கல்லூரிச் செலவிற்குத் தயாரா?
அமெரிக்காவில் அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிப்பணம் மூலம் பள்ளிக்கல்வி இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு வரிப்பணத்தில் 8% கல்விக்காகச் செலவிட, மீதி செலவை மாநில அரசின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அதில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. பள்ளிக்கல்வி இலவசமாக அளிக்கப்படும் அமெரிக்காவில் கல்லூரி கல்விக்கான கட்டணம் மிக அதிகம். அதையும் இலவசமாக அளிக்கலாமே என்று கேட்டால், அதற்கேற்ப மக்களால் வரி அதிகமாகக் கட்ட முடியுமா என்று திரும்பக் கேட்க வேண்டி வரும். தவிர, மாணவர் பொறுப்புணர்வு மற்றும் இன்ன பிற காரணங்களைக் காட்டி கல்லூரிக்கான கட்டணத்தைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் வல்லுனர்கள்.
கல்லூரி கட்டணம் என்பது ஊர் ஊருக்கு, கல்லூரி கல்லூரிக்கு, படிப்பிற்கேற்ப மாறுபடுகிறது. அதேப்போல், உள்ளூர்வாசிகளுக்கும் வெளியூர்வாசிகளுக்கும் கட்டணம் மாறுப்படும். உள்ளூர்காரர்களை விட, வெளியூர்காரர்களுக்கு அதிகக் கட்டணம். உதாரணத்திற்கு, யூனிவர்சிட்டி ஆஃப் மினசோட்டாவில் ஒரு வருடத்திற்குச் சுமார் 30 ஆயிரம் டாலர்கள் உள்ளூர் மாணவர்களுக்கும், சுமார் 50 ஆயிரம் டாலர்கள் வெளியூர் மாணவர்களுக்கும் இந்தாண்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் கல்விக்கட்டணம் தவிர, புத்தகச் செலவு, விடுதிக்கட்டணம் போன்ற பிற கட்டணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கட்டணம் கூடிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 8 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. அதாவது, 10 வருடத்தில் இச்செலவு இரு மடங்குக்கும் அதிகமாகக் கூடுகிறது.
இம்மாதிரியான பெரும் செலவை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் தேவை. உங்கள் குழந்தை கல்லூரிக்குச் செல்ல இன்னும் காலம் இருக்கிறதென்றால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சாவகாசமாகத் தள்ளிப்போட வேண்டாம். கல்லூரி செல்லும் காலத்திற்குள் அதற்காகச் செலவை எப்படிச் சேமிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கவும்.சேமிப்பு என்று பார்க்கும் போது, அதற்குப் பல வழிகள் உள்ளன. அதில் ஒரு வழியான அமெரிக்க மாநிலங்கள் வழங்கும் கல்லூரி சேமிப்புத் திட்டங்களைக் குறித்துக் காணலாம்.
529 ப்ளான் என அழைக்கப்படும் கல்லூரி சேமிப்பு திட்டமானது, 1986 ஆண்டில் மிச்சிகன் மாநிலத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்பு, 1996இல் உள்நாட்டு வருமானவரி சட்டத்தில் செக்சன் 529 கல்லூரி சேமிப்பை ஊக்குவிக்கும்வண்ணம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், ஏறக்குறைய அனைத்து மாநிலத்திலும் 529 சேமிப்புத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டத்தின்படி 529 எனப்படும் இத்திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு வரிச்சலுகை கொடுக்கப்படுகிறது. பிற வழிகளில் சேமிக்கப்படும் பணத்திற்கும் இத்திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் பணத்திற்கும் இந்த வரிச்சலுகையானது முக்கிய வித்தியாசமாகும்.
இதில் கவனிக்க வேண்டியது, இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் முழு நிதிக்கு (Contribution) வரிச்சலுகை கிடையாது. இந்தச் சேமிப்பின் மூலம் வரும் வருமானத்திற்கு (returns) மட்டுமே வரிச்சலுகை. அது தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தத் திட்டத்தில் சேமிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வரிவிலக்கு கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, மினசோட்டாவில் மூவாயிரம் டாலர்கள் அளவிற்கு வரிவிலக்கு கிடைக்கும்.
மாதத்திற்குக் குறைந்தபட்சம் 50 டாலரில் இருந்து சேமிப்பைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் போடப்படும் பணம், பங்கு சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள் போன்ற பல்வேறு நிதி முதலீட்டு வகைகளில் முதலீடு செய்யப்படுவதற்கு வழி இருக்கிறது. எவ்வகையில் முதலீடு செய்யப்படவேண்டும் என்பதை இதில் கணக்கு வைத்திருப்பவர் முடிவு செய்துக்கொள்ளலாம். தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றம் செய்துக்கொள்ளலாம். ஒரு வகையில் இதுவும் உங்களது தனிப்பட்ட பங்கு சந்தை, பரஸ்பர நிதி முதலீடு போலத் தான். வரிச்சலுகையைக் கணக்கில் கொண்டு, உங்களால் தனிப்பட்ட வகையில், இதைவிட அதிக லாபம் காண முடியும் என்றால், உங்கள் வழி தனி வழியாகவே இருக்கலாம்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தை, கல்விச் சார்ந்து செலவிட்டால் மட்டுமே, வரி சார்ந்த பயன்கள் கிடைக்கும். இல்லாவிட்டால், அதில் இருந்து வரும் லாபத்தில் 10% தண்டம் கட்ட வேண்டி வரும். இதில் முதலீடு செய்துவிட்டு, பிறகு எதிர்பாராத வகையில் அமெரிக்காவை விட்டு வெளியே செல்ல நேர்ந்தால், உதாரணத்திற்கு இந்தியா செல்ல வேண்டி வந்தால், பெரிய பிரச்சினை இல்லை. இந்தியாவில் ஏற்படும் அங்கீகரிக்கப்பட்ட கல்விக்கட்டணத்திற்கும் இந்தச் சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்துக் கட்டலாம். அப்படி இல்லையென்றால், 10% தண்டம் கட்டிவிட்டுப் பணத்தைப் பிற செலவுகளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
கல்லூரிக்கட்டணம் மட்டுமின்றி $10,000 வரை பள்ளிச்செலவிற்கும் இதில் இருந்து எடுத்துப் பயன்படுத்தலாம். கல்லூரியில் இருக்கும் போது, புத்தகங்கள், கணினி, இணையச் சேவை ஆகிய செலவுகளுக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். ஆக மொத்தம் இதில் முதலீடு செய்யப்படும் பணம் வீணாகப்போவதில்லை. உங்களுக்குச் சேமிப்பில் ஆர்வமும், பொறுப்பும் இருந்து, முதலீட்டில் திறமையும் இருந்தால், இந்த 529 என்றில்லை, எந்தத் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். அப்படி இல்லையென்றால், வரிச்சலுகைகள் உள்ள இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள், கல்லூரிக் கட்டணத்தில் பயன்பெறுங்கள்.
பொறுப்புத் துறப்பு – நிதிச் சார்ந்த முடிவுகளில் உங்களது நிதி ஆலோசகரைக் கலந்தாலோசித்தோ, சொந்தமாக ஆய்வு செய்தோ முடிவெடுக்கவும். இக்கட்டுரை இந்தத் திட்டம் குறித்த அறிமுகத்தையும், விழிப்புணர்வையும் விதைக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது மட்டுமே.
மேலும் வாசிக்க,
https://en.wikipedia.org/wiki/Public_school_funding_in_the_United_States
https://admissions.tc.umn.edu/costsaid/tuition.html
https://www.savingforcollege.com/intro-to-529s/what-is-a-529-plan
https://en.wikipedia.org/wiki/529_plan
- சரவணகுமரன்.