\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தள்ளாடும் சூழலியல்

Filed in தலையங்கம் by on September 25, 2019 0 Comments

வட அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாகக் கோடைக்காலம் முடியவுள்ளது. மரங்கள், செடி கொடிகளின் இலைகள் வேனிற்காலத்திலும், கோடையிலும் சூரியச் சக்தி மூலம் பெற்று வந்த பச்சை நிறமிகள் (pigments) குறைந்துவிட்டதால் மஞ்சள், சிகப்பு, பழுப்பு என நிறம் மாறி வருகின்றன. பறவைகள் இதமான சூழலைத் தேடி தென் மாநிலங்களுக்கு இடம்பெயரத் தயாராகிவிட்டன. காலத்துடன் இயைந்து செயல்படும் இயற்கை அபூர்வமானது; அழகானது; அபாரச் சக்தி கொண்டது.

“இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் தீர்த்து வைக்கிறது; அவர்களின் பேராசையை அல்ல” (Earth provides enough to satisfy every man’s needs, but not every man’s greed.) என்றார் அண்ணல் காந்திஜி. அறிவியல் மூலம் இயற்கையை வென்றுவிடலாம் என்று மனிதக்குலம் அகலக்கால் வைக்கும்போதெல்லாம் அது சீற்றம் கொள்கிறது. இயற்கையின் சமன்பாடு சிதைந்ததால் பேரிடர்கள் நிகழ்கின்றன.

சுமார் 2.1 மில்லியன் சதுர மைல்கள் அளவிலான அமேசான் காடுகள் தென்னமெரிக்காவின் பிரேசில், பெரு, பொலிவியா, வெனிசுவேலா போன்ற ஒன்பது நாடுகளில் பரவிக் கிடந்தாலும் ஏறத்தாழ 59 விழுக்காடு பிரேசில் நாட்டு எல்லைக்குட்பட்டவை. உலகின் 20 சதவிகித ஆக்சிஜன் அமேசான் காடுகளிலிருந்து மட்டுமே கிடைக்கிறது. உலக நாடுகள் வெளிப்படுத்தும் கார்பன்-டை-ஆக்ஸைட்டை உறிஞ்சிக் கொள்வதில் இக்காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தக் காரணத்தாலேயே உலகத்தின் நுரையீரல் என்ற செல்லப்பெயரும் இதற்குண்டு. பிரபஞ்சத்தில் வேறெங்கும் காணப்பெறாத பல்லாயிரக்கணக்கான அரிய செடி கொடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகள் அமேசான் காட்டுக்குள் மட்டுமே தழைக்கின்றன. இப்படி எண்ணற்ற சிறப்பம்சங்கள் நிரம்பிய அமேசான் காடுகள் இந்தாண்டு மிகப் பெரியளவில் தீக்கிரையாகி வருகின்றன.

அமேசான் காடுகளில் பொதுவாக, கோடைக்காலங்களில், வறட்சியால் காட்டுத்தீ ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த ஆண்டு கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 74,௦௦௦ தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரேசில் அரசாங்கம் தகவல் வெளியிட்டது. இது கடந்த ஆண்டைவிட 83 விழுக்காடு அதிகம். சமீபத்திய தீயில், பிரேசிலின் அமேசான் காட்டுபகுதிகளில் 11,௦௦௦ சதுர மைல்கள் தீயில் கருகி விட்டன.

இந்த தீ தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல. வேளாண்மைக்காகச் சிறிது சிறிதாக காடுகளை அழித்து சமதளமாக்கி வரும் மனிதக் கூட்டத்தின் அத்து மீறல் தான் இது. பெரும் பண்ணையார்களும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத சிறு விவசாயிகளும் காடுகளை எரித்து ஆக்கிரமிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணப்பயிர்களாகக் கருதப்படும் சோயா, யூக்கலிப்டஸ் தைல மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் இவர்கள். சிலர் கால்நடை வளர்ப்பிற்காகக் காட்டுப் பகுதிகளை அழிக்கிறார்கள்.

‘நாட்டின் வளர்ச்சிக்காக’ என்ற கோட்பாட்டுடன் செயல்பட்டு வரும் பிரேசிலின் அதிபரான ஜெயிர் பொல்சானாரோ ‘காட்டை அழிக்கும் தடை’யை விலக்கி இதற்குத் துணை போவதும் இன்றைய அவல நிலைக்குக் காரணம். பிரேசில் நாட்டின் இயற்கை வளங்களை வைத்து, அந்நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டு செல்வதாக வாக்குறுதியளித்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் அவர். இன்று, காடுகளின் பெரும்பகுதி தனியார் வசமாகிவிட்டன.  பல ஆயிரம் ஆண்டுகளாகக் காடாக இருந்த பூமிக்கடியில் விலையுயர்ந்த கனிமங்கள், தங்கச் சுரங்கங்கள் இருக்கிறதென்ற நம்பிக்கையில் காட்டு வளங்களைச் சூறையாடி வருகிறது இக்கும்பல்.

G7 நாடுகள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்துடன், பொருளுதவியும் அளிக்க முன்வந்ததை, தனிப்பட்ட காரணங்களுக்காக நிராகரித்துள்ளார் பிரேசில் அதிபர். World Wildlife fund for Nature என்ற சுற்றுச்சூழல் அமைப்பு அமேசான் காடுகளின் அழிவு, பூமியில் அதிகளவில் கார்பன் பரவ காரணமாகிவிடும். இது பருவநிலை மாற்றங்களுக்கு முக்கியப் பங்காகிவிடுமென எச்சரித்துள்ளது.  

இது ஒருபுறமிருக்க, இந்த மாத துவக்கத்தில் உலகம் பாலைவனமாக மாறிவருவதை தடுக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகளின் கூட்டமொன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக இந்தியாவிலிருக்கும் தரிசு நிலங்களை வனப்பரப்பாக்கும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவதாலும்,  ரசாயன உரங்களைச் சேர்ப்பதாலும் நிலம் உயிர்ப்புச் சக்தியை இழந்து வருவதைத் தடுத்து நிறுத்தும் முன்னெடுப்புகள் பரிந்துரைக்கப்பட்டன. இயற்கை வனப்பகுதிகளில் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் அனுமதிக்ககூடாது என்று முடிவானது.

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. பல சர்வதேச அமைப்புகள் சுற்றுச்சூழல், உலகம் வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியதே. ஆனால் இந்த நடவடிக்கைகள் பேச்சோடு நின்றுவிடாமல் செயல்படுத்தப்படுவது மிக மிக அவசியமாகும். உலகத் தலைவர்கள் தற்பெருமை பாராட்டாமல், உலக நலன் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவேண்டும்.

ஆசிரியர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad