மினசோட்டா யூனிவர்சிட்டியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
மினசோட்டா பல்கலைக்கழகத்தில் (University of Minnesota) பயிலும் தமிழ் மாணவர்கள், “தமிழ் ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன்” (Tamil Students Organization) எனும் அமைப்பின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ‘காஃப்மேன் மெமோரியல் யூனியன் கிரேட் ஹால்’ (Coffman Memorial Union Great Hall) அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு குழுக்களின் கலைநயமிக்க நடனங்களும், சுவாரசியமான விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.
மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறையினர், தங்கள் பண்பாட்டை மறவாமல் தமிழ் பண்டிகைகளைத் தோழமைகளுடன் இணைந்து கொண்டாடுவதைக் காண்பது பெற்றோர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற நிகழ்வுகளின் வாயிலாகத் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்புகளைப் பிற இன மக்களும் அறிந்துகொள்ளும் நல்வாய்ப்பு அமைகிறது.







