\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கருக்கலைப்புத் தடைச் சட்டம்

சில வாரங்களுக்கு முன்னர், கருக்கலைப்பு உரிமைகளுக்கான சட்டப் பாதுகாப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

‘ரோ – வேட்’ வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், 1973ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுவியிருந்த கருக்கலைப்பு பாதுகாப்புச் சட்டம், தொடக்க நாள் முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், கருத்தடைத் தொடர்பான பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தது. மத்திய அரசமைப்பின் இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  அர்கன்சாஸ் உள்ளிட்ட சில மாநிலங்களில், கருக்கலைப்புத் தடை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இணையத்தில் பதிவேற்றப்பட்டவுடனேயே, கருக்கலைப்பு நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. கருக்கலைப்புக்காக  ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களை தொலைபேசியில் அழைத்து அவர்களது அப்பாயிண்ட்மெண்ட்களை ரத்து செய்துவிட்டன சில மருத்துவமனைகள். சுருங்கச் சொன்னால் ‘கருக்கலைப்பு’ குற்றமாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டோர் கைதாகும் நிலை உருவாகியுள்ளது.

ரோ Vs வேட் வழக்கு (Roe vs Wade Case)

டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த, ‘ஜேன் ரோ’ (Jane Roe) என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட நார்மா மெக்கார்வி (Norma McCorvey) என்பவர் 1969 ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தைக்காகக் கர்ப்பமானார். தனது விருப்பத்துக்கு எதிராக கருத்தரிக்க நேர்ந்ததெனத் தெரிவித்த அவர் அதைக் கலைத்து விடவேண்டுமென்று மருத்துவமனைகளை நாடியபோது, டெக்சாஸ் மாநில மருத்துவமனைகள், ‘தாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டாலொழிய, கருக்கலைப்பு செய்வது குற்றம்’ என்ற கருக்கலைப்புக்கு எதிரான மாநிலச் சட்டங்களைக் குறிப்பிட்டு, கருக்கலைப்புச் செய்ய மறுத்துவிட்டன. இதனால் ஜேன் ரோ மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்க நேர்ந்தது. எனினும், ஜேன் ரோ டெக்சாஸ் மாநிலச் சட்டத்தை எதிர்த்து வழக்கொன்றைத் தொடுத்தார். அந்த வழக்கில் ஜேன் ரோ சார்பில் வழக்கறிஞர்கள் ‘சாரா வெடிங்டன்’ (Sarah Weddington)மற்றும் ‘லிண்டா காபி’ (Linda Coffee) யும்,  எதிர்த் தரப்பில் மாவட்ட வழக்கறிஞரான ‘ஹென்றி வேட்’ டும் (Henry Menasco Wade) ஆஜரானார்கள். மூன்று நீதிபதிகள் கொண்ட மாவட்டச் சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து ஜேன் ரோவுக்கு ஆதரவாகக் தீர்ப்பளித்தது.

1973 ஆம் ஆண்டு, ‘ஜேன் ரோ’ வுக்கு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது டெக்சாஸ் மாநில மாவட்டம். உச்ச நீதிமன்றத்தில் 9 பேர் கொண்ட நீதிபதி குழுவொன்று வழக்கை விசாரித்து, ‘கருக்கலைப்பு தொடர்பான பெண்களது உரிமை பாதுகாக்கப்படவேண்டுமென்றும், கருக்கலைப்பைத் தடை செய்ய அரசுக்கு அதிகாரமில்லை’ எனவும் 7-2 என்ற விகிதாச்சாரத்தில் தீர்ப்பளித்தது. அதோடு மட்டும் நிற்காமல், மத்திய அரசியலமைப்பு 14வது சட்டத்தின் திருத்தமாக இந்த உரிமையைச் சேர்த்தது.

இத்தீர்ப்பு மூன்று மாதக் கர்ப்பக்கால (Trimester) அடிப்படையில் பின்வரும் உரிமைகளைப் பெண்களுக்கு வழங்கியது.

  1. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்துக்குள் கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமையுண்டு.
  2. இரண்டாவது மூன்று மாத இடைவெளியில், சில கட்டுபாடுகளோடு கருக்கலைப்புச் செய்துகொள்ள அனுமதியுண்டு.
  3. கடைசி மூன்று மாதங்களில் கரு சிசுவாக சுவாசிக்கத் தொடங்கி விடுவதால், அந்த நிலையில் கருக்கலைப்பை அனுமதிப்பது குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குத் தரப்பட்டது. அதாவது கர்ப்பிணியின் உயிரைக் காப்பதற்காகவோ, சிசுவின் நிலை குறித்த காரணங்களுக்காகவோ மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே  கருக்கலைப்பு அனுமதிக்கப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாட்டு மக்களிடமும், அரசியல், மருத்துவம், விஞ்ஞானம், ஆன்மீகச் சமூகத்தினரிடையே கலவையான கருத்துகளைப் பெற்றது. குறிப்பாக ‘டிரைமெஸ்டர்’ அடிப்படையில் 1973 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டத் தீர்ப்பு தற்கால அறிவியல் ஆய்வுகளுக்கு முரணானது என்ற கருத்து மேலோங்கியது. அதாவது கருவறையில் உள்ள கரு 23 அல்லது 24 வாரங்களிலேயே சுவாசிக்கத் தொடங்கி விடுகிறது என்ற அறிவியல் அறிக்கைகளைத் தொடர்ந்து, இரண்டாவது டிரைமெஸ்டரிலும் கருக்கலைப்பு தடை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. கிறித்துவ மதத்தின் ஒரு சில பிரிவினரும், ‘ப்ரோ லைஃப்’ போன்ற அமைப்புகளும் ‘ரோ’ தீர்ப்பு ரத்து செய்யப்படவேண்டுமென உறுதியாக நின்றனர்.

பின்னர் 1992 ஆம் ஆண்டு ‘ராபர்ட் கேசி vs பிளாண்ட் பேரண்ட்ஹூட்’ (Planned Parenthood v. Casey) என்ற வழக்கிலும் ‘ரோ’ வின் கருக்கலைப்புத் தொடர்பான பெண்கள் உரிமைகளை, சிற்சில மாற்றங்களுடன் நிலை நிறுத்தியது. இரண்டாவது, மூன்றாவது டிரைமெஸ்டர் என்ற முறையை மாற்றி, கருப்பைக்கு வெளியே சிசு சுவாசிக்கும் நிலை ஏற்படும் வரை பெண்களுக்குக் கருத்தடை செய்ய உரிமையுண்டு  என்ற முடிவை வெளியிட்டது.

இவ்வாறாக கடந்த 50 வருடங்களாக கருக்கலைப்புத் தடையை ஆதரித்தும், எதிர்த்தும் பல இயக்கங்கள் போராடி வந்தன.

மனித வாழ்க்கை கருவுற்றதில் இருந்தே தொடங்கி விடுகிறது; கரு உண்டான முதல் நாளே உயிர் பெற்ற நபராகக் கருதப்படவேண்டும்; அவருக்கு வாழ்வதற்கான முழு உரிமை உண்டு என்று வாதிடுகின்றனர் ‘ப்ரோ லைஃப்’ அல்லது ‘ரைட் ஃபார் லைஃப்’ (Pro-Life or Right for Life) எனப்படும் இயக்கத்தினர். நாடெங்கும் இது போன்ற பல இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. மத நம்பிக்கை அடிப்படையிலும் கருத்தடைக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணமிருந்தன.

இன்னொரு புறத்தில் ‘ப்ரோ சாய்ஸ்’, ‘ப்ளாண்ட் பேரண்ட்ஹூட்’ (Pro-choice or Planned Parenthood) போன்ற இயக்கங்கள் பெண்களுக்கு தங்கள் உடல்நலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்க உரிமையுண்டு; இதன் அடிப்படையில் கருவைக் கலைக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என்று வாதிட்டு வந்தன.

டாப்ஸ் Vs ஜாக்சன் வுமன்ஸ் ஹெல்த் ஆர்கனைசேஷன் ​​(Dobbs v. Jackson Women’s Health Organization)

‘ராபர்ட் கேசி Vs பிளாண்ட் பேரண்ட்ஹூட்’ வழக்குத் தீர்ப்புக்குப் பிறகு மிசிசிப்பி மாநிலம், 15 வாரம் கடந்துவிட்ட கருவைக் கலைத்திடத் தடை விதித்திருந்தது. இதற்குப பிறகு கருத்தடை வேண்டுவோர், சரியான காரணங்களுடன் மாநிலச் சுகாதாரத் துறையின் அனுமதியைப் பெறவேண்டும்.

கருக்கலைப்பு கோரும் பெண்ணின் நிலைப்பாட்டையோ, மருத்துவத் தேவைகளையோ நேரடியாகக் கண்டறியாத அரசுத் துறை, படிவங்களில் நிரப்பப்படும் தகவலை வைத்து ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு அவசியமா இல்லையா என்பதை முடிவு செய்வது முறையற்றது என்ற அடிப்படையில், 2018 ஆம் ஆண்டு, மிசிசிப்பி மாநிலத்தைச் சார்ந்த ‘ஜாக்சன்ஸ் வுமன்ஸ் ஹெல்த் ஆர்கனைசேஷன்’ (Jackson’s Women Health Organization) என்ற நிறுவனம் அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அலுவலர் தாமஸ் டாப்ஸ் (Thomas Dobbs) என்பவருக்கு எதிராக வழக்கொன்றைத் தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் பல காலம் நடந்த இந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. இதில் 6-3 என்ற விகிதாச்சாரத்தில், மிசிசிப்பி மாநிலம் விதித்திருந்த 15 வாரம் கடந்த கருக்கலைப்புக்குத் தடை செல்லுமெனத் தீர்ப்பானது. மேலும் ‘ரோ Vs வேட்’ மற்றும் ‘கேசி Vs பிளாண்ட் பேரண்ட்ஹூட்’ ஆகிய வழக்குகளின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டமாக ஏற்கப்பட்ட பெண்களுக்கான கருத்தடை உரிமைப் பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.  “கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்குவது தேவையற்றது. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது’ என்பது இத்தீர்ப்பின் சாரம்.

மத்திய அரசியலமைப்புச் சட்டம் ரத்தாகிவிட்ட நிலையில், கருத்தடைத் தொடர்பான சட்டங்களை மாநிலங்களே நிர்வகித்துக் கொள்ளலாம். மாநில ஆளுனர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கருத்தடை உரிமைகளைத் திருத்தவும், புதிய சட்டங்களை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

மாநிலங்களின் நிலை

இன்றைய தேதியில் வாஷிங்டன், ஆரிகன், கலிபோர்னியா, நெவேடா, கொலராடோ, நியு மெக்ஸிகோ, அலாஸ்கா, மினசோட்டா, இலினாய், நியுயார்க், வெர்மாண்ட், மாசசூசட்ஸ், மெயின், நியு ஹாம்ஷையர், நியு ஜெர்சி, கனெக்டிகட், மேரிலாண்ட், டெலவர் ஆகிய மாநிலங்களில் ‘ரோ-வேட்’ தீர்ப்பின் படி கருக்கலைப்புக்கு அனுமதியுண்டு.

ஃபிலடெல்ஃபியா, மண்ட்டானா, நெப்ராஸ்கா, கான்சாஸ் போன்ற மாநிலங்கள் சில மாற்றங்களுடன், இன்றளவில்  கருக்கலைப்பை அனுமதித்து வருகின்றன. மிக விரைவில், இவற்றில் கருக்கலைப்பு உரிமை பறிக்கப்படலாம்.

மற்ற மாநிலங்களில் கருக்கலைப்புத் தடைச் சட்டம் முழுமையாகவோ, குறிப்பிட்ட அம்சங்களுடனோ நிறைவேற்றப்பட்டுவிட்டன.

ரோ Vs வேட் சட்டத்திருத்தம் ரத்தானதின் விளைவுகள்

  • கருக்கலைப்பு உரிமை தொடர்பான மத்திய அரசியலமைப்பு திருத்தம் ரத்து என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் வழக்கறிஞர்கள், மருத்துவமனைகள், கருக்கலைப்பு நாடும் பெண்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் பெரும் குழப்ப நிலையிலேயே இருக்கிறார்கள். ‘ரோ-வேட்’ தீர்ப்புக்குப் பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த விதிகள் அலசப்பட்டு மாற்றத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், ‘ரோ-வேட்’ தீர்ப்புக்குப் பிறகு மட்டும் சுமார் நாற்பது மாநிலங்கள், கருக்கலைப்புத் தொடர்பாக 1400 உட்திருத்தங்களை செய்துள்ளன. அவை அனைத்தும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
  • இதற்கு மாறாக சில மாநிலங்கள் முந்திக் கொண்டு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டன. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் பெரும்பான்மையோர் பழமைவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்தவர்கள். முந்தைய அதிபரின் காலகட்டத்தில் இவர்கள் பதவியேற்ற போதே இதுபோன்றதொரு சூழ்நிலை உருவாகலாம் என கணிக்கப்பட்டது. இவர்களில் ஒருவரான நீதிபதி சாமுவேல் அலிட்டோவின் கருத்துகள், தீர்ப்பு வெளியாகும் முன்னரே ஊடகங்களுக்கு கசிந்துவிட்டது. அதில் ‘ரோ-வேட்’ தீர்ப்பு ‘மிகவும் தவறானது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக முதல் மூன்று மாதத்திலும் கூட கருக்கலைப்புக்குத் தடை விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகவல் வெளியானவுடன் 13 மாநிலங்கள், ‘ரோ-வேட்’ சட்டத்தின் எதேனும் ஒரு பிரிவு திருத்தப்பட்டால் கூட மொத்த கருக்கலைப்பு உரிமை சட்டங்களும் தானாகவே ரத்தாகும் படி (trigger laws)  மாநிலச் சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான அடுத்த நொடி இந்த மாநிலங்களில் கருக்கலைப்பு குற்றமாகக் கருதப்படும் நிலை உண்டானது.
  • கருக்கலைப்புக் குறித்த முடிவுகள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதால், வேறுபட்ட கொள்கையுடைய கட்சிகள் / நபர்கள் பொறுப்புக்கு வரும்பொழுதெல்லாம், சட்டங்கள் மாற்றத்துக்குள்ளாக நேரிடும். உதாரணமாக மினசோட்டா மாநிலத்தில் தற்போது கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நவம்பர் மாதம் ஆளுநருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்காட் ஜென்சன் (Scott M. Jensen), தான் வெற்றி பெற்றால் கருக்கலைப்புத் தடை சட்டத்தை முழுதுமாக அமல்படுத்தப் போவதாகத் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் மாநிலத்தில் கருக்கலைப்புத் தொடர்பாக நிரந்தரமில்லாத கொள்கைகளும், மாற்றங்களும் குழப்பத்தை உண்டாக்கலாம்.
  • கருக்கலைப்புச் செய்வது குற்றமாகக் கருதப்படும் அபாயமிருப்பதால், மருத்துவமனைகளில், கருக்கலைப்புக்காக முன்பதிவு செய்திருந்தவர்களின் அப்பாயிண்ட்மெண்ட்கள் ரத்து செய்யப்பட்டன. பல பெண்கள் அண்டை மாநிலம் புதிய திருத்தம் கொண்டு வருமுன்னர் அங்கு சென்று கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்து வருகின்றனர்.
  • கர்ப்பத்துக்குத் தயாராக இல்லாத நிலையில் கர்ப்பம் தரிக்க நேர்ந்தவர்கள், கட்டாயமாகப் பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதால், எதிர்காலப் பிரச்சனைகளை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும். இது பிறக்கும் பிள்ளையின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கக்கூடும். குறிப்பாக வண்புணர்வு மற்றும் முறையற்ற உறவுகளால் கருத்தரிக்க நேர்ந்த பெண்கள் எளிதில் கருக்கலைப்பு செய்துவிட முடியாது.
  • மேலும் சட்டக் கட்டுபாடுகளுக்கு அஞ்சி ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவது தாய் மற்றும் குழந்தையின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள். இது சமூகங்களில் பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடும் என்ற அச்சத்தையும் இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
  • சிகிச்சைக்காக, கருத்தடை அனுமதிக்கப்படும் மாநிலங்களுக்கு செல்ல இயலாத பெண்கள், முறையற்ற கருக்கலைப்பு உபாயங்களைப் பின்பற்றும் அபாயமுள்ளது. இவை பெண்களின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு, உயிரிழப்புகளையும் ஏற்படுத்தலாம். உலகச் சுகாதார அமைப்பு (World Health Organization), உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 23,000 பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் இறக்கின்றனர் எனவும், பல்லாயிரக்கணக்கானோர் நிரந்தர உடல்நலச் சிக்கல்களை அனுபவிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கருக்கலைப்பைத் தடைசெய்வது, கர்ப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையை 21% அதிகரிப்பதற்கு (கறுப்பினப் பெண்களிடையே இது 33% அதிகரிப்பதற்கும்) வழிவகுக்கும் என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
  • கர்ப்பிணியின் உயிர் அல்லது கருவின் வளர்ச்சிக் குறித்த சிக்கல்கள் இருப்பின் கருக்கலைப்பு அனுமதிக்கப்படலாம் என சில மாநிலங்கள் சொன்னாலும், இதன் உட்பிரிவுகள் சிக்கல் நிறைந்தவை. அரசுத் துறை முடிவெடுக்க ஏற்படும் கால தாமதம் தாய்க்கோ, சிசுவுக்கோ பாதிப்புகளை உண்டாக்கலாம்.
  • சில சூழ்நிலைகளில், கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருக்கலாம்; அல்லது எதிர்பாராமல் முதல் மூன்று மாதங்களிலேயே நீர்க்குடம் உடைந்துவிடலாம். இந்த நேரங்களில் தாய்க்கு தொற்று பரவாமலிருக்க உடனடி கருக்கலைப்பு செய்யவேண்டிய நிலை உண்டாகலாம். இதன்பொழுது மாநிலச் சுகாதாரத் துறையின் அனுமதியை நாடி நிற்பது அப்பெண்ணின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
  • உடலுறவு குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத சமூகங்களில், பதின்ம வயதில் கருத்தரிக்கும் பெண்கள் அதிகம். கருக்கலைப்புத் தடைச் சட்டம் இவர்களை இளவயதிலேயே தாயாக்கிவிடக்கூடும். இதனால் எதிர்காலத்தில் பெண்கள் கல்லூரி, வேலையிடங்களுக்குச் செல்வது பெரிதாகக் குறையலாம் என்றும் கருதப்படுகிறது.

உதவிக்கரம் நீட்டும் நிறுவனங்கள்

அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் பலவும் கருக்கலைப்பு நாடும் பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. இப்பெண்கள் கருக்கலைப்பு செய்ய அண்டை மாநிலங்களுக்கோ, அண்டை நாடுகளுக்கோ செல்ல விரும்பினால் அவர்களுக்கு விடுப்பு, பயணப்படி என எல்லாம் தருவதாக அறிவித்துள்ளன. அமேசான், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற பல நிறுவனங்கள் மருத்துவப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் கருக்கலைப்புக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதுடன், அச்சிகிச்சைக்கான முழுப் பயணச்செலவையும் அளிக்க முன் வந்துள்ளன.

மக்கள் கருத்து

சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கான ஆதரவு இனம் மற்றும் இனம், கல்வி மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகிறது. கருக்கலைப்பு உரிமை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவேண்டுமென 68% கறுப்பினத்தவர்களும், 74% ஆசிய இனத்தவரும், 60% ஹிஸ்பானியர்களும், 59% வெள்ளையினத்தவரும் கருதுகிறார்கள்.

முதுகலைப் பட்டம் பெற்றவர்களில் 69%, இளங்கலைப் பட்டம் பெற்றவர்களில் 64%, எதோவொரு உயர்கல்வி படித்தவர்களில் 63% கருக்கலைப்பு உரிமையை ஆதரிக்கின்றனர்.

மத நம்பிக்கை கொண்டவர்களிடமும் கருக்கலைப்பை ஆதரிக்கும் கருத்துகளும், எதிரான கருத்துகளும் தென்படுகின்றன. எவாஞ்சலிகல், ப்ராடெஸ்டண்ட், கத்தோலிக்க பிரிவினரிடையே இந்த விகிதாச்சாரம் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றன. மதப் பிடிப்பில்லாதவர்கள் (எந்தக் குறிப்பிட்ட மதத்தின் மீதும் பற்றில்லாதவர்கள்) 84% கருக்கலைப்பு உரிமையை ஆதரிக்கிறார்கள்

பெண்கள் நல அமைப்புகள் பலவும் கருக்கலைப்புத் தடையைக் கண்டித்துள்ளன. “உச்சநீதி மன்றத்தின் இத்தீர்ப்பு பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது. பல லட்சக்கணக்கான பெண்களை இத்தீர்ப்பு நேரடியாகப் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளனர். பல மகளிர் அமைப்புகள் போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றன.

முற்போக்குச் சிந்தனையுடைய தலைவர்கள், “துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் பொதுமக்களை பாதுகாக்க துப்பாக்கி உரிமையைக் கட்டுப்படுத்தத் துணியாமல், பெண்களின் உடல்நல உரிமைகளைப் பறிப்பது அவமானகரமானது” என்ற கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி “ இத்தீர்ப்பு பெண்களின் முகத்தில் அறைந்திருக்கிறது. குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உச்ச நீதிமன்றம் உள்ளதை இத்தீர்ப்பு காட்டியுள்ளது. அவர்கள் இருண்ட பகுதிக்கு பெண்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பெண்களின் உரிமையைப் பறித்திருக்கிறார்கள்” என்ற கருத்தினைப் பதிவு செய்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  “இந்தத் தீர்ப்பு நாட்டை 150 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது. பெண்களின் உடல் நலம் மற்றும் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளன” என்று தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகள், கருத்தடை சாதனங்களை சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு முடக்கிவிடாதவாறு, முன்னெச்சரிக்கையாக  சில நிர்வாக உத்தரவுகளையும் அவர் பிறப்பித்துள்ளார்.

அடிப்படைவாதமும், அதற்கான ஆதரவும், எதிர்ப்பும் அமெரிக்காவுக்குப் புதிதல்ல. ஆனால் அரசியல் கட்சிகள் இப்பிரச்சனையைப் பெரிதாக்கி, நாட்டையே பிளவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல் கொள்கைகள், மதம் சார்ந்த நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து பெண்களின் உள, உடல் நலனையும், சமூக நலனையும் பாதுகாக்கும் வகையில், அறிவியல் அடிப்படையில் கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள மாநில அரசுகளை வற்புறுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  வரும் நவம்பர் மாதம் பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநர் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலங்களில் அடுத்த ஆளுநரைத் தீர்மானிப்பதில், அவர்களது கருக்கலைப்புச் சட்டங்கள் குறித்த நிலைப்பாடு பெரும்பங்கு வகிக்கும்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad