\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வணக்கம்!

Filed in தலையங்கம் by on December 23, 2018 0 Comments

2018 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான ஆண்டு முடியப்போகிறதே என்ற வருத்தத்தில்  சிலரும், வருத்தங்கள் நிறைந்த இந்த ஆண்டு ஒரு வழியாக முடிகிறது என்ற மகிழ்ச்சியில சிலரும் இருக்கக்கூடும். வரப்போகும் ஆண்டைப் பற்றிய கனவுகள் எல்லோர் மனதிலும் தொக்கி நிற்கும். தேவையில்லாத பழக்கத்தை விடவேண்டும்; உடல் நலம் பேணவேண்டும்; குடும்ப நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; திருமணம் செய்ய வேண்டும்;  புதிய பொருட்கள் வாங்கவேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளிநாடு சுற்றுலா போகவேண்டும்; இப்படி எண்ணிலடங்கா கனவுகள்; உறுதிமொழிகள்; மகிழ்ச்சிக்கான திட்டமிடல்கள். உண்மையில் அனைத்துமே மிக சிறந்த எண்ணங்கள். ஆனால் இவை தான் மகிழ்ச்சிக்கான இலக்குகளா? இல்லை. மகிழ்ச்சி என்பது கானல் நீரைப் போன்றது; இலக்குகள் மாறிக்கொண்டேயிருக்கிறது. பயணம் தொடரத் தொடர அவை எட்டிப் போய்விடுகிறது.  இவ்வித மாற்றங்களைத்தான் மனித மனமும் விரும்புகிறது. தேக்கநிலையில் திருப்தியடைவதில்லை!

உலக நாடுகள் பலவற்றிலும் தேவையற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. சில இயற்கையாக அரங்கேறின. இந்தோனேஷிய நிலநடுக்க சுனாமியில் தொள்ளாயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டனர். ஜப்பானிய கனமழை, மண்சரிவில் நூற்று சொச்சம் பேர் இறந்தனர். கலிபோர்னிய காட்டுத் தீயில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காடுகள், குடியிருப்பு பகுதிகள் எரிந்து போயின. நாகலாந்து, கர்நாடக, கேரள. தமிழக வெள்ளங்களில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். சில மாற்றங்கள் தீவிரவாதம், எதேச்சதிகாரம், மதவாதம் போன்றவற்றால் தூண்டப்பட்டு நிகழ்ந்தன. ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தான், சிரியா, பாலஸ்தீன[ப் போர்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த ஆண்டு மட்டும் வெனிசுவேலா, மியன்மர், சிரியா, பாலஸ்தீன நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகம்.  

இதே ஆண்டில்தான் சில உன்னத மனிதர்களின் மனிதாபிமான செயல்களையும் பார்க்க முடிந்தது. பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது, தன் மாணவர்களைக் காப்பாற்றும் பொருட்டு உயிரிழந்த ஸ்காட் பீகல். நாற்பது வருடங்களாக அதிகப்பட்சமாக ஐந்து ரூபாயைக் கட்டணமாகப் பெற்று ஏழைகளுக்குப் பணியாற்றிய மருத்துவர் ஜெயச்சந்திரன். இருபது ஆண்டுகளாக, கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை செய்து, வரும் வருமானத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பணஉதவி செய்யும் சூளூரைச் சேர்ந்த லோகநாதன். எண்ணற்ற புற்றுநோயாளி குழந்தைகளைப் பாதுகாத்து மருத்துவ வசதிகள் அளித்துவரும் பெருவைச் சேர்ந்த மருத்துவர் ரிகார்டோ பன் சாங்க். தினமும் பதினெட்டு மணிநேரம் காய்கறி வியாபாரம் செய்து வரும் வருமானம் முழுவதையும் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அளித்து வரும் 67 வயது  தைவானியப் பெண். ஷென்-ஸூ-சூ – இவர்களைப் போல் எண்ணற்ற, முகந்தெரியாத மனிதர்கள்; தனது நலன் என்பதை புறந்தள்ளி பிரதிபலன் எதிர்பாரா சமூகநலன் புரிந்தவர்கள். மகிழ்ச்சியடைந்தவர்கள். வரப்போகும் ஆண்டில் இம்மனிதர்கள் அமைதியாகச் சொல்லும், செய்திக்குச் செவிசாய்ப்போம்.

இனம், மதப் பிரிவினைகளை மறப்போம். நல்லிணக்கம் வளர்ப்போம். இயற்கையைப் போற்றுவோம். மனங்கள் இளகட்டும். மனிதம் வெல்லட்டும். அமைதி தழைக்கட்டும்.

இவை அனைத்தும் நிறைவேறிட பனிப்பூக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

–          ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad