\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திருவிவிலியக் கதைகள்: மன்னிப்பே மகிழ்ச்சியின் ஊற்று

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on December 27, 2015 1 Comment

vivilliam-manippay_620x740கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் பனிப்பூக்கள் இதழின் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைமகனான இயேசு பாலன் அன்பையும் சாமாதானத்தையும்  நற்சுகங்களையும்  நிரம்ப அருள வாழ்த்துக்கள்.

“குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்பது ஆழமான கருத்துடைய தமிழ்க் கூற்று.

அன்பும் சமாதானமும்  என்றன்  வீட்டையும், நாட்டையும் ஏன் உலகத்தையே பிணைக்க வல்லது. அப்பேற்பட்ட  அன்பும், சமாதானமும், மன்னிப்பும் நம்ப  குடும்பத்தில இருக்கணும். அப்போதுதான குடும்பத்தில மகிழ்ச்சி  இருக்கும்.

முன்னொரு காலத்தில நடந்த……….. அப்படின்னு சொல்லுறதவிட, 6000ம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்த ஒரு நிகழ்வைப்பற்றி  கிருஸ்தவ மறையின் புனித நூலான  திருவிவிலியத்தின்  பழைய ஏற்பாட்டில்  சொல்லியிருப்பதை இப்பப் பார்க்கப் போறோம்.

கானான் தேசத்தில் யாக்கோபு என்பவர் வாழ்ந்துவந்தார்.  

அவருக்கு 12 குழந்தைகள். அதில் 11வது குழந்தையாகப் பிறந்தவர்தான் சோசப்.  மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்.  (இவர் இயேசுவினுடைய தந்தை சோசப் அல்ல.)

சோசப் தனது சகோதர்கள் 10 பேரோடு சேர்ந்து ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். தன் சகோதரர்கள் ஏதாவது தீயது செய்தால் அவர்களது நலன் கருதி தந்தையிடம் சொல்லிவிடுவார் சோசப்.

தந்தை யாக்கோபு வயதான காலத்தில் பிறந்ததினால் சோசப் மீது யாக்கோபுக்கு அதிகப் பாசம் உண்டு. அதுமட்டுமல்ல  சோசப்பிற்குப் பிற்காலத்தில் நடக்கப்போவதைக் கனவாகக் காணக் கூடிய ஒரு அபூர்வ சக்தி உண்டு.

அப்படி ஒருநாள்  சோசப்  தன்   சகோதரர்களிடம்   “நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக் கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றன”   என்று, தான் கண்ட கனவைச் சொன்னார்,

அப்புறமென்ன….. அது போதுமே….. மற்ற சகோதரர்கள் எல்லாரும் சோசப்பைப் பார்த்து  “  நீ….. எங்களை ஆளப்போகிறாயோ?….”   என்று சொல்லி,  சோசப்  மீது வெறுப்பும், கோபமும் கொண்டார்கள்.

அதுபோதாதுன்னு இன்னொரு நாள் சோசப்  நல்லபிள்ளையாய்த்  தன் சகோதரரை நோக்கி  “நான் இன்னும் ஒரு கனவு கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கின”   என்றார்.

தந்தை இஸ்ரவேலுக்குக் கனவின் பொருளும் நடக்கபோவது என்ன என்பதையும் ஓரளவு கணிக்க முடிந்தது.

நாட்கள் பல கடந்து போயின…..ஒருநாள் இஸ்ரவேல் சோசப்பை அழைத்து  ” தொலைதுரத்தில்  உன்னுடைய சகோதரர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களைப்  போய்ப்  பார்த்துவிட்டு வா”  என்று அனுப்பினார்.

தூரத்தில் வரும் சோசப்பைப் பார்த்த சகோதரர்கள் அவனைக் கொலை செய்யும்படிச் சதி யோசனை பண்ணி,  “நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகளுள் ஒன்றில்  போட்டு, ஒரு பயங்கர மிருகம் அவனைக் கொன்று விட்டது  என்று சொல்லுவோம்;  அப்புறம் எப்படி அவனுடைய கனவு   நனவாகுமுன்னு பார்ப்போம்” என்றார்கள்.

சகோதரர்களில் ஏதோ கொஞ்சம் நல்ல உள்ளம் கொண்ட ரூபன்,   சோசப்பைத் தப்பி விக்க மனதுள்ளவனாய்   “அவனைக் கொல்ல வேண்டாம்,  அவன்மேல் கை வையாமல், அவனைக் காட்டில உள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்”   என்று சொன்னார்.

ஆனா சும்மாக் குழியில போடுவதனால் என்ன பயன் என்று நினைத்து,  அந்த வழியாக கீலேயாத்திலிருந்து எகிப்துக்குத் தைலத்தையும் வெள்ளைப் போளத்தையும் ஒட்டகங்கள் மேல் ஏற்றிக்கொண்டு போன மீதியானியருடைய கூட்டத்தினருக்கு இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுவிட்டார்கள்.

அப்புறமா சகோதரர்கள் அனைவரும் சோசப்பிடமிருந்து அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து அதன் இரத்தத்தை அங்கியில் தடவி,  அதை அவர்களுடைய  தந்தையிடம்  கொண்டுபோனார்கள்.

அங்கியைப் பார்த்த தந்தையோ சோசப் இறந்துவிட்டதாக நம்பிக் கதறி அழுதார்.

மீதியானியர் சோசப்பை எகிப்திலே  உள்ள போத்திபார் என்பவனிடத்தில் விற்றுவிட்டார்கள்.  அங்கு  தன்னுடைய எஜமானுடைய வீட்டில் நம்பிக்கையான  ஊழியனாக சோசப் இருந்தார்; ஆனால் தீய எண்ணம் கொண்ட எஜமானின் மனைவியின் சூழ்ச்சியால் சிறையில் அடைக்கப்பட்டார்.

மனம்தளராத சோசப் தன்னுடைய நன்னெறியிலிருந்து தவறவில்லை.  தன்னோடு இருந்தவர்களின் கனவுகளின் பொருளையும் நடக்கப் போவதையும் தேவனுடைய வல்லமையால் அனைவருக்கும் சொல்லி வந்தார். அனைவருக்கும்   சோசப்  சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது.  அதைக் கேள்விப்பட்ட எகிப்து  அரசர்  சோசப்பை அழைத்துத் தன் கனவின் பொருளைக் கேட்டார். சோசப்  சொல்லியபடியே எகிப்தில் அனைத்து நிகழ்வுகளும் நடந்தன.

அரசருடைய கனவில் தோன்றிய ஏழு வளமான மாடுகள் வந்து போவதையும் அதற்கு பின்பு ஏழு வறிய மாடுகள் வந்து போவதையும் கேட்டறிந்த சோசப் எகிப்தில் ஏழு வருடம் செழுமையும் பின்பு ஏழு வருடம் பஞ்சமும் வருமெனக் கணித்தார்.

அப்போது அரசர் சோசப்பிடம்  “உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை”  என்று சொல்லி “எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கிறேன்”  என்றார்.

மேலும் தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை சோசப்பின்  கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை சோசப்பிற்கு உடுத்தினார். தான் அரசராக மட்டும் இருந்துகொண்டு எகிப்து முழுவதும் சோசப்பின் ஆளுமைக்குக் கொடுத்தார்.

சோசப் தன்னுடைய ஆளுமையில் முதல் ஏழு வருடம் செழுமையாக இருந்தபோது விளைந்த தானியங்களைக் களஞ்சியத்தில் பத்திரமாகச் சேர்த்து வைத்தார்.

அடுத்த   ஏழு வருடம்  நாடெங்கும் பஞ்சம் உண்டானபடியால், சோசப் களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று. எல்லா நாடுகளிலும் வறுமை  கொடிதாயிருந்தபடியால், எல்லா நாட்டினரும் சோசப்பினிடத்தில் தானியம் பெறும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

அந்தப் பஞ்சம் யாக்கோப்பையும் அவரது மகன்களையும் வருத்தியது.

எகிப்துல தானியம் இருப்பதை அறிந்து,  யாக்கோப்பு  அவரது மகன்களைப் பார்த்து  ” நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி? …. நாம் சாகாமல் உயிரோடிருக்க  நீங்கள் எகிப்துக்குப் போய், நமக்காகத் தானியம் வாங்கிட்டு வாங்க”  என்று அனுப்பினார்.

சோசப்பினுடைய சகோதரர்கள்  பத்துப்பேரும் எகிப்துக்குப்  போனார்கள்.

அவர்கள்  அனைவருக்கும்  எகிப்தை ஆளுகின்ற சோசப் தங்களால் வஞ்சிக்கபட்ட சகோதரன் என்பது தெரியாது.

சோசப்பிற்குப் பின்பு பிறந்த பெஞ்சமின் என்ற கடைசி மகனை யாக்கோப்பு மற்ற பத்து மகன்களோடு எகிப்துக்கு அனுப்பவில்லை.   வேறன்ன….. முன்பு ஒருமுறை  சோசப்பை இழந்தது போல பெஞ்சமினையும் இழந்துவிடுவோமோ என்ற பயம்தான்.

எகிப்து வந்த சகோதரர்கள் அனைவரும் தரையிலே விழுந்து சோசப்பைத் தானியம் வேண்டி வணங்கினார்கள்.

சோசப்  அவர்களைப் பார்த்து, தன்னுடைய  சகோதரர்கள் என்று அறிந்தும் அறியாதவன் போலக் கடுமையாக நடந்துகொண்டார்.  சகோதரர்களுக்கு சோசப்   தங்களால் வஞ்சிக்கப்பட்ட தம்பி என்பது தெரியாது.

சோசப் அவர்களை விட்டு அப்புறம் போய்  யாரும் கவனிக்கதவாறு மனம் விட்டு  அழுதார்.

தன்னுடைய தந்தையையும், கடைசித் தம்பியையும் சந்திக்கும் ஆவலோடு  “உங்களுடைய கடைசிச் சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்பட முடியாது”  என்று சொல்லி  அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தார்.

மூன்றாம் நாள்  சோசப் அவர்களை நோக்கி மன்னிக்கும் உள்ளத்தோடு   ” நான் இறைவனுக்குப் பயப்படுகிறவன்.  நீங்கள் உயிரோடே இருக்கவேண்டும் என்றால்  உங்களில் ஒருவன் இங்கு இருக்க வேண்டும்,  மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வாடியிருக்கிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு  உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் ”  என்று அனுப்பினார்.

அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவர்களுக்குத் தெரியாமலே அவரவர் சாக்கிலே தானியத்தோடு போடவும், வழிக்கு வேண்டிய உணவைக்  கொடுக்கவும் சோசப் கட்டளையிட்டார்.

ஒரு சகோதரனைப் பணையக் கைதியாக விட்டுவிட்டு மற்றவர்கள் வருத்தத்தோடு தானியங்களை எடுத்துக்கொண்டு கானன் நாட்டிற்கு வந்தார்கள். அப்போது அவர்கள் அனைவரும் இந்த வருமையெல்லாம்  முன்பொரு காலம் சோசப் என்ற சகோதரனைத் துரோகித்த பாவத்திற்குக் கிடைத்த தண்டனையாக எண்ணி வருந்தினார்கள்.

“நமது  தம்பி நம்மைக் கெஞ்சிக் கேட்டபோதும் , அவனுடைய மன வலியை நாம் கண்டும், அவனுக்கு இரக்கம் காட்டவில்லை. அதனால்தான் இந்த ஆபத்து நமக்கு வந்தது” என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக் கொண்டார்கள்.

கானன் நாட்டிற்கு தங்களுடைய தந்தையிடம் வந்த ஒன்பது சகோதரர்களும் நடந்ததைச் \சொன்னார்கள்.

மேலும் கடைசித் தம்பி பெஞ்சமினை அழைத்துப் போனால்தான் பணையக் கைதியாக இருக்கும் சிமியோன் என்ற தம்பியை மீட்கமுடியும் என்றார்கள்.

தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி  “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; சோசப்பும் இப்போது இல்லை, சிமியோனும் இல்லை, பெஞ்சமினையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு ஆபத்தாகத் தெரிகிறது ”   என்று கூறி பெஞ்சமினை அனுப்பவில்லை.

கானன் நாட்டுல பஞ்சம்  ரொம்பக் கொடியதாயிருந்தது.

எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் முழுவதும் தீர்ந்தது.

தந்தை யாக்கோப் தன்னுடைய மகன்களைப் பார்த்து ” நீங்கள்  மீண்டும் எகிப்து திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்”  என்றார்.

அதற்கு யூதா: என்ற மகன் “உங்கள் கடைசித் தம்பியை அழைத்து வரவேண்டும்  என்று  எகிப்தை ஆளும் மனிதன் எங்களிடம் கோபமாகச் சொன்னார்.  அதனால பெஞ்சமினை எங்களோடு அனுப்பினால்தான் எகிப்து  போக முடியும்”   என்றார்.

அதற்கு யாக்கோப் : “உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் இருப்பதை நீங்கள் ஏன் அந்த மனிதனுக்குச் சொன்னீர்கள்”  என வருத்ததோடு கேட்டார்.

அதற்கு அவர்கள்: அந்த மனிதன், “உங்கள் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் விபரமாய் விசாரித்தான்; அதற்கு பதில் சொன்னதைக் கேட்டு  அந்த மனிதன் உங்கள் சகோதரனை உங்களோடு கூட இங்கே கொண்டு வாருங்கள் என்று சொன்னார்.  அதை  எதிர்பார்க்கவில்லை” என்றார்கள்.

அதற்கு யாகோப்பு  “அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த நாட்டில கிடைக்கிற உயர்ந்த வாசனைத் தைலமும், வெள்ளைப் போளமும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள். பணத்தை இரண்டு மடங்கு உங்கள் கைகளில் கொண்டு போங்கள், உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு போங்கள். இறைவன் உங்களைக் காப்பாற்றுவார்”  என்று அனுப்பி வைத்தார்.

அதே போல அவர்களும் எகிப்துக்குப் போய், சோசப் மாளிகை முன் வந்து நின்றார்கள்.

பெஞ்சமின்  அவர்களோடேகூட வந்திருப்பதைக் கண்ட சோசப், தன் வேலையாளிடம்  பெஞ்சமினைச் சிறப்பாகக் கவனித்து உயர்தர உணவு வழங்குமாறு செய்தார்.   வெளியே மற்ற சகோதரர்கள் பயத்தோடு காத்திருந்தனர்.

சோசப் அவர்கள் முன் வந்த பொது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை த் தரையில் வைத்துக் குனிந்து, அவனை வணங்கினார்கள்.  சோசப் கண்ட கனவு நிகழ்வானது.

அப்பொழுது சோசப் அவர்களை நலம் விசாரித்து, ” நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தந்தை சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தார் .

சோசப்பிற்குத் தன்னுடைய சகோதரர்களைக் கண்ட சந்தோசத்தால் அழுகை பொங்கிவந்தது.  அழுவதற்கு இடம் தேடி, வேகமாக அறைக்குள்ளே போய், அங்கே அழுதார்.

பின்பு, சோசப் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, உணவு வையுங்கள் என்று கூறித் தன் சகோதரர்களோடு அமர்ந்து உண்டார்.

சகோதரர்கள் நடப்பது என்ன என்பது தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

பார்வோனின் நாடான எகிப்தை ஆளுகை செய்யும்  சோசப் சகோதரர்கள் முன்பு  சத்தமிட்டு அழுதார்.

அப்பொழுது சோசப் தன் சகோதரரை நோக்கி  “என் அருகில் வாருங்கள்….. நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய சோசப்  நான்தான்.”  என்றார்.

” என்னை விற்று விட்டுப் போனதினால்,  நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்குக் கவலையாயிருக்கவும் வேண்டாம்; உயிர் காக்கும் இறைவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

நாட்டில்  இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.

பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.

ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்கு நம்பிக்கைக்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        குரியனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.

நீங்கள் போய்த் தந்தையிடம் நடந்தவற்றை சொல்லி தந்தையையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து வாருங்கள்.  பார்வோனிடம் சொல்லி  உங்களை இங்கு வளமாக வாழ வழி செய்வேன். ”  என்றார்.

தன் தம்பியாகிய பெஞ்சமினைக் கட்டிக்கொண்டு அழுதார் .  மற்ற சகோதரர்களும் தன் தவறை உணர்ந்தவர்களாக சோசப்பை  கட்டிக்கொண்டு அழுதார்கள்.

சகோதர்கள் கானன் சென்று தந்தை யாக்கோப்பை அழைத்து வந்தார்கள்.

சோசப்பைப் பார்த்த யாக்கோப் கண்ணீரோடு ” நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும்” என்றார்.

மன்னிப்பே மகிழ்ச்சியின் ஊற்று என்பதில் ஐயமில்லை…..

ம.பெஞ்சமின் ஹனிபால்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Naanjil Peter says:

    மகா பாரத கதைகளுக்கு ஒத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad