Top Add
Top Ad

பண்டிகைகள் – அங்கேயும் இங்கேயும்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது. அதற்கேற்ப வழிபாடுகள், தெய்வங்கள், பண்டிகைகள் போன்றவை வேறுபடும். ஆனால், யோசித்துப் பார்த்தால் இந்தப் பண்டிகைகளிடையே சில ஒற்றுமைகளைக் கவனிக்கலாம்.

ஹாலோவீன் (Halloween) – ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகை, தற்சமயம் உலகமெங்கும் பரவி வருகிறது. உலகமயமாக்கத்தால் இந்திய நகரங்களுக்கும் இது அறிமுகமாகி உள்ளது. இது குளிர்காலத்தை வரவேற்பதற்கான, இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான, குழந்தைகளிடம் பயத்தைப் போக்குவதற்கான ஒரு பண்டிகை.

அக்காலத்தில் மக்கள் பழங்களை இத்தினத்தில் பரிமாறிக் கொள்வர். இது ஆப்பிள், பூசணி போன்ற பழங்களின் அறுவடைக்காலம் என்பதை நினைவில் கொள்ளலாம். பொதுவாக, இச்சமயம் குளிர் பிரதேசங்களில் விவசாய அறுவடை பணிகள் முடிவுற்று, அடுத்த ஆண்டுக்கான திட்டமிடலில் விவசாயிகள் ஈடுபடத்தொடங்குவார்கள்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அமெரிக்கச் சந்தைகளில் எப்படி நாம் பூசணி விற்பனையைக் காண முடியுமோ, அது போல் இந்தச் சமயத்தில் இந்தியச் சந்தைகளிலும் காண முடியும். ஆயுதப் பூஜை, விஜய தசமி ஆகிய பண்டிகைகளுக்கு இந்தியர்கள் பூசணி வாங்கித் திருஷ்டி கழிப்பார்கள். ஹலோவீன் சமயம் மேற்கு உலகத்தோர், பூசணியில் விளக்குச் செய்து, பேயை விரட்டுவார்கள். இப்படிப் பூசணியைக் கிழக்கிலும், மேற்கிலும் துஷ்ட சக்திகளிலிருந்து காக்க பயன்படுத்துகிறார்கள். மற்றபடி, இந்தியர்கள் பூசணி பை (Pie) செய்தோ அல்லது அமெரிக்கர்கள் பூசணி சாம்பார் செய்தோ சாப்பிடுவதில்லை!!

தற்கால வழக்கத்தில், ஹாலோவீன் நாளன்று,  அமெரிக்கக் குழந்தைகள் குழுவாக மற்ற வீடுகளுக்குச் சென்று சாக்லேட் வாங்கி வருகிறார்கள் . அந்தக் காலத்தில் இனிப்புப் பண்டங்கள் செய்து, பிறர்க்கு விநியோகிப்பது வழக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது,  இவ்வாறு பறிமாறிக் கொள்வது இன்னமும் வழக்கமாக உள்ளது.

அமெரிக்காவில் ஹாலோவீன் போது, குழந்தைகளுக்கு விதவிதமான உடைகள் அணிவித்து, ஒப்பனை செய்வது இன்னொரு வழக்கம். இப்படி ஒப்பனை செய்துக்கொண்டு, அண்டை / நண்பர்களது வீடுகளுக்குச் சென்று இனிப்புகள் வாங்கி வருவார்கள் இங்குள்ள சிறுவர்கள். கூடவே, ஆர்வமுடைய பெரியோரும் செல்வதுண்டு. தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டிணம் என்னும் ஊரில் உள்ள கோவிலைப் பற்றி இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். திருச்செந்தூர் அருகே கடலோரத்தில் அமைந்திருக்கும் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலுக்குத் தமிழகமெங்கும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். இதில் அனைத்து வயதினரும் அடக்கம். இவர்கள் கடவுள்கள் போல, மிருகங்கள் போலப் பல வேடங்களில் உடையணிந்து, பொது மக்களிடம் காணிக்கை பெற்று, அதை முத்தாரம்மனுக்குச் செலுத்துவார்கள். இப்படி உடலை வருத்தி செய்வதன் மூலம் இவர்களது வேண்டுதல்கள் ஈடேறும் என்பது நம்பிக்கை. இதுபோல், கேரளக் கோவில்களிலும் ஒரு நடைமுறை உள்ளது. இந்தியாவில் பல ஊர்களிலும் இது போல் வேடம் அணிந்து வேண்டுதல் செய்யும் வழக்கம் உள்ளது. கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணர், ராதை வேடம் போடுவதையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். வெவ்வெறு காரணங்களுக்காக, வெவ்வெறு முறையில் இந்த வேடமிடுதல் நடந்தாலும், ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிலும், மேற்கிலும் இது நடப்பதென்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், ஹாலோவீன் சமயத்தில் அமெரிக்காவில் வீட்டில் விளக்குகள் ஏற்றுவதும், கூட்டாக ஒரு பொது இடத்தில் தீ வளர்ப்பதும் (Bonfire) ஒரு வழக்கமாக நடைபெறும். இதே நேரத்தில், தமிழர்கள் கார்த்திகை விளக்கேற்றி, சொக்கப்பனை எரிப்பது என்ற வழக்கத்தை நடத்துகிறார்கள். விளக்கு, நெருப்பு, குளிர் காலம் என்று இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால், இன, மத வழக்கங்கள் என்று கூறிக் கொள்வது மேற்பூச்சு தான். மனிதனை வழிநடத்தும் ஆசிரியராக இயற்கை இருக்கிறது என்பதாக இவ்வழக்கங்களின் மூலம் எடுத்துக் கொள்ளலாம். தீபாவளி, கார்த்திகை தீபம், போகி என்று தொடர்ந்து நம்மவர்கள் நெருப்புடன் விளையாடுவது குளிர் காலத்தில் தான்.

கலாச்சாரப் பழக்க வழக்கங்களைக் கண்டோம். வணிக வர்த்தகங்களை எடுத்துக் கொண்டாலும் உலகம் முழுக்க ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் காண முடிகிறது. இந்த வழக்கங்களைத் தற்சமயம் மத நம்பிக்கைகளோ, மத நிறுவனங்களோ முன்னெடுப்பதைக் காட்டிலும் வர்த்தக நிறுவனங்களே அதிகம் முன்னெடுக்கிறார்கள். காரணம் என்ன என்பதை அனைவரும் அறிவோம். அமெரிக்கப் பெரு நிறுவன அங்காடிகளில் தினசரி பொருட்கள் வாங்க வாடிக்கையாக நுழைந்து, அங்கு ஒவ்வொரு பண்டிகையையும் முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பே அடுக்கி வைக்கப்படும் பொருட்களைக் கண்டு தான், நமக்கு அடுத்து வரப்போகும் பண்டிகையே நினைவுக்கு வரும். அது போல் தான், இந்தியாவிலும். ஆடி தள்ளுபடி, அக்சய திருதியை, தீபாவளி, பொங்கல் என விசேஷங்கள் வருகையை முன்கூட்டியே அறிவித்து, நம்மை வலுகட்டாயமாகப் பண்டிகை கொண்டாட வைப்பது, ஜவுளி, பட்டாசு, நகை, வேஷ்டி, எண்ணெய், குலோப் ஜாமூன் மாவு, ஸ்வீட்ஸ் கடைகளின் வழக்கமாகி போய்விட்டது.

மொத்தத்தில், எந்த மதத்தினரானாலும் சரி, எந்த இனத்தினரானாலும் சரி, எந்த நாட்டினரானாலும் சரி, ஒரு பக்கம் இயற்கையும், மறுபக்கம் லாப நோக்கங்களும் மனிதர்களைக் கலாச்சாரப் பாதையில் வழி நடத்துவது ஒரே விதத்தில் உள்ளது. அதில் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் கண்ட கலாச்சாரப் பண்டிகை சார்ந்த ஒற்றுமைகளை, இங்கு கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கலாம்.

வரவிருக்கும் பண்டிகைகள் அனைத்திற்கும் எங்களது முன்கூட்டிய வாழ்த்துகள்!! (அதாவது, பர்ஸ் பத்திரம்!! :-))

  • சரவணகுமரன்
Print Friendly, PDF & Email

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad