\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஒத்தையடி பாதையிலே : ஃப்ராண்டனக் ஸ்டேட் பார்க்

மினசோட்டாவில் ஏராளமான ஏரிகள் இருப்பது போல் ‘ஸ்டேட் பார்க்’ எனப்படும் மாநிலப் பூங்காக்கள் பல இங்கு உள்ளன. இவை மாநில அரசால் பராமரிக்கப்படும் இயற்கை வளம் ததும்பும் இடங்களாகும். ஒரு இடத்தின் இயற்கை அழகை, வரலாற்றுத்தன்மையைப் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இவ்விடங்கள் மாநில அரசால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. மினசோட்டாவில் இவ்வகைப் பூங்காக்கள் மொத்தமாக 66 இருக்கின்றன. நாம் இப்போது காணப்போகும் இந்த ஃப்ராண்டனக் பூங்கா (Frontenac State Park) 1957ஆம் ஆண்டு முதல் மினசோட்டா அரசால் மாநிலப் பூங்காவாக நிர்வகிக்கப்படுகிறது.

இந்தப் பூங்கா மினியாபொலிஸில் இருந்து 65 மைல்கள் தொலைவில் தென்கிழக்குத் திசையில் மிஸ்ஸிஸிப்பி ஆற்றோரத்தில் அமைந்துள்ளது. இது போல் தெற்கில் மிஸ்ஸிஸிப்பி ஆற்றோரத்தில் பல பூங்காக்களும், வடக்கில் சுப்பிரீயர் ஏரியோரத்தில் பல பூங்காக்களும் வரிசையாக மினசோட்டாவில் அமைந்துள்ளன. இதனால் ஒரே பயணத்தில் பல பூங்காக்களைக் காணமுடியும். கோடைக்காலத்தில் தரமாக நேரத்தைச் செலவிட இது போன்ற பல பூங்காக்களும், ஏரிகளும் உள்ளன.

மினசோட்டாவில் மாநிலப் பூங்காக்களுக்கு ஒருநாள் நுழைவுக்கட்டணமாக ஒரு வாகனத்திற்கு 7 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்த ஒருநாள் நுழைவுக்கட்டணம் மூலம் ஒருநாளில் அந்த வாகனத்தில், எத்தனை பூங்காக்களுக்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். வருடத்திற்கு என்றால் 35 டாலர்கள் கட்டணம். தொடர்ந்து பூங்காக்கள் செல்லும் ஆர்வம் கொண்டவர்கள் வருடாந்திர அனுமதியளிக்கும் ஸ்டிக்கர் வாங்கிக்கொள்ளலாம். நிரந்தர அனுமதியளிக்கும் சிறப்பு வாகன எண் பலகைகளையும் ஆர்வமுள்ளவர்கள் வாகனத்துறை அலுவலகங்களில் வாங்கிப் பொறுத்திக்கொள்ளலாம்.

பிற பூங்காக்களில் இருப்பது போல, இங்கும் ‘ட்ரெயில்’ (Trail) எனப்படும் நடைப்பாதைகள், ‘கேம்ப்கிரவுண்ட்’ (Campground) எனப்படும் கூடாரத் திடல்கள், உணவருந்துவதற்கான சுற்றுலா உட்காருமிடங்கள், கழிப்பறை வசதிகள் என அனைத்தும் உள்ளன. ‘பைன் லூப்’ (pine loop), ‘ப்ரைரி’ (prairie), ‘லோயர் ப்ளஃப்சைட்’ (lower bluffside), ‘அப்பர் ப்ளஃப்சைட்’ (upper bluffside) எனப் பல நடைப்பாதைகள் இங்கு இயற்கையான சூழலில் அமைந்துள்ளன.

இதில்  ‘லோயர் ப்ளஃப்சைட்’ மற்றும் ‘அப்பர் ப்ளஃப்சைட்’ பாதைகள் ஆற்றோரத்தில் இருக்கும் மலையில் மேலும் கீழுமாக அமைந்துள்ளன. காட்டுக்குள், மலையில், தூரத்தில் தெரியும் ஆற்றைப் பார்த்துக்கொண்டு நடப்பது ஒருவித ஏகாந்த மனநிலையை அளிக்கிறது. பல இடங்களில் ஒற்றையடி பாதையாக இருப்பதால், ஒரு பக்கம் மலையும் இன்னொரு பக்கம் மலைச்சரிவும் என மிகவும் கவனமாகப் பார்த்து நடக்க வேண்டிய நடைப்பாதையாக இவை உள்ளன. அதே போல், மேல் இருந்து கீழுள்ள பாதைக்குச் செல்லும் பகுதியும், பிறகு கீழிருந்து மேலே உள்ள பாதைக்குச் செல்லும் வழியும் செங்குத்தாக இருப்பதால், கூடுதல் கவனம் தேவைப்படும் பகுதிகளாக உள்ளன. மற்றபடி, உள்ளே நடக்க ஆரம்பித்துவிட்டால் இயற்கையும் நாமும் தான். மெதுவாக இயற்கையை ரசித்தபடி நடந்தோமானால், வந்து சேர இரண்டு மணி நேரங்கள் ஆகிவிடுகிறது.

FRONTENAC STATE PARK SEP2020 - 01
FRONTENAC STATE PARK SEP2020 - 06
FRONTENAC STATE PARK SEP2020 - 02
FRONTENAC STATE PARK SEP2020 - 03
FRONTENAC STATE PARK SEP2020 - 04
FRONTENAC STATE PARK SEP2020 - 07
FRONTENAC STATE PARK SEP2020 - 05
FRONTENAC STATE PARK SEP2020 - 01 FRONTENAC STATE PARK SEP2020 - 06 FRONTENAC STATE PARK SEP2020 - 02 FRONTENAC STATE PARK SEP2020 - 03 FRONTENAC STATE PARK SEP2020 - 04 FRONTENAC STATE PARK SEP2020 - 07 FRONTENAC STATE PARK SEP2020 - 05

இந்தப் பாதையில் ஆங்காங்கே இயற்கைக்காட்சிகளைக் கண்டுகளிக்க மேடைகள் அமைத்துள்ளனர். அப்படி ஒரு இடத்தில் காணும்போது அங்குப் ‘பெபின் ஏரி’ (Lake Pepin) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், நாம் அந்த இடத்தில் இருந்து பார்த்தால் மிஸ்ஸிஸிப்பி ஆறு தான் நமக்குத் தெரியும். என்னவென்று விசாரித்தால் தான் தெரிகிறது, பெபின் ஏரி மிஸ்ஸிஸிப்பி ஆற்றிற்கு இடையே தான் உள்ளதாம். ஆற்றுக்குள் ஒரு ஏரி. இயற்கைதான் எவ்வளவு விந்தையானது!!

இந்தப் பாதையில் ஒரு இடத்தில் சுண்ணாம்பு மலையைக் காணமுடிகிறது. முன்னொரு காலத்தில் இங்கிருந்து சுண்ணாம்புக்கல் உடைக்கப்பட்டு, பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளது. அதற்குச் சான்றாக வண்டிகளைப் பூட்டும் இரும்பு கொக்கிகளைத் தரையில் காண முடிகிறது. கீழுள்ள பாதை முடியும் இடத்தில் ‘In-Yan-Teopa’ எனப்படும் மலைமுகடு உள்ளது. இது அந்தக் காலத்தில் செவ்விந்திய மக்களின் வழிபாட்டுக்குரிய இடமாக இருந்துள்ளது என்கிறார்கள்.

இதையெல்லாம் கண்டுகளித்துவிட்டு மேலே வந்தால், கழிப்பறை சென்று முகம், கை கழுவியபின், அமர்ந்து சாப்பிடுவதற்கான இடம் இருக்கிறது. கையோடு உணவு கொண்டு வந்தோமானால், நடந்து வந்த களைப்பு தீர, சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். அதன் பின், நீரில் கால் நனைக்கும் ஆசை இருந்தால், பக்கத்தில் இருக்கும் ‘ஃப்ளோரன்ஸ் டவுன் பீச்சிற்கு’ (Florence Township Beach) செல்லலாம். ஐந்து நிமிடத்திற்குள்ளாகச் சென்று விடலாம். அருமையான, முக்கியமாக, அமைதியான சிறு கரை இது. ஆளே இருக்க மாட்டார்கள். தனியாகத் தண்ணீரில் விளையாட சிறந்த இடம் இது.

பறவை ஆர்வலர்களுக்குப் பொதுவாகவே இந்தப் பகுதி பிடித்துப்போகும். 260க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு இருப்பதாகக் கூறுகிறார்கள். பறவைகளைப் புகைப்படம் எடுக்க, இலையுதிர் காலத்தில் வண்ணங்களைப் புகைப்படம் எடுக்கக் கண்டிப்பாக இங்குச் செல்லலாம். மினசோட்டாவில் ஒருநாளில் குடும்பத்துடன், நண்பர்களுடன் சென்று வருவதற்கான பூங்காக்களில் சிறந்த ஒன்றாகும் இது.

 

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad