\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எது தவறு?

Filed in இலக்கியம், கதை by on May 29, 2016 1 Comment

appavai-kanavillai“ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு” என்றார் போஸ்ட்மேன் ராக்கி என்கிற ராக்கப்பனிடம் சாம்ராஜ் நகர் போஸ்ட்மாஸ்டர்.

“சார் அந்த அட்ரஸ்ல இருக்கறவரு இரண்டு மூணு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாராம், அதான் என்ன பண்றதுன்னு வச்சுருக்கேன்,”

“தபால் எங்கிருந்து வந்திருக்கு? கோயமுத்தூர்ல் இருந்து சார்”

“சரி அந்தக் கடிதாசிய நாளைக்கே திருப்பி அனுப்பிச்சுரு,”

சரி என்று கடிதத்தை எடுத்தவன் கடிதம் பிரிந்திருப்பதைப் பார்த்து அதை நன்றாக ஒட்டி அனுப்பி விடலாம் என்று முழுவதையும் பிரித்து ஒட்டுவதற்காகப் பசையைத்  தேடினான், அதற்குள் வீசிய காற்றில் கடிதம் இரண்டாக விரிய பசை எடுத்து வந்தவன் கண்களில் அது பட தன்னை மீறிய செயலாக அந்தக் கடித்ததைப் படிக்க ஆரம்பித்தான்.

கோயமுத்தூர் வடவள்ளியில் வந்து இறங்கியவன் அங்கிருந்து மாதவபுரம் செல்ல எத்தனை மணிக்கு பஸ் வரும் என அருகிலிருந்த கடையில் கேட்க அவர்கள் அரை மணி நேரத்தில் ஒரு மினி பஸ் வரும் அதில் ஏறி மாதவபுரம் என்று கேட்டாலே இறக்கி விட்டு விடுவார்கள் என்று பொறுப்பாக பதில் தந்தார்கள்.இவனும் மினி பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

மாதவபுரம் வந்து இறங்கியவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, சுற்றிலும்

பசேல் என்று வயல்களும்,தோட்டங்களுமே இருந்தன. ஊர் என்று பார்த்தால் சற்று தொலைவில் நான்கைந்து குடிசைகள் மட்டுமே இருந்தன.இவன் மெதுவாக அந்தக் குடிசைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான், ஒரு பெரியவர் தள்ளாடி எதிரே நடந்து வந்தவர் கைப்பையுடன் நடந்து வந்து கொண்டிருந்த இவனை உற்றுப்பார்த்து யாரு தம்பி? என்று கேட்டார். இவன் முனியாண்டி என்று ஆரம்பிக்க

“ஏய்யா உங்க ஆத்தா சாகக் கிடக்கறா இத்தனை நாளா எங்கயா போய் தொலைஞ்ச? போ ..போ  .. கடைகோட்டுல கிடக்கற குடிசையில அவளைப் படுக்க வச்சுருக்கு போய்ப் பாரு, இப்பவாவது வந்து சேர்ந்தியே”  என்று தனக்குள் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்.

இவன் குடிசை வாசலை அடைந்து கதவு இல்லாத அந்த குடிசையை எட்டிப்பார்க்க உள்ளே ஒரே இருட்டாக இருந்த்து, சிறிது நேரம் கழித்து மெல்லிய உருவம் ஒன்று தரையில் ஒரு ஓலைப்பாயைப் போட்டு படுக்கவைக்கப்பட்டிருந்தது கண்களுக்கு தெரிந்தது அது உயிருடன் இருக்கிறதா என  தெரியாதவாறு அசைவற்று இருந்தது.இவன் தன் காலணிகளைக் கழற்றி மெல்ல குடிசைக்குள் கால் வைத்து அந்த உருவத்தின் அருகில் நின்று அந்த உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தான், அது உயிருடன் இருப்பதற்கு

அறிகுறியாக மெல்ல உடலை அசைத்தது இவன் நின்றதை எப்படி உணர்ந்ததோ தெரியாது பூவாயி என்று மெல்லிய குரலில் கூப்பிட இவன் மெல்ல முனியாண்டி என்று சொல்ல, எங்கிருந்துதான் அந்த பலம் வந்ததோ சாமி என்று தன் இரு கைகளையும் நீட்ட இவன் தன் கைப்பையைக் கீழே வைத்து அந்த உருவத்தின் கைகளைக் பற்றிக்கொண்டான்,

“சாமி..சாமி..எங்கய்யா..போயிட்டே, உன் ஆத்தா என்ன பாவம்

பண்ணுச்சு, இந்த ஆத்தாளை ஒரு நாளாவது உனக்குப் பார்க்கனும்னு தோணுச்சா? ” என்று அவனின் கை,முகம்,தலை, போன்றவைகளைத் தடவிக்கொண்டே “உன் ஆத்தாளுக்கு கண் பார்வையும் போயிடுச்சு, இத்தனை வருசம் கழிச்சு வர்ற என் பையனைப் பாக்ககூட இந்த ஆத்தானாலே முடியாம போச்சே, என்று புலம்பியவாறு அவன் எங்கும் அவளை விட்டு ஓடி விடுவானோ என்று பயந்து தன் மெல்லிய கரங்களால் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

வாசலில் நிழலாட திரும்பிப் பார்த்தான் ஒரு சிறுமி கிழிசல் சட்டையுடன்

தலை எண்ணெயைப் பார்த்து பல மாதங்களாகியிருக்கும் உள்ளே வந்து

கொண்டிருந்தாள்.இவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த ஆத்தா அரவம்

கேட்டு “பூவாயி உன் அண்ணன் வந்துட்டாண்டி இனிமேல் உனக்கு நல்ல

காலம்தான்” என அவளையும் அருகில் அழைத்து இருவரையும் தன் குச்சிக்கைகளால் அணைத்துக்கொண்டாள். அந்த சிறுமி மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டு

“ஆத்தா நான் போய் அண்ணனுக்கு ஏதாவது சாப்பிட கொண்டார்றேன் ” என்று வெளியே கிளம்பினாள், இவன்

“கொஞ்சம் நில்லு பாப்பா எங்க போய் எனக்கு சாப்படறதுக்கு கொண்டு வருவே?”

“இங்க பக்கத்துல போனா ஏதாவது பழசு கொடுப்பாங்க, அத தான் வாங்கிட்டு வருவேன், தினக்கும் எனக்கும் ஆத்தாளுக்கும் பக்கத்துல இருக்கற தோட்டத்துக்காரங்க பழச கொடுப்பாங்க நான் காலையில கொஞ்சம் சாப்பிட்டிட்டு ஆத்தாளையும் சாப்பிட வச்சுட்டு ஆத்தா பக்கத்துல மிச்சத்தை வச்சுட்டு போயிடுவேன், ஆத்தா எப்படியாச்சும் மதியம் சாப்பிட்டுக்கும், நான் மதியம் ஸ்கூல்ல சாப்பிட்டுக்குவேன், இராத்திரிக்கும் இதே மாதிரி

தோட்டத்துக்காரங்க வீட்டுக்கு போயி..” சொல்ல சொல்ல..இவனுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது பூவாயியை அணைத்துக்கொண்டு

“நீ எங்கேயும் போக வேண்டாம், பக்கத்துல எங்க கடை இருக்குன்னு சொல்லு நாம இரண்டு பேரும் போய் சாப்பிட்டுட்டு ஆத்தாளுக்கும் ஏதாவது வாங்கிட்டு வரலாம்” என்று அவளுடன் நடக்கத்தொடங்கினான்.

அந்த சிறுமி எதிரில் வந்தவர்களிடம் “எங்கண்ணன் வந்திட்டாங்க” என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டே வந்தாள்.

இரண்டு நாட்கள் அந்த மூவரும் மிக மிக சந்தோசமாக இருந்தனர். மூன்றாம் நாள் காலையில ஆத்தாளின் உடலில் அசைவுகள் எதுவும் ஏற்படவில்லை, தன் மூச்சை நிறுத்தியிருந்தாள். பூவாயியை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டவன், மேற்கொண்டு அங்குள்ளவர்கள் துணையுடன் நல்லபடியாக

ஆத்தாளை அடக்கம் செய்துவிட்டு, பூவாயியைத் தன்னுடன் கூட்டிச்செல்வதாக ஊர் மக்களிடம் கூறிவிட்டு கிளம்பினான்.

போஸ்ட் மாஸ்டர் சதானந்தன் “என்னய்யா ராக்கி பத்து நாள் லீவ் போட்டுட்டு ஐஞ்சு நாள்லயே வந்துட்ட என்று கேட்டவரிடம் ஒரு காகிதத்தை நீட்டினான்,

“என்னய்யா பேப்பர் இது” என்றவர் மேலோட்டமாக “ராஜினாமா கடிதம்” என்று போட்டிருப்பதைப் பார்த்தவர் “என்ன்ய்யா?” என்று இவனை நிமிர்ந்து பார்க்க இவன் “மேல படிச்சு பாருங்க சார்” என்றான்.

“ஒரு தபால் ஊழியன் பிறர் கடிதத்தைப் படிக்ககூடாது என்பது சட்டம்,

அதை மீறி  நான் ஒரு கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டேன், அதனால் என்னுடைய வேலைக்கு நான் தகுதியற்றவாகிவிட்டேன், ஆகவே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். என்று படித்துப் பார்த்தவர்

“எந்த லெட்டரையா நீ படிச்ச? கொண்டாயா அதை”  என்று கேட்க இவன் தன் பாக்கெட்டிலிருந்த அன்றைக்கு அவர் திருப்பி அனுப்பச்

சொன்ன கடிதத்தை நீட்டினான், அவர் அதை வாங்கிப் பிரித்துத் தானும் படிக்க ஆரம்பித்தார்.

“அன்புள்ள முனியப்பண்ணே உங்களை நான் சின்னகுழந்தயா இருந்தப்ப பார்த்தது, அதுக்கப்புறம் பாக்கவேயில்ல இதைக்கூட ஆத்தா சொல்லித்தான் எனக்கு தெரியும், ஆத்தா எப்பவும் உன்னைப்பத்தியே பேசிக்கிட்டிருக்கும், இப்ப ஆத்தாளுக்கு கண்ணும் போயிடுச்சு, எந்திருச்சு எல்லாம் நடக்கக்கூட முடியாது, நான் சாகறதுக்குள்ள என் பையனைப் பாத்துருவனான்னு அழுதுகிட்டே இருக்குது, இங்க நாங்க இரண்டு பேருதான் இருக்கோம், இப்பக்கூட ஆத்தா ஒரு பேப்பர்ல எழுதி வச்சிருந்த உன் அட்ரசைப் பாத்துட்டு இதை எழுதறேன், எப்படியாச்சும் வந்துடு, ஆத்தா உன் ஞாபகமாவே இருக்கு. நான் ஒழுங்கா ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்கேன்.

“கடிதத்தைக் கண்ணீர் வழிய படித்தவர் மேற்கொண்டு அவன் என்ன செய்திருப்பான் என யூகித்துக்கொண்டு அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்துட்டியா? என்ன செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்க?”

“படிக்க வைக்கப்போறேன் ! நல்லா படிச்சு முன்னுக்கு கொண்டு வரப்போறேன்,  தெரிஞ்சோ, தெரியாமலோ, என்னை அண்ணனா ஏத்துக்கிட்டிருக்கு, அந்த அண்ணணோட கடமைய நான் செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.”

“அப்படீன்னா இந்த ராஜினாமா லெட்டர முதல்ல கிழிச்சுப்போடு, ஏன்னா நானும் இந்த லெட்டரை படிச்சதுனால இப்ப  நானும் ரிசைன் பண்ணனும், அது என்னால முடியாது, நம்ம இரண்டு பேரும் செஞ்சது தப்புன்னா மேல இருக்கறவன் நமக்கு தண்டனை கொடுக்கட்டும்.”

தாமோதரன்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Anonymous says:

    Nice Story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad