மினசோட்டா பன்னாட்டு கலாச்சார திருவிழா
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரங்களின் மையமாகத் திகழ்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மினசோட்டாவின் புகழ்பெற்ற ‘சர்வதேச கலாச்சாரத் திருவிழா’ (International Festival of Minnesota – IFest-MN) சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, புதிய பொலிவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செயின்ட் பால் நகரின் ‘ரிவர்சென்டர்’ (Saint Paul RiverCentre) வளாகத்தில் நடைபெற்றது. மினசோட்டாவின் 90 ஆண்டுகால கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தாங்கி நிற்கும் இவ்விழா, ‘Festival of Nations’ என்ற பழைய பெயரிலிருந்து மாற்றப்பட்டு, தற்போது ‘IFest-MN’ என்ற புதிய அடையாளத்துடன் மினசோட்டா வாழ் பல்வேறு இனக்குழு மக்களை ஈர்த்தது.
இந்த இரண்டு நாள் விழாவில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் இனக்குழுக்கள் பங்கேற்றன. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் பாரம்பரியங்கள் ஒரே இடத்தில் சங்கமித்திருந்தது, பார்வையாளர்களுக்கு உலகத்தைச் சுற்றி வந்த ஒரு உணர்வைத் தந்தது.
விழாவின் முக்கிய ஈர்ப்பாக மூன்று வெவ்வேறு மேடைகளில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அமைந்தன. பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார விளக்கங்கள் என அரங்கம் முழுவதும் கலை உற்சாகம் பொங்கியது. குறிப்பாக, 20-க்கும் மேற்பட்ட சர்வதேச உணவுக்கூடங்களில் பரிமாறப்பட்ட உலகளாவிய அறுசுவை உணவுகள் பார்வையாளர்களின் நாவிற்கு விருந்தளித்தன.
ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற ‘மாணவர் தினத்தில்’ (Student Day) மினசோட்டாவின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உலக நாடுகளின் கைவினைப் பொருட்கள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் நேரடி விளக்கங்கள் மூலம் பிற நாட்டுப் பண்பாடுகளை மாணவர்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ளும் நல்வாய்ப்பாக இது அமைந்தது.
கிட்டத்தட்ட 25,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்தத் திருவிழா, வெவ்வேறு இன மக்களுக்கு இடையே புரிதலையும், ஒற்றுமையையும் வளர்க்கும் ஒரு பாலமாக அமைந்தது. மினசோட்டாவில் வாழும் தமிழ் சமூகம் உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் மக்களும் தங்களின் தனித்துவமான அடையாளங்களைப் பிற இனத்தவருடன் பகிர்ந்து கொண்டனர்.
நமது அடுத்த தலைமுறைக்குத் தங்கள் வேர்களையும், பிற பண்பாடுகளையும் அறிமுகப்படுத்திய இந்தச் சர்வதேசத் திருவிழா, மினசோட்டாவின் பன்முகத்தன்மையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
- சரவணகுமரன்







