\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஒரே ஒரு சந்திரன் – பாகம் 3

(பாகம் 2)

ராஜகுமாரி திரைப்படத்திற்கு முன்னரே, ராமச்சந்திரனுக்கு ,  நந்தலால் என்பவர் இயக்கிய  ‘சாயா’  திரைப்படத்தில் கதாநாயகனாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது . படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே அவரது மனைவி பார்வதி உடல்நலம் குன்றி இறந்துவிட, ஊருக்குச் சென்றதால் ஹீரோ வாய்ப்பை அவர் இழக்க நேர்ந்தது. மனைவி இறந்தது ஒரு பக்கம், கதாநாயகன் வாய்ப்பு பறிபோனது ஒரு பக்கமென துயரங்கள் தாக்கிய போது ராமச்சந்திரன் ராணுவத்தில் சேர்ந்து விட விரும்பினார். அவரது மனதை மாற்றி திரைப்படங்களில் கவனம் செலுத்த வைத்தவர் அவரது சகோதரர் சக்ரபாணி தான். நல்ல வேளையாக அந்தச் சமயத்தில், ‘அசோக்குமார்’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அசோகரின் மகன் குணாளனாக எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த இப்படத்தில்  ராமச்சந்திரனுக்கு வாய்ப்புக் கிடைத்தது மிகச் சிறிய வேடமென்றாலும், பாகவதருக்காகப் படம் பிரமாதமாக ஓடியதால் ராமச்சந்திரனுக்கு  நல்ல சம்பளமும், விளம்பரமும் கிடைத்தது.  இதன் மூலம் கிடைத்த வாய்ப்புத் தான் ராஜகுமாரி திரைப்படம்.

ராஜகுமாரி திரைப்படம் வெளிவந்த சமயத்தில் எம்.கே.டி, பி.யு. சின்னப்பா போன்றோரது படங்கள் வெளிவந்தாலும், ராஜகுமாரி திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. சினிமா  பார்ப்பது, அதுவும் ராமாயணம், பாரதக் கதைகள் இல்லாத சினிமாக்களைப் பார்ப்பது பாவச்செயல் என்ற கருத்து, தமிழ்நாட்டில்  மிக மெதுவாக மாறிவந்த காலம் அது. புராணக் கிளைக் கதைகளின் கருவை எடுத்துக்கொண்டு, நாசூக்காகச் சமூக அவலங்களைச் சாடி படங்கள் வெளிவரத் தொடங்கிய காலம். சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்து, இருப்போரிடம் பெற்று இல்லாதோருக்கு கொடுத்து, அவர்களது துயரங்களைத் தீர்க்கும் ‘ராபின் ஹூட்’ கதைகள் பிரபலமடைந்து வந்தன.

இந்தக் கதைக் கருவை மிகப் பலமாகப் பற்றிக்கொண்டார் ராமச்சந்திரன்.  தனது கடைசிப் படமான நீதிக்குத் தலை வணங்கு வரையில் இந்தச் சூத்திரத்தைப் பின்பற்றினார் அவர். ஏழைகளின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து, அவர்களை வழிநடத்தி, அச்சங்களை விலக்கி, திருத்தி அவர்களின் வாழ்க்கையைச் செழிப்புறச்  செய்வதே அவரது அனைத்துப் படங்களின் மையக் கருத்தாகும். இந்தக் கருத்தைப் பல அடிப்படை வண்ணங்களில் அளவெடுத்துக் குழைத்து, பல வடிவங்களில் அழகாகப் படைத்தது தான் அவரது வெற்றிச் சூத்திரம்.

அக்காலங்களில் ராபின் ஹூட்டாக நடித்து வந்த ‘எரால் ஃப்ளின்’, ‘டக்லஸ் பேர்பேங்ஸ்’, ‘ஜான் பெரிமூர்’ ஆகியோரின் மிகப் பெரிய விசிறியான ராமச்சந்திரன் அவர்களைப் போலவே ஆக்ஷன் ஹீரோவாகவே நடிக்க முற்பட்டார். குறிப்பாக எரால் ஃப்ளின் போலவே வாள்ச் சண்டையில் தேர்ச்சியுற்று, தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டார். அவரது வாள் வித்தை பிற்காலங்களில் அவருக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது என்றால் அது மிகையில்லை.

1950ஆம் ஆண்டு, ராபின் ஹூட் போன்ற பாத்திரத்தில் வீரமும் காதலும் கலந்து உருவான ‘மருதநாட்டு இளவரசி’ யில் ராமச்சந்திரன் நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது. மு. கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகிய இப்படத்தில் தான் எம். ஜி. ராமச்சந்திரனும், வி. என். ஜானகியும்  முதன் முறையாக, முதன்மை பாத்திரங்களில்  இணைந்து நடித்தனர் (இதற்கு முன்பு வெளியான ‘ராஜ முக்தி’ படத்தில் எம்.கே.டி. நாயகனாக நடித்த படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் சிறிய துணைப் பாத்திரத்தில் தான் வந்தார் ராமச்சந்திரன். இதனைத் தொடர்ந்து வெளியான ‘மோகினி’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தாலும், இருவருக்குமே துணை பாத்திரங்கள் தான்). ‘மருதநாட்டு இளவரசி’ யில் இவர்களது ஜோடிப் பொருத்தம் வெகுவாகப் பேசப்பட்டது.

அதே ஆண்டு, குண்டலகேசி இலக்கியத்தின் ஒரு பகுதியை மையமாகக் கொண்டு கதை, வசனத்தை எழுதியிருந்தார் மு. கருணாநிதி. T.R. சுந்தரம் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்து கதாநாயகனைத் தேடிய போது, ராமச்சந்திரனின் பெயரை பரிந்துரைத்தார் கருணாநிதி.  ராமச்சந்திரனுக்கு முதன் முறையாக வாய்ப்பளித்த எல்லிஸ். ஆர். டங்கன் தான் ‘மந்திரிகுமாரி’யின் இயக்குனராகப் படத்தைத்  தொடங்கினார். பாதியில் அவர் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டிய நிலை வந்தபோது, படத்தைத் தொடர்ந்து இயக்கினார் தயாரிப்பாளரான T.R. சுந்தரம். S.A. நடராஜன், M.N. நம்பியார், G. சகுந்தலா மற்றும் பலர் நடிக்க G. ராமநாதன் படத்துக்கு இசையமைத்திருந்தார். ‘வாராய் நீ வாராய்’ (திருச்சி லோகநாதன்), ‘உலவும் தென்றல் காற்றினிலே’ (திருச்சி லோகநாதன், ஜிக்கி) போன்ற மிகப் பிரசித்தி பெற்ற பாடல்கள் இதில் இடம் பெற்றன. T.M. சவுந்தரராஜன், எம்.ஜி.ஆர் படத்தில் (அவருக்காக அல்ல) முதன் முறையாக பாடியதும் இப்படத்தில் தான்.  இப்படத்திலும் ராமச்சந்திரனின் வாள் சண்டை, இயக்குனர் சுந்தரம் உட்பட அனைவரையும் அசத்தியிருந்தது.

‘ராமச்சந்தர்’ இன் (அக்காலங்களில்  T.R. ராமச்சந்திரன் என்ற நடிகர் இருந்ததால், M.G. ராமச்சந்திரனது பெயர்  ‘ராமச்சந்தர்’ என்று தான் காண்பிக்கப்பட்டது) வாள் சண்டையைப் பார்த்து அசந்து போன சுந்தரம், அவரது வாள்வித்தைக்காகவே   ‘காலண்ட் பிளேடு’ (Galant Blade) எனும் ஆங்கிலப் படத்தை தழுவி ‘வீர வாள்’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். ‘சர்வாதிகாரி’ என்ற பெயரில் வெளியான இப்படமும் மிகச் சிறந்த வெற்றி பெற்றது.

இப்படங்களினால், ராமச்சந்திரன் ஆக்ஷன் ஹீரோ என்ற சிறப்புத் தகுதியினைப் பெற்றார். மேலும் அக்காலத்தில் பிரபலமடையத் துவங்கியிருந்த பொதுவுடைமை கொள்கையும் எம். ஜி. ஆர். தனது வெற்றிப் பாதையை அமைத்துக்கொள்ள உதவியது.

– ரவிக்குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad