\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தீபாவளி

Filed in இலக்கியம், கட்டுரை by on November 4, 2013 0 Comments

Diwali_620x443இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப பலவிதமான பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் அமைகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. எல்லாவி்தமான நம்பிக்கைகளையும் ஒதுக்கி விட்டு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்களின் நிகழ்வுகளை வைத்து, அதனைக் கொண்டாடும் மக்களின் எண்ணிக்கைகளை வைத்து இந்தியாவின் ஒரு பொதுவான பண்டிகை என்று சொல்ல வேண்டுமானால் தீபாவளி என்று கூறிவிடலாம் என நினைக்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் குறித்தது என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டாலும், இதன் பின்னணி என்பது பல மதங்களையும், அவற்றின் செயல்படுத்துதலையும் பொதுவாகக் கொண்டது என்பதை இதனைக் கொண்டாடாதவர்களும் ஏற்றுக் கொள்வர் என்பது நமது நம்பிக்கை.

தீபாவளியின் தாத்பர்யம் என்ன, எதற்காக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது அல்லது எவ்வாறு கொண்டாடப் படுகிறது என்பதை விளக்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமன்று. தீபாவளி அன்று பொதுவாக அதனைக் கொண்டாடுபவர்களின் மனநிலை என்ன, தீபாவளி என்ற தினத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்ததும் அவர்களின் மனக்கண் முன் வரும் பசுமையான நினைவுகள் என்னென்ன என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தோம். யோசிக்க யோசிக்க மற்றவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை விட நம் நோக்கிலிருந்து வரும் பசுமையான எண்ணங்களைப் பற்றிய நினைவுகள் மட்டுமே நம் மனதில் மேலோங்கி நிற்க ஆரம்பித்தது. சராசரி மனிதர்களில் ஒருவரான நம் மனதில் எழும் நமது அனுபவங்கள் சராசரியாகப் பலருக்கும் பொருந்தும் என்ற நினைப்புடன் நமது பழமையை எழுதுவதாக முடிவெடுத்தோம்.

இன்பங்களை மட்டுமே எதிர் நோக்கும் பள்ளிப் பருவம் தீபாவளிக்குக் கிட்டத்த ஓரிரு மாதங்களுக்கு முன்னரே வகுப்பறையில் சக மாணவர்களுடன் தீபாவளி பற்றிய பேச்சுக்கள் தொடக்க ஆரம்பித்து விடும். பணக்காரக் குழந்தைகள் மத்தியிலே தீபாவளிக்காக வாங்கும் புத்தாடை குறித்து பெறுமளவு பேச்சிருக்காது, ஏனென்றால் தீபாவளிக்காக மட்டுமே புத்தாடை வாங்கும் பழக்கம் அவர்களுக்கிடையே இல்லையென்பதுதான். மற்றவர்களுக்கிடையே இந்தப் பேச்சு முதன்மையானதாக இருக்கும். “நேத்து டவுனுக்குப் போனமுடா, துணியெடுக்க, பஸ்ஸுல ஆரம்பிச்சு கடவீதி முளுக்க ஒரே சனக்கூட்டம்.. எம்புட்டு புதுத்துணி குவிச்சு வச்சிருந்தாய்ங்க தெரியுமா? உங்க வீட்டுல எப்படா துணி எடுக்கப் போறீக?…” நேற்றுக் கடைக்குப் போய் வந்தவன் பெருமையாய்க் கேட்பான். வீட்டில் நாம் அதே கேள்வியைக் கேட்டு, “இப்ப என்னடா தீவாளிக்குப் பெரிய அவசரம், போய்ப் படிக்கிற வேலையப் பாரு”.. படிப்பை எதற்கு வேண்டுமானாலும் காரணமாகச் சொல்லலாம் என்று நினைக்கும் அம்மா தமது வறுமையையும், இயலாமையையும் “படிப்பில் கவனம் செலுத்து” என்று சொல்வதன் மூலம் பவுசாக மறைக்கிறாள்

இதே போல பல மாணவர்களின் துணிக்கடை விஜயமும், அதைத் தொடர்ந்து மறுநாள் அவர்களின் பிரஸ்தாபங்களும் ஒவ்வொரு தினமும் நடந்து முடிக்க, வீட்டில் அம்மாவின் “படிக்கிற வேலையைப் பாரு” என்ற கட்டளைகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. ஒரு வழியாக அப்பா பள்ளியில் போட்டிருந்த சொஸைட்டி லோனிலிருந்து அந்த வருடக் கோட்டா வெளிவர, தமிழக அரசு நிறுவனமான ராம்கோ துணிக்கடைக்குச் சென்று துணிமணி வாங்கி வரக் கிளம்பியாகிவிட்டது. நண்பர்கள் விளக்கிய துணிக்கடல்களை மனதில் வைத்துக் கொண்டே உள்ளே நுழைந்த நமக்கு, வெறிச்சோடியிருந்த ராம்கோ வியப்பாக இருந்தது. நான்கு மூலைகளிலும் கதர் வேட்டி கட்டிக் கொண்டு கசங்கிப் போன சட்டையுடன் படாடோபம் எதுவுமில்லாத வயதான நான்கு வியாபாரிகள், குடும்பத்துடன் உள்ளே நுழைந்த எங்களைச் சட்டை செய்பவர் எவருமில்லை. நாங்களே எதையோ பார்த்து, பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வெளிவந்து இன்னமும் விற்காத காட்டன் சட்டைத் துணியையும், பள்ளி சீருடையாகவும் பயன்படும் வண்ணம் டூயல் பர்ப்பஸாக ஊதாக் கால்சட்டையும் வாங்கிக் கொண்டு வெளிவருகிறோம், நண்பர்களின் ஸ்பன் ஷர்ட்ஸும், டெர்ரிக்காட் பேண்டும் கானல் நீராய்க் கண்களில் நடனமாட, பல வாரங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த, சந்தோஷமாக இருக்க வேண்டிய அந்த நாளில் “இது கூட இல்லாம எத்தன பேரு கஸ்டப் படுராய்ங்கன்னு தெரியுமாடா” என்ற பேச்சைக் கேட்டுக் கொண்டே அழுகையுடன் வெளி வருகிறோம். மறுநாள் பள்ளிக்கு லீவு போட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியே வந்தது இன்றுகூட பசுமரத்தாணியென நினைவில் இருக்கிறது.

பொதுவாக காலை ஏழு மணியானாலும் படுக்கையை விட்டு எழுவதற்குப் போராடும் நம் பள்ளிப்பருவ வாழ்க்கை, தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுமையாக மாற்றத்தோடு காணப்படும். பள்ளிப் பருவத்தில் நாம் வாழ்ந்தது ஒரு சிறு கிராமம். சுற்று முற்றும் அனைவரையும் நன்கு அறிவோம், தீபாவளி வருவதற்கு பல நாள்களுக்கு முன்னரே போட்டி ஆரம்பித்து விடுவோம். தீபாவளி தினத்தன்று அதிகாலையில் முதலாவதாக எழுந்து வெடி வெடிப்பது யார் என்பதுதான் போட்டி. அந்தப் போட்டியை மனதில் வைத்திருந்து, நான்கு மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு தயாராகி விடுவோம். வீட்டில் அண்ணன், அக்கா அனைவரும் எழுந்து ஒன்றாக அமர்ந்தால் மட்டுமே சம்பிரதமாய்த் தலையில் எண்ணெய் வைப்பேன் என்று விடாப்பிடியாக அம்மா பிடிவாதம் பிடிக்க, பக்கத்து வீடு எதிர்த்த வீட்டிலிருந்தே யாரேனும் வெடி வெடித்து விடுவார்களோவென்ற பதைபதைப்பில் இருப்புக் கொள்ளாமல் காத்திருந்தது இன்றும் நினைவிலிருக்கிறது.

வருடம் தொடங்கியதிலிருந்து பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போட்ட தீபாவளிச் சீட்டு.. மாதத்திற்கு ஐந்து ரூபாயென்று போட்டு, வருடக்கடைசியில் வட்டி மற்றும் இனாம்களுடன் சேர்ந்து எழுபத்தி ஐந்து ரூபாயாக முதிர்ந்து வந்த பணம். மொத்த ஆசிரியர்களின் பணத்தையும் எடுத்துக் கொண்டு ஒருவர் சிவகாசிக்கே சென்று மலிவு விலையில் – அதாவது ஒவ்வொருவரின் எழுபத்து ஐந்து ரூபாய்க்கும் வெளியில் வாங்க முடிந்ததைவிட மிக அதிக அளவில், பஸ் செலவுகள் போக – பட்டாசு வாங்கி வந்து பண்டிலாகக் கொடுப்பர். அதிலிருந்து வாங்கி வரப்பட்ட வெடிகளை வெடித்து முடிப்பதற்கு ஓரிரண்டு மணி நேரங்கள் ஆகும். பக்கத்து, அடுத்த வீட்டு வங்கியில் வேலை செய்யும் பணக்காரர்களின் குழந்தைகள் இன்னும் பல மணி நேரங்கள் வெடிக்கும் வெடிச் சத்தத்தை கேட்கக் கூடாது என்று வீட்டின் அடுக்களைக்குள் நுழைந்து காதை மூடிக் கொண்டிருந்ததை இன்றும் கண்களை மூடி நினைவு படுத்திக் கொள்வதுண்டு.

பெரும்பாலான தீபாவளித் தினத்தன்று மழை வருவது வழக்கம். ஒருமுறை முதல் தினத்திலிருந்து தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. வெளியில் வைத்து வெடியை வைத்துப் பத்த வைக்க முயற்சிக்கையில் ஒன்றும் வெடிக்கவில்லை. சிலமுறை மறுபடி மறுபடி வெடிக்க வைக்க முயற்சித்துத் தோற்றபின்னர், பெய்யும் மழையின் ஈரத்தில் பட்டாசுகள் யாவும் பதத்துவிட்டன என்ற உண்மை விளங்கிற்று. பதத்த பட்டாசுகளை மீண்டும் உயிர்ப்பிக்க, ஒரு தாம்பாளத்தில் வைத்து மிதமான சூட்டில் அடுப்பின் மேல் வைத்தோம். சற்று அதிக நேரம் வைக்கப்பட்டதோ அல்லது ஏதேனும் ஒரு திரி வெளியே நீட்டிக்கொண்டு பற்றிக் கொண்டதோ தெரியவில்லை – அனைத்து வெடிகளை அதனதன் தன்மைக்கேற்ப சத்தங்களுடன் அடுப்படியிலேயே வெடித்து முடித்ததும், அவற்றை நிறுத்தி ஒரு சிலவற்றையாவது காப்பாற்றி எடுத்து வெளியில் கொண்டு வெடிக்கச் செய்யவேண்டுமென உள்ளே செல்ல முயற்சிக்கும் நம்மைக் காயப்படாமல் காப்பாற்ற வேண்டுமென்று வலுக்கட்டாயமாய் பிடித்து இழுத்து வைத்துக் கொண்ட அம்மாவின் பிடியில் மாட்டிக் கொண்டு அடுப்படி முழுவதும் மிளிரும் நெருப்பினைப் பார்த்துக் கொண்டே அழுது கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன.

அப்பா ஒரு உயர்வான ஆசிரியர் பணி புரிந்தவர். வேகம் அதிகமானவர். தான் சரியென்று நினைத்ததைச் செய்வதற்குத் தயங்குபவரில்லை. கொள்கைப் பிடிப்பு மிகவும் உடையவர். தமிழ் நாடு முழுவதும் ஆசிரியர் சங்கங்கள் தங்களின் உரிமை கேட்டு சட்ட எரிப்புப் போராட்டம் நடத்த, தன் பள்ளியின் பிரதிநிதியாய் முதல் நாள் போராட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கமாய் காலையில் சம்பிரதாயமாய்க் கைது செய்து மாலையில் விடுதலை செய்யும் தமிழக அரசு, இந்த முறை சற்றுக் கடுமையாக நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்தது. கைது செய்யப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை மதுரையிலிருந்த மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பியது. அவர்களின் மேல் சட்ட எரிப்புக் குற்றம் சாட்டி ரிமாண்டில் வைத்தது. எந்தச் சங்கங்களும் இந்த நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தன. தொடர்ந்து நடந்த போராட்டங்களில் பல ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்தக் கைதுகளெல்லாம் வழக்கம்போலச் சம்பிரதாயத்துக்காக காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப் பட்டனர். முதல் நாளில் கைது செய்யப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மட்டும் அறுபத்து ஐந்து நாட்கள் சிறைச்சாலையில் வாழ்க்கை நடத்தினர். பல போராட்டங்களுக்குப் பிறகு, தீபாவளியை முன்னிட்டு இந்த ஆசிரியர்கள் விடுவிக்கப் பட்டனர். தீபாவளி அன்று காலை ஒன்பது மணிக்கு மேல் வீடு வந்து சேர்ந்த தந்தையை வரவேற்க வாசலில் நிற்க வைத்து விட்ட வாண வேடிக்கைகளின் நிறைந்த மகிழ்ச்சி இன்று வரை வேறெந்த தீபாவளிப் பட்டாசிலும் இருந்ததாகத் தோன்றவில்லை.

கடைசியாக ஒரு ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஒரு சிலகாலம் வாழும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தது. அந்த வருட தீபாவளி எங்களின் இந்திய இல்லத்தில். அண்ணன்கள், அக்காள் அவர்களின் குடும்பம், குழந்தைகள் – மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்று சேர்ந்தோம். பல வருடங்களுக்குப் பின்னர் சாமியறையில் ஒன்றுமேல் ஒன்றாய் அடுக்கப் பட்டிருந்த புதுத்துணிமணிகளை அம்மாவும், அப்பாவும் ஒறு சேர நின்று வினியோகம் செய்தனர். நாங்களும் எங்களின் மனைவி குழந்தைகள் சமேதராய் ஒவ்வொரு குடும்பமாய் வரிசையில் நின்று துணிமணிகளைப் பெற்றுக் கொண்டு தாய்தந்தையர் பாதங்களின் விழுந்து ஆசி பெற்றோம். இருந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் ஸ்டில்ட் லெவல் பார்க்கிங்கில் இரண்டு சேர்களைப் போட்டு அம்மாவையும் அப்பாவையும் அமரச்செய்து, பிள்ளைகள், மருமக்கள், பேரன் பேத்திகள் என அனைவரும் காசைத் தண்ணீராய்ச் செலவிட்டு வாங்கிய தீபாவளிப் பட்டாசுகளை வெடித்து தள்ளினோம். வீடியோ, ஃபோடோ என தெருவையே அல்லோகல்லோலப் படுத்தினோம். பழைய ராம்கோ, டெய்லர் அப்துல் காதர், சிவகாசி வெடிப் பண்டில், அடுக்களையில் வெடித்து முடித்த பதத்துப் போன பட்டாசு எனப் பேசாத கதையில்லை. அந்தத் தீபாவளிதான் அம்மாவின் கடைசி தீபாவளி. எங்களின் முழுமையான வாழ்வின் கடைசி தீபாவளியும் அதுதான்.

நாளை இந்த வருட தீபாவளி. புதுத்துணிமணி வாங்கியாகி விட்டது. அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டிய தினங்களில் விற்கப்பட்ட பட்டாசுகளையும் வாங்கிச் சேர்த்து வைத்துள்ளோம். சமீபத்தில் இந்தியா சென்றபோது தீபாவளிக்காக குழந்தைகளுக்கு சில நகை நட்டுக்களும் வாங்கி வந்தாகி விட்டது. பட்சணங்கள் பல செய்து முடித்தாகி விட்டது. ஒரு இருபது இருபத்தைந்து நண்பர்களின் குடும்பங்களுடன் நாளை தீபாவளி கொண்டாட இருக்கிறோம். குழந்தைகள் குதூகலிக்கக் காத்திருக்கின்றனர். நம் நினைவு இன்னும் அம்மா உடனிருந்த கடைசித் தீபாவளியிலேயே உறைந்து போயிருக்கிறது.

அன்னையுடன் அறுசுவை மட்டுமல்ல அருஞ்சுவையான அனுபங்களும் போகும்!!!

–    வெ. மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad