Top Add
Top Ad

தலையங்கம்

ppkl_side1_135x135வாசகர்களுக்கு வணக்கம் !

உலகிலேயே மிகவும் பெரியதும், முக்கியமானதுமான ஒரு குடியரசுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் நான்கு மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தலின் சமீபத்தில் நடந்து முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, வென்ற கட்சிகள் பதவிப் பிரமாணமும் எடுத்துக் கொண்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகள் சரியானவையா, மக்கள் வேறுமாதிரியாகச் சிந்தித்திருக்க வேண்டுமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து எழுதுவதற்கு, பனிப்பூக்கள் ஒரு அரசியல் பத்திரிகையன்று. நடந்து முடிந்த இந்த ஜனநாயகத் திருவிழாவில் நம் கண்களுக்குப் பட்ட முக்கியமான சில விஷயங்களை ஒரு தலையங்கமாக வரைவது நமது கடமை என்ற உணர்வில் இதனை எழுதுகிறோம்.

முதலாவதாக நம் கண்ணில் பட்டது, தலைவிரித்தாடும் பத்திரிகைச் சுதந்திரம். முதலமைச்சராயினும் சரி, பிரதம மந்திரியாயினும் சரி, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சுட்டுக் காட்டி எழுதிய, தலையங்கங்கள் தீட்டிய பல நேர்மையான பத்திரிகைகள் கோலோச்சிய பூமி, இந்தியா, குறிப்பாகத் தமிழகம். நாம் சொல்லும் நிலை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட நாட்களிலேயே இருந்தது. அதனைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு முப்பது வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்த நிலை. ஆனால், கடந்த முப்பத்தைந்து, நாற்பது வருடங்களாக இந்த நிலையில் பெறும் மாற்றத்தை நாம் பார்த்தோம். ஆட்சியில் இருப்பவர்களின் அடிவருடிகளாக இருந்தால் மட்டுமே பிழைப்பு நடக்கும் என்றுணர்ந்ததாலோ அல்லது, பதவியிலுள்ளவர்களைப் பகைத்துக் கொண்டால் பல வன்முறைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்குமென்ற பயத்தாலோ அவ்வளவு துணிச்சலான பத்திரிக்கைகளை அதிக அளவில் காண முடியவில்லை. ஆனால் இந்த நிலை இப்பொழுது மாறியிருப்பதுபோன்ற தோற்றம் நமக்குச் சற்று நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஒரு சில பக்குவமற்ற அணுகுமுறைகளைச் சிலவேளையில் பார்க்க நேர்ந்தாலும், மொத்தத்தில் முதுகெலும்புள்ள விமர்சகர்களையும், நேர்காணல் செய்பவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் பார்க்கையில் ஜனநாயகம் அவ்வளவு எளிதாகச் செத்துவிடாது என்ற நம்பிக்கை உருவாகிறது.

தமிழக மக்கள் இதுவரை அனைத்துத் தேர்தல்களிலுமே தீர்மானமான முடிவையே தங்களின் வாக்குகள் மூலம் கொடுத்து வந்துள்ளனர். சுதந்திர இந்தியாவில் ஒரே ஒரு தேர்தல் தவிர்த்து, அனைத்துத் தேர்தல்களிலும் ஏதேனும் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று வென்றுள்ளது. குறிப்பிட்ட அந்த ஒரு தேர்தலில் கூட அதிக அளவு சீட்களைக் கைப்பற்றிய கட்சி, வேறுசில கட்சிகளோடு கூட்டமைத்து ஆட்சியை நிறுவியது. அதாவது “தொங்குச் சட்டசபை” என்ற நிலை உருவாகவில்லை.

இந்த 2016 தேர்தலுக்கு முன்னர், பலமுனைப் போட்டிகளைப் பார்க்கும் பொழுதும், ஒவ்வொரு தொலைக்காட்சிச் சேனல்களிலும், சமூக வலைத்தளங்களையும் பார்க்கையில், இரு பெரும் கட்சிகளுக்குப் பெரிய அளவில் சரிவேற்பட்டு, மூன்றாவது அணி என்ற பெயரில் பல சிறிய கட்சிகள் பல இடங்களைப் பிடித்துவிடும் என்ற எண்ணம் உருவானது. நல்ல வேளையாக அதுபோன்ற எந்தக் கெடுதலும் நிகழ்ந்து விடவில்லை. ஒருவேளை ஒவ்வொரு சிறிய கட்சிகளும் சிற்சில இடங்களைப் பிடித்திருந்து, ஒருவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை வந்திருந்தால்? எத்தனை விளையாட்டுக்களும், எம்.எல்.ஏ விற்பனைகளும் நடந்திருக்கும்? மக்களின் வரிப்பணத்தில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தல் என்பதே எந்தவொரு பயனற்றுப் போயிருக்குமே? நம்மைப் பொறுத்தவரை ஒரு பெரிய கட்சிக்கு ஆட்சி செய்யும் அதிகாரமும், இன்னொரு பெரிய கட்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்படும் விதத்தில் பலமான எதிர்க்கட்சி என்ற அங்கீகாரமும் வழங்கி, மற்ற கட்சிகள் அனைத்தையும் இருந்த இடம் தெரியாமற் போகுமாறு செய்திருக்கிறார்கள் மக்கள். இந்த முடிவுகள், மேற்சொல்லப் பட்ட காரணங்களால், மாநிலத்தைக் காக்கும் விதமாக அமைந்திருப்பதாகவே நம்புகிறோம்.

தங்களுக்கு ஓட்டளித்து ஆட்சியில் அமர்த்திய மக்களின் நம்பிக்கை பொய்த்து விடாமல் திறமையாகச் செயல்பட்டு அவர்களின் நலம் காக்கும் கடமை ஆளுங்கட்சிக்கு இருக்கிறது. தங்களுக்கு வாக்களித்து, முன்னெப்போதும் தமிழகம் கண்டிராதவகையில் பலமான எதிர்க்கட்சியாக அமர வைத்த மக்களின் நம்பிக்கையைக் காத்து ஆக்கபூர்வமாகச் செயல்படும் கடமை எதிர்க் கட்சிக்கு இருக்கிறது. ஏதேனும் சாக்கு போக்குச்  சொல்லிக் கொள்ளாமல், மக்கள் நம்மை முழுவதுமா நிராகரித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, அவர்கள் மனத்தில் நம்பிக்கை விளைக்க என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்து செயல்படும் கடமை மற்ற கட்சிகளுக்கு உள்ளது. ஜனநாயகத்தின் முக்கியத் தூணான பத்திரிக்கைகளும் தங்கள் கடமையை உணர்ந்து ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நேர்மையான செய்கைகளுக்குத் தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்பதும் தேவையான ஒன்று.

ஆயிரம் குறையிருந்தாலும், இருக்கும் அமைப்புகளில் மிகவும் சிறப்பான அமைப்பு ஜனநாயகம் ஒன்றே. அதனை உணர்ந்து அனைவரும் பொறுப்பாகச் செயல்பட வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்ளும்,

பனிப்பூக்கள் ஆசிரியர் குழு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad