\n"; } ?>
Top Ad
banner ad

இழப்பின் நிழல்கள்

தீம் பார்க்குகள், கேளிக்கை விடுதிகள் என சூழ்ந்திருக்கும் ஆர்லாண்டோ நகரின் விளிம்பில் வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது ‘ஐஸ் பார்’ மதுக்கூடம். பகல் நேரப் பரபரப்பை மறந்து அந்திமக் கால நேரத்தைக் கொண்டாட வந்திருந்த கூட்டம், பன்னிரெண்டு மணியைக் கடந்துவிட்ட காரணத்தால் மெதுவாகக் கரைந்துகொண்டிருந்தது. மதுவின் விறுவிறுப்பில் இயல்பை மறந்து சத்தமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மனிதர்களின் உரையாடல்கள், சீரான முணுமுணுப்பாகக் குறைந்திருந்தன. மூலைகளில் இருந்த வண்ணமயமான நியான் விளக்குகள் அணைக்கப்பட்டதால், அறையின் ஓரங்கள் அடர்ந்த, மங்கலான நிழல்களில் மூழ்கியிருந்தன. ஆங்காங்கே ஸ்பீக்கர்களில் ஆரவாரித்துக் கொண்டிருந்த ராக் இசை மென்மையான ஜாஸ் இசையாக மாறியிருந்தது. விஸ்தாரமான கூடத்தின் மையத்தில், அதுவரையில் பம்பரமாக இயங்கி வந்த பார்டெண்டர் காலிக் கண்ணாடிக் குவளைகளை அடுக்குவதால் ஏற்படும் வெற்று ‘கிளிங்க்’ சத்தம், அந்தச் சன்னமான மெல்லிய இசையையும் தாண்டி கேட்டது.

இரண்டு முறை கூப்பிட்ட பிறகும் கவனிக்காமல், தன் எதிரில் முடி கலைந்து மதுக்கோப்பையில் மிதக்கும் ஐஸ் கட்டிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாராவின் கையை மெல்லப் பற்றினாள் தியா. திடீரென ஏற்பட்ட ஸ்பரிசத்தினால் சுதாரித்த சாரா நிமிர்ந்து பார்த்தாள். ஏறி இறங்கிய மார்பகங்கள் அவளின் அமைதியற்ற சுவாசத்தை உணர்த்தின. அவளது தோள்கள் நடுங்குவதையும் தியாவால் உணர முடிந்தது.

சற்று முன்பு, பக்கத்தில் காலியான டேபிளைத் தன் கையில் இருந்த துணியால் வட்ட வடிவில் தேய்த்துத் துடைத்துக் கொண்டிருந்த வெயிட்டர், “ஆர் யூ கர்ல்ஸ் டூயிங் ஓகே?” என்று கரிசனமாகக் கேட்டான்.

“அனதர் லார்ஜ் போர்பன் வித் ஐஸ், பிளீஸ்” என்று அவசரமாகப் பணித்த சாராவைப் பார்த்துக் குழம்பினாள் தியா.

“சாரா, உனக்கு என்ன ஆச்சு? இது உன்னோட நாலாவது கிளாஸ். ஏற்கனவே அளவுக்கதிகமாக குடிச்சிருக்க… இதுல இன்னொரு ரவுண்டா? இன்னைக்கு ஏன் இப்படி நடந்துக்கிற?” தியா கவலையோடு அவளது கையை இறுக்கமாகப் பற்றினாள்.

தியாவைப் பார்த்துச் செயற்கையாகச் சிரித்த சாரா, தன் உடைந்த குரலில், “நான் குடிக்கலனா… அந்தச் சத்தமும், அந்த நிழலும் என் மூளையைத் தூங்க விடாது தியா…” என்று குளறினாள்.

சாராவுடைய இழப்பின் வலி தியாவுக்குப் புரிந்தது. அவள் மனதின் எண்ணக் கதவுகள் மெதுவே திறந்தன. சாராவின் அம்மா, மேகலா – முகம் மட்டுமல்லாது மனதிலும் கருணை நிரம்பியவர். பள்ளி நாட்களில் சாராவின் வீட்டுக்குப் போகும்போதெல்லாம், பாசாங்கு இல்லாத அன்பை வெளிப்படுத்தியவர். அவளது உணவின் சுவையும் அதை மீறிய உபசரிப்பும் தியாவை திக்குமுக்காடச் செய்துவிடும். அவளது சிரித்த முகமும் கண்களில் வழிந்தோடும் பரிவும் கண்முன்னே வந்து போனது. மூன்று மாதங்களுக்கு முன்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிகம் போராடாமல் மேகலா மரணித்த செய்தி வந்த நாளில் இருந்தே தியாவுக்குள் ஒரு தவிப்பு இருந்தது. ஆர்லாண்டோவின் இந்த அமைதியற்ற நள்ளிரவில்தான் அவளால் சாராவின் வலியைப் புரிந்துகொள்ள முடிந்தது.

“சாரா… உன் அம்மாவோட திடீர் மறைவு ரொம்ப துரதிர்ஷ்டமானது… அது யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்புங்கிறதை என்னால் புரிஞ்சுக்க முடியுது. நம்மை மீறிய இழப்புகள் மனிதனைத் துரத்தத்தான் செய்யும்… ஆனால், அதுக்காக இப்படி உன்னையே கரைத்துக் கொள்ளலாமா? அதிலேருந்து வெளிய வர…”

தியா சொல்லி முடிக்கும் முன்பே அவளது கையைத் தன் ஆசையின் கடைசிப் பிடிப்பைப் போலப் பற்றிக் கொண்டாள் சாரா. அவளது கண்களில் பயமும், பெருந் துயரமும் அலைமோதின. “இது இழப்பினால் ஏற்பட்ட வலி மட்டுமில்ல தியா… பயம்… தினமும் நான் அனுபவிக்கும் அமானுஷ்யம்… என்னைத் தூங்க விடாமல் துரத்தும் சத்தம்… கண்ணை மூடினாலும் எதிரே தோன்றும் நிழல்…” சாராவின் குரல் சற்று உரத்து கேட்க, தூரத்து மேஜையில் இருந்தவர்கள் சிலர் திரும்பிப் பார்த்தனர்.

“என்னடி சொல்ற? முதல்ல பதற்றப்படறதை நிறுத்து… மெல்ல பேசு… இந்தா தண்ணி குடி” ஐஸ் கட்டிகள் மிதந்து கொண்டிருந்த கிளாஸை சாராவின் கையில் திணித்தாள். “எல்லாம் சரியாயிடும், தண்ணி குடி கொஞ்சம்” என்று அவளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயன்றாள்.

சாராவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் வழிய, மேஜையிலிருந்த நாப்கினால் துடைத்தவாறு, தலையை இடவலமாக ஆட்டினாள்… “இல்ல எதுவும் சரியாகலை… மூணு மாசமா திண்டாடிக்கிட்டிருக்கேன்… அம்மாவை இழந்த கவலையை விட, என்னைத் துரத்தும் நிழல் என்னை பயமுறுத்திக்கிட்டே இருக்கு… தூங்க முடியல, சாப்பிட முடியல… இரண்டு மாசமா காலேஜுக்குப் போகல… ரூம்ல இருக்கவும் பயம்… உலகத்தைப் பார்க்கவும் பயம்…” கேவி அழத் தொடங்கிவிட்டிருந்தாள். தன் இருக்கையில் இருந்து எழுந்த தியா, அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“ஓகே… ஓகே சாரா… நாம பேசலாம்… கண்ட்ரோல் யுவர்செல்ஃப்… நான் இருக்கேன்… நம்ம பிரெண்ட்ஸ் இருக்காங்க… சரி பண்ணிடலாம்… இந்தா கொஞ்சம் தண்ணி குடி… ரூமுக்குப் போய் பேசிக்கலாம். ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்” என்று அவள் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

“நோ… நோ… நான் எங்கயும் வரல… நான் பேசணும்… நான் சொல்றதை நீ கேட்டுதான் ஆகணும்…” அவள் குரலில் உறுதியும் மூர்க்கமும் அதிகரிப்பதைக் கவனித்த தியா சுதாரிப்பதற்குள், மேஜை மேலிருந்த ஐந்தாவது போர்பன் விஸ்கியை ஒரே மூச்சில் தீர்த்துவிட்டு காலி கோப்பையை ‘நங்கென்று’ மேஜை மேல் வைத்தாள் சாரா. நாப்கின் ஹோல்டரிலிருந்து இரண்டு காகிதத் தாள்களை உருவி எடுத்து, மூச்சைச் சிந்தியவள், “தயவு செஞ்சு நான் சொல்றதைக் கேளு தியா… என்னைப் புரிஞ்சுக்கோ… ஹெல்ப் மீ ப்ளீஸ்… ஹெல்ப் மீ” என்று அழத் தொடங்கினாள்.

அவளது பேச்சில் மது போதை கலவாத நிஜமான தீவிரமும் பயமும் இருப்பதை தியாவால் உணர முடிந்தது. “ஓகே… கண்டிப்பா… கண்டிப்பா கேக்குறேன்… நான் ஹெல்ப் பண்றேன்… காம் டவுன்… காம் டவுன்… சாய்ஞ்சு உட்காரு ஒரு நிமிஷம்… அப்புறம் பேசலாம்.”

“ஐ வாண்ட் எ ஸ்மோக்.”

*****

பாருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருந்த பெஞ்சில் அமர்ந்த சாரா சிகரெட்டைப் பற்றவைத்து ஆழமாக இழுத்தாள்…

“முதல் ரெண்டு நாள், அம்மா இறந்த சோகம் மட்டும் தான் இருந்தது தியா… எல்லாம் முடிஞ்சு நான் இங்க என்னோட அபார்ட்மெண்ட்க்கு வந்தப்புறம் மெது மெதுவாக என் மண்டைக்குள்ள ஏதோ ஒன்னு வந்து உறுத்த ஆரம்பிச்சிடுச்சு…”

“என்ன சொல்ல வர்ற? அம்மாவோட ஆவி…”

அன்னாந்து பார்த்து வாயில் நிரம்பியிருந்த புகையை வெளியே ஊதிய சாரா, “நான் சொல்வது உண்மை தியா… இறப்பு என்பது வெறும் உடலின் மறைவு மட்டும்தான். அம்மா இன்னமும் அந்த அறையின் அமைதியில்தான் வாழ்கிறாள். தினமும் நள்ளிரவில் அவளது காலடிகள் தரையைத் தொடும் சத்தம் கேட்கிறது. நீ கூட சொல்வியே, ஊர்ல எங்க வீடு முழுசும் அம்மா பயன்படுத்துற ‘வேலண்டினோ’ பெர்ஃப்யூம் வாசம் வீசும்னு… அந்த வாசனை, இங்க என்னோட அபார்ட்மெண்ட்ல இன்ஸ்டண்டா பரவும்…”

சாரா சிக்கலான மனப்பிரமைக்குள் உழல்கிறாள் என்பது மனநல மருத்துவ மாணவியான தியாவுக்கு எளிதில் புரிந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அனுசரனையாகப் பேசினாள்.

“சாரா, அம்மா மேல நீ வச்சிருந்த அன்பால உனக்கு அப்படித் தோணுது… அது வெறும் பிரமையாகக் கூட இருக்கலாம்ல?”

சாரா சிகரெட்டை ஒரு முறை ஆழமாக இழுத்து சாம்பலைத் தட்டினாள். அவளது கண்கள் இன்னமும் தேங்கியிருந்த கண்ணீரால் இருட்டில் மின்னின.

“இல்ல தியா! வெறும் அம்மா மட்டும் வந்திருந்தா நான் பயந்திருக்க மாட்டேன். அம்மா உயிருடன் இருந்தப்போ என்னை எப்படிக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கிட்டாளோ, அதே மாதிரிதான் இப்பவும் இருக்காங்க…” என்றவாறு சிகரெட்டைத் தரையில் போட்டு காலால் நசுக்கி நெருப்பை அணைத்தாள்.

அவள் சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்கவில்லை என்பதை உணர்ந்தது போல் தியா அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏன்னா, என்னைத் துரத்திட்டு வர்ற ஏதோ ஒரு பயங்கரமான கெட்ட ஆவிகிட்ட இருந்து என்னைக் காப்பாத்தத்தான் அம்மா வர்றாங்க!”

தியா திடுக்கிட்டாள். “என்ன சொல்ற? கெட்ட ஆவியா?”

“ஆமா… நான் சொன்னேன் இல்ல நிழல்… ராத்திரில, இருட்டுல ஜன்னலுக்கு வெளியே ஒரு நிழல் உருவம் நகரும். சில சமயம் அது ரூமுக்குள்ள வந்துட்ட மாதிரி தோணும்… அந்தச் சமயத்துல என்னால நகரக் கூட முடியாது… பாரலைஸ் ஆன மாதிரி… கத்தக் கூட முடியாது… அந்த நேரத்துல தான் அம்மாவோட வாசம், அந்த வேலண்டினோ பெர்ஃயூம் வாசம் பரவும். அடுத்த பத்து செகண்ட்ஸ்ல எல்லாம் கிளியராயிடும். அம்மா என்னைக் காப்பாத்திடுவா… ஒவ்வொரு ராத்திரியும் இதே நரக வேதனை… சில நாட்கள்ல, பல முறை இப்படி நடக்கும்… கொஞ்சம் கொஞ்சமா பகல்ல கூட அதை ஃபீல் பண்றேன்.”

சாரா சொன்னதைக் கேட்டு குழம்பிப் போனாள் தியா… என்ன செய்வதென தெரியாமல், முன்னும் பின்னுமாக நடந்தவள் பெஞ்சிலிருந்த பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டாள்.

“இப்போ புரியுதா என் நிலைமை… நான் ஏன் இப்படி இருக்கேன்னு இப்போ புரியுதா உனக்கு?” சாராவின் கைகள் தியாவின் தோளைப் பிடித்து உலுக்கின.

அவளது கைகளைப் பற்றி கீழே இறக்கிய தியா, “புரியுது… புரியுது… ஆனா நீ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிறதால கொஞ்சம் அதிகமா ரியாக்ட் ஆகற மாதிரி தோணுது… கெட்ட ஆவியெல்லாம் இருக்காது…” அவள் சொல்லி முடிப்பதற்குள்…

“தெரியுமா உனக்கு… ஆவி பத்தியெல்லாம் உனக்கு ரொம்ப தெரியுமா? அனுபவிக்கிற எனக்குத் தாண்டி தெரியும்… அந்த பாஸ்டர் சொன்னார்… இந்த நிதர்சனத்தை யாரும் நம்ப மாட்டாங்கன்னு… அவர் சொன்னது கரெக்ட் தான்… நீயே நம்ப மாட்டேங்கிறியே!”

மீண்டும் துணுக்குற்றாள் தியா – “பாஸ்டரா?”

“ஆமாம்… இப்போதைக்கு எனக்கு ஆறுதலா இருக்குற ஒரே ஒருத்தர் அவர்தான்… என்னை இந்த மரணச் சுழல்லேர்ந்து காப்பாற்றப் போராடிக்கிட்டிருக்கிற ஒரே மனுஷனும் அவர்தான்… நீ என்னை நம்பலைன்னா பரவாயில்லை… போலாம் நம்ம…”

“ஹேய்… ஹேய்… நான் உன் கூட எப்பவும் இருப்பேண்டி… உட்காரு இங்க உட்காரு… கொஞ்ச நேரத்துல போயிடலாம்…” தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை அவளிடம் நீட்ட, சாரா அதை உதட்டில் வைத்து, புகையை இழுத்து ஆற்றாமை வெளிப்படும் வகையில் ஊதினாள்.

“என்ன பண்றது, எங்க போறதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தப்போ, சில நிமிட அமைதிக்காகவாவது கோயில், சர்ச்னு போக ஆரம்பிச்சேன்… அப்படி எங்கயோ கிடைச்ச காண்டாக்ட் தான் பாஸ்டர் தாமஸ்… ஸ்பிரிச்சுவல் ஹீலர்…”

“ஸ்பிரிச்சுவல் ஹீலரா? யூ மீன்… ஆன்மீகமா…”

“ஆமாம் தியா… நம்ப முடியலை இல்லை? என்னை மாதிரி ஒருத்தி ஆன்மீகம், பிரார்த்தனை, பரிகாரம்னு பேசறது வேடிக்கையா இருக்கு இல்ல?”

“சேச்சே அப்படியில்லை… எந்த வழியா இருந்தா என்ன? அதை விடு… பாஸ்டர் என்ன சொன்னார்?”

“அவரை பாஸ்டர், மதம்னு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள சுருக்கிட முடியாது… மொதல்ல எனக்கு ரெய்கி எனர்ஜி ஹீலிங் தான் செஞ்சார்… அதுல பெருசா பலன் கிடைக்கலை… அதுக்கப்புறம் டிரெடிஷனலா முயற்சி பண்ணாரு… அம்மாவோட ஆவியோட பேசி எனக்கு வழி காட்டினார்… அம்மா என்னைச் சுற்றியே வந்துகிட்டு இருக்காங்க… என்னை பாதுகாக்குறாங்க அப்படிங்கிற விஷயமெல்லாம் கூட அவர்தான் கண்டுபிடிச்சு சொன்னார்… ஆனா சாத்தான்களோட அழுத்தங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், அம்மா ரொம்ப பலவீனமாயிட்டே வர்றாங்களாம்… சாத்தான்கள் அம்மாவை அழிச்சுட்டா, ஐ மீன்… அம்மாவோட ஆவியை அழிச்சிட்டா என்னைக் காப்பாத்த யாரும் இருக்க மாட்டாங்க… சாத்தான்களோட அடுத்த இலக்கு நான் தான்னு சொன்னாரு.”

“ஓ மை… இதுக்கு என்னதான் தீர்வாம்?”

“‘கிளென்சிங்.’.. ‘ஸ்பிரிச்சுவல் கிளென்சிங்’… அமானுஷ்ய சக்திகள் பரப்பும் நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி பாசிட்டிவ் எனர்ஜியை நிரப்பும் முயற்சி… என்னையும் அம்மாவின் ஆவியையும் சாத்தான்களிடமிருந்து காப்பாற்றி, அவங்க ஆவி அமைதி பெறச் செய்யற விசேஷ பிரார்த்தனைகள்தான் ஒரே வழின்னு அவர் நினைக்கிறாரு…”

“எவ்வளவு நாளா இதை டிரை பண்றே? இப்ப ஏதாவது வித்தியாசம் தெரியுதா?”

“முதல் ஒரு வாரம் ஜப்பானிய ‘ரெய்கி’யை டிரை பண்ணார்… பெருசா எதுவும் தெரியல… அப்புறமாத்தான் இந்த ‘கிளென்சிங்’ சஜஸ்ட் பண்ணாரு… மூலிகை, சாம்பிராணி புகையெல்லாம் போட்டு ‘ஸ்மட்ஜிங்’ செஞ்சப்போ கொஞ்சம் ரிலீஃப் கிடைச்சுது… ஆனா அது ரொம்ப கொஞ்ச நேரம் தான்… அதிகபட்சமா ஒரு நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாம இருந்திருப்பேன்… ஆனா அடுத்த நாள் தொடர்ந்து அதே சாத்தான் வந்து விடுகிறது.”

அவள் பேசும்பொழுது ‘சாத்தான் பற்றிய நினைவுகள், எண்ணங்கள் தோணுது’ என்று சொல்கிறாளா என தியா மிக உன்னிப்பாக கவனித்தாள். ஆனால் சாரா ஊர்ஜிதமாக ‘சாத்தான் வந்து விடுகிறது’ என்றதைக் கேட்டதும், அவள் பேசி புரியவைக்கும் கட்டத்தைத் தாண்டிவிட்டாள் என்று நினைத்தாள் தியா.

“எனக்கு ஒன்னு தோணுது… நீ ஏன் உன் ரூமை காலி பண்ணிட்டு வேற யாருடனாவது தங்கக் கூடாது?”

“டிரை பண்ணிப் பார்த்தேன், எதுவும் ஒத்து வரலை… இட மாற்றத்தால அந்த சாத்தானைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு தாமஸ் நினைக்கிறாரு.”

சற்று குழம்பிய தியா, “வேற எப்படி சரி பண்ண முடியும்னு ஏதாவது சொன்னாரா?”

“அதுக்குதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார்… சிறப்பு பிரார்த்தனைகள் – ஜெருசலேம்ல இருந்து ஆசீர்வதிக்கப்பட்ட ‘புனித எண்ணெய்’ கண்டிப்பா பலனளிக்கும்னு சொல்றாரு…”

“ஜெருசலேம்ல இருந்தா?” தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டாள் தியா.

“ஆமாம்… ஜெருசலேம்லருந்து தான்… ஒரு வாரத்துக்கான எண்ணெய்க்கு ஆறாயிரம் டாலர் செலவாகுமாம்…”

“ஆறாயிரம் டாலரா?”

மீண்டும் கேவிக் கேவி அழத் தொடங்கிவிட்டாள் சாரா… “ஆமாம் ஆறாயிரம் டாலர்… நான் பணத்துக்கு எங்க போவேன் சொல்லு… ஏற்கனவே இந்த ரெண்டு மாசத்துல பதிமூணு ஆயிரம் செலவு பண்ணிட்டேன்… ஸ்டூடண்ட் லோன் பணத்தை செமஸ்டருக்கு கட்டவேயில்லை… இப்போ ஆறாயிரத்துக்கு எங்க போவேன்…”. பக்கத்தில் நாப்கின் ஏதும் இல்லாததால் சட்டையைத் தூக்கி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

தியாவுக்கு இந்தப் பிரச்சனையின் தீவிரம் புலப்படத் தொடங்கியது. பெரிதாகத் தன் எண்ணங்களை வெளிக்காட்டாமல், தன் மூளையை வேகமாக இயங்க விட்டாள். நேரடியாகப் பாஸ்டரை ‘போலி’ என்றோ, இது ‘மனப்பிரமை’ என்றோ சொன்னால் சாரா கண்டிப்பான எதிர்ப்பைக் காட்டுவாள்; அல்லது விலகிப் போனாலும் போய்விடுவாள்.

மெல்ல சாராவின் தோளைப் பற்றித் தன் பக்கம் திருப்பினாள்.

“சாரா, லுக் அட் மீ… நீ சொல்றதையெல்லாம் கேட்கும்போது ரொம்ப கஷ்டமாயிருக்கு… உனக்கு நடக்குற அனுபவங்களை நான் மறுக்கல. ஆனா, ஆறாயிரம் டாலர்ங்கிறது ரொம்ப பெரிய தொகை… அதிலும் அந்த ஒரு வார சிறப்புப் பிரார்த்தனையால எல்லாம் சீராயிடுமா இல்ல தொடர்ந்து பண்ணனுமானு தெரியல… ஏற்கனவே நீ பதிமூணு ஆயிரம் செலவு பண்ணிட்டதா சொல்ற…”

“அதனால…” வேகமாக நிமிர்ந்த சாரா கண்ணீருடன் தியாவைப் பார்த்தாள். லேசான எரிச்சலும் சீற்றமும் பொங்குவதை, அழுகையை மீறி அவள் முகம் காட்டியது.

“இல்ல இல்ல… நான் என்ன சொல்ல வர்றேன்னா, அது மட்டும்தான் ஒரே ஆப்ஷன் அப்படின்னு தெரிஞ்சுகிட்டா நல்லாயிருக்கும்ல… இப்பெல்லாம் சாதாரண காய்ச்சலுக்குக் கூட இன்னொரு டாக்டர்கிட்ட ‘செகண்ட் ஒப்பினியன்’ கேக்குறோம் இல்ல? அப்படியிருக்கும் போது, இவ்வளவு பெரிய ஆன்மீகச் சடங்கு செய்யுறதுக்கு முன்னாடி நாம ஏன் இன்னொருத்தர்கிட்டயும் ஆலோசிக்கக் கூடாது?”

“யாருகிட்ட தியா? இந்த உலகத்துல யாரும் என்னை நம்ப மாட்டேங்கிறாங்க… தாமஸைத் தவிர…” சாரா விரக்தியாகத் தலையாட்டி மறுத்தாள்.

“இங்க பாரு… நான் சொல்றதைக் கோபப்படாம கேளு… நான் எப்பவுமே உன்னோட வெல் விஷர்… நீ இப்படி கஷ்டப்படறது என்னையும் கஷ்டப்படுத்துது… உனக்கு எது உதவும்னு தோணுதோ அதைத் தான் சொல்றேன்…”

தியாவின் பீடிகையில் சற்றே எரிச்சலான சாரா, “என்னை செத்துட சொல்றியா?” என்று அவள் கண்ணைப் பார்த்து கேட்டாள்.

“நான் ஏண்டி அப்படி நினைக்கப் போறேன்… நீ நல்லாகணும், இந்தப் பிரச்சனைகளிலிருந்து முழுசா வெளிய வரணும்னு மட்டும்தான் நான் நினைக்கிறேன்.” குரல் தழுதழுத்தது தியாவுக்கு. தனி உணர்வுகளுக்கு இங்கு இடமளிக்கக் கூடாது எனத் தன்னைத் திருத்திக்கொண்டவள் தொடர்ந்தாள்.

“என் பிரெசெப்டார் டாக்டர் லிண்டா மிகத் திறமையான சைக்கியாட்ரிஸ்ட்… அவங்க கிட்டதான் நான் ரெசிடென்சி ப்ராக்டிஸ் பண்றேன்… நாம அவங்களை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு வந்துடலாமா…”

மீண்டும் உக்கிரமானாள் சாரா, “ஐயோ தியா… எனக்கு மனப்பிராந்தி இல்லை… இதை நான் ஃபிசிக்கலா அனுபவிக்கிறேன்…”

“புரியுதுப்பா, புரியுது… இப்போ நீ சொன்ன விஷயங்கள் நிஜமாவே இருக்கட்டும்… பொதுவா உனக்கு மனதைரியம் வர்றதுக்கு, இந்த ஆன்மீகப் பிரார்த்தனைகளுக்கு உன்னைத் தயார் படுத்திக்கிறதாவது அவங்க உதவுவாங்கன்னு தோணுது… அவங்களுக்கும் ஆன்மீகம், எனர்ஜி ஹீலிங் பத்தியும் நிறைய நாலேட்ஜ் இருக்கு. நாம அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு, அதுக்கப்புறம் நீ இந்த விசேஷப் பிரார்த்தனைக்கு போகலாமே?”

சாரா யோசிக்கத் தொடங்கினாள். சிகரெட் புகையின் நடுவே அவளது கண்கள் லேசான தயக்கத்தையும், அதே சமயம் ஒரு சிறிய நம்பிக்கையையும் வெளிப்படுத்தின.

****

ட்லாண்டாவின் ‘மைண்ட்ஸ்பிரிங் ஹெல்த்’ மருத்துவமனை – டாக்டர் லிண்டா பார்கஸின் அறை. தன் மடியில் கைவிரல்களை ஒன்றோடொன்று பிணைத்து, நடுக்கத்துடன் அளைந்துகொண்டே, அச்சமும் தயக்கமும் தேங்கிய விழிகளோடு அமர்ந்திருந்தாள் சாரா. இதமாக குளிரூட்டப்பட்டிருந்த அறையிலும் அவள் நெற்றியில் வியர்வை அரும்பத் தொடங்கியிருந்தது.

“குட் மார்னிங்” என்றவாறு கதவைத் திறந்துகொண்டே உள்ளே வந்த டாக்டர் லிண்டா, சாராவின் கையை இதமாகப் பற்றி குலுக்கினாள். “இன்னைக்கு கொஞ்சம் சூடாகத் தான் இருக்கு, தண்ணி வேணுமா?” என்று கேட்டவாறு தன் இருக்கையில் அமர்ந்தாள்.

இன்னும் படபடப்பு கூடிவிட, “இல்ல, பரவால்ல… ஆக்சுவலி கொஞ்சம் தண்ணி எடுத்துக்கறேன்” என்று தடுமாறினாள். பக்கத்தில் இருந்த குட்டி பிரிட்ஜில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அவள் முன் வைத்தாள் தியா.

எதிரிலிருந்த கோப்பை இழுத்துத் திறந்த லிண்டா, “உன்னோட முழுப் பெயரை எப்படி சொல்வே சாரா?” என வினவினாள்.

“சாரதா… சாரதா தியோஃபிலஸ்”

“நல்லது… என் முன்னாடி இருக்கிறது சரியான ஃபைல் தானான்னு வெரிஃபை பண்ணிக்க கேட்டேன்… நாம தொடங்கறதுக்கு முன்னாடி கேட்டுக்கறேன்… தியா என்னோட ஜூனியர் ரெசிடெண்ட், பிளஸ் உன்னோட க்ளோஸ் ஃபிரெண்ட். அவ இந்த செஷன்ல இருக்குறதுல உனக்கு ஆட்சேபனை எதுவும் இருக்கா?”

“அப்படியெல்லாம் இல்லை… அவ இருக்கட்டும்” என்றாள்.

“பொதுவா என் செஷன்ஸ்ல ஆடியோ ரெக்கார்ட் பண்றதில்லை… நோட்ஸ் எடுக்கறது மட்டும்தான்… தியாவும் நோட் பண்ணிக்குவா… உனக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல, என்கிட்ட அந்தரங்கமா ஏதாவது சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லு… தியாவை வெளிய அனுப்பிடலாம்… சரியா?” என்று லேசாகப் புன்னகைத்தாள்.

“சரி…” என்று தலையசைத்தாள் சாரா.

அவளின் ஒப்புதலுக்காகக் காத்திருந்ததைப் போல், அறையின் மூலையிலிருந்து ஒரு நாற்காலியை லிண்டாவுக்குப் பக்கத்தில் இழுத்துப் போட்டுக்கொண்ட தியா, மடிக்கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு தயாரானாள்.

லிண்டா தொடர்ந்தார் – “ஆல்ரைட் சாரா… இது ஒரு மணி நேர செஷன்… ரிலாக்ஸ்டா இரு… தியா எனக்கு உன்னைப் பற்றி ஓரளவுக்கு சொல்லியிருக்கா… இருந்தாலும் நீ தொடக்கத்திலேர்ந்து நிதானமா சொல்லு. நாங்க ரெண்டு பேரும் இடையூறு செய்ய மாட்டோம்… நடுவுல உனக்கு பிரேக் வேணும்னாலும் சொல்லு – நிறுத்திக்கிட்டு அப்புறம் தொடரலாம்… உனக்கு ஓகேவா?”

“ம்ம்ம்…” என்று தலையசைத்த சாரா நாற்காலியின் நுனியில் நகர்ந்து உட்கார்ந்து, மேஜையில் இரு கைகளையும் வைத்து விரல்களைக் கோர்த்துக் கொண்டதை லிண்டா கவனித்தார்.

அடுத்த இருபத்திரண்டு நிமிடங்கள், சாரா தன் அம்மா இறந்த நாள் முதல் முந்தைய இரவு வரை நடந்தவை அத்தனையும் சொன்னாள்… இடையிடையே, தொண்டை அடைத்துக் கொண்ட போது சிறிது தண்ணீர் குடித்தாள். அவள் கண்களில் நீர் துளிர்த்தபோது, லிண்டா மேஜையிலிருந்த நாப்கின் ஹோல்டரை அவள் பக்கம் நகர்த்தினாள். சாரா பேசி முடிக்கும் வரை காத்திருந்த லிண்டா, அவள் முழுதுமாக சொல்லி முடித்து விட்டதை உறுதி செய்து கொள்ள சாராவின் கண்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்து என்ன என்ற பதற்றத்திலிருந்த சாரா, லிண்டாவின் கண்களோடு நேரடித் தொடர்பை உண்டாக்கிக் கொண்டாள். லிண்டாவின் கண்களில் எந்த ஒரு மருத்துவ ஆய்வின் கூர்மையும் இல்லை; மாறாக தாய்க்குரிய கனிவு மட்டுமே இருப்பதை சாராவால் உணர முடிந்தது.

சில நொடிகளில், ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பின், “வெல்டன் சாரா… எமோஷனலான விஷயங்களை ரொம்ப கம்போஸ்டா, அமைதியா சொன்ன… ஒரே ஒரு கேள்வி, உன் அம்மாவோட உனக்கு நெருக்கம் அதிகமிருந்ததா? குறிப்பா அவங்க இறக்குறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி…”.

சாரா பதில் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த லிண்டா – “நான் தொடங்கறதுக்கு முன்ன, காஃபி ஏதாவது குடிக்கிறியா… எங்க ஹாஸ்பிடல் காஃபி சுமாராவே இருக்கும்… இல்லை பாத்ரூம் பிரேக் ஏதாவது வேணும்னாலும் சொல்லு…”

“இல்லை வேண்டாம்…” என மறுத்தாள் சாரா.

“வெல் சாரா… உன் தாயின் இழப்புக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்… தாய்மைங்கிறது இந்த உலகத்தோட மிகச்சிறந்த ‘எனர்ஜி’. அதை இழக்கும் போது வர்ற வெற்றிடம் ரொம்ப பயங்கரமானது. எளிதில் அதை வேறொன்றைக் கொண்டு நிரப்பிவிட முடியாது.”

சாரா நிமிர்ந்து பார்த்தாள். முதன்முறையாக ஒருவர் மனதளவில் அரவணைப்பதாக, எந்த முத்திரையும் குத்தாமல் தன் உணர்வை மதிப்பதை அவளால் உணர முடிந்தது. முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் வெளிவராமல் இருக்கப் போராடினாள்.

“ஆல்ரைட்… நீ சொன்னதிலேர்ந்து நான் என்ன புரிஞ்சிக்கிட்டேன்னா, உனக்கும் உன் அம்மாவுக்கும் நல்ல ஆரோக்கியமான நெருக்கம் இருந்திருக்கு… நீ காலேஜுக்காக ஆர்லாண்டோ போனப்புறம் அதில ஒரு சின்ன இடைவெளி விழுந்திருக்கலாம்… பல சந்தர்ப்பங்கள்ல அது வெளிப்படையா தெரியலைன்னாலும், ரொம்ப மெலிசா அந்தப் பிரிவோட தாக்கம் இருந்திருக்கு… கடைசி நாட்கள்ல அம்மாவோட ஃபோன் கால்களை எடுக்க முடியாமல் போனது, இறக்கும் தருவாயில அவங்க பக்கத்தில இல்லாமப் போனது… இதெல்லாம் உன்னையும் அறியாம ஒரு கில்டி ஃபீலிங்கா உன் மனசுல படிமமா படிஞ்சிருக்கு…”

“ஆனா அந்த பாஸ்டர் தாமஸ் சொல்றாரு…” சாரா தயங்கினாள்.

லிண்டா குறுக்கிட்டு மென்மையாகப் புன்னகைத்தார். “நான் அதுக்கு வரேன். இயற்பியல்ல (Physics) ஒரு விதி இருக்கு… ‘எனர்ஜியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது’. அதைத்தான் ஆன்மீகம் ‘ஆத்மா சாஸ்வதமானது’னு சொல்லுது. உன் அம்மாவோட அன்புங்கிறது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி. அது உன்னைச் சுத்தி தான் இருக்கு. ஆனா, ஒரு தாய் தன் மகளைப் பயமுறுத்துவாரா?”

சாரா தலையை அசைத்து ‘இல்லை’ என்றாள்.

“எக்ஸாக்ட்லி! அப்போ உன்னைத் துரத்துற அந்தப் பயமும், கெட்ட நிழலும் வெளியில இருந்து வரல சாரா… உன் மனசுக்குள்ள இருக்குற ‘அதிர்ச்சி’ மற்றும் ‘தூக்கமின்மை’ சேர்ந்து உருவாக்குற ஒரு ‘ஃபேன்டம் ஃபீலிங்’ – கற்பனை உருவம். மூளை ரொம்ப சோர்ந்து போகும்போது, இல்லாத சத்தங்களையும் வாசனைகளையும் நிஜம் போல உணர வைக்கும். உன்னை ஒன்னு கேட்கவா? இந்த அறையில ஏதாவது வாசம் உனக்குப் புலப்படுதா? ஏதாவது ஃப்ராக்ரன்ஸ்?”

“இல்லை… எந்த குறிப்பிட்ட வாசமும் இல்லை…”

“தியா என்கிட்ட உன்னைப் பற்றி சொல்லும்போது இந்த ஃப்ராக்ரன்ஸ் சம்பந்தமா சொன்னா… நான் பொதுவா ஹாஸ்பிடலுக்கு வரும்போது எந்த பெர்ஃயூமும் போட மாட்டேன்… ஆனா இந்த செஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி, இதுவரை நான் பயன்படுத்தியிராத – உன் அம்மா பயன்படுத்தின அதே வேலண்டினோ பெர்ஃயூம் வாங்கி அளவுக்கதிகமாகவே போட்டுட்டு வந்திருக்கேன்… ஆனா இந்த பெர்ஃயூம் வாசனை உனக்கு அம்மாவோட நினைவுகளை டிரிகர் பண்ணல… அவ்வளவு ஏன், உன்னால் அதை உணரக் கூட முடியல… என்ன காரணமாயிருக்கும்னு நினைக்கிறே?”

“சொல்லத் தெரியல… ஒருவேளை பதற்றத்துல அதெல்லாம் எனக்கு ரெஜிஸ்டர் ஆகலை…”

“எக்ஸாக்ட்லி… இப்போ கொஞ்சமாச்சும் அமைதியாயிருப்ப இல்லை… இப்ப நான் சொன்னப்புறம் அந்த பெர்ஃயூம் வாசனை தெரியுதா… ஒரு துளியாவது?” கேட்டுவிட்டு அவளது கண்களைக் கூர்மையாகப் பார்த்தார் லிண்டா.

“ஆமாம்… இப்போ என்னால அதை உணர முடியுது…”

“குட்… இந்த வாசம் இப்போ எதையாவது டிரிகர் பண்ணுதா… ஐ மீன் நீ சொல்லிக்கிட்டு இருந்த நிழல், அந்த மாதிரியான விஷயங்கள் ஏதாவது தோணுதா?”

“இல்ல… அந்த மாதிரி எதுவும் இல்லை…”

“குட்… நீ வேணும்னா கண்ணை மூடி முயற்சி பண்ணி பாக்கலாம்… தொடர்ந்து பெர்ஃயூம் வாசனை வருதா… உன் மனப் பார்வையில நிழல் உருவம் ஏதாவது தெரியுதா…”

கண்ணை மூடி, சில நொடிகள் அமைதியாயிருந்த சாராவின் உதடுகள் மெல்ல அசைந்தன… “இல்ல டாக்டர்… நீங்க சொன்ன மாதிரி வேலண்டினோ வாசம் வலிமையடையுது… அதை இப்போ என்னால நல்லா உணர முடியுது… ஆனா நிழல் உருவம் எதுவும் வரல…”

“ஃபெண்டாஸ்டிக்… இப்போ கண்ணைத் திறக்கலாம் நீ…”

கண்களைத் திறந்த சாரா, பாட்டிலிலிருந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்தாள்.

“நவ், கமிங் பேக் டு யுவர் கொஸ்டின்… நீ பங்கெடுத்துக்கிட்ட பூஜைகள் உனக்கு ஓரளவுக்கு மன அமைதியை கொடுத்ததைக் கேட்க சந்தோஷமாயிருக்கு… பூஜை போன்ற செஷன்ஸ்ல பயன்படுத்தற பொருட்கள் மன அமைதியை உண்டாக்கும்… நான் ரொம்ப சயண்டிஃபிக்கா பேசி உன்னை குழப்ப விரும்பல – சிம்பிளா சொல்லனும்னா பூஜை, பிரார்த்தனைகளில் உபயோகிக்கிற பொருட்கள் – ஊதுபத்தி, திரவியங்கள், மலர்கள் – இதெல்லாம் அலாதியான வாசம் மிகுந்தவை. நாசி வழியா நாம சுவாசிக்கும் இந்த நறுமணங்கள் நேரடியா மூளையின் ‘லிம்பிக் சிஸ்டம்’ பகுதிக்குப் போகுது… இதுதான் நம்மளோட எமோஷன்ஸை கண்ட்ரோல் பண்ற பகுதி… இப்போ உதாரணத்துக்கு, சின்ன வயசுல உனக்கு டிஸ்னி வேர்ல்ட் போகணும்னு ஆசை இருந்திருக்கும்… அப்போ யாராவது உன் கண்ணைக் கட்டி, டிஸ்னி வேர்ல்டுக்கு கூட்டிட்டு போய் கண்ணைத் திறந்து விட்டா உனக்கு எப்படி இருக்கும்… உடனடியா உனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி வரும் இல்லையா…” சாரா நம்மை கவனிக்கிறாளா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள – “சொல்லு என்ன ஃபீலிங் இருக்கும் உனக்கு?”

“ம்ம்… சந்தோஷமா… ரொம்ப எக்ஸைட்டடா இருக்கும்…”

“எக்ஸாக்ட்லி… அந்த மாதிரி சந்தோஷத்தை தான் ‘லிம்பிக் சிஸ்டம்’ கொடுக்கும்… அந்த நேரத்துல சுரக்கிற ‘டோபமைன்’ அமைதியை, மகிழ்ச்சியைக் கொடுக்கும். சரி, இந்த சந்தோஷம் எவ்வளவு நேரம் இருக்கும்?”

“புரியல…”

“இல்ல… முதல்ல கண்ணைத் திறந்து ‘டிஸ்னி வேர்ல்டை’ப் பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷம் சிலருக்கு அஞ்சு நிமிஷம் இருக்கலாம் – அரை மணி நேரம் இருக்கலாம்… கண்ணை விரிச்சு வெச்சுகிட்டு அங்க இங்க ஓடி அலைஞ்சப்புறம், கொஞ்ச நேரத்துல பசியெடுக்கும்… தாகமெடுக்கும்… அந்த நேரத்துல யாராவது இன்னொரு ரைடு போய்ட்டு வரலாம்னு கூப்பிட்டா? சந்தோஷம் கொடுத்த அதே டிஸ்னி வேர்ல்ட் கொஞ்சம் கசக்க ஆரம்பிச்சிடும், இல்லையா… அதேதான் நறுமணத் தூண்டுதலால் செயல்படத் துவங்கிய ‘லிம்பிக் சிஸ்டம்’ அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்பட்ட கொஞ்ச நேரத்துல தன் செயல்பாட்டைக் குறைச்சுக்கும்… ‘டோபமைனு’ம் குறையும்… நான் சொல்ல வர்றது இப்ப புரியுதா?” சாராவை விழிப்புடன் வைத்திருக்க அவ்வப்போது ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார் லிண்டா.

“யெஸ்…” மேலும் கீழுமாகத் தலையாட்டினாள் சாரா.

“எக்ஸலண்ட்… நாலஞ்சு தடவை டிஸ்னி வேர்ல்ட் போனப்புறம் முதல் தடவை கிடைத்த அதே மகிழ்ச்சி கிடைக்காது… அப்போ வேறொரு இடத்துக்குப் போக மனசு ஆசைப்படும்… உதாரணமா ‘யுனிவர்சல் பார்க்’ போனா நல்லாயிருக்கும் போலத் தோணுமில்லையா… ஆன்மீகம் உள்பட பல நம்பிக்கைகள் அந்த மாதிரிதான்… வேற வேற கோயில்கள், சர்ச்சுகள், சினகாக் என ஒவ்வொரு இடத்துலயும் வேற வேற அனுபவங்கள் கிடைக்குது… அதை அந்தந்த இடங்களின் அல்லது கடவுள்களின் சிறப்பம்சமா நம்பறோம்.. அந்த நம்பிக்கைகளை நான் குறைச்சு மதிப்பிடலை அல்லது தப்புன்னு சொல்லலை… மனித மனதின் இயல்பு அதுதான்… கிட்டத்தட்ட பாஸ்டர் சஜஸ்ட் பண்றதும் அதுதான்… ‘ரெய்கி’, ‘எனர்ஜி கிளென்சிங்’, ‘ஸ்மட்ஜிங்’ இதெல்லாம் வேறு வேறு அனுபவங்களை, சின்ன சந்தோஷங்களை, அமைதியைக் கொடுக்குது… ஒரு விதமான ‘ப்ளாசிபோ எஃபெக்ட்’ – இப்போ ஒரு சின்ன குழந்தை கீழ விழுந்து முட்டியில அடிபட்டு அழுவுதுன்னு வெச்சுக்கோ… அம்மா ஓடி வந்து ‘அச்சச்சோ அடிபட்டுச்சா செல்லத்துக்கு’ன்னு குழந்தைக்கு அடிபட்ட இடத்துல ஊதிவிடுவாங்க… ஊதி விட்டதும் குழந்தை அழுகையை நிறுத்திடும்… அந்த ஊதலில் எந்த மருத்துவமும் இல்லை… ஆனா வலியை மறக்கச் செய்யும் பாசம் இருக்கிறது… மருந்தை விட பாசம் என்கிற ஏதோவொரு உணர்வு வலியை மழுங்கடிக்கிறது… வலி சரியாகலைன்னு வெச்சுக்கோ அம்மா மஞ்சள் அரைச்சு போடுவாங்க, அதுவும் பத்தலைன்னா நியோஸ்போரின் போடுவாங்க, இல்லைன்னா பேண்ட் எய்ட் போடுவாங்க… ஒவ்வொன்னும் கொஞ்ச நேர இதம் தரும்… பாஸ்டர் டிரை பண்றது அதைத்தான்… அவரோட வழிமுறைகள் சின்னச் சின்ன, இடைக்கால அமைதியைத் தருபவைதான்… ஆர் யு வித் மீ?”

சாராவின் கண்கள் சற்றே தெளிவு பெற்றது போல் தோன்றின… அதுவரையில் அநேக நேரங்களில் லிண்டாவின் கண்களைப் பார்த்துப் பேசாதவள், இப்போது லிண்டாவின் கருவிழியை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் – “லேசா புரியுது டாக்டர்… நான் ஒன்னு கேட்கலாமா?”

“அப்கோர்ஸ்… கண்டிப்பா… உன்னோட எல்லா கேள்விக்கும் என்கிட்ட விடையிருக்குமான்னு தெரியல – சேர்ந்து விடை தேடுவோம்… அதான் இந்த செஷனோட நோக்கமே…” என்று சற்று சத்தமாகச் சிரித்தார்.

“பாஸ்டர் சொல்ற ஆன்மீக வழிகள் சரியான தீர்வு தராதுன்னு நினைக்கிறீங்களா? அப்படின்னா மருத்துவ ரீதியான தீர்வுகள் ஏதாவது இருக்கா… அவை நிரந்தரமா இருக்குமா?”

“வாவ்… ரொம்ப ஆழமான கேள்வி சாரா… நீ இந்த கேள்வியைக் கேட்டதுல எனக்கு இரண்டு சந்தோஷம்… ஒன்னு, நீ இப்ப முன்னெடுக்கிற முயற்சிகள் சரியானவையான்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்க… இரண்டாவது, நிரந்தரத் தீர்வுக்கான தேடல்” – சில நொடிகள் அமைதியாக தன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தவாறிருந்தார் லிண்டா… சாராவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரிந்திருந்தாலும், அவளைக் காயப்படுத்தாத மிகச் சரியான சொற்களை அவரது மனது தேடிக்கொண்டிருந்தது.

“நான் சொல்றதுல நிறைய விஷயங்கள்ல உனக்கு உடன்பாடில்லாம இருக்கலாம், தவறுகள் இருக்கலாம் – கண்டிப்பா உன் உணர்வுகளைக் காயப்படுத்துற நோக்கம் இல்லை… அப்படி ஏதாவது நினைச்சின்னா, உடனே என்னை நிறுத்து” என்ற பீடிகையுடன் தொடர்ந்தார் லிண்டா. “‘ஸ்பிரிச்சுவல் மீடியம்’ அல்லது ‘மீடியேட்டர்ஸ்’ – அதாவது ஆவிகளுடன் பேசக் கூடிய திறமை உள்ளவர்கள் அறிவியல் பூர்வமா எதையும் நிரூபிக்கலை… அட்லீஸ்ட் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இல்லை… பொதுவா இந்த மாதிரி ‘ஸ்பிரிச்சுவல் மீடியேட்டர்ஸ்’, ‘கோல்ட் ரீடிங்’ டெக்னிக்கைப் பயன்படுத்துவாங்க… அதாவது ஒருத்தரோட தோற்றம், பேச்சை வைத்து அவங்களைப் பற்றி ஓரளவுக்கு யூகிச்சுத் தெரிஞ்சுப்பாங்க… அப்புறம் ‘பார்னம் எஃபெக்ட்’ தியரிதான்… அதாவது அவங்க பத்து விஷயங்கள் சொன்னா அதுல ஒன்னு உங்களுக்கு கச்சிதமா பொருந்திப் போகும்… உங்களுக்கு மத்த ஒன்பது விஷயங்கள் மறந்து போயிடும், அவங்க சரியாச் சொன்ன ஒரு விஷயத்தை உங்க மனசு கவ்வி பிடிச்சுக்கும்… அதுக்கப்புறம் அவர் மேல உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்துடும்… அவங்க சொல்றதைக் கண்மூடித்தனமா நம்பத் தொடங்கிடுவீங்க… நீ ஃபாஸ்டர் பத்தி சொல்றதைக் கேட்டபோது எனக்கு அதுதான் தோணுது… குறிப்பா இந்த பூஜை, பிரார்த்தனைகள்ல இவ்வளவு குறுகிய காலத்துல வேற வேற ஆப்ஷன்களைத் தேடுறது, கொஞ்சம் கேள்விகளை எழுப்புது…” என்ற லிண்டா, சாராவின் கண்களை ஊன்றி கவனித்தார். சாரா, லிண்டாவின் அடுத்த வரிகளுக்காக காத்திருப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

லிண்டா தொடர்ந்தார் – “அறிவியல் பூர்வமான நிரந்தரத் தீர்வுகள் பற்றி மட்டும் என்னால் உத்தரவாதம் தர முடியுமா? ஆமாம்னு சொன்னா நான் பொய் சொல்றதா அர்த்தம்… ஆன்மீகத்துல சத்தமா மந்திரங்கள் சொல்லும்போது வர்ற ஏதோவொரு எனர்ஜி, ஊதுபத்தி, மலர் அர்ச்சனைகள், புனித நீர் தெளித்தல் போன்றவை எப்படி ‘லிம்பிக் சிஸ்டத்தை’ எழுப்புகிறதோ அதையேதான் ஒரு சின்ன மாத்திரையும் செய்யும்… ஆன்மீகமா, அறிவியலான்னு எடைபோட்டு கம்பேர் பண்ண முடியாது… மனம்… மனம் மட்டும்தான் மாற்றத்தைக் கொண்டு வரும்… நீ முதல்ல உன்னோட ‘கில்டி ஃபீலிங்க்’ ஸை விடணும்… அம்மா உயிருடன் இருந்தபோது அவரைக் காயப்படுத்தும் நோக்கத்தோட நீ எதையும் செய்யலை… அவங்க கூடவே இருந்திருந்தால் அப்படி செய்திருக்கலாமோ, இப்படி செய்திருக்கலாமோன்னு நினைக்கிறது உன்னோட மன உளைச்சலைத் தான் அதிகரிக்கும்… அதை நீ தவிர்த்துவிட்டாலே உன் மனச்சுமை, அழுத்தங்கள் எல்லாமே குறைஞ்சிடும்… மனம் அமைதி பெறும்… நல்லா தூங்க முடியும்… உன்னை சுற்றி நடக்கக்கூடிய மாயைகள் அமுங்கிவிடும்… மனவலிமைதான் நல்ல தொடக்கப் புள்ளியா அமையும்… மனம் நம் கட்டுப்பாட்டை மீறும்போது தான் நம்மை மீறிய ஏதோவொன்று நம்மை இயக்குவதாகத் தோன்றுகிறது… இப்போ ஒரு உண்மையை சொல்லட்டுமா? நான் என் வாழ்க்கைல எந்த பெர்ஃப்யூமையும் போட்டதில்லை. இன்னைக்கும் போடலை.. ‘வேலண்டினோ’ன்னு ஒரு பெர்ஃப்யூம் இருக்கிறதே எனக்குத் தெரியாது… இருந்தாலும் நான் சொன்ன மாடுலேஷன், அழுத்தங்களை வெச்சு உன் மனசு சில நிமிடங்கள் தடுமாறிப் போச்சு… அதான் உண்மை… அது ஏமாறாம இருக்க பயிற்சி கொடுக்கணும்… அது மட்டுமே உனக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும்…”

அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் லிண்டா பேசியவை காதில் விழுந்தாலும், சாராவின் மூளைக்குச் செல்லவில்லை. மனதளவில் தன்னைப் பிணைத்திருந்த விலங்குகள் தளர்ந்து, அவிழ்வது போல் இருந்தது அவளுக்கு. செஷன் முடிந்து வெளியே வந்த சாராவின் முகம் தெளிவடைந்தது போலத் தெரிந்தது. அட்லாண்டாவின் காற்று அலைக்கழித்த தலைமுடியை, கைவிரல்களால் மெதுவாக ஒதுக்கிய சாரா, “எனக்கு லிண்டாவிடம் இன்னொரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தர்றியா தியா?” என்றாள்.

  • மர்மயோகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad