அவனின் பதில். “நேக்குத் தெரியாதா, இப்படித்தான் சொல்வேள், ஆனா எதாவது சர்ப்ரைஸ் வெச்சிருப்பேளே” என்றவளை உடனடியாக நிறுத்தி, “ரொம்ப ஏதாவது இமேஜின் பண்ணி வச்சுக்காத, ஏமாந்து போப்போற..” என்று முடித்தான்.

மறுநாள் கணவன் அலுவலகத்திற்குச் சென்றபிறகு வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தாள் லக்‌ஷ்மி. பெட்ரூம் வார்ட் ரோப்பை க்ளீன் செய்யலாமென்று தொடங்கினாள். ஹிஸ் அண்ட் ஹெர்ஸ் என்று கட்டப்பட்டிருந்த வாக்-இன் க்ளாசெட்களில் அவனது உடைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியைச் சரி செய்யத் தொடங்கினாள். ஒவ்வொன்றாக எடுத்து, மடித்து வைத்து, சேரிட்டிக்குப் போடுவதற்கானவற்றைத் தனியாக எடுத்து வைத்து, வழக்கமாகச் செய்யும் துப்புரவு வேலைகளைத் தொடங்கியிருந்தாள். ஒவ்வொரு டிராயராகச் சரி செய்து கொண்டே வர, அந்த சீக்ரெட் டிராயரைத் திறக்கையில், ஒரு சில துணிகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆல்பம் கண்ணுக்குத் தெரிந்தது. பார்த்தவுடனேயே அது புதிது என்று புரிந்தது. லக்‌ஷ்மிக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது. இதுதான் வேலண்டைன்ஸ் டே சர்ப்ரைஸ் கிஃப்ட்டோ? எடுத்துப் பார்க்கலாமா, வேண்டாமா என்ற ஒரு போராட்டம். சர்ப்ரைஸ் செய்வதற்காகச் செய்து வைத்திருந்தானென்றால் அதனைக் கெடுப்பது சரியல்ல என்று ஒரு பக்கம்.. அப்படி என்னதான் வைத்திருப்பான், பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வம் இன்னொரு பக்கம். பெரிய மனப்போராட்டமாகவே மாறியிருந்தது.

பல முறை யோசித்துப் பார்த்தும், தவறுதான் என்று புரிந்தும், என்னதான் சர்ப்ரைஸாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளத் தோன்றிய ஆர்வம் கடைசியில் வென்று விட, அந்த ஆல்பத்தை வெளியில் எடுத்தாள் லக்‌ஷ்மி. சந்தன நிற அட்டையின் மத்தியில் ரோஜாப் பூப் படம் பொறிக்கப்பட்டு, அதனைச் சுற்றி ஆட்டின் வடிவத்தில் வெண் முத்துக்கள் பதிக்கப்பட்ட டிசைன். கூர்ந்து பார்க்கையில் அனைத்துமே சொந்தமாகச் செய்யப்பட்டது என்பது புரிந்தது. கணேஷ் ரொமாண்டிக்கானவான் தான், ஆனாலும் ஒரு இடத்தில் அமர்ந்து, மெனக்கெட்டு இதுபோன்ற நுண்மையான வேலைகளில் நேரம் செலவிடுபவனல்ல என்பதைத் தெரிந்து வைத்திருந்த லக்‌ஷ்மி மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளானாள். ஆர்வம் மிகுதியுற, க்ளாஸட்டிலிருந்து வெளி வந்து, படுக்கையில் அமர்ந்து ஆல்பத்தைத் திறந்தாள்.

சர்ப்ரைஸைக் கெடுப்பது சரியல்ல என்று தோன்றினாலும், கணவனேயாயினும் ப்ரைவஸி என்பது வேறு என்ற பொதுவான நாகரிகம் கொண்டவளெனினும், தனக்காக வைத்திருந்த சர்ப்ரைஸ் கிஃப்ட் தானேவென்று, தானே ஒரு விதிவிலக்கு விதித்துக் கொண்டு, படுக்கையில் அமர்ந்து ஆல்பத்தைப் பிரிக்கத் தொடங்கினாள்.

“என் உயிராய்க் கலந்த காதலுக்கு”

என்றது முதற்பக்கம். அழகான கையெழுத்து. அவ்வளவாக தமிழ் வராவிட்டாலும், எழுத்துக் கூட்டிப் படித்து அறிந்து கொள்ளுமளவு தமிழ் கற்றுக் கொண்டிருந்த லக்‌ஷ்மி, அதனைப் படித்துவிட்டு மனதிற்குள் மெதுவாக நகைத்துக் கொண்டாள். இது கணேஷின் கையெழுத்துப் போல இல்லையெனத் தோன்றியது. ஆனாலும், தமிழில் அவன் கையெழுத்தை அவ்வளவாக உற்று நோக்கியதில்லையென்பதால், அந்த எண்ணத்தைப் பொருட்படுத்தாது அடுத்த பக்கம் சென்றாள்.

ஏரிக் கரையினிலே எழிலான ஒரு கிராமம்

ஏரியின் நீரையும் எழில்தரும் சோலையையும்

ஏரெடுத்துப் பார்க்காமல் என்னையே நோக்கிடும்

ஏற்றமிகு உந்தன் எழிலினை மறந்திடுவேனோ?

நான்கு வரியில் நாற்பது பக்க உணர்வுகளைச் சொல்லிய கவிதை ஒருபுறம்; கைகளால் தீட்டப்பட்ட தத்ரூபமான ஓவியம் மறுபுறம். ஓவியத்தில், ஒரு இளைஞன் ஏரி நீரின் அருகிலே போடப்பட்ட பெரிய கல்லில் அமர்ந்திருக்கிறான். வெள்ளை நிற வேட்டியும், கை வைக்காத பனியனும் அணிந்து. அவனது கைகளில் ஒரு புத்தகம். பத்தடி தொலைவில், ஏரியின் கரையில், பசுமை நிறத் தாவணியும் சந்தன நிறப் பாவாடையும் அணிந்து, அவனைப் பார்ப்பதற்காகவே அங்கு சைக்கிளில் வந்திருந்த மங்கை. சைக்கிளை நிறுத்தி, கீழிறங்கி அதனைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி. தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்ததும், லக்‌ஷ்மி தன் கிராமத்திற்கே சென்று விட்டாள். அவளின் விஸ்தாரமான ஜமீந்தாரர் வீட்டிற்குப் பின்புறம் ஒரு ஐந்து நிமிடங்கள் சைக்கிளில் சென்றால் வந்து சேரும் கண்மாய். அவன் அந்த ஊரில் வாழவில்லையெனினும், திருமணத்திற்குப் பிறகு இருவரும் பலமுறை அந்தக் கண்மாய்க் கரையில் நடந்து சென்று அவளின் பிரியமான அனுமார் கோயிலுக்குச் சென்று வருவது வழக்கம். அந்தக் கரையில் தான் சைக்கிள் ஓட்டித் திரிந்ததைப் பலமுறை கூறியிருக்கிறாள். அதனை வைத்துக் கொண்டு எழுதியிருப்பானோ? அவனுக்குப் படம் வரைய வராதே? யாரைக் கொண்டு வரைய வைத்திருப்பான்? சைக்கிளின் க்ராஸ் பாரில் பி.எஸ்.ஏ. என்று எழுதும் அளவுக்கு டீடெய்ல்ட் ட்ராயிங்க் போடத் தெரிந்த இரண்டு மூன்று நண்பர்கள் அவனுக்கு உண்டு. அவரில் யார் வரைந்து கொடுத்திருப்பார்கள்? பொதுவாக அவனுக்கு வேண்டியவற்றை வரைந்து கொடுப்பவள் லக்‌ஷ்மியே. “டீட்டெய்ல் எல்லாம் நன்னாத்தான் இருக்கு, ஆனா என்னோட சைக்கிள் பி.எஸ்.ஏ இல்லன்னு மறந்துடுத்து அசமஞ்சம்” தனக்குள்ளேயே செல்லமாய்க் கணவனைத் திட்டிக் கொண்டே அடுத்த பக்கம் புரட்டினாள்.

பள்ளி மங்கையர் பக்கத்தில் இருக்க

பள்ளி அறையின் பிரதாபம் பேசிய

பள்ளி நினைப்பது பலகாலம் கடந்தும்

பள்ளி இன்பம்போல் பசுமையாய் விளங்குது!!

கன்னியொருத்தி, அவளைச் சுற்றி இரண்டு மூன்று நண்பிகள். அனைவரும் ஒரு வகுப்பறையில் அமர்ந்திருப்பது போலக் காட்சி. அவர்களுக்கு அருகில் போடப்பட்டிருந்த பெஞ்சில், இளைஞன் அமர்ந்திருக்க, அவன் ஏதோ சொல்வது போலவும், அவன் சொல்வது கேட்டு அவள் வெட்கித் தலைகுனிவது போலவும் மிகவும் அழகாய் இன்னொரு சித்திரம். லக்‌ஷ்மிக்கு, அவளின் நண்பி ஷ்வேதாவையும் கமலியையும் அழைத்துக் கொண்டு, திருட்டுத் தனமாய் அவனைப் பார்ப்பதற்கு அவனது கல்லூரி சென்று, அவன் வகுப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நினைவு வரத் துவங்கியது. பொதுவாக இதுபோன்ற விஷயங்களையெல்லாம் மறந்துவிடுவானே இவன்? மறந்துவிடுவானா, இல்லை மறந்ததுபோல நடிப்பானா? அல்லது இந்த கிஃப்ட்க்காகக் கஷ்டப்பட்டு நினைவு படுத்திக் கொண்டானா? லக்‌ஷ்மியின் குழப்பம் தொடர்ந்தது. படத்தைச் சற்று உற்றுப் பார்க்கையில் அதன் பின்னணியிலிருந்த மரங்கள், சோலை போன்ற அமைப்பு கல்லூரி வகுப்பறை போல் தோன்றவில்லை. தவிர நான்கைந்து பெண்கள் அங்கிருந்தது அவள் நினைத்த காட்சியாக இருக்குமோவென அவளைச் சந்தேகம் கொள்ளச் செய்தது. “ரொம்ப ஆராயக் கூடாது, இந்த டீடெய்லெல்லாம் நன்னா ஞாபகமிருக்காது இந்த ஆப்ஸெண்ட் மைண்டட் ப்ரொஃபஸருக்கு” – தன்னைத் தானே திருத்திக் கொண்டாள் லக்‌ஷ்மி.

மூன்றாவது பக்கம் திருப்ப, இன்னொரு படம். படத்தில் ஒரு மாடர்ன் ட்ரெஸ் பெண் கைனடிக் ஹோண்டாவில், ஆளரவமற்ற தெருவில் தரையில் இடது கால் பதித்து. அருகில் பெல்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு ஒரே ஒரு நோட் புத்தகத்தை வைத்துக் கொண்டு சற்று ஸ்டைலாக இளைஞன். “கரெக்ட், ஐ ரிமெம்பர் ஹிம் லைக் தட். அந்த நாட்களில் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தாலும் பார்க்காதது போல நடந்து போவான். அப்போதெல்லாம் அவன் பார்க்கவில்லையென்றுதான் நினைத்தேன். பின்னர்தான் சொன்னான், பார்ப்பதைவிட பார்க்கப்படுவதே பிடிக்குமென”, லக்‌ஷ்மியின் ஃப்ளேஷ்பேக் நினைவுகள். அந்தப் படத்தின் இடது பக்கத்தில்

மின்னல் வேகத்தில் மோட்டாரில் பறக்கும்

மின்னும் பெண்ணவளின் மேனியின் எழிலுக்கு

மன்னவன் இவனேயென்று மனதினால் வரித்தது

மண்ணுள்ள வரையிலும் மனம்விட்டு அகலாது!!

அழகான, அர்த்தம் பொதிந்த, பழைய நினைவையும் இன்றைய நிலையையும் காட்டும் நான்கு வரிகள். “அப்பப்ப கோபம் வந்தாலும், உன் ஆத்துக்காரர் ரொம்ப ரொமாண்டிக்டி” மிகவும் அந்நியோன்யமான தோழி அடிக்கடி சொல்வது சரிதானென்று தோன்றியது லக்‌ஷ்மிக்கு. ஆனால், தான் கைனடிக் ஹோண்டா வைத்திருந்ததில்லையே, லூனாவைக் கைனடிக் ஹோண்டா என்று நினைவில் வைத்துக் கொண்டானா அந்த இடியட், மறுபடியும் செல்லமாய்த் திட்டிக் கொண்டாள்.

பக்கங்கள் புரட்டிக் கொண்டேயிருக்க, பல படங்கள். பல கவிதைகள். பல சம்பவங்களின் நினைவுகள். ரொமாண்டிக் மூடின் உச்சத்திற்கே சென்று விட்டாள். ஆனால், ஒவ்வொரு படங்களில் ஒருசில விஷயங்கள் தவறுதலாக இருந்தன. சிறிய வேற்றுமைகள் அனைத்தையும் அவனின் கவனக் குறைவாக நினைத்துக் கொண்டாள். கணவன் கணேஷை முழுவதுமாய் மிஸ் செய்ய ஆரம்பித்திருந்தாள். இன்னும் ஒரே ஒரு பேஜ்தான் மீதமிருந்த வேளையில் காலிங் பெல்லின் ஒலி. யார் வந்திருப்பார்கள் இந்த நேரத்தில்? டி.வியின் சானலை வெளியிலிருப்பவர்களைக் காட்டும் காமெரா சானலுக்கு மாற்றினாள். கதவுக்கு வெளியே நின்று கொண்டிருப்பவன் கணேஷ். எதற்காக இவ்வளவு சீக்கிரம் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து விட்டான்?

அவசர அவசரமாய் எழுந்து, ஆல்பத்தை மூடி, எடுத்த சீக்ரெட் லாக்கரிலேயே வைத்து விட்டு, எல்லாத் துணிகளையும் முன்போல அரேஞ்ச் செய்துவிட்டு, க்ளாஸட் கதவை மூடிவிட்டு வெளிக் கதவு நோக்கி நடந்தாள். நடந்து செல்லும் வழியில் எல்லா இடங்களையும் நோட்டம் விட்டுக் கொண்டே, தான் அந்த ஆல்பத்தைப் பார்த்ததைக் காட்டிக் கொடுக்கும் ஆதாரம் எதுவும் இல்லையென உறுதிப்படுத்திக் கொண்டே நடந்தாள். அவன் கண்டுபிடித்து விடக்கூடாது, சர்ப்ரைஸ் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். அனைத்தையும் உறுதி செய்தபிறகு கதவைத் திறக்க, “ஏண்டி, ஏன் கதவு திறக்க இவ்வளவு நேரம்?” என்றவனிடம் உடனடியாக, “ஸ்னானம் பண்ண ரெடியாய்ட்டேன், பெல்லடிச்ச உடனே சரி பண்ணிண்டு வர சத்த நாழியாய்டுத்து” என்றாள். “காமெரால பாத்துட்டியோன்னோ நான் தான்னு, அப்றம் என்ன, அப்டியே வர வேண்டியதுதானே” என்று ரொமான்ஸ் பேசியவனை “சீ” என்ற ஒரே வார்த்தையில் அடக்கி, உள்ளே ஓடினாள்.

“சி.ஏ.ஏ. ப்ரோடஸ்ட் நடந்துண்டுருக்கு ஊர் பூரா… அகெய்ன்ஸ்ட்டா ஃபாரான்னு தெரியல.. ஆனா, கலவரம் வரும் எதிர்பார்த்து ஆஃபிஸ் லீவ் விட்டுட்டா” சொல்லிக் கொண்டே ஷர்ட், பனியன் கழட்டிக் கொண்டே க்ளாஸட் நோக்கி நடந்தான் கணேஷ். “ஓ, ஐ ஸீ…” க்ளாஸட்டில் தான் சர்ப்ரைஸ் கிஃப்ட் பார்த்தது தெரிந்து விடுமோ என்ற பயத்திலிருந்த அவளுக்கு, அவனது காரணத்திற்கான விடை தருவதில் ஆர்வம் இல்லாது போனது.

க்ளாஸட்டிற்குள் நுழைந்து, மாற்று உடைகளை எடுக்க முனைந்தவனுக்கு பாதியாய் மூடப்பட்டிருந்த சீக்ரெட் ட்ராயர் கண்ணுக்குப் புலப்பட்டது. அதனை முழுவதும் திறந்து பார்க்கையில் உள்ளிருந்த ஆல்பம் தெரிய, அவசர அவசரமாய் வெளியில் எடுத்தான். அவனது ஆர்வம் அதிகமாக, மனைவிக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்பதற்காக ஷவரைத் திறந்து விட்டு, குளிப்பது போல் பாவ்லா செய்து கொண்டு, ஆல்பத்தின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான்.

ஆழ்ந்து ரசித்து, ஒவ்வொரு பக்கமாய்ப் படித்து, ருசித்துக் கடைசிப் பக்கத்தை அடைந்தான்.

இருபது முறைநாம் இருவரும் இணைந்து

இருப்பது எல்லாம் சுவைத்து உணர்ந்து

இருபது கோடி வருடங்கள் முடிந்து

இருப்பது நம்முறவே என்றிருந்தோம் நிலவே!!

 

இருபது கோடி வருடங்கள் தொடர்ந்து

இருப்பது நம்காதல் என்றிருந்த உறுதி

இருபது வருடம் தாண்டிடும் முன்னமே

இருப்பது நினைவுகளொன்றே என்றானது நிலவே!!

 

இருபது வருட நினைவுகள் என்னுள்

இருப்பது போலவே அவன் இதயமுள்

இருபது நிமிடப் பொழுதேனும் நானின்று

இருப்பது நிஜமா கண்டுவா நிலவே !!!

நான்கு வரிகளில் முடிந்திருந்த முந்தைய கவிதைகள், நீண்டிருந்த கடைசிப்பக்கம். சித்திரமாய் மட்டுமேயிருந்த முந்தைய பக்கங்கள் போலல்லாமல் புகைப்படமாய்ச் சிரித்து நின்றாள் கடைசிப் பக்கத்தில்.

கணேஷின் முதற்காதல், கவிதாயினி, பாரதி வெள்ளை நிறப் புடவையில், கருமை நிறப் பின்புலத்தில் நிலாவினைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற நிஜமான புகைப்படம். அழகாய்ச் சிரித்து, முல்லை நிறப் பற்களைக் காட்டிக் கொண்டு.

இன்று காலை செக்யூரிட்டி கொண்டு வந்து கொடுத்த கொரியர் பார்சலிலிருந்தது ஆல்பம். ஃப்ரம் என்ற பெயரில் “பாரதி” என்றும், அட்ரெஸ் பெங்களூர் என்றும் இருந்ததைப் பார்த்த நொடி முகமெங்கும் குப்பென வியர்க்கத் தொடங்கியிருந்தது. இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் நண்பன் பிரகாஷிற்கு இந்தப் புதிய வீட்டின் அட்ரெஸ் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அவசர அவசரமாய் அந்த ஆல்பத்தை சீக்ரெட் டிராயரில் மறைத்து வைத்துவிட்டுச் சென்று, அலுவலகத்தில் சற்றும் இருக்கை கொள்ளாது அமர்ந்திருந்து, இதனைப் பார்ப்பதற்காகவே ஏதோவொரு பொய்யைச் சொல்லி, வீட்டுக்கு வந்த கணேஷ் பழைய காதலியின் சர்ப்ரைஸ் வேலண்டைன்ஸ் டே கிஃப்டைக் கையில் வைத்தவாறு சுவற்றில் சாய்ந்தான்.

கண்கள் பனித்து, இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்தது.

    வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad