Top Add
Top Ad
banner ad

இதுதான் காதலா !!!

Filed in போட்டிகள் by on July 28, 2015 1 Comment

FON“ஏம்மா அகல்யா… முற்போக்குச் சிந்தனை தேவைதான்.. அதற்கென்று இப்படியா??? நிச்சயதார்த்தம் முடிஞ்சி ரெண்டு பேரும் வேலை செய்ய அமெரிக்கா போனீங்க! உங்கப்பா எத்தனை முறை உங்கிட்ட சொன்னாரு.. இந்தப் பையன் வேணான்னு.. கேட்டயா நீ… இப்போ பாரு.. அங்கு போன ஒரே மாதத்துல அந்தத் தம்பி செழியன் கார் விபத்துல இறந்துடுச்சி… நீயும் இங்க வந்திடுனு சொன்னா… … ரெண்டு மாதம் கழிச்சி வருவதா..சொன்ன…! ஆனா, இப்போ ஒரு வருடம் கழிச்சி வந்து மூன்று மாத கர்ப்பம்னு சொல்ற! இதெல்லாம் என்னம்மா? எனக்கு மயக்கமா வருது.. நம்ம சொந்தகாரங்க கிட்ட நான் என்னம்மா சொல்றது? குழந்தை யாரோடதுன்னு கேட்டா அதற்கும் பதில் சொல்ல மாட்டேங்குற? என்னை ஏம்மா இப்படி உயிரோட சாகடிக்கிற?” என்று உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்தார் அகல்யாவின் அம்மா.

அகல்யாவின் அம்மா அவளிடம், “அகல்யா, இந்தக் குழந்தைக்கு அப்பா யாருனு சொல்ல மாட்டேங்குறே… சரி விடு… இந்தக் குழந்தைய கலச்சிடும்மா… நான் உனக்கு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்,” என்றார். அகல்யா அம்மாவை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள்.

அப்பொழுது, அங்கு வந்து சேர்ந்தாள் அவள் தோழி வெண்ணிலா. அகல்யாவின் அம்மா தன் உள்ளக் குமுறலை வெண்ணிலாவிடம் கொட்டித் தீர்த்தாள். வெண்ணிலாவிற்கு அகல்யாவின் மீது அளவுகடந்த கோபம். ஏதாவது பேசினால் வார்த்தை தடித்து நட்பிற்குக் களங்கம் வந்து விடுமோ என்று அவளும் பேசாமல் தான் ஓரிரு நாட்கள் இருந்தாள். ஆனால், என்ன செய்வது… சிரித்துப் பேசிக் கொஞ்சிக் குலாவுவதா நட்பு??? பிழை செய்கின்ற தோழமையை இடித்துரைப்பது தானே உண்மையான நட்பு என்பதை அறிந்து அகல்யாவிடம் உண்மையை உரைக்க வற்புறுத்தினாள். தன் தோழியைக் கண்ட அகல்யாவின் கண்கள் திறந்து விட்ட மடையென நீரைச் சொரியத் தொடங்கின. “என்னை ஒன்றும் கேட்காதே… இந்தக் குழந்தை எனக்கு வேண்டும்… இன்னும் ஏழு மாதம் பொறுத்து விடு.. பிறகு உண்மையைச் சொல்கிறேன்..” என்ற அகல்யாவிடம் தன் கோபத்தைக் கொட்டினாள் வெண்ணிலா.

“என்னடி நெனச்சிகிட்டு இருக்கே? இப்படி மூன்று மாதக் கருவைச் சுமந்துகிட்டு இருக்கியே… என்னடி காதல் உன்னோட காதல்? செழியன் மீது நீ வச்ச காதலோட மதிப்பு இவ்வளவு தானா?” என்று தோழியை ஏசித் தீர்த்தாள்.

அகல்யாவிடமிருந்து பதிலேதும் இல்லை அமரராகி விட்ட தன் தந்தையின் நிழற்படத்தை ஒரு தீர்க்கப் பார்வை பார்த்தாள். இறைவனடி சேர்ந்து விட்ட தன் தந்தையின் சாட்டையடிப் பேச்சு அழையாமலேயே அவள் நினைவுக்கு வந்தது. “காதல்! காதல்! காதல்! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா?” என்று அழுந்த உரைத்த தந்தையிடம் அகல்யா தன் காதலுக்காக மன்றாடினாள். “ ஐ.டி(IT) மட்டுமே படிச்ச இவன் கூட நீ எப்படி வாழப் போற… நீ பி.எச்.டி (PHD) முடிக்கப்போற.. உனக்கும் அவனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது.. உன்ன ஒரு நாளு நிச்சயம் அவன் ஏமாத்திட்டுத் தான் போகப் போறான்… பாரு நீ!” என்று சரமாரியாய் அவர் சொன்ன வார்த்தைகள் இன்று நிஜமாகிப் போயின. அகல்யாவிற்கு செழியன் மீது கோபம் கோபமாய் வந்தது. “இப்படி என்னை ஏன் தவிக்க விட்டாய்… வந்து விடேன்..” என்று உள்ளுக்குள்ளேயே அவனை நினைத்து உருகினாள். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டோர் வருவரோ…?

மாதங்கள் ஏழு கழிந்தன. அகல்யா அழகிய மகவொன்றை ஈன்றாள். தன் தோழியின் செயல் பிடிக்காவிட்டாலும் அவளுடனேயே இருந்தாள் வெண்ணிலா. தன் குழந்தைக்கு இனியன் என்று பெயரை பிறப்புச் சான்றிதழ்ப் பத்திரத்தில் எழுதிய அகல்யாவை வெண்ணிலா வியப்பாகப் பார்த்தாள். இது செழியன் தன் மகனுக்காக தேர்ந்தெடுத்த பெயர் என்று அகல்யா என்றோ கூறியது வெண்ணிலாவின் நினைவுக்கு வந்தது. தாயின் பெயர் இடத்தில் அகல்யா என்றும் தந்தையின் பெயர் இடத்தில் செழியன் என்றும் எழுதிய அகல்யாவிற்கு தலையில் ஏதோ கோளாறு ஏற்பட்டு விட்டதென்று வெண்ணிலாவிற்கு தோன்றியது. “ஆமாம்.. ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போன செழியன் எப்படி அகல்யாவின் குழந்தைக்குத் தந்தை ஆவான்??? என்ன ஆயிற்று இவளுக்கு?” என்று எண்ணியவாறு குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்த அகல்யாவின் தோளைப் பற்றினாள் வெண்ணிலா. தனக்குள் பூட்டி வைத்திருந்த சோகங்கள் யாவும் பீறிட்டு அகல்யாவின் அலறலாய் ஆனது.

“வெண்ணிலா… இது செழியனின் குழந்தை. ஆமா.. உண்மையா இது செழியனின் குழந்தை தான். வெளிநாடு போகவிருந்ததால் நிச்சயம் முடிந்தவுடன் நானும் செழியனும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். குடும்பத்திற்குத் தெரியாம செய்றோமே என்று அப்போது இருந்தது. ஆனால், செழியன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருந்த போது, அந்தப் பதிவு திருமணம் தான் என்னைச் செழியனின் மனைவியா அடையாளம் காட்டியது. அந்தப் பதிவு திருமணம் தான் செழியன் தன்னோட உயிரணுவை எனக்காக கொடுக்கச் செய்தது. அவனில்லாமல் நான் இந்த உலகத்துல இருக்க மாட்டேன் என்று அவனுக்குத் தெரியும்… அதனாலேயே இப்படி ஒரு யோசனையைச் சொல்லிட்டு என்னை விட்டுப் போய்ட்டான்… என் காதலுக்காக இந்தச் சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்கி இதோ என்னில் சுமந்து,  செழியனின் மகனாக இனியனை உலகுக்கு அடையாளம் காட்டிட்டேன். என் செழியன் மீது நான் வைத்த காதல் உடல் சம்பந்தப்பட்டது இல்லை… அது மனம் சம்பந்தப்பட்டது… அதனால தான் இவ்வளவு நாள் பேசாம இருந்தேன். தனி மனுஷியா குழந்தைய வளர்க்க முடியாது…வேண்டாம்னு எத்தனையோ பேர் சொன்னாலும்… இது நமது பண்பாட்டுக்கு ஒத்து வராத ஒண்ணு என்றும், பண்பாட்டு முரண்பாடு என்றும், முற்போக்குவாதி என்றும் இன்னும் எத்தனையோ பேர் எதையாவது சொல்லி… யாரும் என் மனசைக் கலைக்கக் கூடாதுன்னு நெனச்சி தான் இவ்வளவு நாள் வாய் திறக்காம இருந்தேன். இனிமே எங்க மகன் இனியனுக்காக.. எங்க காதல் சின்னத்துக்காக நான் நிச்சயம் உயிர் வாழ்வேன்… தான் இறக்கும் தருவாயில் கூட என்னையும் என் நலனையும் மட்டுமே குறிக்கோளாக் கொண்ட ஒரு நல்ல இதயத்திற்கு நான் சொல்லும் நன்றி இது…!” கதறிய அகல்யாவைத் தேற்ற வழி தெரியாமல் தன் மீது சாய்த்துக் கொண்டு தன் கண்ணில் அருவியெனக் கொட்டிய கண்ணீரை வெண்ணிலா துடைத்தாள். “ச்சீ.. இது தான் அகல்யாவின் காதலா???” என்றிருந்த வெறுப்பு மாறி “இது தான் காதலா!!!” என்று வெண்ணிலாவை வியக்க வைத்தது அகல்யாவின் காதல்.

– மாலதி தர்மலிங்கம்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Sintu Bairavi says:

    congratz…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad