\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கொலைபேசி

Filed in இலக்கியம், கதை by on October 25, 2015 0 Comments

kolai-pesi_620x620டல் எடையைக் குறைக்கும் குறிப்புகள் ; பல்லை வெண்மையாக்க வழிவகைகள்; விக்டோரியா சீக்ரெட்டின் ‘புஷ் அப்’ ரகசியங்கள்; விரல் நகங்களில் விரிசல் வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது; தலைமுடியைச் சுருட்டையாக்குவது எப்படி; சில கசமுசா படங்கள்; பலான வீடியோக்கள் ; டாம்பான், ரெஸ்டாரண்ட் கூப்பன்கள் இத்யாதி இத்யாதி விஷயங்கள் தான் கிடைத்தன… ஏகப்பட்ட வாட்ஸ்அப், டெக்ஸ்ட் மெசேஜ் எனப் பல பேருடன் தகவல் பரிமாறல்கள் .. அலுப்பாக இருந்தது வம்சிக்கு.. நான்கு மணி நேரமாகத் தேடி, கடந்த ஆறு மாதங்களில் டெலிட் ஆன ஏறத்தாழ முந்நூறு ஃபைல்களையும், முப்பதாயிரத்துக்கும் அதிகமான தகவல்களையும் மீட்டெடுத்து விட்டான் .. இரண்டே இரண்டு பைல்களும், சில தகவல் பரிமாற்றங்களையும் தவிர மற்றவை எல்லாம் மேலே சொன்ன சமாச்சாரங்கள் தான் ..மெமரியில் அந்த அரை டஜன் ஃபைல்களும், தகவல்களும் இருந்த இடங்கள் மட்டும் பூஜ்யங்களால் நிரப்பப்பட்டிருந்தன.. ‘ஜீரோ ஃபில்லர்’ பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. இதை மட்டும் எப்படியாவது படிக்க முடிந்தால் இந்த வழக்கு முடிவுக்கு வந்து விடுமோ?

பி.சி.ஐ.டி.யில், ஃபாரன்ஸிக் இன்வெஸ்டிகேஷனில் பட்டம் பெற்று சைபர் கிரைம்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவன் வம்சி. பல நிறுவனங்களில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பத் தகிடுதத்தங்களைக் கண்டுபிடிப்பது வம்சிக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது தவிர அந்நிறுவனங்களின் ‘டேட்டா ப்ரைவசி’ கருதி அவர்களின் கணினிகளுக்குப் பாதுகாப்பு மென்பொருள் வடித்துத் தருவதிலும் சாமர்த்தியமானவன். இப்படிச் சைவ விஷயங்களில் மட்டுமே ஈடுபட்டு வந்தவன், காலை பதினொன்றரை வரை..

‘ஹேய் வம்சி… உனக்கு எதுவும் முக்கியமான பணிகள் செய்ய வேண்டியிருக்கிறதா… அயோவா போலிஸ் டிபார்ட்மெண்டிலிருந்து ஒரு புதிய அசைன்மென்ட்.. நேரம் இருக்குமா உனக்கு?’ என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் கூட காத்திராமல், ‘ இது ஸ்டெஃப் மார்டின்.. டெபுடி சீப் ஆஃப் இன்ஸ்வெடிகேஷன் ஃப்ரம் ஐ.பி.டி. உனக்கு வேண்டிய விவரங்களைக் கேட்டுக்கொள்.. நாளை மதியத்துக்குள் எனக்கு ரிப்போர்ட் அனுப்பிடு.. ஸ்டெஃப் நாளைக்குச் சாயங்காலம் கிளம்பறா .. ஸ்டெஃப் .. இது வம்சி.. புத்திசாலிப் பையன் .. அனேகமா இன்னைக்கு இரவே கூட நீங்க அயோவா திரும்பப் போயிடலாம் .. அந்தளவுக்குச் சுறுசுறுப்பானவன்..’ இரண்டே நிமிடங்களில் டைப் அடிப்பது போல் பேசி விட்டுச் சென்று விட்டார் டேவ்.. அவனது மேனேஜர்..

‘‘நான் உட்காரலாமா?’ ஸ்டெஃப், கேட்டபோது தான் மனசுக்குள் டேவைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். முகம் வடிவாக இருந்தது. இந்த நிலைக்கு உயர மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருப்பாள் போல.. உடல் ஏற்ற இறக்கங்கள் அதிகமில்லாமல் ஆண் தன்மை கொண்டு முரட்டுத்தனம் தெரிந்தது. ‘யெஸ் ..உட்காருங்க .. ஸ்டெஃப்’ ..

‘தேங் யூ .. எதிரிலிருந்த இருக்கையை நகர்த்தி அமர்ந்து கொண்டாள்..

‘பாரு .. நீ தியோடர் ரிச்சர்ட் கொலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா?’

‘தியோடர் ரிச்சர்ட்.. இந்தப் பேரை இப்பதான் கேள்விப்படறேன்.. கொலையை நான் கேள்விப்பட்டதில்லைன்னு நினைக்கிறேன்..’

‘குட் .. அதுவும் நல்லதுக்குத் தான் .. நாப்பது நாளுக்கு முன்னால் ஏம்ஸ் சிட்டி, அயோவாவில் கொலை ஒண்ணு நடந்தது.. செத்துப் போனவன், முப்பத்திரெண்டு வயது தியோடர் ரிச்சர்ட் .. . கொலை நடந்த இடத்தில் அவனது செல்ஃபோன் கிடைத்தது.. வேறு சில துப்புகள் கிடைத்தாலும், அந்தச் செல்ஃபோன் தான் முக்கியத் துப்பு ..’

‘எப்படிக் கொலை செய்யப்பட்டிருந்தான் ?’

‘வம்சி .. உன் பேரை சரியாச் சொன்னேனா? அது உனக்குத் தேவையில்லாத விஷயம்னு நினைக்கிறேன் .. அதையெல்லாம் பாத்துக்கிறதுக்கு அயோவா அரசாங்கம் ஆளு வெச்சிருக்கு..’

‘சரி என்கிட்ட என்ன எதிர்பாக்கிற’

‘யெஸ்.. இது புத்திசாலித்தனமான கேள்வி .. அவனுடைய செல்ஃபோன்ல இருந்த தகவல்களை வெச்சு, அவனுடைய காதலி லிண்டா மேனோர் தான் கொலை செய்திருக்கிறாள் என்று எங்க டிபார்ட்மெண்ட் நம்புது..’

‘அடப்பாவமே. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை?.’

‘அதான் .. அதைத்தான் நாங்க தேடிக்கிட்டிருக்கிறோம் .. அடுத்த செவ்வாய்க்கிழமை கோர்ட்லே கேஸ் வருது.. ஜூரியைக் கன்வின்ஸ் பண்ற மாதிரிப் போதுமான சாட்சியங்களைத் தயார் பண்ணிக்கிட்டிருக்கோம்…’

‘சரி நான் என்ன பண்ணணும் ..’

‘தியோடரோட ஃபோன்ல இருந்த தகவல்கள் லிண்டாவுடைய ஃபோன்ல இருந்து தான் வந்திருக்கு..’

‘ஓ .. லிண்டாவைப் பிடிச்சிட்டிங்களா?’

‘லிண்டாவைக் கொலை நடந்த ரெண்டு நாள்ல பிடிச்சுட்டோம்.. ஆனா எங்களுக்குத் தேவையான தகவல் கிடைக்கல ..’

‘என்ன சொல்றா அவ. எங்க ஊருன்னா துணியில்லாம ஐஸ் கட்டி மேல படுக்க வெப்போம்.. அதுவும் இல்லைனா தலை கீழா தொங்கவிட்டு, கோணிப்பைக்குள் எலியை விட்டு முகத்தில கட்டிட்டா கண்டிப்பா உண்மையைச் சொல்லிடுவானுங்க.. நீங்க கூட அது மாதிரி ஏதாவது முயற்சிக்கலாமே ..’

‘ஏற்கனவே போலீஸ்னா எதோ கெட்ட கும்பல்னு அமெரிக்கா நினைக்கத் துவங்கிடுச்சு.. இது வேறயா.. நமக்கு அரசியல் வேணாம்..எனக்குத் தேவை லிண்டாவுடைய இந்த ஃபோன்லே அவ டெலிட் செஞ்ச எல்லாத் தகவல்களையும் எனக்கு மீட்டுத்தரணும்’

‘ஓ.. இப்போ புரியுது .. அந்தளவுக்கு அப்பாடக்கரா அவ.. பாத்துடுவோம்.. என்ன செல்ஃபோன் அது .. காமிங்க ..’

சாம்சங் ஃபோன் ஒன்றையும், டொஷிபா லேப்டாப் ஒன்றையும் பையிலிருந்து எடுத்து மேஜையின் மேல் வைத்தாள் லிண்டா ..

‘இதிலிருந்து போன ஆறு மாசங்கள்லே டெலிட் ஆன தகவல்கள் எனக்கு வேணும். டேட்டா ஃபைல்ஸ், டாகுமெண்ட்ஸ், ப்ரெளசிங் ஹிஸ்டரி .. எதெல்லாம் டெலிட் ஆகியிருக்கோ அதெல்லாம் வேணும்… நீ என்ன பண்றேன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல .. இது என் நம்பர் .. சீக்கிரம் முடிச்சிட்டின்னா என்னைக் கூப்பிடு .. இங்க பக்கத்தில ஸ்டார்பக்ஸ் இருக்கா?’.

ரவு ஏழு மணியாகி விட்டிருந்தது. லேப்டாப்பில் இருந்த அந்தச் சில ஃபைல்களும், செல்ஃபோன் தகவல்களும் வம்சியை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. வீட்டிலிருந்து தீபிகா இரண்டு, மூன்று முறை ஃபோனில் கூப்பிட்டிருந்தாள். வம்சிக்கு இது மானப் பிரச்சனையாகி விட்டிருந்தது. எப்படியும் இதற்கு ஒரு முடிவு தெரிந்து கொண்டு தான் வீட்டுக்குப் போவது என நினைத்துக் கொண்டான்.. மேஜை டிராயரிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.

வெளியே புகைத்துக் கொண்டிருந்த போது கூட இதே எண்ணம். என்ன தான் இருக்கும் அந்த ஃபைல்களில்?

“எக்ஸ்யூஸ் மீ… லைட்டர் கிடைக்குமா?’

திடிரென்று கிட்டத்தில் வந்து கேட்டதும், சரேலென்று தூக்கி வாரிப் போட்டது வம்சிக்கு. சுதாரித்துக் கொண்டு லைட்டரை எடுத்து நீட்டினான். அதை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டவன், புகையை ஊதியவாறே..

‘தேங்க்ஸ்.. சாரி நீங்க எதோ பலமான சிந்தனையிலே இருந்தீங்க போலிருக்கு .. நான் கலச்சிட்டேன்..’

‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.. இந்த நேரத்திலே யாரும் இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை… அதான் ..புதுசா நீங்க? ’

‘நான் மூணாவது ஃப்ளோர்ல .. ஜே.கே. இன்வெஸ்ட்மென்ட்ஸ்லே இருக்கேன்.. பெரும்பாலும் ஆறு மணிக்கு மேல தான் வேலையைத் தொடங்குவேன்.. ஜேப்பனீஸ் மார்க்கெட் அனலிசிஸ்.. நானும் உங்களைப் பார்த்ததில்லை..’

‘நான் பொதுவா அஞ்சு அஞ்சரை மணிக்குக் கிளம்பிடுவேன்.. இன்னைக்கு ஒரு பிசாத்து வேலை .. தண்ணி காட்டுது..’

‘உங்க கம்பெனி தான் பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் எளிதாப் பண்ணிடுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.. உங்களுக்கே அப்படி என்ன கஷ்டம்..’

அவனும் டெக்னிகலாக விஷயம் தெரிந்தவன் போலிருந்ததால் எல்லாவற்றையும் சொன்னான் வம்சி.

‘நீங்க சொல்றதைப் பாத்தா.. அது டேட்டா ஃபைல்ஸா இல்லாம, இமேஜ் ஃபைல்ஸா இருக்குமோன்னு தோணுது.. ஹெட்டர் டெலிட் ஆகியிருக்கிறதனால அதைக் கவனிக்காம விட்டிருப்பீங்க…

‘எனக்கு இது தோணவே இல்லை.. குதிரைக்குப் பட்டை கட்டின மாதிரி ஒரே வழியிலே போய்கிட்டிருந்தேன்.. தேங்க்யு .. சாரி உங்க பேரு கூட கேட்டுக்கலை’

‘என் பேரு டெட் .. நான் சொன்னது ஒரு ஹன்ச் தான் தப்பாக் கூட இருக்கலாம் .. பை த வே .. ஜீரோ ஃபில்லர் போட்டிருந்தாங்கன்னா என்கிட்டே ஒரு அல்காரிதம் இருக்கு அனுப்பி வைக்கிறேன் ட்ரை பண்ணிப் பாருங்க ..’ என்று சொல்லி மின்னஞ்சல் முகவரியை வாங்கிக் கொண்டான் ..

‘வாவ்.. அது ரொம்பப் பெரிய உதவியா இருக்கும் .. நான் இப்பவே போய்ப் பாக்கிறேன் .. உங்களோட அல்காரிதம் வொர்க் ஆச்சுன்னா நாம ஒரு ஹேப்பி ஹவர் வெச்சுக்கலாம்…செலவு முழுக்க என்னோடது .. சரியா?’ பாதிப் புகைத்த சிகரெட்டைத் தரையில் போட்டு மிதித்து விட்டுச் சென்றான்.

சொன்ன மாதிரியே பதினைந்து நிமிடத்தில் அவனிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.. ஜீரோ ஃபில்லரை முறியடிக்கும் பல ஸ்கிரிப்டுகள் இருந்தன .. சில மாற்றங்களைச் செய்து ஓட்டியபோது ஃபைல்களைப் பார்க்க முடிந்தது .. ஒரு பெண்ணின் நிர்வாணப் படங்கள்.

யோவா தென்மண்டலக் கோர்ட்டில் அமர்ந்திருந்தான் வம்சி. வழக்கின் நடுவே வக்கீல்கள், நிதிபதியுடன் ‘சைட்பார் கான்வர்சேஷன்’ நடத்திக் கொண்டிருந்தார்கள் இரண்டு வக்கீல்களும் . அமெரிக்கர்களும் இவ்வளவு நேர்த்தியாக உடையணிவார்கள் என்பதை அன்று தான் வம்சி உணர்ந்தான். அனைவரும் சினிமாவில் வருவது போன்று மிகக் கச்சிதமாக உடையணிந்து இருந்தார்கள். மிக உயரமான கூரை கொண்ட அறைகள். அறை முழுதும் வழவழவென்ற மரத்தால் இழைக்கப்பட்டிருந்தது..ஆங்காங்கே பளிங்குச் சிலைகள், பெரிய பெரிய பிரேம்களில் அந்தக் கால மனிதர்கள், தொப்பி அணிந்து, வாயில் பைப் வைத்துப் போஸ் கொடுத்த கறுப்பு வெள்ளைப் படங்கள் .. கூட்டம் அதிகமில்லை … ஜூரிக்கள் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்கள் .. ஆரஞ்சு நிற உடை அணிந்து இடது பக்கத்தில் அமர்ந்திருந்தது தான் லிண்டாவெனத் தெரிந்தது .. ஃபோட்டோவிலும் நேரிலும் வேறு வேறு மாதிரி இருந்தாள் .. ஃபோட்டோவில் முகத்தைப் பார்க்கவில்லை என்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது..

ன்று அந்தப் படத்தைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் வம்சி.. அந்தப் படங்கள் செல்ஃபிக்களைப் போலத்தான் தோன்றின.. புகைப்பட நிபுணத்துவம் இல்லாதிருந்த போதும் படங்கள் அழகாக இருந்தன.. வாயில் ஒரு விரலை வைத்து, திறந்த முன்னழகுடன், ஹை ஹீல்ஸ் அணிந்து, ஒரு காலைக் குறுக்காகச் சின்ன மேஜை மேல் வைத்து .. ஒய்யாரமான அபிநயத்துடன் நின்றாள் .. யாருடைய படங்கள் என்று புரியவில்லை முதலில் .. அந்தப் படங்களுடனான தகவல்களைத் தேடத் துவங்கினான்.. பல மெசேஜ்களை மீட்க முடிந்தது.. தம்மடிக்கும் போது வெளியே பார்த்தவனின் மின்னஞ்சலில் அவனது தொலைபேசி இருந்தது .. அழைத்தான் .. ‘டூட் .. அபாரமான ஆளுய்யா நீ .. விஷயம் இப்பத் தான் சூடு பிடிக்குது.. எல்லா மேசேஜையும் அவளுடைய பாய் ஃப்ரெண்டு தான் அனுப்பியிருக்கான் .. ஃபோட்டோ கேட்டு முதல் கெஞ்சி இருக்கான் .. இவளும் அவன் கெஞ்சறதைப் பார்த்து நம்பி ஃபோட்டோ எடுத்து அனுப்பி இருக்கா .. படத்தைப் பார்த்து அசந்து பார்ட்டி லிண்டாவை மிரட்டி இருக்கான்னு நினைக்கிறேன் .. அதான் அவனைப் போட்டுத் தள்ளிட்டா .. ஃபோட்டோவை விட்டு வைச்சா மாட்டிக்குவோம்னு தெரிஞ்சு எப்படியோ அந்தப் ஃபைல்களை மட்டும் அழிச்சுட்டா.. ‘

‘குட் எதோ ஒரு வகையிலே நான் உதவ முடிஞ்சுது.. அது மட்டும் இல்லாம என்னுடைய அல்காரிதத்தை டெஸ்ட் பண்ண மாதிரியும் ஆயிடுச்சு .. ஒரு நல்ல கம்பெனி தெரிஞ்சாச் சொல்லேன் .. விலை பேசிப் பாப்போம்.. ஆமா இன்னொரு ஆங்கிள்ல யோசிச்சியா .. அவளுடைய ஃபோனை யாராவது ஹாக் பண்ணி இருக்கலாம் இல்ல? .. ஹாக் பண்ணவன் அவளுடைய காதலனைப் போல நடிச்சு ஃபோட்டோவைக் கேட்டிருக்கலாம் இல்ல? ‘

‘என்னய்யா புதுசாக் கிளப்பற .. நான் முடிஞ்சுதுன்னு நினச்சேன்.. ‘

‘எனக்குத் தெரியல சும்மா தோணிச்சு .. தியோடருடைய ஃபோனையும் வாங்கிப் பாரு .. ஒரு வேளை நிஜமாவே அவன் தான் இந்தத் தகவல்களை அனுப்பி ஃபோட்டோவை வாங்கி இருந்தா அவனுடைய ஃபோன்ல இந்த ஃபோட்டோ, தகவல்கள் இருக்கணும் இல்லையா? திடீரென்று செத்துப் போனவனுடைய ஃபோன்ல இருந்த தகவல்களை யாரும் அழிச்சிருக்க முடியாது .. ஹன்ச் தான்.. ட்ரை பண்ணிப் பாரு .. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு .. நைட் வீட்டுக்குப் போயாகணும் .. இன்னொரு நாள் பேசுவோம் .. ஆல் த பெஸ்ட் ..’ என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.

நீதிபதியுடன் காதில் எதோ கிசுகிசுத்துக் கொண்டிருந்த பப்ளிக் ப்ராசிகியூடர் தனது இடத்துக்கு ‘டொக் டொக்’ என ஒலியெழுப்பி நடந்து வந்து ‘தேங்க்யூ யுவர் ஹானர்.. ‘ என்று சொல்லிவிட்டு ஜூரியை நோக்கிப் பேசத் துவங்கினார்.

லிண்டா தான் கொலையாளி என்ற முதல் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்ததாகவும், தகவல் நுட்பங்களின் ஆளுமை பெருகி விட்ட இக்காலத்தில் இயல்பான எண்ணங்கள் எவ்வளவு தப்பாக வாய்ப்புண்டு என்று அறிந்ததாகவும் சொல்லி, அந்தப் புரிதலைப் பகிர மிஸ்டர். கிருஷ்ணாவை அழைப்பதாகச் சொல்லி, வம்சியை நோக்கிக் கையைக் காட்டினார்.

முன் பின் கோர்ட் அனுபவமில்லாததால் வம்சிக்கு எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. முதலில் சற்றுத் தடுமாறினாலும் வலுவாகத் தொடர்ந்தான் .. செல்ஃபோன் ஹேக்கிங் பற்றி ஒரு சிறிய அத்தாட்சியாகப் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் செல்போன் நம்பரையும், ஜூரர்களில் ஒருவரின் நம்பரையும் மட்டும் வாங்கி, சிறிது நேரம் தன்னுடைய செல்போனில் குடைந்து அந்த ஜூரருக்கு பப்ளிக் ப்ராசிக்யூட்டர் அனுப்புவது போன்றதொரு செய்தியைத் தனது ஃபோனிலிருந்து அனுப்பி வைத்தான். இந்தச் சிறிய துப்பை வைத்துத் தொடர்ந்ததில் லிண்டாவின் செல்ஃபோனை ஹேக் செய்தவனின் எண்ணை ட்ரேஸ் செய்து, அவனைக் கண்டு பிடித்ததாகச் சொன்னான். உண்மையில் அந்த மூன்றாவது மனிதன் லிண்டாவுக்கு மட்டுமல்லாமல் தியோடருக்கும் செய்திகள் அனுப்பி அவனைக் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு வரவழைத்த செய்திகளையும் மீட்டெடுத்ததை ஸ்லைடுகளில் போட்டுக் காண்பித்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர விளக்கத்துக்குப் பிறகு லிண்டாவின் வக்கீலும், பப்ளிக் ப்ராசிக்யூட்டரும் மாறி மாறிப் பேசினார்கள். இறுதியில் லிண்டா குற்றமற்றவள் என அறிவித்து, புதிதாகக் கைதான மூன்றாவது மனிதன் மீது வழக்குத் தொடர அனுமதியளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். வம்சியின் கண்டுபிடிப்புகள் இல்லையென்றால் இந்த வழக்குத் தவறான திசையை நோக்கிச் சென்றிருக்கும் அபாயத்தைக் கூறி, போலிஸ் டிபார்ட்மெண்ட், இயந்திர மயமாகி வரும் இக்காலத்தில் தனது யுக்திகளையும் கணிப்புகளையும் மாற்றியமைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்க்கப் பெருமை மிகுதியுடன் செல்ஃபோனில் டெட்டுக்கு ‘வீ டிட் இட் மேன்.. லிண்டா இஸ் ஃப்ரீட் ஃபிரம் தி கேஸ்.. தேங்க்யு சோ மச் ..’ என்று செய்தியைத் தட்டிவிட்டு .. நீதிபதி பேசியதைக் கவனிக்கத் தொடங்கினான் ..

‘பல திருப்பங்கள் நிறைந்த இது வருங்காலத்தில் துப்புத் துவக்குவதில் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கிற்கு, கொலையுண்ட டெட்டின் நினைவாகத் ‘தியோடர் ரிச்சர்ட் கேஸ்’ என்று பெயரிடுகிறேன் என்று சொல்ல சுவற்றில் தொங்கிய திரையில், வம்சியிடம் லைட்டர் கேட்ட டெட்டின் புகைப்படம் தோன்றியது..

செல்போனில் பீப் சத்தம் வர செல்ஃபோனைப் பார்த்தான் வம்சி. ‘ஐ வாஸ் ஜஸ்ட் த ஸ்பிரிட் .. யு டிட் இட் ஆல் .. தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப். குட் பை – தியோடர் (டெட்)’ என்ற செய்தி ஒளிர்ந்தது.

மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad