\n"; } ?>
Top Ad
banner ad

பிரபஞ்ச முடிச்சுகள்

Filed in கதை, வார வெளியீடு by on October 7, 2026 • 0 Comments

சூரியக் கதிர்கள் வானத்தை மஞ்சள் வண்ணங்களால் அலங்கரிக்கத் துவங்கியிருந்த நேரம். செல்ஃபோன் அலாரச் சத்தம் அந்த அறையின் நிசப்தத்தைக் கலைத்தது. தன்னைத் துரத்தும் அலாரத்தை அமைதிபடுத்திய மனோ படுக்கையில் எழுந்து அமர்ந்தான். வழக்கம் போல் இரவு வெகு நேரம் தூக்கமில்லாமல் புரண்டு விட்டு அதிகாலையில் ஒன்றிரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கியிருந்தான். கட்டிலின் ஓரத்தில் கால்களைத் தொங்கவிட்டபடி கலையாத தூக்கத்தோடு அமர்ந்திருந்தவனைப் பார்த்து மேஜையில் நேற்றிரவு படித்துக் கொண்டிருந்த  ‘அறிந்ததினின்றும் விடுதலை’ புத்தகத்தின் ஆசிரியர் ஜே. கிருஷ்ணமூர்த்தி சிரித்தார். அதற்கு முன் அவன் வாசித்திருந்த, அவரது ‘டோட்டல் ஃப்ரீடம்’, ‘த ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃபீரீடம்’ என எதுவும் அவன் தேடும் விடுதலையைத் தந்ததில்லை. 

முழங்காலில் ஊன்றிய கைகளில் முகத்தைப் புதைத்து கண்களை மூடிக்கொண்டான். தூக்கமின்மை என்பது விழித்திருப்பது அல்ல – மனதில் படிந்துபோன கடந்த கால வடுக்களை கீறிப் பார்க்கும் துன்பம். ராணுவச் செவிலியனாகப் போர்க்களத்தில் அவன் பார்த்த மரணங்கள், கேட்ட ஓலங்கள் இரண்டாண்டுகளாக அவனது தூக்கத்தைப் பறித்துவிட்டுச் சென்றிருந்தன.  மனோ நேரடியாக துப்பாக்கி பிடித்ததில்லை என்றாலும், இரண்டு படையினரின் துப்பாக்கி குண்டு மழைக்கிடையே, கண்ணி வெடிகளுக்கிடையே காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியைச் செய்த அனுபவங்கள் அவனுக்கு ஏராளம். மனதில் ஆழமாக வேரூன்றிவிட்ட அந்த அனுபவங்கள் இன்று சாதாரண சத்தங்கள் கூட பதட்டத்தை உண்டாக்கி அதீத எச்சரிக்கை உணர்வை, உலகம் பாதுகாப்பற்றது என்கிற ரீதியில் நம்பிக்கையின்மையை அவனுள் வளர்த்துக்கொண்டிருக்கிறது. அவனது ஒற்றைப் படுக்கையறை அபார்ட்மெண்டில் இருக்கும் பிரிட்ஜ், ஏசி இயந்திரங்கள் சடாரென இயங்கத் துவங்கும் போது எழும்பும் சன்னமான ஓசை கூட மனோவுக்குள் அதிர்வலைகளை உண்டாக்கிவிடுவதுண்டு.   

படுக்கையோரத்திலிருந்த செல்ஃபோன் மிக மெலிதாக சினுங்கியது. கைகளில் புதைத்திருந்த முகத்தைத் தூக்கிப் பார்த்தான். லிசா அழைப்பதாகக் காட்டியது அது. இரண்டு கைகளாலும், தலை முடியை அழுத்தமாகச் சொறிந்து கொண்டவன் ஃபோனை எடுத்து “ஹேய்” என்றான்.

எதிர்முனையில் “ஹாய் மனோ.. எப்படி போகுது? நல்லா தூங்கி எழுந்தியா” என்று கேள்விகளை அடுக்கினாள் லிசா.

“இல்ல.. வழக்கம் போலத்தான்.. இப்பதான் எழுந்தேன்”

“கமான் மனோ.. இன்னைக்கு உனக்கு இண்டர்வியூ.. ஞாபகம் இருக்கா.. சீக்கிரமா கிளம்பு.. நான் அவசரமா கொஞ்சம் வெளியில் போகவேண்டியிருக்கு.. மேண்டி காஃபி போட்டு வெச்சிருப்பா. குடிச்சிட்டு தெம்பா போ.. கான்ஃபிடண்டா இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணு.. ஆல் தெ பெஸ்ட்.. முடிச்சிட்டு கூப்பிடு” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள். 

********

நியூயார்க் ப்ரூக்ளின் நகரம் வழக்கம் போல் அதிவேக சுறுசுறுப்புடன் காணப்பட்டது. பாதசாரி கூட்டத்தினூடே புகுந்து ‘கிரீன்பாயிண்ட் அவென்யூ’ சுரங்கப்பாதை ரயில் நிலையம் வருவதற்குள், அந்த அக்டோபர் மாத சில்லிப்பிலும் மனோவுக்கு வியர்த்தது. அங்கிருந்த பெரிய கடிகாரம், மணி 8.20 எனக் காட்டியது. அடுத்த வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடும். அதைப் பிடித்தால் ஒன்பது மணிக்குள் ‘ஃபுல்டன் ஏரியா’ ஸ்டேஷனுக்கு சென்றுவிடலாம். அங்கிருந்து  ஐந்து நிமிட நடை – ‘மூடிஸ் கார்ப்பரேஷனை’ அடைந்து விட முடியும். இண்டர்வியூ பத்து மணிக்குதான். கிரெடிட் கார்டை ‘OMNY’ தானியங்கியில் தேய்த்து விட்டு மீண்டும் பர்ஸில் வைத்தபோது அந்த சணல் கயிறு எட்டிப்பார்த்தது.  ரயில் வந்துவிட்டதால் அவசரமாக பர்ஸை பாண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு ரயிலை நோக்கி நடந்தான். கார்ப்பரேட் உடையணிந்த ‘ரோபாட்டிக்’ மனிதர்கள் இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்து  கையிலிருந்த செல்ஃபோனில் மூழ்கத் தொடங்கினார்கள். ஓரிரு நிமிடங்களில் வேகமெடுக்கத் துவங்கிய தொடர்வண்டி இருண்ட நிலத்தடி சுரங்கப்பாதைக்குள் சீறிப் பாய்ந்தது. ஏசி இயந்திரத்தின் சன்னமான இரைச்சலும், தண்டவாளத்தில் இரும்புச் சக்கரங்கள் உரசும் உலோக ஒலியும் அந்தப் பெட்டியை நிறைத்தன. மனோ ஒரு ஓரத்தில் அமர்ந்து, ரயிலின் வாசலுக்கு மேலே இருந்த எலக்ட்ரானிக் வழித்தடத் திரையைப் பார்த்தான். அவன் செல்ல வேண்டிய ‘மன்ஹாட்டன்’ நிலையங்களின் பெயர்கள் நீல நிறக் கோடுகளாகத் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற உறுதியில் மனோ சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டபோது தான் அது நிகழ்ந்தது. திடீரென, அந்தத் திரையின் விளக்குகள் லேசான மின்-கோளாறால் பளிச் பளிச்சென்று கண் சிமிட்டுவது போல அணைந்து எரியத் தொடங்கின. திரையில் தெரிந்த அந்த நீலமும் சிவப்புமான டிஜிட்டல் கோடுகள், மனோவின் கண்களுக்கு திடீரென வழித்தட வரைபடமாகத் தெரியவில்லை. நேர்க்கோடுகளில் வளைந்து நெளிந்து மர்ம முடிச்சுகள் உருவெடுத்தன. போர்க்களத்தில், பாலைவன மணலில் குண்டடிபட்டு துடித்த அப்பாவி கிழவன் – இறப்பதற்கு முன் அவர் சணல் கயிறில் போட்ட முடிச்சைப் போலவே கோடுகள் மாறி நின்றன.. ஓரிரு நொடிகளுக்குப் பின் அந்த முடிச்சு மறைந்து வழமையான நேர்க்கோடுகள் தோன்றி பளிச்சிட்டு விட்டு, முழுதுமாக அணைந்து போனது. மனோவின் மூளையில் சடாரென ரத்தப்பாய்ச்சல்.. தொடர்வண்டி சூழல் மறைந்து போர்க்களத்தில், டமார் டமாரென குண்டுகள் பாய்ந்துகொண்டிருக்க, போர்படைகளைச் சேர்ந்தவர்கள், அப்பாவி மனிதர்கள் மடிந்து வீழ்ந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.. யாருக்கு முதலில் சிகிச்சை தேவை என்று புரியாமல் ஓடிக்கொண்டிருப்பதாய்த் தோன்றியது அவனுக்கு.. தான் எங்கே இருக்கிறோம், தனக்கு என்ன நேர்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. காலமும் இடமும் அவனது கட்டுப்பாட்டிலிருந்து நழுவிக் கொண்டிருந்தன. குண்டுமழைக்கு நடுவே காயம்பட்டுக் கிடக்கும் மனிதர்களின் ரத்தத்தைத் துடைக்கத் தான் ஓடுகிறோமா? அவனது எண்ண ஓட்டங்கள் ஒட்டுமொத்தமாக இருளடைந்து போயின. நெற்றிப் பொட்டில் ஒரு மாபெரும் இரும்புப் பாளம் இறங்கியதைப் போலத் தலை மிகக் கனத்தது. உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து பிசுபிசுத்தது. பிரமைகளிலிருந்து தப்பிக்கத் தன் தலையை அவன் பலமாக உலுக்கிக் கொண்டான்.

அப்போது ரயிலின் ஒலிபெருக்கியிலிருந்து, “இது ‘மன்ஹாட்டன்’ நோக்கிச் செல்லும் ‘ஜி’ உள்ளூர் தொடர்வண்டி. அடுத்த நிறுத்தம் ‘மெட்ரோபாலிட்டன் அவென்யூ’. இடது பக்கக் கதவுகள் திறக்கப்படும்,” என்ற இயந்திரத்தனமான ஆங்கில அறிவிப்புக் குரல் அந்த இரும்புப் பெட்டிக்குள் எதிரொலித்தது. அந்தச் சத்தம் அவனைக் கணநேரம் யதார்த்த உலகிற்கு இழுத்து வந்தது. நா வறண்டு, தொண்டை காய்ந்து, அவனுக்குள் ஒரு தீராத தாகம் எழும்பியது. தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்ற தவிப்பு.. தான் செல்ல வேண்டிய ஸ்டேஷன் அதுவல்ல என்றாலும், ரயில் நின்று, கதவுகள் திறந்த அடுத்த நொடி, கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு  ‘மெட்ரோபாலிட்டன் அவென்யூ’ பிளாட்பாரத்தில் அவசரமாக இறங்கிவிட்டான்… மடைதிறந்த வெள்ளமென மனிதத் திரள் பிளாட்பாரத்தில் பாய்ந்தது. ரயிலுக்குள் ஏறுவதற்கும், அதிலிருந்து இறங்கித் தங்களின் இயந்திரத்தனமான அன்றாடப் பணிகளுக்கு ஓடுவதற்கும் மனிதர்கள் ஒருவரையொருவர் முட்டி மோதிக் கொண்டனர். அந்த அலைமோதும் மக்கள் வெள்ளத்தின் நடுவே, மனோ அசையாமல் திகைத்து நின்றான். சுற்றிலும் மனிதக் கரங்களும், கால்களும், அவிழ்ந்த கூந்தல்களும், கோட் சூட்டுகளும் அவனைக் கடந்து அதிவேகமாக நகர்ந்தபடி இருந்தன. தனக்கு முன்னால் ஓடும் அந்த மனிதப் பேரிரைச்சலுக்கு நடுவே, ஒரு திக்கற்ற பெருங்காட்டில், தங்களின் பாதையறியாமல் நாலாப்பக்கமும் வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் காட்டு மிருகங்களின் கூட்டத்திற்கு நடுவே, தனியாக மாட்டிக்கொண்டதைப் போல உணர்ந்தான் மனோ. வெளிக்காற்று சற்று ஆசுவாசப்படுத்தினாலும், மண்டையைப் பிளக்கும் தலைவலி அவனது நெற்றிப் பொட்டில் இறங்கியது. 

தாகம் அவனது தொண்டையைக் கவ்வியது. எப்படியாவது ஒரு துளி தண்ணீர் குடித்துவிட வேண்டும் என்ற தவிப்போடு, பிளாட்பாரத்தின் ஓரத்தில் இருந்த அந்தத் தானியங்கி இயந்திரத்தின் முன்னால் மனோ நின்றான். நடுக்கமுற்ற கைகளால் தன் கிரெடிட் கார்டைத் தேய்த்து, ஒரு குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்து அவசரமாக இரு மடக்கு குடித்தான். அந்த ஜில்லிட்ட நீர் அவனது தொண்டைக்குள் இறங்கிய போதுதான், அவனுக்குள் இருந்த அந்தப் போர்க்காலப் பிரமை மெல்ல விலகி யதார்த்த உலகம் கண்ணில் பட்டது. சற்றுத் தள்ளி காலியாக இருந்த பெஞ்சில் உட்கார்ந்து ஆழமாக சுவாசித்தான். 

மெல்ல அவனது அக உலகிற்குள் ஒரு தெளிவு பிறக்கத் தொடங்கியது. தான் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை அவனது மனம் கணக்கிட்டது. ‘சரி, நான் இப்போது ‘மன்ஹாட்டனில்’ உள்ள உலக வர்த்தக மையத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு ஒரு ‘ஹெச்.ஆர். கன்சல்டண்ட்’ பணிக்கான நேர்காணலுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எனது நேர்காணல் நேரம் காலை பத்து மணி. இன்னும் போதுமான நேரம் இருக்கிறது. அடுத்த ரயிலைப் பிடித்து ‘மன்ஹாட்டன்’ சென்றுவிடலாம்’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் மனோ. பிளாட்பாரத்தின் எலக்ட்ரானிக் திரையில், அடுத்த ரயில் இன்னும் மூன்று நிமிடங்களில் வரும் என்ற அறிவிப்பு ஒளிர்ந்தது. பாட்டிலில் இருந்த கடைசித் துளி தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டு, அதை எறிவதற்காக அங்கிருந்த குப்பைத் தொட்டியை நோக்கி நடந்தான்.

துல்லியமாக அந்த வினாடிதான், நிலையத்தின் ஒலிபெருக்கிகள் சடாரென அலறத் தொடங்கின: “பயணிகளின் கனிவான கவனத்திற்கு! சில நிமிடங்களுக்கு முன்பு ‘மன்ஹாட்டன்’ நோக்கிப் புறப்பட்டுச் சென்ற முந்தைய தொடர்வண்டி, ‘பிராடுவே’ மற்றும் ‘பிளஷிங்’ நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டு, விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்கான காரணமும், பாதிப்புகளின் விபரமும் தற்போதைக்கு அறியப்படவில்லை. இந்த வழித்தடத்தைச் சீரமைக்க இன்னும் பல மணி நேரங்கள் ஆகலாம். அதுவரை இந்தத் தடத்தில் வேறு ரயில்கள் ஏதும் இயக்கப்பட மாட்டாது. பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

மனோவின் இதயம் ஒரு வினாடி அப்படியே நின்றுவிட்டது போல இருந்தது. அவனது காதுகளுக்குள் அந்த ஒலிபெருக்கியின் சத்தம் மறைந்து, அவனது பையிலிருந்த அந்தச் சணல் கயிறு முடிச்சுகள் அவனது மனக்கண்ணில் ஒரு மின்னலைப் போல மீண்டும் தோன்றி மறைந்தது.

***

புருக்ளினின் குறுகிய தெருவில், மனோவின் அபார்ட்மெண்ட் அடித்தளத்திலிருந்த லிசாவின் காபி பார் ஒன்றும் பெரியதல்ல. வண்ண விளக்குகளும், சொகுசான சோபாக்களும், மனதை வருடும் மெல்லிய இசையும் கொண்ட பன்னாட்டு பெருநிறுவன சங்கிலித் தொடர் கஃபே போன்ற பகட்டும் அதனிடம் இல்லை. சில இரும்பு நாற்காலிகளும் மேஜைகளும் மட்டுமே போடப்பட்ட, சற்றே இருள் படர்ந்த ஒரு எளிய கடை அது. ஒரு மூலையிலிருந்த இரும்பு நாற்காலியில் மனோ அமர்ந்திருந்தான். விபத்துச் செய்தியின் அதிர்ச்சியில் அவனது மனமும் உடலும் உறைந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

கவுண்ட்டரில் இருந்த வாடிக்கையாளர் ஒருவருக்குத் தேவையானதைக் கொடுத்து முடித்துவிட்டு, லிசா அவனை நோக்கி நடந்து வந்தாள். மனோ நேர்காணலுக்குச் செல்லவில்லை என்ற மாபெரும் விரக்தி அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவனுக்கு எதிரே இருந்த இரும்பு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவள், ஏமாற்றமும் கோபமும் கலந்த உக்கிரமான தொனியில் உரத்து வெடித்தாள்.

“இப்போது நீ என்ன சொல்லப் போகிறாய் என்று எனக்குத் தெரியும் மனோ! உனக்குப் பழைய போர்க்கால நினைவுகள் வந்துவிட்டன, உன்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை… அப்படி, இப்படி என்று ஏதேதோ வெற்று வார்த்தைகளை அடுக்கப் போகிறாய். இந்த சாக்குப்போக்குகளைச் சொல்வதற்கு நீ ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. அதை எல்லாம் நீ ஒருபுறம் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். ரயில் தடம் புரண்டால் என்ன? ‘மேன்ஹாட்டன்’ போவதற்கு வேறு வழியா இல்லை? அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்தாவது போயிருக்கலாம். நீ நேர்காணலை எவ்வளவு மோசமாகச் செய்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை… ஆனால், உன்னை நம்பி இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தவர்களின் மானத்தையாவது நீ காப்பாற்றியிருக்க வேண்டாமா?” மூச்சு விடாமல் பேசினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தான் மனோ. அவளது கண்களின் கூர்மையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. “மன்னித்து விடு லிசா.. என் நலத்திற்காக நீ செய்யும் உதவிகள் மிகப் பெரியவை.. ஆனால் அவற்றைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையில் நான் தோற்றுப் போகிறேன்.. உன்னுடைய ஆதங்கம் எனக்குப் புரிகிறது, ஆனால் என்னுடைய ..” அவன் சொல்லி முடிக்கும் முன்பே…

“தயவு செய்து உன் இயலாமை மீது பழி போடாதே மனோ.. அந்த வட்டத்தை விட்டு நீ வெளியே வர மறுக்கிறாய்.. எல்லாவற்றுக்கும் உன் பழைய நினைவுகள் மீது பழி போட்டு அதற்குள்ளே சுழல்கிறாய்.. இது போன்ற வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.. ஆனால் நீ… நீ அதனை மிக எளிதில் தூக்கிப் போடுகிறாய்.. இது இரண்டாவது முறை.. “

மனோவின் பார்வையில் ஆற்றாமை வெளிப்பட்டது. “எனக்குப் புரியுது லிசா.. என்னை சுத்தியிருக்கும் வட்டத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிட நானும் ஆசைப்படுகிறேன் .. இயல்பான மனிதர்களைப் போல ஒரு குறிக்கோளை நோக்கி ஓடத் தான் முயல்கிறேன்.. இன்னைக்கு டிரெயின்ல அந்த நினைவுகள் வந்து என்னை அமுக்கப் பார்த்தப்போ சுதாரிச்சு அதிலருந்து விடுபட்டு, அடுத்த டிரெயினைப் பிடிச்சு இண்டர்வியூக்குப் போகத்தான் நினச்சேன்.. ஆனா நான் போயிருக்க வேண்டிய வண்டி ஆக்ஸிடெண்ட் ஆனதா கேள்விப்பட்டதும் அப்படியே ஆடிப் போயிட்டேன்.. ஒரு வேளை எனக்கு அந்த எண்ணங்கள், எச்சரிக்கை உணர்வுகள் வராமல் இருந்திருந்தால் நானும் அந்த ஆக்ஸிடெண்டல மாட்டியிருப்பேன்.. ஒன்னு தெரியுமா, அந்த டிரெயின்ல ஏறினவுடனே எல்லோரும் அவங்கவங்க கையில இருந்த செல்ஃபோனை நோண்டிகிட்டிருந்தாங்க .. எனக்கு எதிர்த்த சீட்ல உட்கார்ந்திருந்த நடுத்தர வயது மனிதரைத் தவிர .. யதேச்சையா அவரை நான் பார்த்த போது என்னைப் பார்த்து லேசாக புன்முறுவலித்த அவர் இப்போ உயிரோட இல்லை.. விபத்தில் இறந்த எட்டுபேரோட புகைப்படங்களை டிவி ல காமிச்சப்போ அவரோட படமும் அதில இருந்தது.. இதெல்லாம் சாதாரண விஷயங்கள் இல்லை லிசா.. ஒருவேளை எனக்கு அந்த சமிக்ஞைகள் தோன்றாமல் இருந்திருந்தால்.. அந்த முடிச்சுகள் என் மனக்கண்ணில் வராமல் போயிருந்தால்.. இறந்தவர்கள் பட்டியலில் நானும் ஒன்பதாவது நபராக இருந்திருப்பேனோ என்னவோ.. “

“இதெல்லாம் சுத்த ஹம்பக் .. இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்பதெல்லாம் வெறும் பிரமைகள்.. “

“சரி.. நீ சொல்றதைப் போல் இது பிரமையா இருக்கலாம்.. ஆனா இரண்டு மாதங்களுக்கு முன்னால் .. இன்னொரு இண்டர்வியுக்கு டாக்ஸில தான் போயிட்டிருந்தேன்… எங்கிருந்தோ பறந்து வந்த இரண்டு  பலூன்கள் டாக்ஸி ‘விண்ட் ஷீல்ட்’ல வந்து விழுந்தன… அந்த பலூன்கள் கட்டியிருந்த நூலிலும் அதே முடிச்சைப் பார்த்தேன்.. டிரைவர் கண்ட்ரோலை இழந்து எதிர்ல இருந்த வண்டில இடிச்சி சின்னதா ஆக்ஸிடெண்ட் .. ஆனா நாங்க போகவேண்டிய வழியில இருந்த பாலம் உடைஞ்சி விழுந்ததிலே பலர் இறந்து போனாங்க.. இதெல்லாம் யதேச்சையா நடந்ததுன்னு என்னால எடுத்துக்க முடியல ..”

கிண்டலாகச் சிரித்த லிசா, “நீ எல்லாத்தையும் உனக்கு வசதியா மாத்திக்கிறே மனோ.. உலகத்தில இது போன்ற விபத்துகள் நடைபெறும் தான் .. அதை தவிர்த்துட்டு ஒருத்தரால வாழ முடியாது.. பயந்துபோய் ஒதுங்கிடவும் கூடாது..”

“அப்படின்னா, நான் இந்த எச்சரிக்கைகளை மீறிப் போய் செத்திருக்கணும்னு சொல்றியா?”

“ஐயோ.. நீ புரியாம பேசறியா இல்லை மூடத்தனமா பேசறியான்னு தெரியல .. திரும்பத் திரும்ப அந்த கயிறு, முடிச்சுன்னு தொடர்பில்லாத விஷயங்களை ஒன்னா கோர்த்துக்க முயற்சிக்கிறே.. அது பூதாகாரமா வளர்ந்து உனக்குள்ள ஒரு அதீத எச்சரிக்கையை உண்டாக்கி செயலற்றவனா மாத்திடுது.. “

“இல்ல லிசா.. அந்த பெரியவர் கொடுத்த கயிறு எனக்கு என்னமோ சொல்லுது.. அந்த முடிச்சு என்னை சில விஷயங்களை செய்யாதேன்னு தடுத்து நிறுத்துது..”

லிசாவுக்கு மனதுள் கோபம் கொப்பளித்தாலும், அவனை அமைதியாகவே பார்த்தாள்.. அவனுக்கு  என்ன சொல்லி புரிய வைப்பதென அவளுக்குத் தெரியவில்லை. ஒரு சில நொடிகள் யோசித்தவள், “சரி ஒன்னு பண்ணலாம்.. இங்க பக்கத்து தெருவில அரேபிய பாஸ்ட் பூட் ரெஸ்டாரெண்ட் இருக்கு .. அதன் முதலாளி ரஃபீக்கை எனக்குத் தெரியும்.. அவர்கிட்ட அந்தக் கயிறைப் பற்றி கேட்கலாம்” என்றவள் செல்ஃபோனை எடுத்து ரஃபீக்கின் நம்பரைத் தேடினாள்.  

****

ஏற்கனவே இரவின் சில்லிப்பு படர்ந்திருந்த புரூக்ளின் வீதிகளை, அந்த அக்டோபர் மாதக் காற்று இன்னும் உறைபனி குளிராக மாற்றியிருந்தது. பல கடைகள் இரும்புக் கதவுகளை இறக்கிப் பூட்டப்பட்டிருந்தன. வீதியின் ஓரத்தில் இருந்த ஒரு இரும்புப் ‘பேரலி’ல் எரியூட்டப்பட்டிருந்த நெருப்பைச் சுற்றி சில இளைஞர்கள் கைகளைக் காட்டிச் சூடேற்றிக் கொண்டிருந்தார்கள். லிசாவும் மனோவும் அந்தப் பனிமுட்டத்திற்கு நடுவே ரஃபியின் அரேபிய உணவகத்தை நோக்கி மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். காற்றில் சுழன்றடித்த காய்ந்த சருகுகள், மனோவின் காலடியில் விசித்திரமான ஒலியெழுப்பி கலைந்தன.

ரஃபீக்கின் உணவகம் இரு தெருக்கள் சந்திக்கும் மூலையில் அமைந்திருந்தது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும், உத்தரத்திலிருந்து தொங்கிய சாண்டிலியர் விளக்குகள் அந்த அறை முழுவதும் ஒரு மென்மையான மஞ்சள் ஒளியைப் பாய்ச்சின. சுவர்களில் தீட்டப்பட்டிருந்த அடர் நீலம் மற்றும் காவி வண்ணப் பின்னல்களும், அங்கிருந்த செப்புப் பாத்திரங்களின் மங்கலான ஒளிர்வும், கீழைத்தேய அடையாளங்களை பறைசாற்றின. அந்தப் பாரம்பரிய நீட்சியாக, நீளமான மேலங்கியும், அகன்ற ஸர்வால் பைஜாமாவும் அணிந்திருந்த ரஃபீக், லிசாவை பார்த்ததும், “வா மகளே.. எப்படி இருக்கிறாய் இந்த வயதானவனை இன்னமும் நினைவு வைத்திருக்கிறாயா?” என்றார். 

“உங்களை எப்படி மறக்க முடியும் ரஃபீக் பாய்? உங்க சுறுசுறுப்பும், நிர்வாகத் திறனும் தான் எனக்கு எப்பவும் வழிகாட்டி.. எப்படி இருக்கீங்க? இது மனோ” என்றவள், மனோவிடம் “நான் சொன்னேன்ல ரஃபீக், இவர்தான்.” என்றாள். 

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்று மனோ வணங்கியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ரஃபீக், “வ அலைக்குமுஸ்ஸலாம்.. நல்லது, நல்லது.. வாங்க அப்படி உக்காந்து பேசுவோம்..” என்று அழைத்துச் சென்றார்.

பத்தரை மணியாகி விட்டிருந்தபடியால், ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர் ஒருவருமில்லை. சுவரோரம், அதிக வெளிச்சமில்லாத மேஜைக்கு அழைத்து சென்ற ரஃபீக் அவர்களை அமரச் செய்துவிட்டு, தானும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். லிசா மனோவைப் பற்றிய தகவல்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரெஸ்டாரண்ட் ஊழியர் ஒரு அவர்களுக்கு புதினா கலந்த தேநீரை கொண்டு வந்தார். “எடுத்துக்கங்க” என்றபடி ஆவி பறந்த தேநீர் கோப்பைகளை அவர்கள் முன் நகர்த்திய ரஃபீக், “நீங்க சொல்லுங்க தம்பி.. எந்த போர்ப் பகுதியில நீங்க போஸ்டிங்ல இருந்தீங்க” என்றார்.

அவர் நகர்த்திய கோப்பையை பற்றிக் கொண்ட மனோ, “ஹெல்மண்ட் பாலைவனப் பகுதிகள்.. காந்தஹார் ரெண்டு பாயிண்டுகளிலும் இருந்திருக்கிறேன்..” என்று இழுத்தான்.

லிசா குறுக்கிட்டு – “தெளிவா சொல்லு மனோ, உன்னுடைய அனுபவங்களைச் சொல்.. அது இன்னைக்கு எப்படி வலிகளா மாறியிருக்குன்றதையும் சொல்..” என்று அவனது தயக்கத்தை உடைத்து வைத்தாள்.

“அவரை அவசரப்படுத்தாதே லிசா.. எனக்கு இரவு முழுதும் நேரமிருக்கு.. தம்பி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்..” என்று சொல்லி சிரித்தார்.

அவர் சொல்லியதில் சற்றே இளகிய மனோவின் மனம் இரண்டாண்டுகளுக்கு முந்தைய அந்த இருண்ட போர்க்கள நாட்களுக்க்ப் பின்னோக்கிப் பாய்ந்தது. மெலிதான குரலில் பேசத் தொடங்கினான் – “அடிப்படையில நான் ஒரு ‘காம்பாட் மெடிக்’ – ராணுவச் செவிலியன்.  போர் நிறுத்தப் பேச்சுக்கள் ஒருபுறம் நடைபெற்றாலும், களச் சூழல் நேரெதிராக இருந்தது. இரு தரப்பிலிருந்தும் குண்டுகள் பாயும; கண்ணி வெடிகள் வெடிக்கும்; காற்றெங்கும் கந்தக வாடையும் ஈயக் குண்டுகளின் சூடும் பரவிக் கிடக்கும்; தலையிலும், முகத்திலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்து ரத்தம் வழிந்தோட மனிதர்கள் வீழ்ந்து கிடப்பார்கள்; அவர்களது வலிகளின் ஓலம் காதுகளைக் கிழிக்கும்; அவர்களைத் தொட்டு தூக்கும் போது ரத்த பிசுபிசுப்பும், வாடையும் குடலைப் பிரட்டும்; குண்டு துளைக்காமலே பல நேரங்களில் என் இதயத்தில் ரத்தம் வழிவதை உணர்ந்திருக்கிறேன்..” தொண்டை கமற, கோப்பையிலிருந்த தேநீரை உறிஞ்சினான் மனோ. 

பதட்டத்தை வெளிப்படுத்தாமலிருக்க, மேஜை மேல் வைத்த தேநீர் கோப்பையை இரண்டு கைகளாலும் அழுந்தப் பற்றிக் கொண்டான் – “அப்படிப்பட்ட ஒரு இரவில் நான் ‘மெடிவேக்’ குழுவில் பணியாற்ற நேர்ந்தது.. அதாவது போர்களத்தில் காயமுற்று உயிருக்குப் போராடும் வீரர்களின் அவசர சிகிச்சைக்காக, வான்வழியில், ஹெலிகாப்டர்கள் மூலம் அருகிலிருக்கும் ராணுவ மருத்தவ முகாம்களுக்கு கொண்டு செல்லும் குழு.. பலத்த குண்டு வெடிப்பினால், மிக மோசமாக காயப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஏழு வீரர்களை மீட்டு, முதலுதவி தந்து முகாமுக்கு கொண்டுவருவது தான் எங்களுக்கு இடப்பட்டிருந்த பணி.. கண்ணிவெடியில் சிக்கிக் கொண்டிருந்தவர்களின் கைகால்கள் பாதிக்கப்பட்டு ஒரு சில நரம்புகள் மட்டுமே உடலோடு இணைத்து தொங்கிகொண்டிருக்கும் உறுப்புகளை சேகரித்து ஸ்டெரெச்சரில் ஏற்றிக் கொண்டிருந்த போது தான், சற்று தூரத்தில் ஒரு அழுகுரல் கேட்டதைக் கவனித்தேன்.. ஒலி வந்த திசையில் பிளாஷ் லைட்டில் தேடிய போது, இரண்டு மூன்று செம்மறியாடுகளுக்கிடையே ஒரு மனிதரைப் பார்த்தேன்.. ஆடுகளின் உடலிலிருந்து சிதறிய சதைப் பிண்டங்கள் அவர் உடலெங்கும் பரவிக் கிடந்தது.. அவருக்கு முக தாடையில், கழுத்தில், நெஞ்சில் என பல குண்டுகள் பாய்ந்திருந்தன.. ரத்தம் தோய்ந்திருந்த அவரது உடை அது ராணுவ வீரன் அல்ல என்றது. ஒருக்களித்து கிடந்த தலையைத் திருப்பிப் பார்த்தபோது மிகவும் வயதானவர் என்று தெரிந்தது.. பக்கத்தில் எதோவொரு கிராமத்தைச் சேர்ந்தவர் போலும்.. ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர் ‘கிராஸ் பயரில்’ சிக்கியுள்ளார்.. என்னுடன் என் குழுவில் வந்திருந்த மற்ற மூன்று பேரும், காயப்பட்டிருந்த ராணுவத்தினரை ஹெலிகாப்டரில் ஏற்றிவிட்டு எனக்காகக் காத்திருந்தனர்.. ஹெலிகாப்டரில் இன்னும் கொஞ்சம் இடமிருந்தது.. அந்தப் பெரியவரைத் தோளில் தூக்கிப் போட்டு கொண்டு போய், அவரையும் ஏற்றிக் கொள்ளலாம் என்று சொன்ன போது அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.. முதல் காரணம், காயப்பட்டிருந்தாலும் சாமான்ய சிவிலியனை ராணுவ மருத்துவ முகாமில் சேர்க்க முடியாது.. இரண்டாவது அந்த மனிதர் யார் என்று தெரியாத நிலையில், ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டரில் ஏற்றுச் செல்வது ஆபத்தானது. அவர்கள் சொன்ன இரண்டு காரணங்களும் ராணுவ விதிகள் என்று எனக்குத் தெரிந்தாலும், கண் முன் அடிபட்டு துடிக்கும் அந்த அப்பாவி மனிதரை அப்படியே விட்டுச் செல்ல எனக்கு மனமில்லை.. அந்த மனிதரை சிவிலியன்களுக்கான முகாமில் சேர்ப்பது என் பொறுப்பு என உறுதியளித்து, அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சியதில், அரைகுறை மனதுடன் ஒப்புக் கொண்டார்கள்” பேசுவதை நிறுத்திய மனோவின் கண்கள் பனித்தன.

அவனது கைகளை மென்மையாகப் பற்றிய ரஃபீக் “புரியுது.. ராணுவ விதிகள் மனித உடலை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும், மனிதக் கருணையையல்ல. நீ செய்ததில் தவறேதுமில்லை” என்றார்.

அழுகையை நிறுத்த, அழுத்தமாக மூக்கை உறிஞ்சிய மனோ தொடர்ந்தான். “போர்க்களத்து விதிமுறைகளின்படி, காயம்பட்ட அந்த முதியவரை சிவிலியன் பிரிவில் சேர்த்தேன். நள்ளிரவுக்கு மேல் என் மற்ற பணிகள் முடிந்த பின்னர் அவரைப் போய் பார்த்தேன். குண்டுகள் அவரது உடலைச் சிதைத்திருந்தாலும், அவரது ஆன்மா இன்னும் பிரிய மறுத்துப் போராடிக் கொண்டிருந்தது. நெற்றியில் குளிர்ந்த துணியால் ஒத்தடம் கொடுத்த போது கண் திறந்து என்னைப் பார்த்தார். அவரால் பேச முடியவில்லை, ஆனால் அவர் கண்கள் எதையோ சொல்லத் துடித்தது. அவரது கண்களின் அந்த மொழி எனக்குப் புரியவில்லை. அதிகாலை மூன்று மணி இருக்கும் கண் மூடி படுத்திருந்த அவரது மூச்சுக்காற்று திடீரென சீரற்றதாக மாறியது. என்னுள் பதற்றம் தொற்றிக் கொண்டது.. ஆனால் அவர் முகத்தில் அப்போது எந்தப் பதற்றமும் இல்லை; ஒரு விசித்திரமான பேரமைதி குடியேறியிருந்தது. அவர் மெதுவாகத் தன் நடுக்கமுற்ற கையைத் தனது காவி அங்கி பைக்குள் நுழைத்து ஒரு பழைய கயிற்றை எடுத்தார். மரண வேதனையின் அலறல்களுக்கு நடுவே இல்லாமல் ஒரு ஆன்மீகத் தியானத்தைப் போல, தன் வாழ்நாளின் கடைசிச் சக்தியை விரல்களில் திரட்டி, அந்தக் கயிற்றில் சில விசித்திரமான முடிச்சுகளை இட்டார். கையை உயர்த்த முடியாத நிலையில் விரல்களால் அந்தக் கயிறை என்னை நோக்கி நீட்டினார். அதை நான் வாங்க முயன்றபோது அவரது விரல்கள் என் கைகளைப் பற்றிக் கொண்டன” இம்முறை மனோவின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது. 

அழுகையை மறைக்க முயன்ற அவனது குரல் பிசிறு தட்டியது.. “நடுங்கிக் கொண்டிருந்த அவர் விரல்கள் சில்லிடத் தொடங்கின..என்னைப் பார்த்து கொண்டிருந்த அவரது கண்கள் அப்படியே நிலைத்து விட, பிடி தளர்ந்தது. அந்த உயிர் அமைதியாக பிரிந்தது.. காலையில், முந்தின தினம் காணாமல் போனவர்களை தேட கிராமத்திலிருந்து சிலர் வந்திருந்தார்கள்.. அவர்களில் ஒருவர் அந்தப் பெரியவரை, அவர் அணிந்திருந்த உடையை வைத்து அடையாளம் கண்டுகொண்டார்.. அவர் சொல்லித்தான் அந்த பெரியவரின் பெயர் அலி என்று தெரிந்தது.. அவரது முழுப் பெயர் என் மனதில் பதியவில்லை .. ஆனால் அவரது கண்கள் எனக்கு இன்னும் ஞாபகமுள்ளது.. அவர் முடிச்சு போட்டு கொடுத்த அந்த சணல் துண்டும் என்னிடம் பத்திரமாக உள்ளது.. ஆனால் அவர் அந்தக் கயிறை என்னிடம் கொடுத்ததன் மூலம் என்ன சொல்ல வந்தார் என்பது தான் இன்று வரை புரியவில்லை..”

மனோ சொல்லி முடித்த போது அந்த அறையில் கனத்த அமைதி நிலவியது. ரஃபீக் நீண்டதொரு பெருமூச்சுக்குப் பின் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி, காலை மாற்றிப் போட்டுக் கொண்டார். ஜாரிலிருந்து காலியாகிவிட்டிருந்த கோப்பைகளில் தேநீரை ஊற்றி நகர்த்தியவாறு, “நீ ஒரு நல்ல மனிதன் தம்பி.. கட்டுப்பாடுகள், கடமைகளை மீறிய உனது மனித நேயம் உன்னதமானது.. அந்தப் பெரியவர் அலி அதைத்தான் சொல்ல முயன்றிருப்பார் என நினைக்கிறேன்..” என்று தேநீரை உறிஞ்சியவர் “அந்த கயிறின் முடிச்சு பற்றி சொல்ல முடியுமா..” என்று கேட்டார்.

“யெஸ், யெஸ்.. அந்தக் கயிறை நான் எப்போதும் என் வாலட்டில் தான் வைத்திருக்கிறேன்”  என்றவன் எழுந்து நின்று பேண்டின் பின் பாக்கெட்டில் வைத்திருந்த வாலட்டை எடுத்தான். படபடப்பில் அவன் கயிறை எடுத்த போது சில கார்டுகளும், சில்லறைகளும் கீழே விழுந்து சிதறின. லிசாவும், ரஃபீக்கும் கீழே விழுந்தவற்றைச் சேகரித்து மேஜையின் மேல் வைத்தார்கள். மனோ முடிச்சிடப்பட்டிருந்த நைந்து போன சணல் கயிறைக் கையில் பிடித்திருந்தான். பக்குவமாக அதை வாங்கிய ரஃபீக், அதனை முன்னும் பின்னும் திருப்பி, சுருக்கமேறிப் போயிருந்த தனது விரல்களால் தடவிப் பார்த்துவிட்டு, பத்திரமாக மேஜை மீது வைத்தார். 

ஒரு சில நொடிகள் அவர் அமைதியாக மேஜை மீதிருந்த அந்தக் கயிறைப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்படி சொல்லி இவர்களுக்கு அதை விளக்குவது என்ற தயக்கம் அவருக்குள் இருந்ததை மனோ புரிந்து கொண்டான்.

லேசான புன்முறுவலுடன் பேசத் தொடங்கினார் ரஃபீக் – “உனக்கு எவ்வளவு தூரம் ஆன்மீக நாட்டம் அல்லது நம்பிக்கை இருக்கோ தெரியாது. இது ‘பெடோயின்’ நாடோடிகள் போடுற ‘நல்லாசி முடிச்சு’.  பாலைவனத்துப் பழங்குடிகள் ஒருவரை ஆசிர்வதிக்கும் போது அவர்களது நலன் மற்றும் பாதுகாப்புக்காக வேண்டி இந்த மாதிரி ஏழு முடிச்சுகளைப் போட்டு விடுவாங்க. ஏழு முடிச்சுக்கு பல காரணங்கள் சொல்லுவாங்க – சிலர் அதை ஆன்மாவின் ஏழு நிலைன்னு சொல்லுவாங்க .. சிலர் ஏழு வானம், ஏழு பூமி இருப்பதாகவும் அனைத்திலும் பாதுகாப்பாக இருக்க இந்த முடிச்சுகளை போடுவாங்க.. இன்னும் சிலர் ஏழு திசைகள்னு  வாதிடுவாங்க.. ஆக மொத்தம் எல்லாவிதத்திலேயும் ஒருவருக்கு நல்லாசியும், பாதுகாப்பும் கிடைக்கணுங்கிறதுக்காக இந்த முடிச்சுகள் போட்ட கயிறைக் கட்டுவாங்க.. அந்த விதத்திலே அலி எனும் அந்தப் பெரியவர் நீ அவரது மகனாக, ரத்தத்தைத் துடைத்து, சிகிச்சை கொடுத்து, அவரது அமைதியான இறப்புக்கு உதவியதால தன் ஆன்மாவின் நன்றிக்கடனாக, உனக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இதை தந்திருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல, எத்தனையோ பேருக்கு நீ பணிவிடை செய்கிறாய். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் அவர்களின் வலியைப் போக்குகிறாய்.. குறிப்பா அந்த பெரியவர் விஷயத்தில உன் கடமையைத் தாண்டி, கட்டுப்பாடுகளை மீறி அவருக்கு சில மணி நேர  பதட்டத்தைக் குறைத்து போராட்டமில்லாத அமைதியைத் தந்திருக்கிறாய். அதற்கான பிரதியுபகாரமாக அவர் இதைக் கொடுத்துள்ளார்.. பொதுவா இந்த ‘பெடோயின்’ நாடோடிகள் ஆடுகளின் கால்களைக் கட்ட சின்னச் சின்ன சணல் அல்லது கம்பளி கயிறுகளை கூடவே வெச்சிருப்பாங்க.. ஒரு மனுஷனோட கடைசி மணித்துளிகள்ல அவனோட ஆழ்மனசு மட்டும்தான் வேலை செய்யும். அலியோட ஆழ்மனசு, தனக்கு வேதனை இல்லாத மரணத்தைத் தந்த உன்னோட மனிதநேயத்தை மட்டும் தான் நினைவில் வெச்சிருந்திருக்கு. அதோட பிரதியுபகாரமா, தன் இறுதி மூச்சுக்கு நடுவிலும் அவர் போட்டுத் தந்த இந்த முடிச்சுகள், உனக்கான அவருடைய ஆகச்சிறந்த ஆசிர்வாதம் தம்பி.. அந்த ஆசிர்வாதம் உன்னை எந்த ஆபத்தும் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்”.

மனோ வியப்போடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். லிசா, “இதுல இவ்வளவு விஷயமிருக்குன்னு எனக்குத் தெரியாமல் போச்சு” என்றாள்.

மீண்டும் புன்முறுவலாய் சிரித்த ரஃபீக், மனோவைப் பார்த்து – “உன்னோட முழுப் பெயரை உன் வாலட் கீழே விழுந்தபோது ஐடி கார்டில பாத்தேன். பாத்திருக்கக் கூடாது – ஆனால் சட்டுனு கண்ணுல பட்டுது. இம்மானுவேல், சரியா?”

மனோ, “ஆமாம் இம்மானுவேல் தான்” என்றான்.

“அந்தப் பெயருக்கான பொருள் கேள்விப்பட்டிருக்கியா?”

மனோ விடை தேடித் தயங்கினான்..

“பரவாயில்லை .. பலருக்கும் தங்கள் பெயரின் அர்த்தம் தெரியாது.. எபிரேய மொழியில இந்தப் பெயருக்கு ‘கடவுள் நம்மோடு இருக்கிறார்’ என்று பொருள்.. God is with us! உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் உன் பெயரில் பிரபஞ்சத்தின் கருணை இருப்பதைப் போல உன் உள்ளத்திலும் கருணை இருக்கிறது .. அதை அந்தப் பெரியவர் புரிந்து கொண்டிருக்கிறார். ரயில் விபத்து உன்னை செயலற்றவனாக காட்டுவதற்கானது அல்ல.. உனது பாதையை நீ உணர்ந்து கொள்ள.. அலியைப் போல மரணத்தின் விளிம்பில் தவிக்கும் எளிய மனிதர்களின் உயிரைக் காப்பதற்கான் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அலி முடிச்சுகளிட்டு தந்த அந்த கயிறு God is within YOU! என்று உனக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. கட உள் – பயங்களைக் கடந்து, புறங்களைக் கடந்து உனக்குள் போ தம்பி.. உனக்குப் புலப்படும்”

ரஃபீக் பாய் சொல்லி முடித்தபோது, லிசா அழுதுகொண்டே மனோவின் தோள்களைப் பற்றி ஆதரவுடன் அழுத்தினாள். மனோவுக்கு, ஜே.கே.வின் ‘அறிந்ததினின்றும் விடுதலை’ புத்தகத்தில் தேடிய விடை கிடைத்தது போலிருந்தது. கடந்த கால ‘அறிந்த’ விஷயங்களின் சிறையில்தான் வாழ்ந்து கொண்டிருந்த அவனது மனம் விடுதலை பெற்றது போல் உணர்ந்தான்.

  • மர்மயோகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad