\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மொகஞ்சதாரோவின் மதுரா

mohanjadaro-madura_620x866ஒரு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காலை அழகிய அல்லிப்பூப் போல மலர்ந்தது. சேவல்கள் கூவின, பறவைகள் பாடின, பசுக்கள் கதறி கன்றுகளை அழைத்தன. ஆகா காலை நேரம் குழந்தைகளும், பெரியவர்களும் இலேசாகச் சோம்பல் முறிந்து எழுந்து கொண்டனர்.

குட்டி மதுரா தனது தாய் தந்தையினர் எழும்ப முதல் எழுந்துவிட்டாள். அவளும் செங்களுநீர் மொட்டுகள் போல அழகிய மழலை முகமுடையவள். காலையில் குயில் கூவலையும், கதிரவன் செங்கதிர்கள் வீட்டின் மரத்தூண்களினால் ஆன முகட்டுத் துவாரங்களினூடு தனது கட்டிலிற்கு வருவதையும் பார்த்து ரசித்தாள்.

மேலும் சிறிது சிறிதாக தனது அறைக் கதவுகள் தாழ்வாரங்களில் செதுக்கப் பட்ட அழகிய மரவேலைப்பாடுக்களில் உள்ள பூக்கள், பறவை போன்ற வேலைப்பாடுகளையும் பார்த்தாள். அவள் தனது கானக் குரலில் சந்தோசமாகப் பாடியவாறு கட்டிலை விட்டு எழுந்து கொள்ளுவது அவள் பெற்றோரின் அறை வரை சென்றது.

மதுராவிற்குத் திடீரென தான் தனித்து இருக்கிறேன் என்ற எண்ணம் தோன்றியது. உடனே குதித்து ஓடினாள் பெற்றோரின் கட்டிலுக்கு. ஓடும்போதும் மறக்காமல் அவள் தனது விளையாட்டு வண்டியையும் இழுத்தவாறு குதித்து ஏறி அமர்ந்தாள் அப்பாவின் வயிற்றில்.

“அப்பா…” என்று அழைத்தாள் தனது மழலைக்குரலில். அப்பாவும் பதில் கூறவில்லை மெதுவாகக் கண்களை மூடி ஓய்வாக மூச்சுவிட்டார். குட்டி மதுராவிற்கு அது ஒப்பிதமாக இருக்கவில்லை. அவளும் உடன் அப்பாவின் நெஞ்சில் ஏறி அவர் தாடியை இழுத்து “அப்பா..” என்று சற்று சத்தமாக அழைத்தாள். அப்பாவும் சற்று முனகலாக “ம் ம்” என்று பேசாது பதிலளித்தார்.

மதுராவின் அம்மாவும் கட்டிலை விட்டு எழுந்து குட்டி மதுராவையும் அள்ளி இழுத்துத் அரவணைத்தார். குட்டி மதுராவைத் தனது முன்காலில் வைத்து மேலும் கீழுமாக ஏற்றியிறக்கினார். மதுராவும் தான் குட்டிப்பறவை போன்று சந்தோசமாகச் சத்தமிட்டுச் சிரித்தாள். அவளுக்கு அம்மா இப்படி மேலும் கீழுமாகக் காலில் வைத்து விளையாடுவது மிகவும் பிடித்த விடயம்.

நிச்சயமாக அம்மாவின் அரவணைப்பும் விளையாட்டும் சற்றுக் குளிரான காலையில் இதமான உடல் சூட்டையும் சுறுசுறுப்பையும் தருவித்தது. அப்பா இப்பவும் சற்றுக் களைத்தவர் போலக் கட்டிலில் காணப்பட்டார். இவர் தாம் நேற்றுச் செய்த மட்பாட்டங்களை தாழ்ப்பாரத்திற்கு அப்பால் நீண்ட நோக்கலுடன் பார்த்துக் கொண்டார். அந்தச் சட்டி பானைகள் கதிரவன் வெய்யிலில் காய வைக்கப்பட்டிருந்தன. ஆயினும் இன்னும் உலை வெப்பச்சூட்டில் எரித்துப் பதமாக்கப்படவில்லை. அதை அவர் இன்று செய்யவேண்டும்.

“ஐயா மதுரவையும் கொண்டு சென்று நீராடி வாருங்கள் இவளின்று பள்ளிக்குப் போக வேண்டும்” என்றார் அம்மா. குட்டி மதுரா தொடர்ந்து தனது மாட்டு வண்டி விளையாட்டுச் சாமானில் பொம்மை வைத்து விளையாடிய வாறு இருந்தாள். அவள் பொம்மைகளும், மாட்டு வண்டியும் களி மண்ணினாலும் மரத் துண்டுகளினாலும் ஆக்கப் பட்டவை.

நீராடல் என்ற சொற்கேட்டதுமே மதுராவிற்குக் குதூகலம். யாவற்றையும் விட்டுவிட்டு தாவினாள் தந்தையின் தோளில். “ வாங்கள் அப்பா செல்லுவோம் கேணிக்கு“ என்றாள் தேன்கலந்த மழலைக்குரலில். அம்மாவும் மகளைச் சிறு துணியாடையில் (Tunic) சுற்றிவிட்டார், “இதோ நான் தயார்” என்றாள் மதுரா.

பொது மக்களுக்கான பெரும் நீர்த் தேக்கங்கள் (water reservoirs) கேணிகள் (tanks) என்று கூறப்படும். மொகஞ்சதாரோ பெருங்கேணி நகரின் ஒரு புறத்தில் இயற்கை சிந்து ஆற்று நீரைப் பெருக்கிக் கொண்டிருக்கையில், அதிலிருந்து நகரைக் காக்கப் பெரும் மதில்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. கேணியானது நான்கு திசைகளில் நான்கு படலைகளைக் (gates) கொண்டிருந்தது. அதன் மூலம் நான்கு திசைகளில் இருந்தும் கேணிக்கு மக்கள் வரலாம்.

கேணிக்கு அருகாமையில் விரிந்த திணைக்கட்டுக்களும் தாள்பாரங்களும் மேலும் விசாலமான காட்சி அறைகள் மற்றும் கிணற்றடிக் கொல்லைப்புறமும் காணப்பட்டன. மேலும் இவ்விடத்தில் பல படிக்கட்டுக்கள் அமைக்கப் பட்டிருந்தன, அவை வெவ்வேறு அறைகளுக்கும் அழைத்துச் சென்றன.

பொதுவாக பெரும் கேணியடிக்கு வசதி குறைந்த மக்கள் வந்து செல்வார்கள். இவ்விடம் செம்பு இரும்புக் கொல்லைத்தொழில் கலைஞர்கள், குயவுத் தொழிலாளர், நெசவாளர்,ஓவியர், ஏன் பள்ளி ஆசிரிய மக்கள் போன்ற யாவரும் வந்து குளித்துச் செல்வார்கள். பெரும்பாலும் வர்த்தக வணிகர் போன்ற வசதிபடைத்தவர்கள் தான் தமக்கென குளிப்பிடம் வைத்திருக்கக் கூடியவர்களாக இருந்தனர். ஆயினும் சமூகத்தில் யாவரும் சந்தித்துப் பேசுமிடம் மொகஞ்சதாரோவில் பெருங்கேணிகள் தாம்.

குட்டி மதுராவைப் பொறுத்தளவில் அங்கு சனத்தைப் பார்க்கமுடியும். ஆட்கள் பார்ப்பது என்றால் மதுராவிற்குப் பிடித்த விடயம். மேலும் செழிப்பான தண்ணீரில் குளித்து விளையாடவும் முடியும். இதை விடக் குட்டி மகளுக்கு வேறு என்னதான் வேண்டும்.

பெருங்கேணியில் மைந்தர்களும், மாதுக்களும் மூழ்கிக் குளித்துக்கொள்ளுவார்கள். சில சமயம் சூரிய வழிபாட்டைக் கொண்டும் இயற்கை அன்னையை அழைத்து மலர்கள் தந்தும் தமது குளிப்பை ஆரம்பிப்பார்கள் மக்கள். மதுராவைப் பொறுத்த அளவில் தண்ணியில் உடன் குதித்துத் தவளை போல நீந்தவேண்டும், அவ்வளவு தான். அவள் தனது சந்தோசத்தில் அப்பாவின் கைகளில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்திருக்கவும் கூடும். அப்பாவுக்குக் குட்டி மதுராவின் குதூகலம் நன்கு தெரியும். விவரம் தெரிந்தவர் ஆகையால், மதுராவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்பாவும் பொறுமையுடன் தன் மகளை “ஆறுதாலாக இரும்மா” என்று கூறித் தனது பலமான கைகளால் தலையை வருடி விட்டார்.

மேலும் அப்பா தனது ஆடைகளையும் செருப்பையும் கேணியின் பரிபாலனையாளரிடம் பத்திரமாக வைத்திருக்குமாறு கூறி நீராடலுக்கு ஆயுத்தமானார். மதுராவின் துணியும் கொடுக்கப்பட்டது. அப்பா முதலில் கவனமாகப் படிகளில் நீருக்குள் இறங்கிக் கொண்டார். அதன் பின்னர் மகளைத் தனது இரு உள்ளங்கைகளுக்குள்ளும் குப்புற வாங்கி மெதுவாக நீந்த விட்டார்.

மதுராவும் எப்ப அப்பா கைவிடுவார் தானும் தன்பாட்டில் நீந்தலாம் என்று நினைத்துக் கொண்டாள். ஆயினும் தண்ணீரில் தாவி விளையாடுவதை விட்டு வைக்கவும் இல்லை. தந்தையும் மகளும் நீராடி வீடு திரும்பினர்.

வீட்டில் அம்மா பால்கஞ்சிச் சோறும், பருப்பையும் உலைவைத்து விறகடுப்பில் சென்ற வருடம் அப்பா செய்த சட்டி பானைகளில் சமையல் செய்து முடித்திருந்தார். மதுரா வீட்டுச் சமையல் அறை நல்ல விசாலமானது. அங்கு பெரியதும் சிறியதுமாக பல மண் சட்டிபானைகளும், மர ஏதனங்களும் காணப்பட்டன. சில பெரும் பானைகள் அரிசி, நெல்லு, மற்றும் வரகு, கம்பு, குரக்கன், சாமை போன்ற தானியங்களைச் சேகரிக்க உதவின. மேலும் அகன்ற ஆயினும் சிறிய வாய்க்குடங்களில் எண்ணெய்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டன.

மதுராவும், அப்பாவும் சமயலைறையில் நிலத்தில் அகலமான மண் தட்டுக்களில் தமது கஞ்சியை சுவைத்து அருந்தினர். அதன் பின்னர் மதுராவின் அம்மா அவளது கைகளையும் முகத்தையும் கழுவித் துடைத்தாள். மதுரா தனது எழுத்துப் பலகை, மற்றும் எழுத்தாணியையும் எடுத்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள் . அம்மாவும் அவள் தலையை வாரி, அழகிய சிறு பருப்புப் போன்ற பொட்டையும் நெற்றியில் வைத்து விட்டார்.

மதுராவிற்கு அம்மாவின் திலகம், சந்தனம், மஞ்சள்ப் பொடி, உலர்ந்த வாய்ச் சொண்டில் வைக்கும் சிவப்புப் பட்டை, கண் மையென அலங்காரப் பொருட்கள் யாவையும் பிடிக்கும். ஆயினும் தினமும் அம்மா சிறுமிகளுக்கு அப்பேர்ப்பட்ட அலங்காரப் பொருட்கள் தேவையில்லை என்று கூறுவது வழக்கமாகிவிட்டது.

தனது அயல்வீட்டு நண்பிகள் கலா, செண்பகம் ஆகிய சிறுமிகளுடன் சேர்ந்து பள்ளி சென்றாள். மொகஞ்சதாரோப்  பள்ளியானது மணியடிக்க மட்டாத இடம். அவ்விடம் குழந்தை நேரத்திற்கு வரவில்லை என்று ஆசிரியர் கண்டிக்க மாட்டார். அவர் வசதியைப் பொறுத்து ஆலமரம், அரசமரம் இல்லை பள்ளி வகுப்பு அறையில் பெரிய பலகைக்கு அருகில் மரக்குற்றி, மண் திண்ணை, மர வாங்கு போன்றவற்றில் அமர்ந்திருப்பார்.

குழந்தைகள் பள்ளிக்கு வந்தார்கள் எனில் தமக்கு எதாவது கொடைப்பரிசு கொண்டு வந்தார்களா என்று பார்ப்பார். அவர் தனது கற்பித்தலுக்கு எதுவித காசு பணத்தையும் வசூலிப்பதில்லை. குழந்தைகள் உணவுக் கஞ்சி,தானிய. விதைகள், இல்லை தாய் தந்தை வருடத்தில் ஓரிரு தரம் அனுப்பி வைத்த துணித் துண்டுகளைப் பெற்றே வாழ்க்கை நடத்துவார் அந்த ஆசிரியர்.

குழந்தைகளின் கல்வியில் பல இயற்கையை ஒட்டியும், மனப்பாடமாக்கல் மற்றும் ஒப்புவித்தலைச் சார்ந்தும் அமைந்தது. குழந்தைகள் வகுப்பறை நிலத்தில் வந்து அமர ஆசிரியர் குழந்தைகளா இன்று வெயில் இருப்பது இதமாக இருக்கும் வாருங்கள் வெளியில் இருந்து படிப்போம் என்று கூறி ஆலமரத்திற்கு அயலில் உள்ள புற்றரைக்கு அழைத்தார். பள்ளிக்குழந்தைகளும் குஞ்சுக் குருவிகள் போன்று சத்தமிட்டுத் துள்ளிக் குதித்து இழுத்துத் தள்ளி, தள்ளப்பட்டு ஏதோ மாதிரி உலர்ந்த புற்றரையில் வந்து அமர்ந்து கொண்டனர்.

ஆசிரியரும் தனது தொண்டையைச் சற்றுக் கரகரத்துக் குழந்தைகளை சத்தத்தைக் குறைக்குமாறு சைகை காட்டினார். சற்று அமைதி நிலவியதும் “கதிரவன் பாட்டுப் பாடுவோம் குழந்தைகளா” என்றார். பள்ளிப் பிள்ளைகளும் முடிந்த அளவு உரத்த குரலில் கூடிப் பாடினார்கள். அதன் பின்னர் கணிதம் கற்றுவித்தார் ஆசிரியர். குழந்தைகள் 16ம் எண் வரை தமது பலகைகளில் எழுதிப் பழகிக் கொண்டனர்.

அதன் பின்னர் மதுராவிற்குப் பிடித்த களிமண் விளையாட்டு விளையாடினர். பள்ளிப் பிள்ளைகள் நண்பர் நண்பிகளுடன் சேர்ந்து பாவைப் பிள்ளைகள், பானை சட்டி, வண்டில் எனத் தமது கற்பனைகளுக்கு ஏற்ப எதையும் செய்தார்கள். அதன் ஆலமர விழுதுகளில் ஊஞ்சல், தேடிக் கண்டு பிடித்தல் விளையாட்டு போன்ற விளையாட்டுக்களை விளையாடி முடித்தனர். வெயில் உச்சியில் ஏறியது சில பிள்ளைகள் பட்டம் பறக்க விட்டனர். அவை முடிந்த பிறகு மதுரா வீடு திரும்பினாள்.

அப்பா வீட்டில் தனது கொல்லைக் குடில் அருகில் பானை வனையும் சில்லுக்கு அருகில் இருந்தார். அந்தச் சில்லு மீண்டும் மீண்டும் சுற்றிப் போவதைப் பார்ப்பது மதுராவிற்குப் பிடித்தமான பொழுது போக்குகளில் ஒன்றாகிப் போனது. மேலும் தானும் ஒரு காலத்தில் அப்பா போன்று சில்லு சுழற்றிப் பானை செய்வேன் என்றும் எண்ணிக் கொண்டாள். அந்த நாள் எப்போது என்று தான் குட்டி மதுராவிற்குத் தெரியவில்லை.

அம்மா மதுராவின் சிந்தனையைக் கலைப்பது போல வந்து மண் குவளையில் சூடான பால் குடிக்குமாறு அழைத்தார். மதுராவிற்கு எருமைப் பாலை விடத் தயிர்தான் பிடிக்கும். பால் பிடிக்கும் ஆனால் சூடான பாலின் மேல் வரும் ஆடை பிடிக்காது. எனவே வழக்கமாக பால் குடிப்பதை இழுத்தடிப்பது மதுராவின் கைப்பணி. அம்மாவும் கதை சொல்லித் தாலாட்டி, சீராட்டி மகளைப் பால் குடிக்க வைப்பார். இம்முறை அப்பாவும் “மதுரா சமத்தாகப் பாலைக் குடித்தாயானால் நான் புது கைப்பிடியுள்ள குவளை உனக்குச் செய்து தருவேன்” என்றார்.

மதுராவிற்கும் பெரியவர்கள் போன்று கைப்பிடியுள்ள குவளையில் குடிக்க பெரிய ஆவல். மதுராவும் “அப்பா உடன் செய்யுங்கள், உடன் செய்யுங்கள்” என்று சொல்லிக் கொண்டே பாலைக் குடித்து முடித்தாள். அம்மாவும் மதுராவை மதிய ஓய்வு நித்திரைக்குக் கட்டிலுக்கு அழைத்துச் சென்றார்.

அம்மா தூங்கச் செய்வதற்காகப் படுக்கையில் படுக்க வைத்தாலும் மதுராவிற்குத் தூங்கவேண்டும் போன்று தோன்றவில்லை. அம்மா அருகாமையில் இல்லாதால் கட்டிலில் இலேசாக் கண்ணைத் திறந்து கொண்டு பக்கத்து அறையில் இருந்து வரும் குரல்களையும் அவதானித்தாள். இரண்டு மூன்று பெண் குரல்கள் கேட்டன. இவை தெரிந்த குரல்களாக இருக்கின்றனவே என்று நினைத்து மேலும் அவதானமாகச் செவி கொடுத்தாள் மதுரா.

சற்று நேரத்தில் புரிந்து கொண்டாள் விடயத்தை. அம்மா பக்கத்து வீட்டுக்காரிகளுக்கு அப்பா சிந்து நதி வழியாக ஹரப்பாப் பட்டணத்திற்கு போய்வரத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிய வந்தது. அப்பா அந்தப் பட்டணத்தில் உள்ள தானிய வணிகர் ஒருவருக்குச் செய்த பிரமாண்டமான குடங்களை எடுத்துச் சென்று விற்று வர இருப்பதாகக் கூறினார்.  அம்மா ஹரப்பா நானூறு கல் தூரத்திற்கு மேலிருப்பதால் அப்பா சென்று திரும்பி வர பல நாட்களாகும் என விளக்கினார்.

தன் கணவர் படகில் கறுப்பு ஆழி நீர் தாண்டி ஊர் எனும் பட்டணம் போய் வந்த போது அதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதாக பக்கத்து வீட்டக்காரப் பெண்மணி கூறியதையும் மேலும் அம்மாவைப் பயப்படாதீர்கள் ஒன்றும் நடக்காது என்று சமாதானப்படுத்துவதையும் மதுரா கேட்டுக்கொண்டாள். இன்னொரு அம்மணி உங்கள் ஐயா கொடுத்து வைத்தவர், அவர் இந்தப் பயணத்தில் ஹரப்பாவின்

பிரம்மாண்டமான தானியக் களஞ்சியத்தைப் பார்த்துவிட்டு வரப்போகிறார் என்றார். அந்தக் களஞ்சியம் 40 பிரம்மாண்டமான அறைகளில் நெல் அரிசி, கோதுமை, வரகு எனப் பல்வேறு தானியங்களையும் குவித்துள்ளனராம். இதைப் பற்றித்தான் போய்ந்த யாவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்றார் பக்கத்து விட்டுக்காரி.

இதைக் கேட்ட மதுராவிற்கு அவள் ஆச்சரியத்தையும் ஆவலையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவள் மனம் ஹரப்பாப் பட்டிணம், ஊர்ப் பட்டிணம் என்றெல்லாம் பறவை போலப் பறந்து கொண்டிருந்தது. மதுராவைப் பொறுத்த அளவில் இவையாவும் வானத்தில் தெரியும் விண்மீன்களைப் போன்ற பளிச்சென்ற மின்மினிக் கனவுகள். அவளைப் பொறுத்தளவில் தானும் பெரும் பட்டிணம் போய்ப் பெருங் களஞ்சியம் பார்த்து, அந்தப் பட்டிணச் சந்தை போய் விளையாட்டுச் சாமான் மற்றும் பல நிறப் பழ வகைகள் மட்டும் இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டு வரவேண்டும், அவ்வளவுதான்.

இனியும் கட்டிலில் படுக்க நாட்டமில்லை எனவே மதுரா எழும்பி வீட்டு முற்றத்தை நோக்கித் தாயிடம் சென்றாள். அங்கு மற்றைய பெண்மணிகள் போல் தானும் நூல், துணி, ஊசியுடன் பூ அலங்காரம் செய்ய விரும்புவதாகத் தாயிடம் சொன்னாள். அம்மாவும் சிறிய துணியையும் ஊசி நூலையும் மதுராவிடம் கொடுத்தார். குட்டி மதுராவும் மற்றவர்கள் செய்வது போன்று தானும் துணியில் பூப்போடத் தொடங்கினாள்.

வெளி முற்றத்தில் சிறுவர் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் சத்தமிட்டு விவாதிக்கும் குரல்கள் கேட்டன. அவர்களிடையே சில சிறுவர் குரல்களை அவளால் சுதாகரிக்கமுடிந்தது. சிறப்பாக வாசன், பரன் இவர்கள் அயல் வீட்டு நெசவாளர் பிள்ளைகள். அவர்கள் மதுராவின் பள்ளி நண்பிகள் கலா, செண்பகத்தின் அண்ணன்மார்கள்.

மதுராவிற்கு பரனைப் பார்க்க ஆசை எனவே வெளி முற்றத்திற்கு ஓடினாள். பரன் மெல்லிய நெடிய சிறுவன். மதுராவிற்கு அவனைப் பிடிக்கும் காரணம் அவனிடம் உள்ள அழகான பல நிறக் கோலிக் குண்டுகள். அந்தக் கோலிக் குண்டுகளுக்கு மேல் அவனுடனும் விளையாடுவது அவளுக்குப் பிடித்த விடயம். ஆனால் மதுராவிற்கு வெட்கமோ வெட்கம் காரணம் அங்கு பல சிறுவர்கள் உள்ளனர். எனவே மதுரா அப்பாவின் அறை மரக் கதவிலிருந்து நீண்ட பெருமூச்சுடன் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்தவாறு இருந்தாள்.

இதே சமயம் அயல் வீட்டுக்கு சிறுமிகள் கமலாவும், செண்பகமும் பூப்பந்து விளையாட மதுரா வீட்டிற்கு வந்தார்கள். பூப்பந்து இன்னுமொரு பல நிற விளையாட்டு. அவை அழகிய நிறப் பருத்தி நூல்களால் நெய்யப்பட்ட மிருதுவான பஞ்சணை போன்ற துணியிலான கோளங்கள்.

செண்பகத்தைப் பார்த்து “பந்தை இங்கே எறி“ என்றாள் மதுரா.சிறுமிகள் பந்துக்களை மதுரா நோக்க எறிய, அவளும் பந்துகளைப் பிடித்துப் பின்னர் வானம் நோக்கி விசைந்து எறிந்தாள். அடுத்து அவள் கீழே வரும் பந்தைப் பிடிக்க முன்னே வானத்தைப் பார்த்தவாறு ஓடினாள். இவ்வாறு சில தடவை செய்து சிறுமிகள் விளையாடிக் கொண்டு இருக்க, பக்கத்து வீட்டு நாயும் கலந்து கொண்டது.

சிறுமிகள் இதை எதிர்பார்க்கவில்லை எனினும் நாய் பந்து ஒன்றினை லபக் என்று கவ்விக் கொண்டு ஓடத்தொடங்கியது. சிறுமிகளும் விளையாட்டை விட்டு நாய்க்குப் பின்னால் ஓடினர். பந்தைப் பெற்று ஒவ்வொரு முறை எறிந்த போதும் நாய் தானாக ஓடிச் சென்று, பந்தைக் கவ்வி வந்து கையில் தந்தது

குழந்தைகள் ஓடியாடி விளையாடி வியர்த்துக் களைத்தனர். மதுராவின் அம்மாவும் பிள்ளைகளை அழைத்து இனிய நறுமண நாரத்தம் பழங்களைச் சிற்றுண்டியாக உண்ணத் தந்தார். நாரத்தம் பழம் சற்றுப் புளிப்பானது ஆயினும் அதைச் சிறுமிகள் உப்பு மற்றும் மிளகாய்க் தூள் சேர்த்துச் சாப்பிட்டனர். இதுவே இவர்கள் உணவுப் பழக்கம்.

மாலையில் அப்பா நேற்றுச் செய்த மட்பாண்டங்களை நாளை சந்தைக்குக் கொண்டு போகத்தயார் செய்தார். உரிய வைக்கோல் மற்றும் நார்க் கயிறு போன்றவற்றையும், பிரம்பினால் ஆன பெருங்கூடையையும் எடுத்து வைத்தார். அதே சமயம் மதுராவிற்குக் கூறியது போலத் தான் செல்ல மகளிற்காக வடிவமைத்த கைப்பிடிக் குவளையையும் கொடுத்தார். “அது சரி இதைச் சுமந்து வா” எனக் கூறி சிறிய மண்பானையை மதுரா தலையிலும் வைத்து விட்டார்.

அப்பா மற்றைய மட்பாண்டங்களைத் தனது பெருங் கூடையில் ஏற்றித் தலையில் தூக்கிக் கொண்டு வந்தார். மதுராவும் அப்பாவும் மொஹஞ்சதாரோப் பட்டிணத்தின் மத்தியில் உள்ள சந்தையை நோக்கி நடக்கத் தொடங்கினர். அவர்கள் சந்தையை நோக்கிப் போகும் போது இடையர்கள் ஆடுகளையும் எருமை மாடுகளையும் மேய்த்து வருவதைக் கண்டனர்.

மதுராவும் அப்பாவும் அந்த மந்தைகளையும் தாண்டி நகரினூடாக சந்தை நோக்கிச் சென்றனர். அவர்கள் பாதை சில இடங்களில் சிறிய சந்துகள் முடக்குகளாகவும் அமைந்திருந்தன. சில முடக்குத் திருப்பங்களின் பின்னர் மிகுந்த சத்தமான இடப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அந்தச் சத்தம் பல குடிமக்களும் கூடிப்பேரம் பேசி வாங்குவதால் வந்தது ஆகும். மதுராவிற்கு உடன் இது விளங்க வில்லை ஆயினும் மக்களிடையே முகங்கள் பார்த்து நடக்கும் போது சற்று விளங்கக் கூடியதாக இருந்தது.

சந்தையில் ஒரு சிறிய இடத்தை அப்பா தனதாக்கிக் கொண்டார். அதன் பிறகு அப்பாவும் பெரிதாகச் சத்தமிட்டுத் தான் விற்கும் மட்பாண்டங்கள் பற்றி வாங்குபவர்களுக்கு அறிவித்தார். “அம்மாமாரே, ஐயாமாரே மிகச்சிறந்த பானைகள், சட்டிகள், விளையாட்டுச் சாமான்கள் இங்கே இருக்கின்றன, வாருங்கள் வந்து வாங்குங்கள். நிச்சயமாக உங்கள் குழந்தைகள் இந்த மண்குதிரைகளை விரும்புவார்கள் வாருங்கள் வாருங்கள்.”

மதுராவிற்கு இது அனைத்துமே புதிது. அவளின் கண்களும் பெரியாதாக்கி காதுகளையும் கூர்மையாக்கி எவ்வளவு குட்டிச் சிறுமி அவதானிக்க முடியமோ அவ்வளவையும் பெற்றுக்கொண்டாள். மக்கள் பேரம் பேசுவது விற்பவர் சத்தமிட்டு ஒருவருக்கு ஒருவர் மிகை கொடுக்காமல் வாடிக்கையாளரை அழைப்பது இவையாவுமே புதுப் புது அனுபவங்கள்.

மதுராவும் அப்பாவின் கூடைக்குப் பக்கத்தில் உலர்ந்த வைக்கோல் கட்டின் மேல் அமர்ந்து கொண்டாள். அப்பா மும்முரமாக விற்றுக் கொண்டு இருக்கையில் மதுரா இலேசாகச் சுற்று வட்டாரத்தையும் கண்டு கொண்டாள்.

ஆகா அற்புதம் என்ன அற்புதம். அருகாமையில் இரும்புக் கொல்லர் பெரிய, சிறிய கத்திகள், சமையலறை அரிவாள், அறுவடை அரிவு கத்தி, மீன் தூண்டில் ஊசி, கோடரி, மண்வெட்டி எனப் பலரக உலோகத்தினால் ஆனவற்றையும் விற்றுக்கொண்டிருந்தார்.

அதற்கருகில் அலங்காரப் பொருட்கள் வணிகர் அதனருகே விளையாட்டுப் பொருட்கள் வியாபாரி. குட்டிப் பொம்மைகள் நாய், குதிரை. யானை, பூனை, மயில், சேவல், தரா, ஆந்தை எனப் பல வகை. சில பொம்மைகள் தலையாட்டின. “இவையாவும் அற்புதம் அற்புதம்” என்று சத்தமிட்டுச் சந்தோசத்துடன் சொன்னாள் மதுரா.

அதன் பின்னர் நெசவாளர் கடையில் செண்பகம், கலா விளையாடும் பல நிறப் பந்தைக் கண்டு கொண்டாள் மதுரா. தந்தையாரை அந்தப் பந்தை வாங்கித் தருமாறு கெஞ்சினாள் மதுரா. முதலில் அப்பா “ வா வா வீட்டுக்குப் போகலாம், நாளை பார்க்கலாம்” என்று அவசரப்படுத்தினும் அப்பா மனங்கேளாது சுட்டி மகளுக்குப் பந்தை வாங்கிக் கொடுத்தார்.

மதுராவிற்கு அளவில்லாத சந்தோசம். அந்தப் பந்தை வீடு வரை விளையாடிக் கொண்டு வந்தாள். நாளை நண்பிகளுடன் விளையாடத் தனக்கும் ஒரு பூப்பந்து உள்ளது என்று உவகை. ஆமாம் சாயங்காலம் முடிந்து இரவாகியது. குட்டி மதுரா விழித்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தாயாரின் ஓராட்டத்தில் தலை சாய்ந்து கனவுலகத்தில் கலந்தாள் சின்ன மகள் மதுரா

– யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad