\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 0 Comments

பகுதி 2

24hours-2_520x433முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். காயமடைந்தவனுக்கு டாக்டர் தேசிகன், அவர் மகள் டாக்டர் புஷ்பா மற்றும் நர்ஸ் ரோஸி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருகிறார்கள். காயமடைந்தவன் கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. தற்போதைக்கு அந்தக் கொலையில் தொடர்பிருக்குமோ என நம்புமளவுக்கு வேலாயுதமும் அவரின் ஆட்களும் நடந்து கொள்கின்றனர். ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் அதிகாரி ராஜேந்திரனின் குழுவுக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் கணேஷின் செல் ஃபோனில் அழைத்து மைக்ரோ எஸ் டி. கார்டைக் கொடுத்து விடும்படி மிரட்டுகிறான். இனி என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

திங்கட்கிழமை நண்பகல் பனிரெண்டு மணி

”யாரு ஃபோன்ல”

கரகரத்த கடுமைக் குரலுடன் கேட்டுக் கொண்டே பின்னால் நிற்கிறார் போலீஸ் அதிகாரி ராஜேந்திரன். எதிர்பாராது வந்த குரல் சத்தத்தில் திடுக்கெனத் தூக்கிவாரப் போட, என்ன சொல்வது என்று புரியாமல் திரு திருவென விழிக்கத் தொடங்குகிறான் கணேஷ். அவசர அவசரமாய் சிதம்பரத்தை நோக்கித் திரும்பி அவனிடமிருந்து ஏதேனும் உதவி வருமோ என்று பார்க்கிறான். சிதம்பரம் ஃபோனில் இந்த முனையில் கணேஷ் சொன்ன பதில்களை வைத்து அந்த முனையில் என்ன பேசியிருப்பார்கள் என்று ஊகித்துக் கொண்டு முழுவதும் கதி கலங்கிப் போயிருந்தான்.

“கேக்ரேன்ல, யாரு ஃபோன்ல…” என்று மிரட்டத் தொடங்கினார் ராஜேந்திரன். இனிமேல் தப்பிக்க முடியாது என்று தோன்ற, கணேஷ், “தெரியலை சார், எதுக்காக அவனைக் காப்பாத்தினீங்கன்னு கேட்டு மிரட்டுரான் சார், அவன் தான் கொலை பண்ணினவனா இருப்பானோன்னு ஒரு சந்தேகம் சார்”… என இழுக்க…

“ஃபோனை இப்படிக் கொடு” என்று கையில் வாங்கிக் கொண்டே.. “வேர என்ன வேணுமா, சும்மா மிரட்டத்தான் கூப்பிட்டானா?” குரலில் கணேஷ் சொன்ன கதையை அவர் சற்றும் நம்பவில்லை எனத் தெளிவாய்த் தெரிந்தது. ”அவ்ளோதான் சார் சொன்னான்”.. நடுங்கும் குரலுடன் தான் கூறியதை உறுதியாக்க முனைந்தான் கணேஷ்.

இதற்குள் ஃபோன் காலர் ஐடியில் நம்பர் எதுவும் வராமல் “unknown” என்று வந்திருப்பதைப் பார்த்த பிறகு, கான்ஸ்டபிளைச் சைகையால் வரவழைத்த ராஜேந்திரன் “காதர் அண்ணே, எக்சேஞ்சுக்கு ஃபோன் பண்ணி ஏதாவது ட்ரேஸ் பண்ண முடியுதா பாருங்க” என அவர் கையில் ஃபோனைக் கொடுத்து விட்டுக் கணேஷை நோக்கி மறுபடி திரும்புகிறார்.

“நெஜமாச் சொல்லு, என்ன கேட்டான், அவன்? சும்மா ஏன் காப்பாத்துனன்னு கேட்கறதுக்காக ஃபோன் பண்ணியிருப்பான்னு நான் நம்பல. நீயா உண்மையைச் சொல்லிட்டா ஒனக்கு நல்லது..” என்று ராஜேந்திரனின் மிரட்டல் தொடர்ந்தது. மைக்ரோ எஸ்.டி. கார்டைப் பற்றி இவரிடம் சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்த கணேஷ், “சார், உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், ஆன இங்க வெச்சி வேண்டாம், தனியாப் போய் பேசலாங்களா?”.. எனக் கேட்க…

அவனை சற்றே முறைத்துக் கொண்டு சைகை காட்டியபடியே ராஜேந்திரன் நடக்கத் துவங்க, கசாப்புக் கடைக்காரனின் பின்னால் செல்லும் ஆட்டுக்குட்டியைப் போலப் பின் தொடர்ந்தான் கணேஷ்.

திங்கட்கிழமை மதியம் பனிரெண்டு மணி முப்பது நிமிடம்

களனிவாசல் தெருவின் மத்தியில் அமைந்திருந்த சபாரத்தினத்தின் வீடு. வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் சில பெருசுகள் அமர்ந்திருக்க, மதிய வெயிலில் கொடுமையை மறைப்பதற்காக பனை ஓலையைக் கொண்டு சிறு கூறை மற்றும் மறைவு போடுவதற்காகத் தட்டி கட்டிக்கொண்டிருந்தனர் இரண்டு தொழிலாளிகள். சுவற்றின் ஓரமாய் சில நிமிடங்களுக்கு முன்னராக வெட்டப்பட்ட பசுமையான இரண்டு தென்னை மட்டை  முழு ஓலையுடன் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. மார்ச்சுவரியிலிருந்து போஸ்ட்மார்ட்டம் முடிந்து சபாரத்தினம் ஆசாரியின் உடலைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாசலில் மெதுவாய் வந்து நின்றது.

ஆம்புலன்ஸ் வந்து நின்றதைப் பார்த்தவுடன் வாசலில் அமர்ந்திருந்த பெருசுகள் எழுந்து மெதுவாய் வண்டியை நோக்கி நடக்கத் தொடங்கினர். வீட்டின் உள்ளிருந்த ஒரு சில இளைஞர்கள் அவசர அவசரமாய் வெளிவர, அவர்களுக்கு மத்தியில் துக்கத்தால் அழுது அழுது தீர்த்திருந்த லக்‌ஷ்மணன் தன் தந்தையின் பிரதேத்தைப் பார்ப்பதற்காக வெளியில் ஓடி வந்து கொண்டிருந்தான்.

ஆம்புலன்ஸ் சிப்பந்திகள் இருவர். வண்டியை நிறுத்தியவுடன் இருவரும் அவரவர்களின் பக்கத்திலிருந்து இறங்கி, பின்கதவை நோக்கிச் சென்றனர். மேல் நோக்கித் திறக்கும் பின்கதவை உயர்த்தித் திறந்து ஒருவன் வண்டிக்குள் ஏறிச் சென்றான். ஏறிச் சென்றவன் அங்கே வைக்கப் பட்டிருந்த ஸ்ட்ரெட்ச்சரின் தலைமாட்டைப் பிடித்துக் கொள்ள, கீழே நின்றவன் கால் மாட்டைப் பிடித்துக் கொள்ள, வெள்ளுடையால் மூடப்பட்ட சபாரத்தின ஆசாரியின் பூத உடல் நிதானமாய் தூக்கிச் செல்லப்பட்டது. முகம் மூடி வெள்ளையான போர்வையின் பின்னால் இருப்பது இறந்த தன் தந்தை என்று நினைக்கையில், கட்டுப்படுத்த முடியாத அளவு அழுகை பீரிட்டு வர, “ஐயோ, அப்பச்சி…” என அதற்கு மேல் எதுவும் கூற இயலாமல் அழுது தீர்த்தான் லக்‌ஷ்மணன். அவனருகில் நின்ற உறவினர்களிருவர் அவனைத் தாங்கிப் பிடித்துச் சமாதானம் செய்யத் தொடங்கினர்.

மெதுவாய் நடந்து வாசலின் வழியாய் வீட்டிற்குள் ஸ்ட்ரெட்சர் நுழைய, இப்பொழுது எதிர்வருவது சபாரத்தினத்தின் மனைவியை மையமாய் வைத்துப் பல பெண்டிர். விஷயம் தெரிந்த கடந்த இரண்டு மணி நேரங்களில் அழுது அழுது வீங்கிய முகத்துடன், இன்னும் அழுவது நிருத்தாமல் நின்றிருந்த சபாரத்தின ஆசாரியின் மனைவி, தன்னை நிழல் போல் இதுவரை காத்திருந்த கணவன் பிணமாய் வீட்டில் நுழைவது பொருக்க இயலாமல் “ஐயோ கடவுளே, நாங்க யாருக்கு என்ன பாவம் செஞ்சோம், இப்படி அவுகள கொண்டு போய்ட்டீயே……” என ஊரே கரையும்படி ஒப்பாரி வைக்கத் தொடங்கியிருந்தார்.

இவற்றுக்கு மத்தியில், லக்‌ஷ்மணனைக் கடையில் சந்தித்த இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு டி.வி.எஸ் ஃபிஃப்டியில் சபாரத்தினம் ஆசாரியின் இல்லத்திற்கு முன் வந்து இறங்குகின்றனர். சாவுக்களை முழுவதுமாய்க் கட்டியிருந்த அந்த இல்லத்தின் முன்னே வண்டியை நிறுத்தி விட்டு இறங்கிய ஹெட் கான்ஸ்டபிளின் பெயர் சுப்பையா, அவரின் பின்னே பவ்யமாய் நடந்து வரும், அடுத்த வருடம் ரிடையர்ட் ஆகப் போகும் கான்ஸ்டபிளின் பெயர் ஏகாம்பரம். சுப்பையா, ஏகாம்பரத்தைப் பார்த்து, “ரொம்பவும் பாவண்ணே, இந்த எளவு வீட்டுல போயி, விசாரணை கிசாரணைன்னுகிட்டு… நம்ம பொளப்பு வெறும் பொளப்புண்ணே..” புலம்பிக் கொண்டே நடக்கிறார்…

வெளியிலிருந்த பெரியவர் ஒருவரிடம் சுப்பையா பதமாய் விசாரணையைத் தொடங்குகிறார். “ஐயா, நீங்க செத்தவுகளுக்கு என்ன வேணும்?” அவர் சற்றே பயத்துடன் “சபாரத்தினம் எனக்கு தம்பி மொற வேணுமுங்கய்யா.. அவென் அப்பச்சியும் எங்க அப்பச்சியும் ஒண்ணுவிட்ட அண்ணந்தம்பி மொற.. பங்காளிங்க”… இதே கேள்வியை ஒவ்வொரு வயோதிகர்களையும் சுப்பையா கேட்க, கடைசியாய் நின்றிருந்த கதர் வேட்டி கதர் சட்டைப் பெரியவர், “ஐயா, எம்பேரு சம்முக சுந்தருமுங்க.. எல்லாரும் சம்முவமுன்னு கூப்டுவாக, நான் சபாரத்தின ஐயாவுக்கு சம்மந்திங்க. அவுக என் வூட்டுலதா நேத்திக்கு ரவைக்குத் தங்கியிருந்தாக, இன்னக்கு வெள்ளெனப் பொறப்புட்டு வந்தவுகள இப்டிப் பண்ணிப்புட்டாய்ங்க படுபாவிப் பயலுவ, அவிங்கள சும்மா விடப்புடாதுங்க ஐயா, எப்டியாவது புடிச்சுருங்க ஐயா…” என கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே தழுதழுத்த குரலில் சொல்லி முடித்தார்…

இவரிடம் தான் விசாரணை அதிகம் என முடிவு செய்த சுப்பையா, “ஐயா, உள்ளார போயி ஒக்காந்து பேசலாங்களா, கொஞ்ச சாரிக்க வேண்டிருக்கு” எனக் கேட்க, “தாராளமாய்யா” என சண்முக சுந்தரம் பின் தொடர்ந்தார். கான்ஸ்டபிள் ஏகாம்பரமும், இதுவே தனது நேரமென, பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன நோட் புக்கையும், பேனாவையும் கையிலெடுத்துக் கொண்டே பின் தொடர்ந்தார்.

பக்கத்து வீட்டிலிருந்து வந்து இதுபோன்ற நேரங்களில் தேவையான உதவிகளைத் தாமாகவே செய்யத் தொடங்குவர் கிராமத்தினர். அந்த முறையில், சபாரத்தினம் ஆசாரியின் அடுத்த வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த ஆசிரியர் சேவியர் இவர்களின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டதால், “சார், வாங்க, என் வீட்டுக்குள்ள உட்காந்து பேசுங்க”, என அழைத்துச் சென்றார்.

திங்கட்கிழமை மதியம் ஒரு மணி

விஸ்வேஸ்வரய்யா மருத்துவ மனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு. ஆபரேஷன் தியேட்டருக்குள்ளும், வெளியேயும் என நர்ஸ் ரோஸி அவசர அவசரமாய் நடந்த வண்ணம் இருக்கிறாள். தியேட்டருக்குள் டாக்டருக்கான கவுனில் மூன்று நான்கு டாக்டர்கள். தலை மற்றும் வாய் என அனைத்தையும் மறைத்து மாஸ்க் அணிந்திருந்தனர். அவற்றில் தலைமையாக இருந்தவர் டாக்டர் தேசிகன். அவரின் கண்களில் பொறுப்புணர்வு தாண்டவமாடிக் கொண்டிருக்க, மற்ற டாக்டர்களுக்கெல்லாம் என்ன செய்ய வேண்டுமென ப்ரீஃபிங்க் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரின் குரலில் அவசரம் தெரிந்தது, ஆனால் பதட்டம் காணப்படவில்லை. முப்பது வருடங்களுக்கும் மேலாக இதுபோல பல அறுவைச் சிகிச்சைகளைச் செய்த அனுபவம் அவரின் ஒவ்வொரு வரிகளிலும் விளங்கிற்று. எமன் வீட்டின் வாசல்வரை சென்றவர்களைத் தனது திறமையால் மீண்டும் மண்ணுலகுக்குக் கொண்டு வந்தவர் அவர்.

வயிற்றில் பலமுறைக் குத்தப்பட்டதால் தோல், சதை, ரத்த நாளங்களெனப் பெரிதளவில் சேதமடைந்த நிலையில் நினைவிழந்து அறுவைச் சிகிச்சைக்கான படுக்கையில் படுத்திருந்தான் தட்சிணா மூர்த்தி. மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட சில மணி நேரங்களில், ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையின் திறமையில், குத்துப் பட்டவனைப் பற்றிய முழு விவரமும் கண்டறியப் பட்டிருந்தது. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றில் ஃபோட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பவன். கிராமங்களில் நடக்கும் காதுகுத்து, வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, குழந்தைகளின் பிறந்த நாள் எனச் சிறு சிறு விழாக்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக அழைக்கப்படுவான். திருமணம் போன்ற பெரிய விழாக்களுக்கு காரைக்குடியிலுள்ள பெரிய ஸ்டூடியோக்களை அழைத்து விடுகின்றனர் என்ற மனக்குறை எப்போதும் உண்டு அவனுக்கு. எப்படியாவது வளர்ந்து மாடர்ன் கேமரா மற்றும் சாதனங்களை வாங்கிப் பெரிய அளவில் உயர்ந்து விட வேண்டும் என்பது அவனின் லட்சியம். சமீபத்தில் முப்பது வயதைத் தொட்ட தட்சிணா மூர்த்திக்கு தந்தை, தாய் மற்றும் எந்தவித உறவுகளும் இல்லை, இன்னும் திருமணமும் ஆகியிருக்கவில்லை. ஆனால் தனது ஸ்டூடியோவின் அருகில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் வேலை செய்யும் ஒன்றாம் வகுப்புத் தமிழ் டீச்சர் சாந்தியின் மீது ஒரு கண் என்பது அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்குத் தெரியும்.

பல முதலுதவிகள் செய்து ரத்தக் கசிவை நிறுத்தியிருந்தனர் மருத்துவர்கள். ஆனால் ரத்தசேதம் மிகவும் அதிகமென்பதால் ரத்த வங்கிக்குச் சொல்லியனுப்பியிருந்தனர். அறுவைச் சிகிச்சையின் போது இன்னும் அதிகம் தேவைப்படுமென்பது அவர்களின் கணிப்பு. குத்துப் பட்ட வயிற்றுப்பகுதியைச் சுற்றிச் சிறிதளவு ஒபன் செய்து உள்ளே அறுபட்டுள்ள பாகங்களையெல்லாம் அவையவற்றின் தன்மைக்கேற்ப ஒட்ட வைக்க வேண்டுமென்பதே அவர்களின் வேலை.

முழுவதுமாய்த் திட்டமிட்டு எல்லாச் செயல்களுக்கும் தயாராகியிருந்தனர் மருத்துவர் குழு. டாக்டர் தேசிகனின் கணக்குப்படி இந்த அறுவைச் சிகிச்சை செய்து முடிப்பதற்கு மொத்த மூன்று மணி நேரமாவது ஆகும். அறுவைச் சிகிச்சை தொடங்கியது. அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தத்தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் கவனமாய் இருக்க, யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஒரு செல் ஃபோன் அலரத் தொடங்கியது.

பொதுவாக செல் ஃபோன் ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுமதி இல்லை. அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த விதி அத்துபடி. ஒருவரும் செல்ஃபோன் உள்ளே எடுத்து வருவதில்லை. செல்ஃபோன் சத்தத்தைக் கேட்டு ஒவ்வொருவரும் அங்கும் இங்கும் தேட, சத்தம் டாக்டர் தேசிகனின் ஓவர் கோட் பாக்கெட்டிலிருந்து வருகிறது என்று புரிகிறது. தனது முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இது போன்ற நிகழ்வு ஒன்று நடந்ததில்லை என்று நினைத்துக் கொண்டே பாக்கெட்டில் கைவிட்டு ஃபோனை எடுக்கிறார். அப்பொழுதுதான் உற்று கவனிக்க, அந்த ஃபோன் அவருடையதே அல்ல என்பது விளங்கிற்று. அங்கிருக்கும் யாருடையதுமல்ல அந்த ஃபோன் என்று தெரிந்தபின்னர், டாக்டர் தேசிகன் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என உணர்கிறார். அதிர்ஷ்டவசமாக அறுவைச் சிகிச்சையின் முக்கிய கட்டத்தை இன்னும் எட்டியிராததால், அந்த ஃபோனை எடுத்துப் பேசுவது என்ற முடிவுக்கு வருகிறார் டாக்டர்.

”ஹலோ, டாக்டர் தேசிகன் ஸ்பீக்கி்ங்க்…” என நிதானத்தை வரவழைத்துக் கொண்டு சொல்ல, மறுமுனையில் சொல்வதைக் கேட்க, ஏ.ஸி ரூமிலும் டாக்டரின் நெற்றி வியர்க்கத் தொடங்குகிறது.

திங்கட்கிழமை மதியம் ஒரு மணி முப்பது நிமிடம்

கிராமத்தின் மத்தியில் சிவன் கோயில் தெற்கு வீதியில் அமைந்துள்ள ஒரு பெரிய வீடு. வாசலில் “மன மகிழ் மன்றம்” என்ற போர்டு தொங்குகிறது. ஊரிலுள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது எழுதப்படாத சட்டம். வாசலில் அமைந்துள்ள திண்ணையில் வேட்டி சட்டை அணிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் காவலுக்காக அமர்ந்திருப்பார், அவருக்குத் தெரியும் யாரை உள்ளே விடலாம், யாரை உள்ளே விடக் கூடாது என்பது. வெளியில் நடந்து செல்லும் வழக்கமான மனிதர்களுக்கு, “உள்ள காசுவச்சு சீட்டாடுவாகளாம்” என்ற அளவில் புரிதல்.

உள்ளே பொதுவாக காசு வைத்துச் சீட்டாம் நடப்பதுதான் நிஜமென்றாலும், ஒருசில மற்ற விடயங்களும் நடக்குமென்பதே உண்மை. பெரும்பாலும், சிங்கப்பூர், மலேசியா என வணிகத்திற்காக அடிக்கடி வெளி நாடு சென்று திரும்பி வரும் சில பணக்காரர்கள், ட்யூடி ஃப்ரீயில் வாங்கி வந்த சீமைச் சரக்குகள் பருகப் படும். மனைவி மார்களுக்குத் தெரியாமல் அவ்வப்பொழுது சுருட்டு, ஹுக்கா மற்றும் விலையுயர்ந்த சிகரெட்டுகளும் பாவிக்கப் படும். பொதுவாக, அந்த ஊரில் சமூகத்தின் மேல் தட்டு மக்களுக்கு இது தெரிந்திருந்தது.

இந்த பொழுது போக்கைத் தவிர, அங்கு நடக்கும் மற்றொரு மிகப் பெரிய வியாபாரம், கருப்புப் பணம் கை மாறும் விதமாய் நடத்தப்படும் சில வியாபாரங்கள். சில சமயம் வைரங்கள் கூட கை மாற்றப்படும். மிகவும் நெருக்கமாக இருக்கும் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த வியாபரத்தில் ஈடுபட இயலும். தற்போதைக்கு இந்த விவரங்கள் போதுமானவை. மேலும் விபரங்களை தேவைப்பட்டால் பிறகு பார்க்கலாம்.

உள்ளே போடப்பட்டிடுருந்த, பல வேலைப்பாடுகளுடன் கூடிய, பர்மா தேக்கால் செய்யப்பட்ட பெரிய மேசையைச் சுற்றி நான்கு பெரிய மனிதர்கள் உட்கார்ந்திருந்தனர். ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர் தனது வேலையாட்களை சரமாரியாய்த் திட்டித்தீர்த்த தனவந்தர் வேலாயுதம் தான் அது. மற்ற மூவரும் அந்த ஊருக்குப் புதியவர்கள்.

மூவரில் ஒருவர் தொடங்குகிறார். ”என்னங்க, உங்கள நம்பித்தானே இதுல இறங்கினோம், இப்ப மாட்டிக்குவோம் போல தெரியுதே?..” என்கிறார். இரண்டாமவர், “உங்க ஆளுங்க, ஆனாலும் கொஞ்சம் கவனமா இருந்துருக்கணுங்க” எனத் தொடர, மூன்றாமவர் தன் பங்குக்கு, “இப்ப என்ன, அந்த சிப் கிடைச்சுருமா இல்லயா?” எனக் கோபத்துடன் வினவுகிறார்.

வேலாயுதம் சற்றே பணிவுடன், “உங்க எல்லார் கோபமும் எனக்குப் புரியுதுங்க. இதுவரைக்கும் என்னோட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு முறை கூட நடந்தது இல்லீங்க, நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கணும், என்னோட ஆளுங்க எல்லாம் ரொம்பத் திறமசாலிங்க, எத்தன முற நம்ம கை மாத்திருக்கோம், இதுக்கு முன்ன ஏதாவது நடந்ததா.. “ எனத் தொடர.. கோபமாய்ப் பேசிய மூன்றாமவர் இடை மறிக்கிறார்.

“அதெல்லாம் சரி வேலாயுதம், நடந்ததப் பத்திப் பேசி என்ன பிரயோசனம், இப்ப இதில இருந்து எப்டித் தப்பிக்கிறது. ஒரு தப்ப மறக்கிறத்துக்கு ஒண்ணு மேல ஒண்ணாப் பண்ணி, இப்ப மொத்தமா மாட்டிக்குவோம் போல இருக்கே? எப்டித் தப்பிக்கிறதுன்னு மத்தும் பேசலாம்” என்கிறார்…

”அதுங்க..” வேலாயுதம் ஏதோ சொல்ல முற்பட, வெளிக்கதவைத் திறந்து கொண்டு, வெளியிலிருக்கும் காவலாள் உள்ளே வருவதைப் பார்த்து விட்டு பேசுவதை நிறுத்துகிறார் வேலாயுதம்.

உள்ளே வந்த காவலாள், “ஐயா, வெளில போலீஸு வந்துருக்கு..” எனச் சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்…

(தொடரும்)

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad