\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சிந்திய சிந்து

 

காட்டிலும் மேட்டிலும் களைப்புடன் உழைத்திட்ட
காளையும் கன்னியும் கண்ணயர்ந்து சுவைத்திட
காதலும் கடவுளும் கருத்தினில் படைத்திட்ட,
காரிருள் நீக்கியே கவிபுனைந்த கதிரோன்!

சாவதின் பயமது சங்கடமாய்த் துரத்திட
சாரமாய் வாழ்க்கையின் சங்கதி உணர்த்திட
சாரதியாய் வந்திட்ட கண்ணனைப் பணிந்திட
சாயுங்கால சொர்க்கமாய்க் குளிர்ந்திட்ட நிலவவன் !!!

தாயகம் முழுவதும் தருக்கரால் பிடிபட
தானமும் தவங்களும் தழைக்காது மிதிபட
தாயவள் தளையறுக்கத் தலைமகனாய் உதித்திட்ட,
தாங்கொணா வெப்பமாய்த் தகித்திட்ட தலைவனவன் !!!

நாவினில் கலைமகளை நலமுறவே அமர்த்திட
நானிலம் முழுவதும் நற்கதி பிறந்திட
நாள்முழுதும் சிந்தைதனில் நற்சக்தி துதித்திட
நாடுதுயில் நீக்கிடவே பாடிவந்த நல்லவனவன் !!!

பாதகம் செய்பவருக்கு பயமில்லை என்றிட்ட
பாரதம் முழுமைக்கும் வேட்கையினை வளர்த்திட்ட
பாட்டுக்கொரு புலவனாய்ப் பார்புகழத் திகழ்ந்திட்ட
பாரதி எனுமந்த கலைமகளின் தலைப்புதல்வன் !!!

மாக்களாய் இருந்திட்ட மக்களை எழுப்பிட
மாற்றங்கள் பலவற்றை மனதினில் விளைத்திட
மாதவம் செய்ததால் மண்ணினில் உதித்திட்ட
மாவீரக் கவிதைகளை மந்திரமாய் உதிர்த்தவனவன் !!!

யாமறிந்த புலவரிலே இன்னார்போல் இலையென்றிட
யாப்பினையே கருவியாக்கி இனிமையாக எழுதிட்ட
யாதுமாகி அருளிடவே இறையொப்ப நின்றிட்ட
யாக்கைநிலை துறந்து இறுதியுணர்ந்த பிரம்மனவன் !!!

வாணிகர்கள் ஆண்டுவந்த வகைமுடித்து விரட்டிட்ட
வாழ்வியலின் முழுமையினை வரையறுத்து விளக்கிட்ட
வானுலகம் செலும்வித்தை வகைவகையாய் உணர்த்திட்ட
வான்புகழும் பாரதியை நினைவுநாளில் வணங்கிடுவோம் !!!

   வெ. மதுசூதனன்

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad